சமீபத்திய ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல்களும் போரின் அவலமும் என்னை பெரிதும் துயரமடையச் செய்து வருகின்றன.
சில இரவுகளில் கணிப்பொறி முன்பாக எழுத அமரும் போதெல்லாம் எழுதுவதால் என்ன செய்துவிட முடியும் என்ற குற்றவுணர்ச்சி பெருகி வதைக்க கணிப்பொறியை அணைத்துவிட்டு மௌனமாக வெறும்திரையை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பது நடந்திருக்கிறது. திரையை அணைத்து விடலாம் ஆனால் நினைவுகளை.
பதுங்கு குழிக்குள் நடுங்கியபடி நிற்கும் சிறார்களின் கண்களில் பீறிடும் பயம் அடிமனதில் தீக்கோலால் சூடு இடுவது போன்ற பச்சைவலியை உருவாகிறது.
இருப்பிடம் அழிக்கபட்டு, குடும்பம் சிதைக்கபட்டு, குருதி தோய்ந்த உடலும், அழுது வற்றி போன கண்களுமாக வெடிப்புகை நிரம்பிய ஆகாசத்திற்கும் பற்றி எரியும் நிலபரப்புமிற்கும் இடையில் புகலிடம் தேடி அலையும் லட்சணக்கான குடும்பங்களை காணும் போது மனித அன்பை பற்றிய அத்தனை பிரசங்களும் பொய்த்து போனதை உணர முடிகிறது.
வாழ்க்கை கற்று தர மறந்த எத்தனையோ விஷயங்களை சாவு கற்று தந்துவிடுகிறது.
நமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு கடலும், ஐம்பது மைல் தூர இடைவெளியும் மட்டுமே இருக்கிறது. ஆனால் நம் வாழ்விற்கும் அவர்கள் சாவிற்கும் இடையில் நாம் புரிந்து கொள்ள தவறிய ஆயிரக்கணக்கான மைல் தூரமல்லவா இருக்கிறது.
சொற்களை தவிர பகிர்ந்து கொள்ள என்ன இருக்கிறது எழுத்தாளர்களிடம். சொற்களால் என்ன செய்துவிட முடியும்.
மனிதமேன்மைகளை மேடைதோறும் கொண்டாடும் நாம் இந்த அழித்தொழிப்புகளின் முன்பாக மட்டும் ஏன் வாய் மூடி மௌனமாக நிற்கிறோம். வழி தவறி இருளில் பறக்கும் ஒற்றை கொக்கைக் காணும் போது கூட வருத்தம் கொள்ளும் தமிழ் மனது ஏன் இத்தனை ஆயிரம் உயிரிழப்புகளை கண்டு கொள்ள மறுக்கிறது. அறம்பாடி அழித்த தமிழ்நாவுகள் இன்று ஏன் முடமாகி போயிருக்கின்றன.
யோசிக்கையில் குற்றவுணர்வும், துக்கமும் பீடிக்கின்றன. மனதில் ஒருவரின் நினைவு கொப்பளித்து கொண்டேயிருக்கின்றது. அவர் ஈழப்படைப்பாளி புஷ்பராஜா.
புஷ்பராஜா ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். அதன் வரலாற்றை அருகில் இருந்து கண்டவர். நேர்பட பேசுகின்றவர். ஈழப்போராட்டம் குறித்த விரிவான நூலை எழுதியிருப்பவர். மேன்மையான மனிதர். உடல்நலக்கோளாறு காரணமாக சிகிட்சை செய்து கொள்ள சென்னை வந்திருந்தார். நோய் தீராமல் இரண்டு ஆண்டுகளின் முன்பாக மரணம்அடைந்து போனார்.
புஷ்பராஜா சென்னை வந்திருக்கிறார் என்று தெரிந்து அவரை சந்திக்கசென்ற போது கடற்கரைக்கு போகலாமா என்று கேட்டார். சென்றிருந்தோம்.
இதுதான் என்னுடைய கடைசி பயணம் என்று நினைக்கிறேன். அடுத்த வருசம் வரை உயிரோடு இருக்கமாட்டேன் என்று சிரித்தபடியே சொன்னார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்றதும் சாவு என்னை பல வருடமாக நிழலைப் போல துரத்தி வந்து கொண்டேயிருக்கிறது. மண் மீது நான் கொண்டுள்ள பிடிப்பு தான் என்னை காப்பாற்றி வாழ வைத்துக் கொண்டிருக்கிறது போலும்.
