தாவரங்களின் உரையாடல் முதல் காந்தியோடு பேசுவேன் வரை

நூல் அறிமுகம்  : கீரனூர் ஜாகீர்ராஜா

கடந்த நூற்றாண்டின் 90-களில் தமிழ்ச்சிறுகதைப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்களுக்கு கரிசல் எழுத்தாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. கி.ராஜநாராயணனின் கதைசொல்லி மரபிலிருந்து தொடங்கி கு.அழகிரிசாமியின் எதார்த்தவாத எழுத்தும் அதைத் தொட்டுக்கிளைத்த பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, ச.தமிழ்ச்செல்வன், லட்சுமணப் பெருமாள், உதயசங்கர் எழுத்துகளும் அங்கிருந்து உருவாகி தனித்த பாதையில் பயணித்த கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரும் இன்றைக்குப் புதிதாக எழுத வந்துள்ள கருத்தடையான், சபரிநாதன் வரை நாம் ஒரு நீண்ட வரிசையைப் புழங்கிப் பார்த்திருக்கிறோம். இவ்வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் 13 வது கதைத் தொகுதியாக சமீபத்தில் வெளிவந்துள்ள காந்தியோடு பேசுவேன் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சில கதைகள் குறித்து வாசகர்களுடன் உரையாடுவது இங்கு என் நோக்கம்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமகிருஷ்ணனின் படைப்புலகம், இளமையில் அவர் அவதானித்த கிராமத்து மண்ணையும் மக்களையும் மட்டுமின்றி தொடர்ந்த வாசிப்பு மற்றும் பயணங்கள் தந்த அனுபவங்களாலும் கட்டமைக்கப்பட்டது. தாவரங்களின் உரையாடல் என்கிற தொகுப்புதான் அவரை தமிழ்ச் சூழலில் சரியாக அடையாளப்படுத்தியது என்பேன். காந்தியோடு பேசுவேன் தொகுப்பை வாசிக்கத் தொடங்கியபோது எனக்கேனோ தாவரங்களின் உரையாடல் காலம் மனதில் மீண்டும் மீண்டும் விரிந்துகொண்டே இருந்தது. பிறகு காந்தியை மூடி வைத்துவிட்டு சிறிதுநேரம் அந்த நினைவுகளில் மூழ்கியிருந்தேன்.

அது ஒரு சிறுகதைக்காலம்! தஞ்சாவூர் பெரியகோயில் புல்வெளியில் ப்ரகாஷ் எங்களை பட்டை தீட்டிக் கொண்டிருந்த காலம். ஆனால் அது நாவல்களுக்கான காலம் அல்ல. சிறுகதைகளுக்கான காலம். நான் இளங்கோ, நட்சத்ரன், புத்தகன், கவிஜீவன், ராசன் (களப்பிரன்) உள்ளிட்ட பல அங்கு கூடுவோம். நானும் இளங்கோவும் முன்தினம் வரை எழுதிஎழுதிப் பார்த்த எங்கள் சிறுகதைகளைப் பிரதியெடுத்துக் கொண்டுவந்து வாசிப்போம். கவிஜீவனுக்கானால் கதையை வாசிக்கிற பழக்கம் இல்லை. அவர் கதைசொல்லி. அதில் மெல்லிய கர்வமும் அவருக்கு உண்டு. நட்சத்ரனும் புத்தகனும் கவிதை வாசிப்பார்கள். நட்சத்ரன் தான் எனக்கு தாவரங்களின் உரையாடல் தந்ததாக நினைவு. மஞ்சள்நிற அட்டை வித்தியாச வடிவமைப்பு. அப்போது நட்சத்ரன் ராமகிருஷ்ணனைக் குறித்தும் புத்தகன் ஜெயமோகனைக் குறித்தும் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். ப்ரகாஷ் அவர்களிலிருந்து மாறுபட்டு மார்க்வெஸ், போர்ஹேஸ், தாஸ்தவெஸ்கி, மாயகாவ்ஸ்கி, ஃபூக்கோ, தெரிதா, அல்தூசர் என்று பேசுவார்.

