ஜீ.வி. ஐயர்

.
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு காலையில் கன்னட இயக்குனர் ஜீ.வி. ஐயர் தனது புதிய படமாக ராமாயணத்தை இயக்க உள்ளார். அது பற்றி சில நண்பர்களுடன் கலந்து பேச இருக்கிறார். நீங்கள் வர முடியுமா என்று நண்பர் ஒருவர் கேட்டார்.



ஜீ.வி. ஐயர் இயக்கிய மத்துவாச்சாரியார், ஆதிசங்கரா, விவேகானந்தர், பகவத்கீதை போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். சமஸ்கிருதத்தில் படம் எடுக்க கூடிய ஒரே இந்திய இயக்குனர். நிறைய தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். கன்னட சினிமாவின் பீஷ்மர் என்று கொண்டாடப்படுபவர்.


டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் அவரை ஒரு முறை பார்த்திருக்கிறேன். துறவியை போன்ற அவரது தோற்றம் தனித்துவமானதாகயிருந்தது.  வெற்றிலை போடுவதில் விருப்பம் உள்ளவர் என்பதால் எப்போதும் அவரிடம் வெற்றிலை பெட்டியொன்று கூடவே இருந்ததை கண்டேன்.


பொழுது போக்கு படங்கள், கலைபடங்கள் இரண்டிலும் கவனம் பெறாதவை  வாழ்க்கைவரலாற்று படங்கள்.  காந்தி, அம்பேத்கார், பாரதி, காமராஜர், பெரியார், ஏ.கே. கோபலன், என்று பத்துக்கும் குறைவான படங்களே  இந்தப் பிரிவில் குறிப்பிடத்தக்கவை. ஆவணப்படங்களாக நிறைய வந்துள்ளன. ஆனால் முழு நீள திரைப்படங்களாக சுயசரிதைப்படங்கள் அதிகம் உருவாக்கபடவில்லை. ஆனால் ஹாலிவுட்லும் ஐரோப்பிய சினிமாவிலும் சுயசரிதை படங்கள் அதிகம்.


ஜீ. வி. ஐயர் இயக்கிய படங்கள் தத்துவவாதிகளைப் பற்றிய சுயசரிதை படங்கள். சங்கரர், மத்துவர், விவேகானந்தர் என்று இந்திய ஞானமரபின் ஆளுமைகளை அவர் திரைப்படமாக உருவாக்கினார். அந்தப் படங்கள் வெகுஜன ரசனைக்கு ஏற்ப உருவாக்கபடவில்லை. அதே நேரம் நேரடியான வாழ்க்கை வரலாறும் கிடையாது. தனது பார்வையில் சங்கரின் வாழ்வை. மத்துவாச்சாரியாரின் வாழ்வை. அவர்களது தத்துவங்களை வெளிப்படுத்தினார் ஐயர். அதனால் அது சிறிய பார்வையாளர்கள் வட்டம் ஒன்றிற்கான திரைப்படமாக மட்டுமே நிலை கொண்டுவிட்டது. அதைப்பற்றி அவருக்கு பெரிய குறை எதுவும் இருக்கவில்லை.


ஜீ.வி. ஐயரின் படங்களுக்கு கலைஇயக்குனராக பணியாற்றியவர் ஒவியர் கிருஷ்ணமூர்த்தி. ஆகவே அவர் வழியாகவும் முன்னதாக ஐயரைப்பற்றி நிறைய அறிந்திருந்தேன். ராமாயணம் பற்றி புதிதாக என்ன சொல்லிவிடப்போகிறார் என்று உள்ளுணர்வு அலுப்பூட்டிய போதும் எதற்காக ஞானமார்க்கம் பற்றிய படங்களாக அவர் இயக்குகிறார், அவரது பார்வையில் சினிமா எப்படியிருக்கிறது, எது அவரை இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்க செய்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரை சந்திக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன்


மந்தைவெளியில் உள்ள அபார்ட்மெண்டில் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தின் முகவரியைத் தேடுவது பெரிய வேலையாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மந்தைவெளிக்குள்ளாகவே சுற்றிவந்து கொண்டேயிருந்தேன். வீட்டை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட பெயரில் ஒரு அபார்ட்மெண்ட் இல்லவே இல்லை.


