இதாலோ செவோ

 
பாதசாரியின் காசி குறுநாவலை வாசித்த போது அதில் இதாலோ செவோ (Italo Svevo ) பற்றி முதல்முதலாக அறிந்து கொண்டேன்.


பாதசாரி சிறந்த நவீன கவிஞர். அவரது காசி குறுநாவல் குறிப்பிடத்தக்கவொன்று. மீனுக்குள் கடல் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். கோவையில் வசிக்கிறார்.


அந்த குறுநாவல் வெளியாகி இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இன்றும் அது குறித்து தீவிரஇலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள்.



பாதசாரி இதாலோ செவோவின் Confessions of Zeno  நாவலை வாசித்திருக்கிறார். அந்த நாவலை பற்றி காசி பேசுவதாக விரிவான பதிவுகளை குறுநாவலில் காணமுடிகின்றது. ஒருவகையில் காசி குறுநாவல் கூட இதாலோ செவோவின் நாவல் உருவாக்கிய மனஎழுச்சியில் இருந்து எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  நவீன இத்தாலிய நாவலாசிரியர் வரிசையில் முக்கிய இடம் பெற்றவர் இதாலோ செவோ.


Confessions of Zeno  நாவலை வாசிக்க வேண்டும் என்று பல்வேறு நூலகங்கள், புத்தககடைகளில் தேடி அலைந்தேன். எங்கும் கண்ணில் படவில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்த போது அங்கே தேடி அதன் புதிய பதிப்பு ஒன்றை கண்டுபிடித்து வாங்கினேன்.  வில்லியம் வேவர் மொழியாக்கத்தில் Zeno`s Conscience என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ஒருவகையில் அந்தத் தலைப்பே நாவலுக்கு மிக பொருத்தமானது. காரணம் Confessions என்பதும் Conscience என்பதும் இரண்டு வேறுபட்ட நிலைகள்.



ஆல்பெர் காம்யூ, காப்கா, ம்யூசில் வரிசையில் சேர்த்து வாசிக்கபட வேண்டியவர் இதாலோ செவோ. தஸ்தாயெவ்ஸ்கியின் கதை சொல்லும் முறை தீவிர போல மனநிலையின் தளத்திலே இவரது கதை சொல்லலும் இயங்குகிறது.


அத்தோடு தஸ்தாயெவ்கியின் கதாநாயகர்களை போல இதாலோ செவோனின் நாயகனும் தன்னைப் பற்றிய சுயமதிப்பீடுகளை முடிவு செய்ய இயலாதவனாக இருக்கிறான் , பால்யநினைவுகள்,விலக்கபட்ட அன்பு, தாயில்லாத வளர்ப்பு,  தனிமை என்று நிறைய தஸ்தாயெவ்ஸ்கியின் ஜாடை கொண்டிருக்கிறான்


இன்னொரு புறம் தோல்வுற்ற காதல், சிகரெட், போட்டியான உலகம். கடுமையான அப்பா, இருண்ட மனநிலை  என்று செவோவின் புனைவுலகம் காப்காவினையும் அதிகம் நினைவூட்டுகிறது.


மனநெகிழ்ச்சியும், உள்ளார்ந்த பரிகாசமும், அடக்கபட்ட உணர்வுகளின் பீறிடல்களும் கொண்ட இந்த நாவலை வாசிப்பது தனித்த அனுபவம். மூன்று நான்கு முறை இந்த நாவலை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நாவலின் மையம் மாறிக் கொண்டேயிருப்பதை உணர்ந்தேன். தமிழில் இது போன்ற எழுத்துமுறை கொண்டவராக சம்பத்தை சொல்லலாம். அவரது சாமியார் ஜுவிற்கு போகிறார் என்ற நீள்கதை இதை படிக்கையில் அடிக்கடி நினைவிற்கு வந்தபடியே இருந்தது.


Zeno`s Conscience  நாவல் ஜெனோ கோசினி என்பவனின் நினைவுகளைப் பற்றியது. ஜெனோவிற்கு பல ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கும் பழக்கமிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதை நிறுத்துவதற்காக பேராடுகிறான். ஆனால் முடிவதேயில்லை. இதிலிருந்து விடுபட வேண்டும் என்று மனநல மருத்துவமரை சந்திக்கிறான். அவரோ இதற்காக ஆதாரமான உளவியல் காரணங்களை தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவனது வாழ்க்கையை பற்றிய தகவல்களை ஒரு கேஸ்டயரி போல அவன்  எழுதிக் கொண்டு வந்து தர வேண்டும் என்று சொல்கிறார்.



