
திரைப்பட இயக்குனர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர், ஷோலே மாதிரி ஒரிஜினலான படம் இப்போ எங்க சார் வருது. எப்பேர்பட்ட படம் என்று அடிக்கடி வியந்து கொண்டிருந்தார். எனக்கும் ஷோலே படம் பிடிக்கும். ஆனால் அந்த படம் நிறைய படங்களில் பாதிப்பில் உருவானது என்று சொன்னேன்.
உடனே அவர் அது எப்படி சார். இப்போ தானே பாரீன் பிலிம்ஸ் பார்த்துட்டு அந்த பாதிப்பில் படம் பண்ணுகிறார்கள். ஷோலே 1975 ல் வெளியான படம் அதில் எப்படி காப்பியடித்தார்கள் என்று கேட்டார்.
இந்திய சினிமாவில் ஒரு மாநில திரைப்படங்களில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு காட்சிகள் பாடல்கள் நகலெடுக்கபடுவதும், ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் படம் உருவாக்கபடுவதும் பல காலமாகவே நடந்து வருவது தானே என்றேன். அவர் நம்பமுடியாமல் ஷோலே என்ன படத்தின் பாதிப்பில் உருவானது என்று கேட்டார்
ஷோலே படம் பற்றிய சில புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. நிறைய விவாதங்கள். ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அதில் இந்த தகவல்கள் உள்ளன. இந்த உண்மைகளை எல்லாம் நான் கண்டுபிடிக்கவில்லை. படத்தின் கதைவசனகர்த்தா சலிம் ஜாவித் . அதில் ஐவித் அக்தரே ஒரு நேர்காணலில் இதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அத்தோடு இன்று இந்த படங்களின் டிவிடி எளிதாக கிடைக்கிறது நீங்களே பார்க்கலாம் என்றதும் அவர் பரபரப்புடன் என்னபடம்னு சொல்லவேயில்லையே என்றார்
ஷோலே படத்தின் கதை நினைவிருக்கிறதில்லையா? இரண்டு திருடர்களை கொள்ளையர்கள் பிடியிலிருந்து ஒரு ஊரை காப்பாற்றுவதற்காக ஒரு போலீஸ் அதிகாரி அழைத்துவந்து பணம் கொடுத்து தங்க வைக்கிறார். அங்கே வந்த பிறகு திருடர்கள் ஊரின் உண்மையான நிலையை அறிந்து அவர்களுக்காக கொள்ளையர்களுடன் சண்டையிட்டு பழிவாங்குகிறார்கள். அதில் ஒருவன் இறந்து போய்விடுகிறான். மற்றவன் அதே ஊர் பெண் ஒருத்தியோடு கொண்ட காதலில் அவளை அடைகிறான்.
இதே கதை தான் அகிரா குரசோவாவின் செவன் சாமுராய். (Seven Samurai ). ஒரு மலைக்கிராமம் ஒன்றை கொள்ளையர்கள் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்காக ஏழு சாமுராய்கள் பணம் கொடுத்து கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களுக்கு முதலில் அக்கறையே இல்லை. ஆனால் அந்த கிராம மக்களின் அன்பை உணர்ந்து கொள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்டு சாகிறார்கள். அதிலும் அந்த ஊருக்கு வரும் ஒரு சாமுராய் அங்குள்ள பெண் ஒருத்தியை காதலிக்கிறான். கொள்ளையர்கள் மறைந்திருந்து தாக்குவதும் பதிலுக்கு சாமுராய்கள் தாக்குவதுமாக படம் மிகப்பெரிய சாகசபடமாக அமைந்திருக்கும். அது தான் ஷோலே படத்தின் மூலப்படம்.
அத்தோடு ஷோலே படத்தில் தர்மேந்திரா அமிதாப் இருவரும் நண்பர்கள். ஒன்றாக திருடுவார்கள். ஒன்றாக சுற்றியலைவார்கள். போலீஸை ஏமாற்றி சுற்றியலைவார்கள். அந்த கதாபாத்திரங்கள் அப்படியே Butch Cassidy and the Sundance Kid படத்தின் பாதிப்பில் உருவானர்கள். அதில் பால்நியூமெனும் ராபர்ட் ரெட்போர்டும் இரண்டு திருடர்கள். ஒன்றாக சுற்றியலைவார்கள். ஒன்றாக தப்பித்து போவார்கள்.
