செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து என்ற வேதா இசையில் சுசிலா, டிஎம்எஸ் பாடிய நான்குகில்லாடிகள் படப் பாடலை காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்,

திடீரென இப்படி ஏதாவது ஒரு பாடல் நினைவில் வந்துவிடும், அன்று முழுவதும் அந்தப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருப்பேன், வீட்டில் உள்ளவர்கள் அலுத்துப் போய் ,கேட்டது போதும் அணைத்துவிடுங்கள் என்று திட்டும் போதும் பாட்டை முழுமையாகக் கேட்ட திருப்தி வராது

எதற்காக இப்படி ஒரே பாடலை மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என எனக்கே புரிவதில்லை, ஆனால் பாடல் கேட்க கேட்க ஏதோ செய்கிறது, மனது தானே எதையோ நினைத்துக் கொண்டு சந்தோஷம் அடைய ஆரம்பிக்கிறது.

இப் பாடலைக் கேட்கத் துவங்கியதும் பதினெழு வயதில் கோவில்பட்டி நாராயணசாமி திரையரங்கில் இப்பாடல் ஒரு நாளிரவு செகண்ட் ஷோ பார்க்கும் போட்ட நினைவு வந்து போனது,

அப்போது காலைக்காட்சி நடக்கும் படத்தின் ஒன்றிரண்டு பாடல்களை இரவில் விளம்பரத்திற்காகக் காட்டுவார்கள், அந்த நினைவு நாராயணசாமி தியேட்டரின் தனித்துவமான அமைப்பை, முகப்பில் உள்ள கண்ணன் சிலையைப் பற்றி நினைக்க வைத்தது,

சில நிமிசங்களில் நீர்குமிழி உடைவது போல  அழிந்து போனது, பின்பு கண்ணதாசனை பற்றி நினைத்துக் கொண்டேன், மார்டன் தியேட்டர்ஸ் படங்களும் அதைத் தேடி பார்த்து ரசித்த நாட்களும் கூடவே நினைவில் தோன்றி மறைந்தன

ஆடையின் வனப்பை நீ எழுத

ஆசையின் அழகை நான் எழுத

நாடகம் என்றே நான் நினைக்க

நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க என்ற பாடல் வரியில் ஆசையின் அழகு எதுவென மனது அதைச்சுற்ற ஆரம்பித்தது, பின்பும் அதுவும் அடங்கி இசையின் தாளகதியில் ஒன்றிப்போனது,

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம், அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

என்ற வரிகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்,

வெற்றிலை மெல்வதைப் போலப் பாடல் ஒரு போதை தந்தபடியே இருக்கிறது,

அந்தப் பாடலின் காணொளியைப் பார்க்கலாமே என இணையத்தில் தேடினேன், பாடல் காட்சிப்படுத்தபடம் விதம் அவ்வளவு ஈர்ப்பாகயில்லை, பாடல் மனதில் வேறு காட்சிபடிமங்களை உருவாக்கி வைத்தது காரணமாக இருக்கலாம்

இந்த இரவுக்கு இப்பாடல் போதும்,

மனதை சந்தோஷப்படுத்திக் கொள்ள இப்படி ஏதாவது ஒரு உறுதுணை தேவைப்படத்தானே செய்கிறது

•••

0Shares
0