லூயி புனுவலின் விர்தியானாவை (Luis Buñuel – Viridiana ) சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.
குறிப்பிட்ட சில இயக்குனர்களின் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. செவ்வியல் நாவல்களைப் போல ஒவ்வொரு முறையும் அதில் சில அதிசயங்கள் கண்ணில் படுகின்றன.
அந்த வரிசையில் புனுவல் மிக முக்கியமானவர். புனுவலின் திரைபடத்தின் மையக்கரு எப்போதுமே சர்சைக்கு உரியது. பல நேரங்களில் அவரது படங்கள் எழுப்பிய எதிர்வினை அரசியல் சமூக தளங்களில் வலிமையாக எதிரொலித்திருக்கிறது.
புனுவலின் குவிமையம், மதம் மற்றும் மதம் கற்றுதரும் ஒழுக்கங்கள். அது தனிநபர் மீது செலுத்தும் அதிகாரம், அதனால் உருவாகும் தடை மற்றும் ஒடுக்குமுறை. இதை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வதே புனுவலின் பிரதான படங்கள்.
தனிமனிதனின் மனஅமைப்பை உருவாக்குவதில் மதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக புலன் இச்சை சார்ந்த வெளிப்பாடுகள், ஆசைகள் போன்றவற்றை எதிர்கொள்வதிலும் மீறுவதிலும் மதமே பெரிய தடையாக, அச்சுறுத்தும் கருவியாக உள்ளது. மதம் நமக்குள் உருவாக்கிய வைத்துள்ள பாவம் என்ற குற்றவுணர்ச்சியே உடல் சார்ந்த இயல்பான இச்சைகளை கூட தடுத்து வைத்திருக்கிறது.
நம் காலத்தில் மதம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். அதுவும் தினசரி வசூல் செய்யும் அதிகாரம் மிக்க நிறுவனம். அதை கடந்து செல்வதற்கு மதத்தை உருவாக்கியவர்களாலே முடியாது. ஆகவே தனிநபர்கள் தங்களை அறிந்து, அறியாமலும் மதத்தின் அதிகாரத்திற்கு தங்களை ஒப்படைத்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே புனுவலின் ஆதார எண்ணம். இவரது படங்களுக்கு பெரிதும் திரைக்கதை எழுதியவர் ஜீன் கிளாடே கேரியர். இவர் பீட்டர்புருக் இயக்கத்தில் உருவான மகாபாரதம் திரைப்படம் மற்றும், நாடகங்களுக்கான திரைக்கதை வடிவத்தை எழுதியவர்.
புனுவல் படங்கள் ஒடுக்கப்பட்ட உணர்வுகளை மையப்படுத்துபவை. குறிப்பாக அவரது பெல் டி ஜார் (Belle De Jour) படத்தில் வரும் இளம் பெண் .திருமணமாகி கணவனுடன் வாழ்கிறாள். ஆனால் அவளுக்குள் தனிமை நிரம்பி வழிகிறது. விசித்திரமான ஏக்கங்கள் உருவாகின்றன. கணவன் அறியாமல் பரத்தையர் விடுதி ஒன்றிற்கு ஒரு நாள் போகிறாள். அங்கே ஆண்கள் எதற்காக போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் நோக்கம். அங்கோ அவள் காமத்தின் வடிகாலை அறிந்து கொள்ள துவங்குகிறாள்.
அவளது மதிய நேர தனிமைக்கு அங்கே மாற்று வழி உருவாகிறது. கணவன் அறியாமல் அவள் வேறுவேறு ஆண்களுடன் பழகத் துவங்குகிறாள். அது வரை காமம் குறித்து அவளுக்குள் இருந்த தடைகள் விலகுகின்றன. ஆனால் குற்றவுணர்ச்சியும் தண்டனை பயமும் அவளை ஆக்ரமிக்கின்றன. கணவனின் நண்பன் ஒருவன் அவளை வேசையர் விடுதியில் பார்த்து அவளை அடைய முயற்சிக்கிறான். அதிலிருந்து தப்ப முயற்சிக்கிறாள். கணவனுக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. அவன் அவளை அழைத்து போய் தனி இடம் ஒன்றில் சவுக்கடியால் தண்டிப்பதோடு படம் முடிகிறது. அல்லது அவன் தண்டிப்பதாக அவள் கனவு காண்கிறாள். இரண்டுவிதமாகவும் படத்தின் முடிவை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த படம் உருவாக்கிய எழுச்சியும் விவாதமும் புனுவலை உலக சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையாக சித்தரித்தது. எனக்கு விருப்பமான புனுவலின் படம் விர்தியானா. இதுவே புனுவல் படங்களில் மிகச்சிறந்தது என்றும் சொல்வேன்
விர்தியானாவின் கதை சொல்லும் முறை. காட்சியமைப்புகள், படமாக்கபட்ட விதம். நடிப்பு, இசை, நுட்பமான அகவெளிப்பாடு யாவும் சிறப்பானவை.
