நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தன்னுடைய சிறுவயதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றினை விவரித்தார்.
அவரது ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். பிறந்த சில மாதங்களிலே தாயை இழந்தவர். அம்மாவின் முகம் கூட அவருக்குத் தெரியாது. அவர்கள் ஊரில் அடிக்கடி பெண்களுக்கு பேய் பிடித்து கொள்ளுமாம். அப்படி ஒரு நாள் அவர்கள் வீதியில் இருந்த பெண் ஒருத்திக்கு பேய் பிடித்து கொண்டுவிட்டது என்று பேயோட்டும் நபரை அழைத்து வந்திருக்கிறார்கள்
பேயோட்டி தன் கையில் உள்ள சவுக்கை வைத்து அந்த பெண்ணை அடித்து ஏய் பேயே.. யாரு நீ என்று கேட்டிருக்கிறான். அந்த பெண் தன் பெயர் ராஜலெட்சுமி என்று சொல்லியிருக்கிறாள். அது நண்பரின் இறந்து போன தாய். இவளை விட்டு ஒடிப்போயிரு என்று சொல்லி மாறி மாறி அடித்திருக்கிறான் பேயோட்டி
பள்ளியில் இருந்த நண்பருக்கு ஒருவன் ஒடி வந்து டேய் உங்கம்மா பேயா வந்துருக்குடா என்று சொன்னதும் அவர் ஆசையாக ஒடியிருக்கிறார்.
அங்கே ஒரு வீட்டின் முன்னால் பெண் தலைவிரி கோலமாக ஆடிக் கொண்டிருக்கிறாள். பேயோட்டுகிறவன் உடுக்கை அடித்தபடியே மாறி மாறி அவளை அடித்திருக்கிறான். அடிவாங்கும் பெண் வலியில் நான் போயிடுறேன். போயிடுறேன் என்று கத்தியிருக்கிறாள். கூட்டமே பயந்து போய் அதை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது.
அதை பார்த்துக் கொண்டிருந்த நண்பர் யோவ் எங்கம்மாவை ஏன்யா விரட்டுறே என்று பேயோட்டியை தடுத்து திட்டியிருக்கிறார். பேயோட்டிக்கு புரியவில்லை. நீ எதுக்குடா தம்பி கோபபடுறே என்று கேட்டதும், பேயா வந்திருக்கிறது எங்கம்மாய்யா. நான் அவங்களை உயிரோடு பாத்ததேயில்லை. இப்போ பேயா வந்திருக்குனு சொன்னாங்க. ஒரேயொரு தடவை எங்கம்மா கையை பிடிச்சிகிடவா என்று கேட்டிருக்கிறார்.
பேயோட்டி நெகிழ்ந்து போயி போ தம்பி.. இது உங்கம்மா தான் அவளை கட்டிக்கோ என்று சொன்னதும் அந்த பெண் பையனை அருகில் இழுத்து கட்டிபிடித்து தயை கோதிவிட்டு அழுதிருக்கிறாள். நண்பருக்கும் தாள முடியாத அழுகை.
சில நிமிசங்களில் அந்த பெண் இயல்பாகி அவரை உதறி தள்ளிவிட்டாள்.
பேயோட்டி அந்த பொம்பளையை பிடிச்சிருந்த பேய் போயிருச்சி என்று அவளை ஊர் எல்லை வரை கூட்டி சென்று ஏதோ சாந்திசடங்கு செய்துவிட்டு வந்திருக்கிறார்.
அதன் பிறகு நண்பரின் அம்மா பேயா கூட ஊருக்கு வரவேயில்லையாம்
இதை நினைவுபடுத்தி சொல்லிய நண்பருக்கு இப்போது வயது நாற்பதை நெருங்கி கொண்டிருக்கிறது. தன்னுடைய பத்து வயதில் நடந்த சம்பவத்தை அவர் சொல்லி முடிக்கும் போது குரல் தழதழத்து கண்கள் நீர் கோர்த்திருந்திருந்தன.
ஊருக்கு எல்லாம் அது பேய். எனக்கு எங்கம்மா.. அப்படி ஒரேயொரு தடவை எங்கம்மாவோட நெருக்கத்தை உணர்ந்திருக்கிறேன். அதுவும் பிறகு கிடைக்கலை என்று பெருமூச்சுவிட்டார்
பேய் நிஜத்தில் இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சைகளை தாண்டி சில நிமிசங்களாவது நண்பர் சந்தோஷம் கொள்ள அது காரணமாக இருந்திருக்கிறதே என்று தோன்றியது.
இன்னொரு பக்கம் பால்யம் எத்தனை ஈரமானது என்பதை இத்தனை வருடம் கழிந்த பின்னும் அவரது தவிப்பின் வழியே உணர முடிந்தது
கேட்டுக் கொண்டிருந்த எனக்கே கஷ்டமாக இருந்தது. அவருக்கு எப்படியிருந்திருக்கும். எனக்குள் இருந்த பேய் பற்றிய நெடுநாள் படிமம் அப்படியே உடைந்து நொறுங்கி போனது அன்றிரவு தான்.
**