தலாய்லாமா உரை

தினசரி காலை ஏழு மணிக்கு தலாய் லாமா இணையத்தின் வழியே உரையாற்றுகிறார். சில நாட்கள் கேள்வி பதில் பகுதியும் இடம்பெறுகிறது. அதைத் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். மிகச் சிறப்பான உரைகள். தலாய் லாமாவின் நிதானமும் சிரிப்பும் அபூர்வமானது.

நேற்றைய உரையில் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டார்

பண்டைய இந்தியாவை நவீன இந்தியா மறந்துவிட்டது. ஆனால் பண்டைய இந்தியாவோ நவீன இந்தியாவை நோக்கி தன் கையை நீட்டிக் கொண்டேயிருக்கிறது. மொழி வழியாக மட்டுமே இன்றும் பண்டைய இந்தியா நம்மோடு தொடர்பிலிருக்கிறது. ஆகவே தாய்மொழிகளைக் காக்கவேண்டும். நவீன இந்தியா தனது பாரம்பரியத்தை ஏன் மறந்து போனது என்ற கேள்வியை எழுப்பினார். அத்துடன் லாஜிக் எனப்படும் தர்க்கம் இந்திய அறிவுத் தேடலில் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கினார்

வெட்டவெளியில் ஒரு தனி மனிதன் அமர்ந்திருப்பதைத் தொலைவிலிருந்து நாம் கண்டால் உடனே ஒரு மனிதன் இருக்கிறான் என்ற எண்ணம் மட்டுமே உருவாகிறது. அருகில் போன பிறகு தான் அவனது மதம் இனம் மொழி என வேறுபடுத்திக் கொள்கிறோம். அருகில் சென்றபிறகு ஏற்படும் பிரிவினைகளில் அவன் மனிதன் என்பது பின்னால் போய்விடுகிறது என்றார்

உணவு தான் மனிதர்களை ஒன்று சேர்க்கக்கூடியது. கூடி உண்பது என்பது வெறும் நிகழ்வல்ல. அது நம்பிக்கையின் அடையாளம்.

வீண் கற்பனைகளே மனிதர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. வெறும் கற்பனையால் பயத்தை உருவாக்க முடியும். ஆனால் அந்தப் பயம் நிஜமானதில்லை என்று உணரும் தருணத்தில் நீங்கள் பயத்தை வென்றுவிடுவீர்கள்.

அவரிடம் கேள்விகேட்பவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். அவர்களிடம் தலாய் லாமா மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கி வருகிறார்.

0Shares
0