ஒரு காட்சியில் அவர்கள் சுற்றிவளைக்கபடும் போது துப்பாக்கியொன்று அவர்களுக்கு உதவி செய்பவர் காலடியில் கிடக்கும் அவர் அதை எடுத்து தராமல் நின்று கொண்டேயிருப்பார். அதற்காக கோபபட்டு கத்துவார்கள். அந்த காட்சியும் ஷோலேயில் இடம்பெற்றிருக்கிறது
படம் முழுவதும் அமிதாப் மவுத் ஆர்கன் வாசித்தபடியே வருவார். அது செர்ஜியோ லியோனியின் Once Upon a Time in the West படத்தில் வரும் சார்லஸ் பிரான்சன் கதாபாத்திரம். அவர் ஹார்மோனிகா என்ற பெயர் கொண்ட கதாபாத்திரம் படம் முழுவதும் மவுத் ஆர்கனை வாசித்தபடியே வருவார். அதுபோலவே ஷோலே படத்தில் தாகூரின் குடும்பம்கொள்ளையர்களால் மொத்த சுட்டுக் கொல்லப்படுவதும் Once Upon a Time in the West படத்தில் அப்படியே இடம் பெற்றிருக்கிறது. ஜான் போர்ட் இயக்கிய The Searchers படத்திலிருந்தும் இதற்கான உந்துதல் பெறப்பட்டிருக்கிறது.
ஷோலே படத்தின் துப்பாக்கி சுடும்காட்சிகளில் ஸ்லோ மோஷன் படத்தபட்டிருக்கும். அந்த உத்திக்கும் கூட The Wild Bunch படமே முன் உதாரணம்.
அது போலவே படத்தில் அமிதாப் படத்தில் பயன்படுத்தும் இரண்டு பக்கமும் தலை உள்ள நாணயம் இதற்கு முன்பு மார்லன் பிராண்டோ நடத்த One-Eyed Jacks மற்றும் கேரி கூப்பர் நடித்த Garden Of Evil படத்தில் பயன்படுத்தபட்டிருக்கிறது. பிராண்டோ அந்த காசை சுண்டி போட்டு ஒவ்வொரு முறையும் பார்ப்பார்.
இது போலவே ஜெயிலராக வரும் அஸ்ரானி சாப்ளின் கிரேட் டிக்டேடர் படத்தில்வருவது போலவே நடந்து கொள்வார். ரயில் சண்டை காட்சியும் கிரேட் டிரெயின் ராபரி படத்தின் பாதிப்பில் உருவானதே. இது போலவே இரண்டு பேர் பயணம் செய்யும் பைக், துப்பாக்கியால் மாங்காய் சுடுவது, தங்களை பிடித்து கொடுத்து பணம் வாங்கும்படியாக மரக்கடை காரனுக்கு ஆலோசனை சொல்வது போன்றவையும் வெவ்வேறு படங்களில் வந்த காட்சிகளின் பாதிப்பே.
மெக்பூபா மெக்பூபா பாடல் Say You Love Me என்ற Demi Roussas பாடலின் பாதிப்பில் உருவானதே.
இந்த படத்திற்காக கதை விவாதம் ஒரு ஆண்டுகாலத்திற்கும் மேலாக நடந்திருக்கிது. அப்படியிருந்தும் கதையை முடிவு செய்ய முடியவில்லை. அந்த கதை விவாவத்தில் இருந்த ஜோகிந்தர் என்பவர் வெளியேறி அதே கதையை கொஞ்சம் மாற்றி Bindiya Aur Bandoo என்ற ஹிந்தி படமாக தயாரித்தார். அந்த படம் வெற்றிபெறவில்லை.