நட்சத்ரனிடம் பெற்ற தாவரங்களின் உரையாடலை நான் வாசிக்கத் தொடங்கிய போது அது புதுவிதமான எழுத்து என்று உடனே உணர்ந்து கொள்ள முடிந்தது. அத்தொகுப்பில் வரும் புலிக்கட்டம், காலாட்படை பற்றிய குற்றப்பத்திரிகை, வேனல் தெரு போன்ற கதைகள் என் அப்போதைய மனோநிலைக்கு மிக நெருக்கமானதாக இருந்தன. பிறகு நான் தீவிரமாக எழுதத் தொடங்கிய பிறகு ஒரு இடைவெளியில் வாசித்த அவருடைய கதைகளில் ஹசர்தினார், விஜயலட்சுமியின் சிகிச்சைக்குறிப்புகள், விசித்திரி போன்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஹசர்தினார் கதையை என்னுடைய காஃபிர்களின் கதைகள் தொகுப்பு நூலில் சேர்த்திருந்தேன். அக்கதை குறித்த எதிர்வினைகளை நான் எதிர்கொண்டதும் ஒரு வித்தியாசமான அனுபவம்.

இணையம் பிரபலமடைந்த பிறகு எஸ்.ரா. நிறைய எழுதினார். ஒரு முழுநேர எழுத்தாளராகவும் இருந்தது அதற்கு உதவியது. சமீபத்தில் அவருடைய காந்தியோடு பேசுவேன் தொகுதியை முழுமையாக வாசிக்க முடிந்தது. இந்த 13-வது தொகுதி பொருத்தமாக 13 கதைகளைக் கொண்டது. இதில் காந்தியோடு பேசுவேன் முதல் ஷெர்லி அப்படித்தான் வரையிலுமான 7 கதைகளை சிறந்த கதைகளாக  என் வாசிப்பனுபவத்தில் தீர்மானிக்க முடிகிறது.

புதிதாக எழுத வந்திருப்பவர்களால் தமிழ்ச்சிறுகதைகளின் போக்கில் மாற்றம் தெரியத் தொடங்கி இருக்கிறது. பெரும்பாலும் வடிவக் கச்சிதமற்ற தன்மையில் கதைகள் எழுதப்படுகின்றன. ஒவ்வொருவரும் தன்னளவில் சிறுகதை வடிவத்தை பரீட்சார்த்தம் செய்துபார்க்கத் தொடங்கியிருக் கிறார்கள். நான் தொகுத்த Ô21-ம் நூற்றாண்டுச் சிறுகதைகள்Õ இதற்கொரு சரியான உதாரணம். இந்த மாற்றம் குறித்து தமிழ்ச்சூழலில் தீவிரமாக விவாதித்துப் பார்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

* *

எஸ. ராமகிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன் கதையைப் படித்தபிறகு நான் மிக அமைதியானேன். அமைதியானேன் என்பதற்கு பொருள், உடன்பாடு இல்லாத விஷயத்தில் ஈடுபட்டபிறகு மனம் கொள்கின்ற அந்த அமைதி. அந்த அமைதிக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஏன் எனக்கு காந்தியைப் பிடிக்காமல் போனது என்று அப்போது சிந்தித்துப் பார்க்கத் தொடங்கினேன். நம் எல்லோருடைய பால்யத்திலும் பதிந்துவிட்ட காந்தி என்கிற புனிதப்பிம்பம் பிறகு ஏன் (ஒரு சிலருக்கு மட்டும்) உவப்பின்றி உடைந்து சிதறுகிறது?  என் அனுபவத்தில் அண்மையில் கூட அது மறுமுறை உடைந்தது. அதற்கு நான் வாசித்த ஒரு புத்தகமும் காரணம் என்பேன்.The Trial of Bhagat Singh – Politics of Justice – ஏ.ஜி. நூரனி எழுதிய புத்தகம் தமிழாக்கம் செய்யப்பட்டு விரைவில் பாரதிபுத்தகாலயம் சார்பில் வெளிவரவுள்ளது. முரண்படுவது நம் உரிமை. அதுவும் காந்தி போன்ற மாபெரும் ஆளுமையிடம் முரண்படுவது நம் முதிர்ச்சியின் அடையாளம்.

