அ. எக்பர்ட் சச்சிதானந்தம்.


நவீன தமிழ் இலக்கியம் என்பது ஆளுமைகளின் உலகம் மட்டுமில்லை. புதுமைபித்தனுக்கும் ஜானகிராமனுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்றால் ஜானகிராமனே சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்த வல்லம் தாஜ்க்கும் ஒரு இடம் இருக்கவே செய்கிறது.



அறியப்பட்ட இலக்கிய ஆளுமைகளை விடவும் அறியப்படாத முக்கியபடைப்பாளிகள் என்று ஐம்பது பேரைச் சுட்டிகாட்ட முடியும். அவர்கள் அதிகம் எழுதியிருக்கவில்லை. ஒரு சிறுகதைத் தொகுப்போ. கவிதைத் தொகுப்போ வெளியிட்டிருக்கிறார்கள். மின்னல் ஒளிர்வு தனியொளியாக மின்னுவதைப் போல தொடர்ந்து தீவிர இலக்கியத் தளங்களில் பங்குபெறாத போதும் அவர்களது பங்களிப்பு இன்றும் இலக்கிய வாசகர்கள் மனதில் இருக்கவே செய்கிறது.


ஒரேயொரு நாவல் எழுதிய நடைபாதை இதயன், தையல்வேலை செய்யும் சிறுகதையாசிரியர் கர்ணன்,  போர்ஹே மார்க்வெஸ் என்று தீவிர மொழியாக்கங்கள் செய்ததோடு நவீன இலக்கிய கட்டுரைகள் எழுதிய படைப்பாளி ஜோதி விநாயகம், வீடு தொகுப்பை உருவாக்கிய பால்ராஜ் கென்னடி, கைப்பிரதியில் சில திருத்தங்கள் கவிதைகள் எழுதிய சத்யன், கல்குதிரையில் தொடர்ந்து தரமான கவிதைகள் எழுதிய குறுமலை சுந்தரம், சுப்பையா பாரதி, கணையாழியில் தொடர்ந்து எழுதிய தேவகோட்டை வா. மூர்த்தி, அனந்த நாராயணன்.


கவிஞரும் எழுத்தாளருமான டி.எம். நந்தலாலா, கார்த்திகா ராஜ்குமார், கொக்குகள் பறந்து போய்விட்டன சிறுகதை தொகுப்பை வெளியிட்ட ஜீ.காசிராஜன், ஔவை நீதிமொழியை லெக்கானிய பார்வையில் உளவியல் ஆய்வுசெய்த கார்முகில் பாண்டியன், தஞ்சைவட்டார நாவல்கள் எழுதிய சி.எம்.முத்து, சிறுகதையாசிரியர் கார்த்திகா ராஜ்குமார்,  தி.ச. ராஜு, கவிஞர் பசப்பல் ராஜகோபால், நடை, ழ, கசடதபற, நீலக்குயில், தெறிகள், இலக்கிய வெளிவட்டம், புலரி, தேன்மழை, வேர்கள், பரிமாணம், என பல்வேறு சிறுபத்திரிக்கை நடத்தியவர்கள், இலக்கிய அமைப்புகளை செயல்படுத்தியவர்கள். தமிழ் பேராசிரியர்கள், தனிநூலகம் நடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து உருவாக்கியதே   நவீன தமிழ் இலக்கியம்.


அப்படி குறைவான சிறுகதைகளே எழுதியிருந்த போதும் தமிழில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதைகளை எழுதியவர் அ. எக்பர்ட் சச்சிதானந்தம். நான் எழுதத் துவங்கிய நாட்களில் கணையாழியில் ஜானகிராமன் நினைவு பரிசை பெற்ற இவரது குறுநாவல்களை வாசித்திருக்கிறேன்.


இவரது கதையுலகம் பிரதானமாக கிறிஸ்துவ குடும்பங்களை, தேவாலயத்தை அதன் கட்டுபாடுகளை, அதனுள் நடைபெறும் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், வரம்பு மீறல் இவையே மையமாக கொண்டன. பெரிதும் அனுபவம் சார்ந்த கதைகள் என்பதால் அந்த கதைகளின் சொல்மொழியானது நேரடியாக விவரிப்பதாகவே இருக்கும்


சிறுகதையின் வடிவ ஒழுங்கு குறித்தோ, அதன் கலைநேர்த்திகள் குறித்தோ சச்சிதானந்தம் பெரிதும் கவலைபட்டவரில்லை.  அதனால் அவரது கதைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலே முக்கியமாக கவனம் கொள்கின்றன.
எனக்கு அவர் கதைகளில் வரும் மனிதர்களும் அவர்களது சுபாவமும் பிடித்திருந்தது.


தேவாலயம் ஒரு பெரிய வணிக நிறுவனம் என்பதோடு கிறிஸ்துவ பள்ளிகளுக்குள் உள்ள புரையோடிப்போன நடைமுறைகளை, திருச்சபையின் அதிகார ஆசைகளை சுட்டிகாட்டுகிறார் சச்சிதானந்தம். அவை இதன் முன்னே  இலக்கிய வாசகர்களின் கவனம் பெறாத விஷயங்களாகும்.


வில்சன் ராஜ், ஜேக்கப்ராஜ், பிலிப், கோயில்பிள்ளை, லில்லி , என்று எக்பர்ட் சச்சிதானந்தம் காட்டும் மனிதர்கள் பெரிதும் நம்மை சுற்றி வசிப்பவர்களே . வாழ்க்கை நெருக்கடி அவர்களைப் படுத்தி எடுக்கின்றது. நிறைவேறாத ஆசைகளும் இயலாமைகளும் பற்றிக் கொள்ள தத்தளிக்கிறார்கள். ஆற்காடு தென் ஆற்காடு பகுதிகளில் வாழும் தமிழ் கிறிஸ்துவக் குடும்பங்களின் அன்றாட உலகங்கள் இவை.