கன்னியர்மடம் ஒன்றில் வாழ்ந்துவரும் விர்தியானாவை அவளது மாமா Don Jaime பணம் அனுப்பி உதவி செய்கிறார். அவரை விர்தியானாவிற்கு பிடிப்பதேயில்லை. அவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டிருப்பதால் அவளை காண விரும்புகிறார். கன்னியர்மடத்தலைவி அவளை ஊருக்கு போய் மாமாவை பார்த்துவரும்படியாக சொல்லி அனுப்பி வைக்கிறாள்
நிறைய பழந்தோட்டங்கள் கொண்ட பண்ணை வீடு ஒன்றில் தனித்துவாழும் மாமாவை காண வந்து இறங்குகிறாள் விர்தியானா. இயற்கையான சூழலும் மாமாவின் கனிவான பேச்சும் அவள் கோபத்தை தணிக்கின்றன. ஆனாலும் மாமாவோடு அவள் இணக்கம் கொள்வதில்லை. மாமாவிற்கு அவளை எப்படியாவது தன்னோடு தங்க வைத்துவிட வேண்டும் என்ற விருப்பம். அந்த வீட்டில் ரோமனோ என்ற வேலைக்காரியும் அவளது மகளும் இருக்கிறார்கள். வேலைக்காரி எஜமான் மீது நிறைய விசுவாசம் கொண்டவள். ஒருவகையில் அவளோடு தான் அவர் வாழ்கிறார் என்றே காட்டப்படுகிறது
விர்தியானா உறங்கச் செல்லும் முன்பாக தன் தலைமாட்டில் சிலுவை மற்றும் முள்கிரீடம் போன்றவற்றை வைத்து பிரார்த்தனை செய்கிறாள். அவளுக்கு உறக்கத்தில் நடக்கும் நோய் உள்ளது. அதனால் தூக்கத்திலே நடந்து மாமா அறைக்கு வருகிறாள். அப்போது உடை கலைந்து போயிருக்கிறது. அவளது தொடைகள் தெரிகின்றன. தன்னை மறந்து நடக்கிறாள். அவர் புனிதம் என்று அதுவரை நம்பியிருந்த விர்தியானாவும் ஒரு பெண் என்பதே அந்த நிமிசமே உணர்கிறார். அவள் மீது இச்சை கொள்கிறார்.
அவள் ஊருக்கு புறப்படும் முன்பாக தனக்கு ஒரு ஆசையிருப்பதாக சொல்லி தன்மனைவியின் உடைகளை அணிந்து வரச்சொல்லி அவளை பார்க்கிறார். அந்த உடையில் அவள் மணப்பெண் போல அழகாக இருக்கிறாள். அது அவரை அதிகம் இச்சை கொள்ள வைக்கிறது. முடிவில் அவளது காபியில் மயக்கமருந்தை கலந்து படுக்கைக்கு கொண்டு செல்கிறார். மயங்கி கிடக்கும் அவளை உடலுறவு கொள்ள விரும்புகிறார். ஆனால் ஏதோ ஒரு மனத்தடை அவரைத் தடுக்கிறது. அவளை முத்தமிட்டு தன் அறைக்கு போய்விடுகிறார்.
மறுநாள் விர்தியானா தனக்கு நடந்ததை அறிந்து கத்துகிறாள். அவளது புனிதம் கலைந்துவிட்டது. இனி அவள் கன்னியில்லை ஆகவே இங்கேயே தங்கிவிடும்படியாக மாமா சொல்கிறார். விர்தியானாவால் அதைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் மாமாவைத் திட்டிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறாள்
அவளை நிறுத்த வேறுவழியில்லாமல் மாமா தூக்கிலிட்டு இறந்து விடுகிறார். அந்த சாவு விர்தியானாவை அந்த பண்ணை வீட்டிலே தங்க வைக்கிறது. கன்னியர் மடத்திலிருந்து அவளை காண வருகிறார்கள். அவள் இனி தான் அங்கேயே இருந்து சேவை செய்யப்போவதாக சொல்கிறாள்
அப்போது இறந்து போன மாமாவின் மகன் ஜோர்ஜ் அப்பாவை தேடி தன் காதலியோடு வருகிறான். அவன் அதே பண்ணை வீட்டில் வசிக்க துவங்குகிறான்.