இதற்காக தனது சிறுவயது முதல் அன்றுவரை தன் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுகிறான் ஜெனோ. அந்த டயரியை மனநல மருத்துவர் பின்னாளில் வெளியிடுவதாகவே நாவலின் வடிவம் அமைந்துள்ளது


நாவலிலின் அத்யாயத் தலைப்புகளே நாவலை பற்றிய முழுமையான சித்திரித்தை அளித்துவிடக்கூடியவை. குறிப்பாக THE SMOKE , THE DEAD WOMEN OF MY FATHER ,THE HISTORY OF MY WEDDING , The WIFE and LOVER, PSYCOANALISIS என்ற அத்யாயத் தலைப்புகளின் வழியாகவே நாவலின் மையக்கதை சொல்லபட்டுவிடுகிறது


இந்த நாவலை போல சிகரெட் பற்றி இவ்வளவு நுட்பமாக எழுதிய புனைகதை எதையும் நான் வாசித்ததில்லை. குறிப்பாக சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற மனநிலை எப்படி உருவாகிறது என்பதை இந்த நாவல் மிக நெருக்கமாக பதிவு செய்திருக்கிறது.



தன்னுடைய பள்ளிவயதில் ஒரு நண்பன் மூலமாக சிகரெட் அவனுக்கு அறிமுகமாகிறது. நண்பன் சிகரெட் வாங்கி தந்து புகைக்க சொல்கிறான். சிகரெட் பிடிப்பது அலாதியான ஈர்ப்பை தருகிறது. அதன்பிறகு வீட்டிலிருந்து காசு திருடி அதில் சிகரெட் வாங்கி புகைக்க துவங்குகிறான். அது கண்டுபிடிக்கபட்டதால் அப்பா அவனை அடித்து உதைத்து சிகரெட் பிடிக்க கூடாது என்று கண்டிருக்கிறார்.


 
இது தான் கடைசி சிகரெட் இனிமேல் பிடிக்கவே மாட்டேன் என்று சிகரெட் ஆசையை உதறி தள்ளுகிறான். ஆனால் அப்படி தள்ளியபிறகு தான் சிகரெட் மீது அளவுகடந்த விருப்பமும் ஏக்கமும் உருவாகிறது. மீண்டும் புகைக்க துவங்குகிறான்.


இப்படியாக வளரும் அவனுக்கு ஒரு முறை உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவர் அவன் சிகரெட் பிடிக்க கூடாது என்று கண்டிக்கிறார். மருத்துவ காரணத்தால் இது தான் கடைசி சிகரெட் என்று தூக்கி எறிகிறான். ஆனால் அவனால் முடியவில்ல் மறுநாளே துவங்கிவிடுகிறது பலநாள் பழக்கம். ஒருவேளை சிகரெட்டை அடிக்கடி நிறுத்துவதற்கு முயற்சிப்பது தான் சிகரெட் பிடிக்கும் ஆசையை வளர்க்கிறதோ என்று கூட அவனுக்கு தோன்றுகிறது.



அவனால் சிகரெட் புகைப்பதை நிறுத்த முடியவேயில்லை. சிகரெட் அவனுக்குள்ளிருந்த நிலை கொள்ளமுடியாத தத்தளிப்பின் வெளிவடிவமாகிறது. சிகரெட் புகைப்பதால் வரும் தீமைகள் மற்றும் நோய்கள் பற்றிய கற்பனை பயம் அவனுக்கு இருக்கிறது. ஆனாலும் அவனால் சிகரெட்டை விட முடியவில்லை. கடைசி சிகரெட் என்ற வசீகரம் அவனை பற்றிக் கொள்கிறது.


இதாலோ சாவோ நிஜவாழ்க்கையில் அப்படிதான் இருந்தார். இந்த நாவல்  பெரிதும் சுயசரிதை தன்மை வாய்ந்தது. கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிர் பிழைக்க போராடிக் கொண்டிருந்த போது கூட தன்னைப் பார்க்க வந்த நண்பரிடம் தனக்காக ஒரு சிகரெட் தரமுடியுமா என்றே செவோ கேட்டிருக்கிறார். மருத்துவர்கள் அதை தடுத்து நிறுத்திவிட்டார்கள். ஆனால் செவோ கடைசி சிகரெட் என்பதில் தான் சிகரெட்டின் உண்மையான கவர்ச்சியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அந்த சிகரெட்டை புகைக்காமலே தான் இறந்து போனார்.