வீட்டு எண்ணை அறிந்து கொள்ளலாம் என்று போன் செய்தால் போனை யாரும் எடுக்கவில்லை.  பேசாமல் திரும்பி போய்விடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த போது கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி சாலையில் நடந்து போய்க் கொண்டிருப்பதை கண்டேன். அவசர அவசரமாக அவரை பின்தொடர்ந்த போது அவரும் என்னைப் போலவே வீடு தெரியாமல் அலைந்து கொண்டிருப்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் அவரிடம் தெளிவான முகவரி இருந்தது.


அருகாமையில் உள்ள பிள்ளையார் கோவில்  முன்னிருந்த பூக்கடையில் கேட்ட போது இப்போது அந்தக் குடியிருப்பின் பெயர் மாறிவிட்டது என்று புதிய பெயரை சொன்னாள் பூ விற்கும் பெண். இரண்டாவது தளத்தில் இருந்த அந்த வீட்டிற்கு போன போது தரையில் பாய் விரிக்கபட்டிருந்தது. ஐயர் வெற்றிலை போட்டபடியே காலை ஒரு பக்கம் சாய்த்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்திருந்தார். வயதான தோற்றம். பெரிய மூக்கு, ஏறிய நெற்றி, அடர்ந்த புருவங்கள். உதடை மறைத்த நரைத்த மீசை. அடர்ந்து தொங்கும் தாடி, வெள்ளை உடை. அவர் முகத்தில் வெளிப்படையான சிரிப்பு இருந்தது


ஐந்து பேருக்கும் குறைவாகவே அங்கிருந்தார்கள். கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியை அருகில் வர வைத்து உட்கார வைத்துக் கொண்டார். வந்தவர்களின் அறிமுகம் நடைபெற்றது. என்னை எழுத்தாளர் என்று அறிமுகம் செய்தவுடன் வாஞ்சையான கண்களுடன் எது போன்ற கதைகளை எழுதுகிறேன். ராமாயணத்தை முழுமையாக வாசித்திருக்கிறேனா என்று கேட்டார். பதில் சொன்ன போது பக்கத்தில் வந்து உட்காரும்படியாக சொன்னார்.
அவரது கையில் திரைக்கதையின் பிரதியிருந்தது. தான் உருவாக்கவிருக்கும் படத்தை பற்றி மனதில் உள்ள சில விஷயங்களை தான் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அதைப் பற்றி முடிவில் நாம் விவாதிக்கலாம் என்று சொன்னார்.


பில்டர் காபி வந்தது. காபி குடித்து முடித்தவுடன் அவர் சில நிமிசம் அங்கிருந்த ஒவ்வொருவரையும் உற்று பார்த்தபடியிருந்தார். பிறகு கண்களை மூடிக் கொண்டார். தியானத்தில் இருப்பது போல அவரது முகத்தில் சாந்தம் படியத் துவங்கியது. சில நிமிசங்களுக்கு பிறகு கண்களை திறந்துகொண்டு எல்லோரையும் பார்த்து சிரித்தார்


ராமாயணத்தை நான் வெறும் கதையாகப் பார்க்கவில்லை, அது கதையும் இல்லை.எனக்கு அது ஒரு யோகமுறையை விளக்கும் புத்தகம்.  கதாபாத்திரங்களை நான் யோகத்தின் பல்வேறு குறியீடுகளாகவே பார்க்கிறேன் என்று சொல்லியபடியே தன் திரைக்கதையிலிருந்து சில பகுதிகளை வாசிக்க துவங்கினார்


அவரது திரைக்கதையில் ராமன் சீதை ராவணன் எல்லோரும் இடம்பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்களை பற்றி அறிந்திருந்த பிம்பங்கள் எதுவும் இடம்பெறவில்லை.  ராமன் கதையை வளர்த்து சொல்லும் திரைக்கதை வடிவமாக அது உருக்கொள்ளவில்லை. மாறாக ராமன் சீதை லட்சுமணன் யாவரும் புலன் அறிதலின் குறியீடுகளாகவும் ராமன் என்பது அகவிழிப்புணர்வின் வேறு நிலைகள் எனவும் விளக்கி கொண்டிருந்தார்.


எனக்கு மலையாள இயக்குனர் அரவிந்தனின் காஞ்சன சீதா படம் நினைவிற்கு வந்தபடியே இருந்தது. அற்புதமான படமது. குறிப்பாக காட்டில் ராமன் சீதையை தேடி அலையும் காட்சிகள் படமாக்கபட்ட விதம் கவித்துவமானது. அந்தப் படம் ராமன் சீதை பற்றி நமக்குள் ஊறியிருந்த பிம்பங்களை முழுமையாக உருமாற்றம் செய்யக்கூடியது.