சிறுவயதில் நான் காந்தியின் தீவிர நேசன். பள்ளியின் வெள்ளிக்கிழமைப் பிரார்த்தனை வேளையில் “ரகுபதி ராகவ ராஜாராம்” சேர்ந்திசைக்கையில் “ஈஸ்வர அல்லா தேரே நாம் சபுகோ சன்மதி தே பகவான்” என்கிற வரியில் கரைந்துருகிக் கண்ணீர் விட்டிருக்கிறேன். சீக்கியர்களின் அந்த  பஜன் பாடலை பிரார்த்தனைகளில் பாடிப்பாடி பிரபலமாக்கியவர் காந்தி. காந்தியால் அந்தப் பாடல் மகிமைபெற்றது. காந்தியின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சேகரிப்பதும் அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுமாக இளம்பிராயத்தில் வாசிப்பிற்குள் நுழைந்தவன் நான்.

உன் படங்கள் ஊர்வலம் போகின்றன

நீ ஏன் தலைகுனிந்தபடி நிற்கிறாய்…

என்று மேத்தா, காந்தியுடன் பேசும் தீபம் இதழ் கவிதையை எத்தனையோ பேரிடம் மனப்பாடமாக ஒப்பித்திருக்கிறேன். காந்தியின் பழக்கம் என்றறிந்து கழிப்பறையில் என் கழிவை நானே அகற்றிய நாளொன்றில் நான் பிராந்தன் ஆகிவிட்டதாக என் அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழுதிருக்கிறார். காந்தியுடன் பேசுவேன் கதையை எஸ்.ரா. சிறப்பாக எழுதியிருக்கிறார். மிகவும் நெகிழ்வூட்டக்கூடிய சித்தரிப்பு. இந்த நெகிழ்வூட்டும் தன்மையென்பது அவரது முந்தைய கதைகளில் எங்கும் காணக்கிடைக்காதது. இத்தொகுப்பின் அநேக கதைகளில் இத்தன்மையே வியாபித்திருக்கிறது. வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமம் குறித்த விவரணைகள், லட்சுமணனின் அம்மா, ராகேல், நீலம்மை போன்ற பாத்திர வார்ப்புகளுடன் எஸ்.ரா.வின் சொற் செட்டுகளும் இணைந்து இக்கதையை தனித்துவமான படைப்பாக்குகிறது. எல்லா இந்திய பாஷைகளிலும் இக்கதை மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

‘கடக்க முடியாத பாலம்Õ வன்முறைக்கெதிரான குரலை உள்ளடக்கமாகக் கொண்ட கதை. இக்கதையுடன் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களை பொருத்திப் பார்க்கலாம். ஒரு நகரம், நண்பர்கள், அவர்கள் வழக்கமாகக் கூடியமர்ந்து பேசி சிலாகிக்கிற ஒரு பாலம் என்று புனையப்பட்டுள்ள இக்கதையை வாசிக்கும் போது எங்களூர் சண்முகநதிப் பாலம்தான் ஞாபகத்தில் வந்துநின்றது. மையிருட்டில் பேய் பயமில்லாமல் நள்ளிரவு வரை சலசலத்தோடும் ஆற்று நீரோசையைக் கேட்டபடி நண்பர்களுடன் பேசிக்கழித்த காலங்கள் உயிர்ப்பானவை. ஆனால் இதையெல்லாம் கடந்து இக்கதையில் எஸ்.ரா. சாதிக்கெதிரான வன்முறைக்கெதிரான தனது கருத்தாக்கங்களை பலமாகப் பிரயோகித்திருக்கிறார்.

