ஞானக்கூத்தன் கவிதைகள்

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?

••••

காலவழுவமைதி

“தலைவரார்களேங்…

தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.

தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்

தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்

கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்

காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”

‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’

“வளமான தாமிழர்கள் வாட லாமா?

கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற

பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?

தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்

கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே

நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்

நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்

தலைவரார்களேங்

பொதுமாக்களேங் நானின்னும்

யிருகூட்டம் பேசயிருப்பதால்

வொடய் பெறுகறேன் வணக்கொம்”

‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்

அமைதி… அமைதி…

•••

மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல

சொற்பொழி வாற்றலானார்:

வழுக்கையைச் சொறிந்தவாறு

‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;

மேசையின் விரிப்பைச் சுண்டி

‘வையத்து நாட்டில்’ என்றார்;

வேட்டியை இறுக்கிக் கொண்டு

‘விடுதலை தவறி’ என்றார்;

பெண்களை நோட்டம் விட்டு

‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;

புறப்பட்டு நான் போகச்சே

‘பாரத தேசம்’ என்றார்;

‘வாழ்விக்க வந்த’ என்னும்

எஞ்சிய பாட்டைத் தூக்கி

ஜன்னலின் வழியாய்ப் போட்டார்

தெருவிலே பொறுக்கிக் கொள்ள

•••

பரிசில் வாழ்க்கை

வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்

வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு

காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு

கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை

நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு

நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த

தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு

தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்

பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்

பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து

பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின்

மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று

முதல் முதலாய்க் கேட்டதனால் திணறிப் போனார்

வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்

வளம் திரும்ப வேண்டுமெனில் இவருக்கான

பேய்ச் சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்

பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்

பேச்சாளர் மனம் புதிய பேச்சைத் தீட்டும்

ஆத்தூரில் மறு கூட்டம். தலைமை யேற்ற

அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்

காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்

பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்

ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்.

அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு

நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்

விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்

கும்மியடி தமிழ் நாடு முழுவதும்

குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி…

காணிக்கை கொண்டு வாருங்கடி… கு

லோத்துங்க சோழனைப் பாருங்கடி

நாளை அமைச்சரைப் பாருங்கடி… மவ

ராசனைப் பார்த்துக் கும்மியடி…

சென்மம் எடுத்தது தீருதடி… இந்த

சித்திரச் சாமிக்குக் கும்மியடி

•••

தோழர் மோசிகீரனார்

மோசிகீரா

மகிழ்ச்சியினால்

மரியாதையை நான்

குறைத்ததற்கு

மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்

சங்கக்கவிதை யாதொன்றும்

படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த

அன்பு தோன்றிற்று

இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டிடத்தில்

தூக்கம் போட்ட முதல்மனிதன்

நீதான் என்னும் காரணத்தால்

**

உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்

பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ

பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்

பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்

சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்

எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த

முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்

துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்

கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ

கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்

கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்

பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்

நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு

**

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு

‘மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்

பார்த்திருக்க மாட்டீர்கள்

மன்னார்சாமி

ஆணியிலே அதைப் பொருத்து. பயப்படாமல்

ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும்

ஏணியைப் போல் இருந்திருப்பான். ஆறடிக்குக்

குறைவில்லை

இது கபாலம்

மார்புக்கூடு…

போணிசெய்த பெருங்கைகள்…

கைகால் மூட்டு

பூரான்போல் முதுகெலும்பு… சிரிக்கும் பற்கள்…

சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும்

புதுசு புதுசாய்ப் பார்ப்பான் இல்லையாடா?’

மாணவர்கள் சிரித்தார்கள் விலாவெடிக்க

ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக் காட்டி

அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு

**

சைக்கிள் கமலம்

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்

மைதானத்தில் சுற்றிச் சுற்றி

எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்

தம்பியைக் கொண்டு போய்ப்

பள்ளியில் சேர்ப்பாள்

திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்

கடுகுக்காக ஒரு தரம்

மிளகுக்காக மறு தரம்

கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க

மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்

வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்

இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்

எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்

என்மேல் ஒருமுறை விட்டாள்

மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்

**

விடுமுறை தரும் பூதம்

ஞாயிறு தோறும் தலைமறை வாகும்

வேலை என்னும் ஒரு பூதம்

திங்கள் விடிந்தால் காதைத் திருகி

இழுத்துக் கொண்டு போகிறது

ஒருநாள் நீங்கள் போகலை என்றால்

ஆளை அனுப்பிக் கொல்கிறது

மறுநாள் போனால் தீக்கனலாகக்

கண்ணை உருட்டிப் பார்க்கிறது

வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்

வீட்டில் ஒருவர் நலமில்லை

என்னும் பற்பல காரணம் சொன்னால்

ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

வாரம் முழுதும் பூதத்துடனே

பழகிப் போன சிலபேர்கள்

தாமும் குட்டிப் பூதங்களாகிப்

பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

தட்டுப் பொறியின் மந்திரகீதம்

கேட்டுக் கேட்டு வெறியேறி

மனிதர் பேச்சை ஒருபொருட் டாக

மதியாதிந்தப் பெரும்பூதம்

உறைந்து போன இரத்தம் போன்ற

அரக்கை ஒட்டி உறை அனுப்பும்

‘வயிற்றில் உன்னை அடிப்பேனெ’ன்னும்

இந்தப் பேச்சை அது கேட்டால்

நன்றி : ஞானக்கூத்தன் படைப்புகள்

0Shares
0