Zeno`s Conscience   நாவல் ஐந்து முக்கிய கதைப்பின்னலைக் கொண்டிருக்கின்றன.  ஒன்று சிகரெட் பிடிப்பதை பற்றிய அவனது தடுமாற்றங்கள், பயங்கள், ஆசைகளை விவரிக்கிறது. மற்றது அவன் அப்பாவின் கடைசி நாட்களில் அவருக்கு உதவி செய்வதற்காக இருந்த போது நடந்த சம்பவங்களை விவரிக்கிறது. அதில் அவனுக்கும் அப்பாவிற்குமான எதிர்நிலைகள் சித்தரிக்கபடுகின்றன.


மூன்றாவது ஜெனோவின் காதல் மற்றும் திருமணம். நான்காவது அவன் மனைவிக்கும் அவனுக்குமான உறவு, அவனது கள்ளக்காதல். ஐந்தாவது மனைவியின் தங்கை கணவனுடன் சேர்ந்து ஜெனோ மேற்கொண்ட வியாபாரம் மற்றும் தோல்விகள்.  இந்த ஐந்து கதைச்சரடுகளும் தனித்தனியாக விவரிக்கபடுகின்றன. ஒரு நிலையில் ஒன்று மற்றொன்றோடு ஊடுகலந்து ஒன்றையொன்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன.



ஜெனோவின் அப்பா கடுமையான மனநிலை கொண்டவர். அவருக்கு நகைச்சுவை உணர்வு அறவே கிடையாது. எப்போதும் அவர் ஜெனோவை பைத்தியக்காரன் என்றே திட்டிக் கொண்டிருக்கிறார். அவரிடம் தான் பைத்தியமில்லை என்று நிருபணம் செய்வதற்காக ஜெனோ மருத்துவர் ஒருவரிடமிருந்து சான்றிதழ் வாங்கி வந்து அப்பாவிடம் காட்டுகிறான். அது அவரது கோபத்தை இன்னமும் அதிகமாக்கிவிடுகிறது.


அம்மா இறந்து போய் பலவருடாகியதால் அப்பா தனிமையில் தான் வாழ்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் படுக்கையிலே கிடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால் ஜெனோவின் அப்பா அதை கேட்க மறுக்கிறார். ஒரு முறை கட்டாயப்படுத்தி அவரை படுக்க வைத்த போது கோபத்தில் எழுந்து அவன் கன்னத்தில் ஒங்கி அறைகிறார். அப்படியே விழுந்து இறந்தும் விடுகிறார். சாவதற்கு சில நிமிசங்கள் முன்பாக அப்பாவிடம் அடிவாங்குகிறான் ஜெனோ. அது அவனை இருண்ட மனநிலைக்கு தள்ளுகிறது.


பணம்படைத்த வியாபாரி ஒருவருக்கு நான்கு பெண்கள் இருக்கிறார்கள். நால்வரது பெயரும் ஏ என்ற எழுத்தில் துவங்குகிறது. அந்த நால்வரில் ஒருத்தியை தான் மணந்து கொள்வதாக ஜெனோ வாக்குறுதி தந்திருக்கிறான்.
நால்வரில் ஆடா என்ற பெண் அழகாக இருக்கிறாள். அவளை ஜெனோ  காதலிக்கிறான். ஒரு நாள் அவளிடம் தான் அவளை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறான். அவள் தான் குடோ என்பவனை காதலிப்பதாக சொல்லி மறுத்துவிடுகிறாள்.


உடனே அடுத்த பெண்ணான ஆல்பெர்டாவை தான் காதலிப்பதாக சொல்லி அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைபடுவதாக தெரிவிக்கிறான். அவளுக்கு திருமணத்தில் விருப்பமேயில்லை என்று மறுத்துவிடுகிறாள்.
உடனே மூன்றாவது பெண்ணான அகஸ்டாவிடம் சென்று அவளை காதலிப்பதாக சொல்கிறான். அவள் தனது சகோதரிகளிடம் இதுபோன்று திருமண விருப்பதை தெரிவித்தான் என்று தெரிந்த போதும் கூட அவனை ஏற்றுக் கொள்கிறான்.


அவளை மட்டும் ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று நினைத்திருந்த ஜெனோ முடிவில் அகஸ்டாவையே திருமணம் செய்து கொள்கிறான்.


அவன் எதிர்பார்த்திற்கு நேர் எதிராக அகஸ்டோ அவனது அன்பிற்கும் நெருக்கத்திற்கும் உரிய மனைவியாகிறாள். அவனை நன்றாக கவனித்து கொள்கிறாள். ஆனால் அழகியான ஆடாவின் காதல் திருமணமாகி கணவனோடு அவளால் ஒத்து போக முடியாத சூழல் உருவாகிறது.