ஆரம்பத்தில் உற்சாகமற்று இருந்த எனக்கு அவர் குறியீடுகளின் வழியாக உருவாக்கும் ராமாயணம் பிடிக்க ஆரம்பித்தது.


ஆங்கிலத்திலும் கன்னடத்திலுமாக அவர் தன் திரைக்கதையை விவரித்து முடித்துவிட்டு அமைதியடைந்தார். அதை பற்றி அபிப்ராயம் சொல்வதற்கு என்னிடம் எதுவுமிருகல்லை. மாறாக எப்படி இந்த குறியீடுகளை அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதில் என் கவனம் இருந்தது. அங்கிருந்தவர்கள் அவரது திரைக்கதையை புகழ்ந்து சொல்லியபோது அவர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.


என்னிடம் எப்படியிருக்கிறது என்று கேட்டார். நான் அந்த குறியீடுகளால் வசீகரிக்கபட்டேன் என்பதை சொல்லி எனக்கு தெரிந்த சித்த வைத்தியக்குடும்பம் ஒன்றில் மூலிகை அத்தனைக்கும் ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்கள் குறியீடாக வைக்கபட்டுள்ளன. அவர்கள் மருந்தின் ரகசியம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்படியொரு குறீயீடுகளை வைத்திருக்கிறார் என்று சொன்னேன்.


உடனே அவர் ஆர்வமாகி எந்த கதாபாத்திரம் பெயரை என்ன மூலிகை செடிக்கு வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். என்னால் அதை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அதை பற்றி சொல்வதுமில்லை என்றேன். உற்சாகமாகி அவர்கள் எங்கே இருக்கிறார்கள். நான் சந்திக்க முடியுமா என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.


கூட்டத்தில் இருந்த ஒரு நண்பர் இந்த படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் என்று கேட்டார். அதற்கு ஐயர் சிரித்தபடியே அது பெரிய புதிர். என்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர் தேடி அலைந்தது பெரிய கதை. பாதியில் ஒடியவர்கள் நிறைய என்று சொல்லியபடியே யாராவது வருவார்கள் என்று  தனக்கு நம்பிக்கையிருப்பதாக சொன்னார்


எதற்காக இப்படியான படங்களாக அவர் எடுக்கிறார் என்று இன்னொரு நண்பர் கேட்ட போது அவர் தானும் வழக்கமான பொழுது போக்குபடங்களாகவே நிறைய எடுத்ததாகவும், அந்த காலத்தில் தேவர் பிலிம்ஸ் கதைஇலாகாவில் சீன் சொல்லும் ஆட்களில் தானும் ஒருவனாக சில வருசம் பணியாற்றியதை சொல்லி ஒரு சீன் சொன்னால் பத்து ரூபாய் தருவார்கள். ஆங்கில படம் பார்க்க டிக்கெட் எடுத்து தருவார்கள்.


தினமும் ஒரு ஆங்கிலபடம் பார்க்க வேண்டும். அதிலிருந்து ஏதாவது ஒரு சீனை உருமாற்றி கதை இலாகாவிற்கு சொல்ல வேண்டும். அப்படி தான் வாழ்க்கை ஒடிக் கொண்டிருந்தது. நாடக அனுபவம் இருந்ததால் நிறைய எழுத முடிந்தது.  வெற்றிகரமான சில தமிழ்படங்களின் ஆதார கதைகள் நான் சொன்னவை. பிழைப்பிற்காக அதை செய்தேன். பிறகு கன்னடத்தில் படம் இயக்கி வெற்றிபெற்றேன்.


எஸ். எல். பைரப்பா என்ற எழுத்தாளரின் நாவலை படமாக்க விரும்பி அதற்கு உரிமை கேட்ட போது  அவர் உன்னால் பொழுது போக்கு படம் தவிர வேறு நல்ல சினிமா எதையும் எடுக்க முடியாது. உனக்கு நாவலின் உரிமையை தர மாட்டேன். கிரீஷ் கர்நாடை போட்டு எடுப்பதாக இருந்தால் உரிமை தருகிறேன் என்று சொன்னது மனதை உறுத்த துவங்கவே பூனா பிலிம் இன்ஸ்டியூட்டிற்கு சென்று சில மாதங்கள் அங்கே தங்கி ஆவணகாப்பகத்திலிருந்து நூற்றுக்கணக்காக உலக திரைப்படங்களை தொடர்ந்து பார்க்க துவங்கினேன். அத்தோடு பி.வி.காரந்த் கிரிஷ் கர்நாட் ஆகியோரின் நட்பும் சேர்ந்து கொள்ள புதிய சினிமாவிற்காக அகப்பார்வை உருவாக துவங்கியது என்றார்