எந்த மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் மத்தியதர வர்க்கத்தின் மனநிலை ஒன்றுபோலவே தானிருக்கிறது. தன் குடும்பம் தனது சுயநலம் என்பதற்கு மேலாக எதிலும் கவனம் கொள்வதில்லை. சுற்றியுள்ள மனிதர்களை ஏமாற்றுவதையோ, நம்பிக்கை துரோகம் செய்வதையோ பற்றி ஒருவருக்கும் குற்றவுணர்ச்சியில்லை. பிரார்த்தனை, அன்பு, தூய நம்பிக்கை என்பதெல்லாம் பாடமாகவே இருக்கிறது. அவை நடைமுறை படுத்தபடவில்லை. என்பதை சச்சிதானந்தத்தின் கதைமாந்தர்கள் பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.


உதாரணத்திற்கு ஒரு கதையில் வீட்டுவாசலில் விடப்படும் செருப்பை யாராவது திருடிப்போய்விடுவார்கள் என்று ஒரு பெண் தன்கையால் எடுத்துவந்து வீட்டிற்குள் போடுகிறாள்.


நுட்பமான விவரண இவரது கதைகளில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. ஒரு வீட்டை பற்றி விவரிக்கும் போது அந்த வீட்டின் சுவர்களில் மூட்டைபூச்சி நசுக்கபட்ட ரத்தகோடுகள் உள்ளதை பற்றி எழுதுகிறார். வயதான ஒருமனிதரின் புகைப்படத்தை காணும் போது தன் கஷ்டங்களை எல்லாம் சின்னதாக சுருட்டிக் கொண்டிருந்தது போலிருந்தது புகைப்படத்திலிருந்த அந்த முகம் என்ற வரி வருகிறது.


இடைவெட்டு வரிகளாக வந்து போகும் சில காட்சி படிங்கள் இவரது கதையின் தனிச்சிறப்பு. ஒரு கதையில் பயன்படுத்தபடாத குழந்தையின் நடைவண்டியொன்று பரணில் கிடக்கும் தனிக்காட்சி வருகிறது.  இன்னொரு கதையில் உள்ளங்கையை தடவும் விரல்கள் என்ற காட்சிபடிமம் வருகிறது.


இவரது மலம் என்றொரு சிறுகதையிருக்கிறது. அதில் மலம் அள்ளும் பெண்ணின் மீது காமம் கொண்டு அவளை அடைய விரும்புகிறான் ஒருவன். அந்த பெண் அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறாள். தனக்கு பதிலாக ஒரு நாள் அவன் வீடு வீடாக போய் மலம் அள்ளிவந்தால் அவனோடு படுத்து கொள்வதாக சொல்கிறாள்.  அவள் மீதான காமத்தில் மலம் அள்ள போகிறான். ஆனால் அந்த செயலின் உக்கிரம் அவனுக்குள் இருந்த காமத்தை மட்டுமில்லாது, இதுவரை அவன் நம்பியிருந்த நாகரீக உலகையே புரட்டி போடுகிறது. முடிவில் மலம் அள்ள முடியாமல் அவளை துரத்திவிடுகிறான்.


இது போலவே பிலிப் என்றொரு சிறுகதை. இதில் மருத்துவமனையில் வேலை செய்த பிலிப் என்ற பணியாளர் வயதாகி நோயாளியாக வீட்டில் முடங்கி கிடக்கிறார். அவரை பார்க்க வருகின்ற கதாபாத்திரத்தின் வழியே பிலிப்பின் சித்திரம் வெளிப்படுகிறது. 


ஹாஸ்பிடலில் வேலை செய்த பிலிப் அங்கே நடைபெறும் வரம்பு மீறல்களை வெளிப்படுத்தகிறான். நோயாளிகளுக்கு ஆறுதலாக இருக்கிறான்.


மருத்துவமனையை அவன் தன் முதுகில் சுமந்து கொண்டிருப்பதாக ஒரு மருத்துவர் கூறுகிறார். அப்படிபட்ட பிலிப்  ஒய்வு பெற்று கவனிப்பார் அற்ற வீட்டில் தன்முன்னே நடக்கும் சீரழிவுகளின் மௌனசாட்சியாக படுத்துகிடக்கிறான் பிலிப்.


பிலிப்பை பற்றிய அத்தனை விஷயங்களையும் ஒன்று சேர்ந்து விவரிக்கிறார்  சச்சிதானந்தம். தனித்து விரிவாக எழுத வேண்டிய படைப்பிது. ஆனால் சிறுகதையாக சுருக்கி கொண்டிருக்கிறார்


இவரது நுகம் சிறுகதை தொகுப்பை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.


காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளயில் தலைமை ஆசிரியராக வேலை செய்தவர் சச்சிதானந்தம்.


ஒரு முறை கவிஞர் முத்துகுமாரோடு பேசிக் கொண்டிருந்த போது தான் காஞ்சிபுரத்தில் படித்த போது சச்சிதானந்தம் தனது ஆசிரியர் என்று நினைவு கூர்ந்து அவரை பற்றி நிறைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நான் பலமுறை காஞ்சிபுரம் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகும். ஏதோவொரு காரணம் அதை தள்ளிபோட வேறு எங்காவது போய்விடுவேன். தற்போது ஒய்வு பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். அவரது புகைப்படத்தை கூட இதுவரை நான் பார்த்ததில்லை. 


 எக்பர்ட் சச்சிதானந்தம் தேடி வாசிக்கபட வேண்டிய சிறுகதையாசிரியர்.


***

0Shares
0