இந்த நிலையில் தன்னிடம் வேலை தேடி வந்த கிளாரா என்ற பெண்ணை ஜெனோ காதலிக்க துவங்குகிறாள். அந்த கள்ளக்காதல் அவனை அதிகமாக சிகரெட் பிடிக்க வைக்கிறது. மனைவிக்கு தெரிந்துவிடுமோ  என்று பொய் சொல்கிறான். ஒரு நாள் கிளரா அவன் மனைவியை தான் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். அவளை அழைத்துவந்து ஆடாவை காட்டி அவள் தான் தன் மனைவி என்று நம்ப வைக்கிறான்.  ஜெனோவின் மனைவி இவ்வளவு பெரிய அழகியா என்று கிளாரா தானே ஒதுங்கி கொண்டுவிடுகிறாள்


ஆடா தன் கணவன் முறையாக வணிகம் செய்ய தெரியவில்லை என்பதால் ஜெனோவுடன் சேர்ந்து கூட்டாக வணிகம் செய்யும்படியாக சொல்கிறாள். அது மனகசப்பையும் தோல்வியையும் உருவாக்குகிறது. சீட்டாடியும் பங்குசந்தையிலும் தன்  சொத்தை இழக்கிறான் ஆடாவின் கணவன். அவள் கோபித்து கொள்ளும்போது அவளை சமாதானம் செய்வதற்காக தற்கொலை செய்து கொள்ள போவது போல நடிக்கிறான் குடோ .


அவனுக்காக ஜெனோ எவ்வளவோ சமரசம் செய்து கொள்கிறான். ஆனால் வணிகம் முழு தோல்வியடைகிறது. இதற்கிடையில் தவறுதலாக ஒருநாள் விஷத்தை அதிகம் குடித்த  ஆடாவின் கணவன் இறந்து போகிறான். அவனது மிச்சமிருந்த பணத்தில் சூதாடிக் கொண்டு அவனது இறுதிசடங்கில் கூட கலந்து கொள்ளாமல் ஒதுங்கி கொள்கிறான் ஜெனோ.


கடைசி பகுதி முதல் உலகபோர் நாட்களில் தனது மனைவி, மகள் மற்றும் மகனை பாதுகாப்பாக அனுப்பி விட்டு கற்பனையான பயத்துடன் உளவியல் மருத்துவரை சந்திக்கும் ஜெனோவின் நாட்கள் விவரிக்கபடுகின்றன. மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது, தன்னை கற்பனையான வியாதிகள் பீடித்துள்ளதாக நினைப்பது. போரைப் பற்றிய பயங்கள் என்று அந்த பகுதி நீள்கிறது.


இதாலோ செவோவின் நாவலின் முக்கிய பலம். அது ஒரு மனிதனின் அந்தரங்கமான உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறது என்பதே. அத்துடன் உண்மையான சம்பவங்களில் இருந்தே பெரிதும் கதை சொல்லல் உருவாக்கபட்டிருக்கிறது.


ஒப்புதல் வாக்குமூலங்கள் பெரிதும் பொய்யானவை. தனது வாக்குமூலங்களும் பொய்களே என்று ஜெனோ நாவலின் ஒரு இடத்தில் சொல்கிறான். உண்மையில் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தவது பொய்களே. பொய்யை கண்டுபிடிப்பதும் உண்மையாக்குவதும் எளிதானதில்லை. எல்லா பேரிலக்கியத்தின் அடியிலும் பொய்யின் சிற்றோடையொன்று ஒடிக் கொண்டுதானிருக்கிறது.



சிக்மண்ட் பிராய்டின் உளவியல் கண்டுபிடிப்புகளின் மீது ஈடுபாடு கொண்டிருந்த செவோ நனவோடை என்ற மனத்தொடர்ச்சியான கதைசொல்லலையே நாவலில் அதிகம் கையாண்டு இருக்கிறார். அவரது மனநல மருத்துவரான ஒட்டாரோ வெய்ஸ் பிராய்டிடம் நேரடியாக பயிற்சி பெற்ற மனநல ஆய்வாளர் என்பதால் அவர் செவோவை இது போல ஒரு மனபதிவேடு ஒன்றை எழுதி வர வைத்து சிகிட்சை அளித்திருக்கிறார்.