விர்தியானா கைவிடப்பட்ட பிச்சைகாரர்களை ஒன்றுதிரட்டி தன்னுடைய பெரிய வீட்டில் அவர்களை தங்கிக் கொள்ள செய்கிறாள். சாப்பாடு போடுகிறாள். ஆண்களும் பெண்களுமான பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு தர முற்படுகிறாள். பிச்சைகாரர்கள் மீது அன்பு செலுத்துவதே தன் சேவை என்று நினைக்கிறாள்
பிச்சைகாரர்களோ அவளை நன்றாக ஏமாற்றுகிறார்கள். பிச்சைகாரர்களை அந்த வீட்டின் புதிய எஜமான் ஜோர்ஜ்க்கு அவர்களை பிடிப்பதேயில்லை.
விர்தியானாவிற்காக அதை அனுமதிக்கிறான்.
அப்போது ஒரு தொழுநோயாளி ஒருவன் அவர்களிடம் அடைக்கலம் ஆகிறான். அவனை பிச்சைகாரர்கள் தங்களுடன் சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள். விர்தியானா அதற்காக போராடுகிறாள். அவனை பிச்சைகாரர்கள் அடித்து துரத்துகிறார்கள்
வேலைக்காரி ரோமனோவோடு புதிய எஜமானுக்கு கள்ள உறவு துவங்குகிறது. அவன் பண்ணையை புதிதாக மாற்றியமைக்கிறான். அவனுக்கு விர்தியானா மீதும் ஆசை உருவாகிறது. எப்படி அவளை அடைவது என்று காத்திருக்கிறான்
இதற்கிடையில் ஒருநாள் அவர்கள் நகரத்திற்கு சென்றபிறகு அந்த வீட்டை உடைத்து பிச்சைகாரர்கள் அங்கிருந்த மதுவை குடித்து ஆடைகளை அணிந்து கொண்டு வீட்டினை ரணகளப்படுத்துகிறார்கள். விருந்து கொண்டாடுகிறார்கள். விருந்தின் முடிவில் ஒரு பிச்சைகாரன் இன்னொரு பிச்சைகாரியோடு காதல் லீலை செய்கிறான். இதில் கடுப்பான மற்றவ் தடியால் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைக்கிறான். பிச்சைகாரர்களின் சண்டையால் வீடே நொறுக்கபடுகிறது
விர்தியானா வீடு திரும்புகிறாள். அவள் பிச்சைகாரர்களை கட்டுபடுத்த முயற்சிக்கிறாள். ஆனால் ஒரு பிச்சைகாரன் அவனை மடக்கி அவளை கற்பழிக்க முயற்சிக்கிறான். கதறுகிறாள். அவளை அடித்து வன்புணர்ச்சி கொள்ள முயற்சிக்கிறார்கள். ஜோர்ஜ் அதை தடுக்க வரவே அவனை அடித்துபோடுகிறார்கள்
தான் நன்றிகாட்டிய பிச்சைகாரர்கள் இன்று வன்முறையை கையில் எடுத்து தன்னையே கற்பழிக்க முயற்சிப்பதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் வேலைக்காரி முயற்சியால் காவலர்கள் வீட்டில் புகுந்து பிச்சைகாரர்களை கைது செய்கிறார்கள்
எது சேவை. எதை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். உண்மையில் தான் தனது அக உணர்ச்சிகைளை ஏன் புறக்கணித்தோம் என்று தனித்து யோசிக்கிறாள் விர்தியானா. இனிமேலும் புனித பிம்பமாக தான் வாழவேண்டாம் என்று முடிவு செய்து அவள் இயல்பான பெண்ணாக மாறி ஜோர்ஜின் இச்சைநாயகியாக ஒத்துக் கொள்கிறாள். அவனோ முன்பு தான் கள்ளஉறவு கொண்டிருந்த வேலைக்காரியும் அவளும் ஒன்று என்பது போல அவளை தன்னோடு சீட்டாட அழைக்கிறான். விர்தியானா சீட்டாட துவங்வதோடு படம் முடிகிறது.
விர்தியானா எழுப்பும் முக்கிய கேள்விகள் மதம் ஒரு பெண்ணின் இயல்பான காம உணர்ச்சிகளை ஏன் கட்டுபடுத்த வேண்டும். மத ஒழுக்கம் எவ்வாறு பெண்ணை தனிமைபடுத்துகிறது. உலகை அன்பு காப்பாற்றிவிடும் என்ற பிரச்சாரம் எந்த அளவு நடைமுறை சாத்தியமானது. அதை எப்படி எதிர் கொள்வது. சந்தர்பம் ஏன் மனிதனை தொடர்ந்து குற்றம் செய்ய தூண்டுகிறது. என்பதையே
இறந்து போன மனைவியின் நினைவாக வாழும் மாமா அவளை தன் மனைவி உடையில் காண்பதும் விர்தியானாவின் தூக்கத்தில் நடக்கும் இயல்பும் நாம் அறியாத நம்மின் இன்னொரு பகுதியை வெளிப்படுத்துகிறது.
விர்தியானாவை தங்க வைக்கவே மாமா நாடகம் ஆடுகிறார். அவள் தன்னை வெறுக்கிறாள் என்று அறிந்தவுடன் உண்மையை சொல்லிவிடுகிறாள்.