ஆனால் அது ஷோலே படத்தில் எதை எதை கதையை விட்டு தூக்க வேண்டும் எதை முக்கியப்படுத்த வேண்டும் என்பதற்கு உதவியாக இருந்திருக்கிறது. அந்த படத்தில் தான் முஸ்லிம் சிறுவன் இறந்து போகும் காட்சி வருகிறது. அது ஷோலேயில் கொஞ்சம் மாற்றி பயன்படுத்த பட்டிருக்கிறது.
ஒரே படம் இத்தனை படங்களிலிருந்து உருவி எடுக்கபட்டிருப்பது இதுவே முன்னோடி. இத்தனையும் தங்களது படத்திற்கு தேவையான முறையில் உருமாற்றி திரைக்கதையை உருவாக்கியவர்கள் சலீம் ஜாவிட்.
செர்ஜியோ லியோன் படம் அப்போது இந்தியாவில் வெளியாகவே இல்லை. ஆனால் ஜாவித் அக்தார் அமெரிக்கா சென்ற போது அதை பார்த்திருக்கிறார். அதன் பாதிப்பு மிக நேரடியாக படம் முழுவதும் காணமுடியும்.
இது போலவே கப்பர்சிங் கதாபாத்திரம் குவாலியரில் உண்மையில் இருந்த கொள்ளைக்காரனின் சாயலில் உருவாக்கபட்டிருக்கிறது.
படத்தை பெங்களுர் மைசூர் சாலையில் உள்ள ராம்நகர் என்ற இடத்தில் செட் அமைத்து படமாக்கினார்கள். அந்த இடம் இப்போதும் சிப்பாய் நகர் என்று அடையாளம் சொல்லபடுகிறது. பம்பாய் பூனா இடையில் ரயில்சண்டை காட்சி படமாக்கபட்டிருக்கிறது.
ஷோலே படத்தை வெற்றி பெறச்செய்தது. அதன் சீரான கதை சொல்லல் மற்றும் காட்சிகள் படமாக்கட்ட விதம். பாடல்கள். இயல்பான நடிப்பு. மற்றும் 70 எம்எம் திரையிடல். ஐந்து வருடங்கள் ஒடியிருக்கிறது. முப்பது கோடி ரூபாயை அன்றே வசூல் செய்து தந்திருக்கிறது. தமிழில் திருவிளையாடல் படத்தின் கதைவசனம் இசைதட்டாக வெற்றி பெற்றது போல ஷோலே வசனம் இசைதட்டாக வெளியாகி பல லட்சம் விற்றிருக்கிறது.
இதில் தர்மேந்திரா முதலில் சஞ்சிவ் குமார் கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்பினார். சஞ்சீவ் குமாருக்கு ஹேமாமாலினியோடு ஜோடியாக நடிக்க ஆசை. அவரை திருமணம் செய்து கொள்ளவும் முயற்சித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் தர்மேந்திராவிற்கு ஹேமாவின் மீது உருவான காதலில் அவர் வீரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். அம்தஜ்கானுக்கு குரல் ரொம்பவும் மிருதுவாக இருக்கிறது என்று அவரை படத்திலிருந்து தூக்கிவிட கடைசி வரை முயற்சிநடந்தது. ரமேஷ் சிப்பிக்கு அவரை பிடித்து போய்விடவே படத்தில் அவர் தூக்கபடவில்லை.
ஷோலே படம் வெளியாகி முப்பது வருடங்களை கடந்து விட்டது. ஆனால் இப்போது பார்க்கையிலும் அதே விறுவிறுப்பும் சந்தோஷமும் அப்படியே இருக்கிறது. அசல்நகல் என்பதை தாண்டி அந்த படம் பல நுண்மையான சித்தரிப்புகள், சிறுகதாபாத்திரங்களை, கொண்டிருக்கின்றது. ஷோலேயின் பாதிப்பு இன்றுவரை பல்வேறு இந்திய மொழிபடங்களில் காணமுடிகிறது. வெகுமக்கள் சினிமாவினை ஷோலோ அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. அதனால் தானே இன்றைக்கும் ஹிந்தி சினிமாவின் Cult Movieயாக கொண்டாப்படுகிறது.