செவோ யூத குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை வழி ஜெர்மானியர்கள், தாய்வழி இத்தாலியர்கள். ஆஸ்திரிய ஹங்கேரிய பிரதேசத்தில் அவர்களது குடும்பம் வசித்து வந்தது. செவோனி உண்மையான பெயர்  எட்டோரா ஸ்மிக்ட்ஷ், தத்துவவாதி ஷோபனேர் மீது ஆழ்ந்து ஈடுபாடு கொண்ட செவோ அவரது கருத்துக்களால் பாதிக்கபட்டிருந்தார். 7 சிறுகதைகள். நான்கு நாவல்கள், சில கட்டுரைகள், இரண்டு நாடகங்கள் இவ்வளவே அவரது இலக்கிய படைப்புகள். அதிலும் இவரது ஆரம்ப நாவல் இத்தாலியில் ஒரு வரவேற்பையும் பெறவில்லை.


இதாலோ செவோவிற்கு ஆங்கிலம் கற்பிப்பதற்காக ஜேம்ஸ் ஐய்ஸ் அறிமுகமானார். அந்த நட்பின் காரணமாக ஐய்ஸ் செவோவின் எழுத்தை வாசித்து அதை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்ய உதவி செய்தார். ஜெனோ நாவல் 1923 ஆண்டு வெளியானது. ஐய்ஸின் முயற்சியால் பிரெஞ்சில் மொழிபெயர்க்கபட்டு தீவிர கவனம் பெற்ற பிறகே அது இத்தாலிய இலக்கிய சூழலில் கவனம் பெற்றது.


இந்த நூற்றாண்டின் மகத்தான நவீன நாவல் என்று கொண்டாடப்படும் ஜெனோவிற்கு பிறகு செவோ நாவல் எதையும் எழுதவில்லை. தனது வணிகத்தை மட்டுமே கவனித்துவந்தார். 1928 ஆண்டு ஒரு கார்விபத்தின் காரணமாக உடல்நல பாதிப்பு உள்ளாகி இறந்தார் செவோ. அப்போது அவருக்கு வயது 66.


இதாலோ செவோவின் வாழ்க்கை பலவிதங்களில் தமிழ் வாழ்க்கையோடு நெருக்கமானது. குறிப்பாக மனக்கசப்பு கொண்ட அப்பா, ஒடுக்கபட்ட பால் உணர்வுகள், அழகில்லாத மனைவியின் பாசம், அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண்ணோடு கள்ள காதல், மச்சினன் உடன் கூட்டாக தொழில் செய்து அடைந்த கசப்பான அனுபவங்கள், மனசிதைவுகள், சிகரெட் போதை . இரண்டிலிருந்தும் வெளிவர நினைக்கும் தள்ளாட்டாம். யாவிற்றின் ஊடேயும் மறையாத தன் உணர்வும் பரிகாசமும் என இந்த நாவல் மிக நெருக்கமான வாழ்க்கையை கொண்டிருக்கிறது.


நாவலில் விவரிக்கபடும் பல சம்பவங்கள் பொய்யானவை. அவை உண்மை போல எழுதப்பட்டிருக்கின்றன என்று விமர்சகர்கள் இதை கண்டித்தார்கள். இன்று வாசிக்கையில் அந்த பொய்கள் தான் நாவலை இத்தனை ஆண்டு காலமாக உயிர்புடன் காப்பாற்றி வைத்துள்ளது என்று தெரிகிறது.


நவீன மனிதனின் குறீயீடாக இருக்கிறான் ஜெனோ. அவனது பிரச்சனைகள் தனிப்பட்டவை அல்ல. மாறாக நவீன மனிதன் கொள்ளும் அகநெருக்கடிகளே அவன் வழியாக பதிவுசெய்யப்படுகின்றன. குடும்பம் என்ற அமைப்பு எந்த அளவு நம்மை கட்டுபடுத்துகிறது. கண்காணிக்கிறது. நெருக்கடியான மனநிலையை தோற்றுவிக்கிறது என்பதை நாவல் அடிக்கோடிட்டு காட்டுகிறது.


தமிழில் அவசியம் மொழிபெயர்க்கபட வேண்டிய உலக நாவல்களில் ஒன்று ஜெனோவின் வாக்குமூலங்கள். தற்போது இதன் ஆங்கில பிரதிகள் எளிதில் கிடைக்கின்றன. வில்லியம் வேவரின் மொழிபெயர்ப்பில் உள்ள நேர்த்தி வாசிப்பை மிக எளிமையாக்கிவிடுகிறது. அவ்வகையில் இது நவீன நாவல் வரிசையில் யாவரும் வாசிக்கபட வேண்டிய நாவலாகும்.


***

0Shares
0