“ஒவ்வொரு சாதிக்கும் ஒரு ரவுடி உருவாகியிருக்கிறான். ஒவ்வொரு சாதியிலும் நாலைந்து அரசியல்வாதிகள் சாதிய நாயகர்களாக மாறியிருக்கிறார்கள்”. “பள்ளி கல்லூரிகள் என வெளிப்படையாகத் தெரிவதன் அடியில் நிர்வாகிகளாக சாதிய அமைப்புகளே செயல்படுகின்றன” “நேற்றுவரை சாதியின் மீது நாட்டம் கொள்ளாத எனது தம்பி, கலவரம் பீடித்த நாட்களில் தனது சாதீய அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதுடன் தாக்குதலுக்கு ஆள் திரட்டவும் துவங்கியிருந்தான்”. “அவன் என்னையும் ஒரு சாதி வெறிபிடித்தவனாக நினைத்துப் பேசியது ஆத்திரமாக வந்தது.” “சொன்னா கேலியா இருக்கும். எங்க வீட்ல பழைய வேல் கம்பு ஒண்ணு கிடந்துச்சி. அதைச் துடைச்சி கதவுப்பின்னாடி சாத்திவச்சிருக்காங்க. ஆயுதம் இருந்தாதான் வீடு பாதுகாப்பாக இருக்குமாம்.”

* *

ஒரு பத்திரிகையாளன் உலகத் திரைப்பட விழாவைக்காண டெல்லிக்குச் செல்வதும், அங்கு நிருபமா என்கிற பெண்ணைச் சந்திப்பதும் மனம் சலனப்படுவதுமான ஒரு கதை பாதியில் முடிந்த படம். அன்பு செலுத்தும் பெண்கள் தரும் உளவியல் நெருக்கடிகள்தான் கதையின் உள்ளடக்கம். கதை முடிந்தபிறகு நாம் டெல்லி திரைப்பட விழாவிற்கே போய்வந்த உணர்வு ஏற்படுகிறது. டெல்லியின் அதிசீதோஷ்ணம், ஒரு சிகரெட் பிடிக்கிற பெண்ணின் அருகாமை, பாரன், மூலாடே, வீல் ஆஃப் டைம், டாங்கோ, பேர்வெல் மை கான்குபெயின் என பிறமொழிப் படங்கள், இடைவிடாத உரையாடல்கள், பிரிவு, பிரிவுதரும் வேதனைகள் இக்கதையின் வழியாக வாசகனுக்கு கடத்தப்படுகிறது.

‘அஸ்தபோவில் இருவர்’ கதையின் நாயகன் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். டால்ஸ்டாயின் அந்திமக்காலத்தை வாசித்த பாதிப்பிலிருந்து எஸ்.ரா.வால் இக்கதையை எழுத முடிந்திருக்கிறது. சிறுகதைகளைப் பொறுத்தவரை இது குறிப்பிடத்தக்க உத்தியாகும். எத்தனையோ தலைவர்களின், பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை நாம்  கருத்தூன்றி கற்றிருக்கிறோம். பிறகேன் அவ்வகைப் பின்புலத்திலிருந்து கதைகளை உருவாக்கத் தயங்குகிறோம் என்னும் கேள்வி இங்கு உதயமாகிறது. இது விடைதேட வேண்டிய கேள்வியாகும்.

82 வயதில் வீட்டைவிட்டு வெளியேறும் டால்ஸ்டாய், கணவனை இழந்து தேவாலயச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட  தங்கை மரியாவைச் சந்திக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறியதற்காக அண்ணனை கோபித்துக்கொள்கிற மரியா அவருக்கு சில அறிவுரைகள் கூறுகிறாள். ஆனால் டால்ஸ்டாய் தனது நிலைபாடில் உறுதியாக இருக்கிறார். “அதிகாரம் என்னை ஒரு அற்பப்புழுவைப் போல நடத்துகிறது. உலகின் சகல கசடுகளையும் நானும் அள்ளிக் குடிக்கவேணும் என கட்டாயப் படுத்துகிறது. நான் தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால் சந்தர்ப்பவாதியாக ஒரு போதும் நடந்து கொள்ளமாட்டேன்” என டால்ஸ்டாய் மரியாளுடன் பேசுவது பல எழுத்தாளர்களின், கலைஞர்களின் மனசாட்சியேபோல் ஓங்கி ஒலிக்கிறது. ‘ஒரு துறவியைப் போல சாந்தம் கொண்டுவிடு’ என்று வலியுறுத்தும் தங்கையிடம் டால்ஸ்டாய் கூறுகிறார் “துறவிகள் தம்மை வருத்திக் கொள்பவர்கள். நான் என்னைக் கொண்டாட நினைப்பவன்”. டால்ஸ்டாயின் வாழ்க்கைச் சம்பவங்களை முன்வைத்து ராமகிருஷ்ணன் இக்கதையில் சில அருமையான சொல்லாடல்களை உருவாக்குகிறார். அவை இக்கதையை தனித்துவப்படுத்துகிறது.