அகிரா குரசோவா செவன்சாமுராய் படத்திற்கான கதை தேர்விற்காக ஒரு வருடம் சாமுராய்களை பற்றி எதை எதையோ தன்னுடைய எழுத்தாளர்களுடன் இணைந்து வாசித்திருக்கிறார். ஆனால் எதிலும் அவருக்கு ஈர்ப்பு உருவாகவில்லை. அப்போது பதினாலாம் நூற்றாண்டில் இது போல ஒரு கிராமம் சாமுராய்களை தங்கள் ஊரை கொள்ளையர்களிடமிருந்து மீட்பதற்காக கூலிக்கு அமர்த்தியது என்ற தகவல் தெரிய வந்தது. அதிலிருந்து உருவானதே செவன் சாமுராய்.
அந்த படத்திற்கு முந்நூறு காட்சிகளுக்கு மேல் எழுதப்பட்டது. திரைக்கதையின் வடிவம் படப்பிடிப்பு துவங்கிய பிறகும் முடிவு செய்யபட முடியவில்லை. கடைசியில் நூற்றுக்கும் அதிகமான காட்சிகள் படமாக்கபட்டு அதிலிருந்து செவன் சாமுராய் இறுதிவடிவம் எடிட் செய்யப்பட்டது.
செவன்சாமுராயை ஹாலிவுட் மேக்னிபிசன்ட் செவன் என்ற பெயரில் மறுமுறை தயாரித்தது. ஆனால் சாமுராய் படத்தில் இருந்த வசீகரம் அதில் கூடிவரவில்லை. அந்த படத்தின் வருகை தான் செர்ஜியோ லியோன் என்ற இயக்குனர் உருவாதற்கு காரணமாக இருந்தது.
ஷோலே படத்தின் கதையை சலீம் ஜாவிட் இருவரும் இணைந்து எழுதினார்கள். சலீம்கான் ஜாவித் அக்தர் என்பதன் சுருக்கமே சலீம் ஜாவீட். வெற்றிகரமான அமிதாப் திரைப்படங்கள் இவர்கள் கதைகளே. இதில் சலீம் கான் இன்றைய ஹாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானின் அப்பா. ஜாவிட் அக்தார் பிரபல கவிஞர். தில் சாத்தாஹே படத்தை இயக்கிய பரான் அக்தாரின் அப்பா.
சலீம்கான் சினிமாவில் நடிப்பதற்கு வந்தவர். சிறுசிறு வேஷங்களில் நடித்து அந்த முயற்சி தோல்வியடைவே எழுத்தாளராக உருவாகினார்.
ஜாவிட் அக்தார் போபாலைச் சேர்ந்த கவிஞர். கிளாப் அடிப்பவராக அறிமுகமாகி கதை இலாக்காவில் சேர்ந்து அதிலிருந்து வசனகர்த்தாவாக மாறியவர். பிரபலமான ஹிந்தி கவிஞர். Tarkash என்ற இவரது கவிதை தொகுப்பு முக்கியமான இலக்கியமாகும். ஷபான ஆஸ்மியை திருமணம் செய்து கொண்டார் ஜாவித் அக்தார். கதை வசனம் எழுதுவதிலிருந்து பாடலாசிரியராக மாறி அதிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
இந்த இரட்டை எழுத்தாளர்கள் சினிமாவில் கதாநாயகர்களை விடவும் அதிகமான சம்பளம் வாங்கினார்கள். தொடர்ந்த வெற்றியும் அதை விளைவான புகழும் இருவரது நட்பையும் விரிசல் காண செய்தது. தனித்தனியாக இயங்க துவங்கினார்கள். சலீம்கான் தனித்து வெற்றிபெற இயலவில்லை. ஆனால் ஜாவித் அக்தார் தனித்தன்மை கொண்டவராக விளங்கினார்.
ஷோலே படம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று சத்யஜித்ரே தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
இப்படி ஷோலே படத்தின் பின்னால் நிறைய கதைகள் புதையுண்டு இருக்கின்றன. மிக குறைவான படங்களே மக்கள் நினைவில் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது. அதில் ஒன்றானது தான் ஷோலேயின் முக்கிய சாதனை.
**