சமீபத்தைய நிகழ்வுகளை காணும் போது இத்தனை உயிர்கள் அழிவதை காணுவதை விடவும் நான் இறந்துபோய்விடுவது மேல் என்று தோன்றியபடியே இருக்கிறது. சாவிடம் என்னை ஒப்படைத்து கொள்ள விரும்புகிறேன்
என் நண்பர்கள். நான் நேசித்தவர்கள். என்னுடைய சொந்த ஊர், என அத்தனையும் இழந்தாகிவிட்டது. பிடுங்கி எறியப்பட்டு ஏதோவொரு தேசத்தில் ஒட்டிக் கொண்டு உயிர்வாழ்கிறேன். ஒரு வகையில் அவமானமாக இருக்கிறது. என் நிலமெங்கும் நினைவுகள் கொப்பளித்தபடியே உள்ளன. இறந்து போனவர்களின் மௌனம் எளிமையானது அல்ல. அது ஒரு நினைவூட்டல் என்று சொல்லியபடியே அலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்
ஈழப்போராட்டத்தின் ஆதிநாட்களில் இருந்து சாட்சியாக இருந்தவர் புஷ்பராஜா. நடந்த முக்கிய சம்பங்கள் அத்தனையும் அறிந்தவர். உடனிருந்தவர். அன்று அவர் மனதில் தீராத வலி மட்டுமே இருந்ததை உணர முடிந்தது.
அதன் பிறகு நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இருளில் ஒருவர் முகம்தெரியாமல் அருகில் உட்கார்ந்திருந்தோம்.
இப்படி அருகில் அருகில் இருந்தும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள முடியாதபடி இருள் படர்ந்திருப்பது போல தான், தமிழ் மக்களுக்கும் எங்களுக்கும் இடைவெளி உள்ளது என்றபடியே அருகில் இருந்த என் கையைப் பற்றிக் கொண்டார். வெதுவெதுப்பான அந்த கைகளின் உயிரோட்டம் சிலிர்ப்படைய செய்தது. நீண்ட நேரம் கைகளை பற்றிக் கொண்டேயிருந்தார்.
பிறகு சொன்னார். போராட்ட நினைவுகள் எங்களோடு அழிந்துவிடக்கூடாது. அவை பதிவு செய்யப்பட வேண்டும். துயர்படிந்த எங்கள் மனது படைப்பூக்கம் கொள்வதில்லை,
ஆனால் இங்குள்ள தீவிரமான படைப்பாளிகள் அத்தனை பேரும் ஈழ போராட்டத்தின் நூறு நூறு நினைவுகளை பதிவு செய்ய வேண்டும். காலம் எல்லா நினைவுகளையும் அழித்துவிடும். ஆனால் சொற்களை காலத்தால் எதுவும் செய்ய முடியாது. எம் மக்களின் வாழ்வும் சாவும் என்றைக்கும் நினைவூட்டிக் கொண்டிருக்கப்பட வேண்டும். அப்படியான வலிமிகு வரிகளை எழுதுகின்ற யாவரும் எங்கள் சகோதர்களே. அந்த உறவு தான் நமக்குள் வேண்டியிருக்கிறது என்றார்.
நெடுநேரம் கடற்கரையில் இருந்தோம். அலையில் கால் நனைத்தபடியே நின்றோம். துக்கம் அப்பிய அவரது முகம் எதையோ நினைத்து கொண்டிருந்தது. அதன்பிறகு அவர் சென்னை வரவில்லை. இறந்து போய்விட்டார். அவர் சொன்னபடியே அது தான் அவரது கடைசி பயணம்.
புஷ்பராஜாவின் கடைசி சொற்கள் இன்றும் மனதில் நீந்திக் கொண்டேயிருக்கின்றன.
இன்று போர்சூழலில் சிக்கி மூன்று லட்சம் மக்கள் அடிப்படை உதவிகள் கூட இன்றி தவிக்கிறார்கள். என்ன ஆகும் நாளை என்ற கேள்வி அவர்களை மட்டுமில்லை. நம்மையும் வதைக்கிறது. ஆனால் அவர்கள் தனித்து கைவிடப்படவில்லை, நாம் இருக்கிறோம் அவர்களை அரவணைத்து காப்பாற்றும் பணியில் உடனிருப்போம் என்பதை கூட்டுகுரலாக சொல்லி வேண்டியிருக்கிறது.
ஆகவே உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் என்ற கண்டனக்குரலை படைப்பாளியாக முன்வைக்கிறேன். இது நாம் அனைவரும் தொடர்ந்து செய்ய வேண்டிய முக்கிய பணி என்பதை ஒரு போதும் மறக்கமாட்டேன்.
**