பேச்சு ஆதிசங்கரர் படத்தை பற்றி நீண்டது. அந்த படத்திற்காக படக்குழுவினர்கள் நாற்பத்திஐந்து பேர் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டு கேரளம் துவங்கி இமயமலை வரை மாத கணக்கில் பயணம் செய்தோம். வழியில் ஆங்காங்கே நிறுத்திநிறுத்தி படப்பிடிப்பு நடக்கும். ஆற்றோரமாக பார்த்து வண்டியை நிறுத்தி சமைத்து சாப்பிடுவோம். அப்படி தான் அதை படமாக்கினோம்


ஆதிசங்கரர் பற்றிய புனித பிம்பத்தை  நான் காட்ட நினைக்கவில்லை. படத்தில் அவர் பூஜை செய்யும் காட்சி ஒன்று கூட இடம்பெறவில்லை. அத்வைதம் வழியாக ஆதிசங்கரை அறிந்து கொள்ளவே முயற்சிக்கிறேன், அதனால் தான் சமஸ்கிருதத்தில் அதை படிமாக்கினேன் , எனது திரைப்படங்கள் கேளிக்கை படங்கள் அல்ல அது போல கலைப்படங்களும் இல்லை மாறாக வேதாந்தபடங்கள் என்று அவர் குறிப்பிட்டார். சரியான சுயமதிப்பீடு அது என்று தோன்றியது


மதியம் வரை நீண்ட உரையாடலின் முடிவில் அவர் தன்னுடைய படத்தில் ராவணன் ஆக சஞ்சய் தத் நடிக்க ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதன் சில மாதங்களுக்கு பிறகு  அவர் ஹர்ஷனின்  காதம்பரியை தொலைக்காட்சி தொடராக உருவாக்க போவதாக அறிவித்து அதற்கான வேலையில் ஈடுபட துவங்கினார்.


ஒரு நாள் தினசரியில் ஜீ. வி. ஐயர் மும்பையில் படத்தொகுப்பு வேலையில் இருந்த போது உடல்நலக்குறைவால் இறந்து போனார் என்ற செய்தியை வாசித்தேன். அவரோடு ஒரேயொரு முறை மட்டுமே பேசியிருக்கிறேன். அதுவும் சில மணி நேரங்கள். ஆனால் அந்த சந்திப்பில் அவரிடம் ஏதோவொரு அகநெருக்கத்தை நான் உணர்ந்தேன்.


சமீபத்தில் அதைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதுநீங்கள் மட்டுமில்லை. பலரும் அப்படி உணர்ந்திருக்கிறார்கள். எனது முதல்படம் அவருடையது தான். எத்தனையோ பிரச்சனைகள். ஒட விட நினைக்கும் போதெல்லாம் அவரை பற்றிய நினைப்பு தடுத்துவிடும். அது தான் சிறப்பம்சம். அவர் படங்களுக்கு பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்து தேசிய விருது பெற்றிருக்கிறார்.


ஹம்ச கீதே அவரது முக்கியமான படம் என்று சொல்லி தன் நினைவுகளில் ஆழ்ந்து போனார். நான் ஹம்சகீதேயை காணவில்லை. ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.


ஐயரின் ராமாயணம் என்னவானது என்று கேட்டேன். இனிமேல் அதை யார் பண்ண போகிறார்கள். என்னிடம் அந்த கன்னட திரைக்கதையின் பிரதி இருக்கிறது என்றார் கிருஷ்ணமூர்த்தி. எழுதி படமாக்கபடாத அந்தத் திரைக்கதை இனி என்னவாகும். இப்படி எத்தனையோ திரைக்கதைகள் படமாக்கபடாமல் ஏதேதோ காரணங்களால் முடக்கபட்டிருக்கின்றன. அதை பற்றி யோசிக்க யோசிக்க மனது துக்கமேறி ததும்பியது.


சினிமா சொல்லும் கதைகளை விடவும் சினிமாவைப் பற்றி சொல்லாத கதைகள் நிறைய என்பது தான் உண்மையில்லையா ?


*** 

0Shares
0