குற்றாலத்தைப் பின்புலமாக்கிச் சொல்லப்பட்டிருக்கும் கதை ‘அருவிக்குத் தெரியும். இதுவும் நமக்குச் சில பரவசமான அனுபவங்களை வழங்குகிறது. குற்றாலம் என்றாலே பரவசம்தானே? “பொங்குமாங்கடலும், சாலையில் வழிந்தோடும் அருவித்தண்ணீரும் நனைந்த உடைகளும், ஈரம் சொட்டும் கேசத்துடன் தோளில் துவைத்த துணிகள் ஊசலாட எதற்கு அந்தச் சிரிப்பு என அறியாத சிரிப்போடு பொலிவுறும் முகத்துடன் பெண்கள் நடந்துவரும் அழகும்…” என்றெல்லாம் நீளும் ராமகிருஷ்ணனின் குற்றால வர்ணனைகள் வாசிக்கிற பலரையும் உடனே தென்காசிக்கு வண்டியேற வைத்துவிடும்.

‘பாதியில் முடிந்த படம் கதையில் வரும் நிருபமா மாதிரி இந்தக் கதையிலும் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். ஆனால் அவள் பெயர் செண்பா. செண்பகக் குழல்வாய் மொழி. அது அவளின் நிஜப்பெயரும் இல்லை. கதையில் வரும் ‘அவன்’ தான் இந்தப்பெயரை அவளுக்குச் சூட்டுகிறான். “…பிடித்தமான ஒரு பெண்ணிற்கு பெயர் வைப்பதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது” என்று எஸ்.ரா ஓரிடத்தில் இதை எழுதுகிறார். இந்தச் செண்பாவும் நிருபமாவைப்போல ஒரு புதிரான பெண்தான். கண்ணாமூச்சி காட்டி ஆளை அலைக்கழிக்க வைக்கிறவள்தான். ‘அம்மையின் பிரதிரூபங்களாக எத்தனை செண்பாக்கள் குற்றாலத்தில்…’ என்று வாசிக்கிறபோதே நமக்கு ஒருவித கிறுக்கும் மயக்கமும் தோன்றுகிறது. அதன்பிறகுதான் கதையில் செண்பா அறிமுகமாகிறாள். பின்னிரவின் அருவியில் அவனும் அவளும் அருகருகில் நின்று குளிக்கிறார்கள். “விரித்த கேசத்துடன் பாறையைப் பார்த்து திரும்பி நின்றவளாக தோளில் அருவி புரளட்டும் என்று அனுமதித்திருந்தாள்” என்கிற வரிகள் ஜலம் சொட்டச் சொட்ட நிற்கும் ஒரு அழகான பெண்ணின் ரூபத்தை நமக்கு நெருக்கமாக்குகிறது.

“சாரலுடன் குற்றாலத்தில் அலைகிற அனுபவம் தனி சுகம் ஆயிரமாயிரம் பேர் வேடிக்கை பார்க்கும் கண்களை மறந்து அருவிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்பது “அருவிக்குள் நுழைந்தவுடனே வயது கரைந்து போய்விடுகிறது”போன்ற வர்ணனைகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இத்தொகுப்பில் பிடாரனின் மகள், ஷெர்லி அப்படித்தான் ஆகிய இரண்டு கதைகளையும் இதே போன்று விரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. இரண்டும் அத்தகைய அனுபவங்களைக் கொண்ட கதைகளாக உள்ளன. அனுபவங்களை கதைகளாக்குவதில் எஸ்.ரா.விற்கு உவப்பில்லை. ஆனால், இத்தொகுப்பில் பெரும்பாலும் அனுபவங்களே புனைவாகியுள்ளன. இத்தொகுப்பைப் பொறுத்தவரை, எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகூறல் முறையில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. எஸ்.ரா.வைத் தொடர்ந்து வாசித்துவந்திருப்பவர்களால் இந்த மாற்றத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

நன்றி : புத்தகம் பேசுது

0Shares
0