விர்தியானாவிற்கு தன் உடல் இச்சையை விடவும் புனிதபிம்பம் கலைந்துவிடக்கூடாது என்பதே அதிக கவலை தருகிறது.
அவளது முள்கிரிடம் நெருப்பிலிடப்பட்டு எரிக்கபடும் காட்சி படத்தில் வருகிறது. அது மிக முக்கியமான குறியீடாகும்.
இந்தப் படத்தில் பயன்படுத்த பிச்சைகாரர்கள் அத்தனை பேரும் உண்மையான பிச்சைகாரர்களே. அவர்களை தேடி பிடித்து படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் புனுவல். கிறிஸ்துவின் புகழ்பெற்ற கடைசி விருந்துக் காட்சியை நினைவுபடுத்துவது போலவே பிச்சைகாரர்களின் விருந்து காட்சி அமைந்துள்ளது. ஒருவிதத்தில் அவர்கள் அமர்ந்துள்ள மேஜை. உட்கார்ந்துள்ள வரிசை யாவும் அப்படியே நினைவூட்டுகின்றன.
சாப்பாடும் தங்கும் இடமும் தருவதால் மட்டுமே மனிதர்களின் மனஇயல்பை மாற்றிவிட முடியாது என்பதே பிச்சைகாரர்கள் விஷயத்தில் வெளிப்படும் நிஜம். பண்ணை வீட்டை மாற்றி அமைக்க வேலை நடந்து கொண்டிருக்கும் போது பிச்சைகாரர்கள் மறுபக்கம் பிரார்த்தனை செய்து கொண்டும், ஒவியம் தீட்டியபடியும் இருக்கிறார்கள். ஒரே காட்சி 28 ஷாட்டுகளாக மாறிமாறி காட்டப்படுகிறது. ஒருவகையில் அவளது புனிதபிம்பம் நிலைநிறுத்தபடும் காட்சியாகும். முடிவில் அது கலைக்கபடும் தருணமே அவள் தன்னை உணர துவங்குகிறாள்.
புனுவலின் இந்த படத்திற்கு எதிராக வாடிகன் ஆவேமான எதிர்ப்பு குரலை எழுப்பியது ஸ்பெயினில். படப்பிரதிகள் தீயிட்டு கொளுத்தபட்டன. பொது இடங்களில் படம் திரையிட அனுமதிக்கபடவில்லை. படத்தின் பிரதிகளை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபட்டன. அன்றைய சர்வாதிகாரியான பிரான்சிஸ்கோ பிராங்க இந்த படத்தினை கடுமையாக விமர்சித்தார். பல வருசங்கள் இந்த படம் எங்கும் திரையிடப்படவில்லை. ஒரேயொரு பிரதியை ஒளித்து வைத்து பத்தாண்டு காலம் காப்பாற்றி அதிலிருந்து இன்றைய காட்சி பிரதியை உருவாக்கியிருக்கிறார்கள்.
1961 ம் ஆண்டு வெளியான இந்த படம் கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. முன்னதாக இதை தயாரிக்க எவரும் முன்வராத சூழலில் படத்தில் விர்தியானாவாக நடித்த Silvia Pinal கணவரே படத்தினை தயாரிக்க முன்வந்தார். ஸ்பெயினில் புனுவல் தயாரித்த முதல்படம் இதுவே.
படத்தில் என்னை பாதித்த முக்கிய கதாபாத்திரம் ரோமனோவின் மகள். சிறுமியான அவள் எப்போதும் ஸ்கிப்பிங் கயிற்றால் ஆடிக் கொண்டேயிருக்கிறாள். விர்தியானாவை மயக்கமடைய செய்து ஜெமி அவளை புணரமுயற்சிக்கும் போது அவள் ரகசியமாக அதை கவனிக்கிறாள். சிறுமியின் ஸ்கிப்பிங் கயிற்றால் தூக்கிலிட்டு கொண்டே விர்தியானாவின் மாமா இறந்து போகிறார். அதே கயிற்றை எவ்விதமான குற்றவுணர்ச்சியும் இன்றி சிறுமி திரும்பவும் கையில் எடுத்து அதே மரத்தடியில் தாண்டி விளையாடுகிறாள். குழந்தமை எல்லா கபடுகளையும் தாண்டியது. அது பரிசுத்தமானதும் ரகசியங்களை அறிந்தது என்றே புனுவல் அடையாளம் காட்டுகிறார்
விர்தியானாவாக நடித்துள்ள சில்வியா பினால் அடக்கபட்ட மனகிளர்ச்சிகளை, தடுமாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். தேர்ந்த நடிப்பிற்கு சாட்சியது. அதுபோலவே படத்தின் பின்னணி இசை சிறப்பானது. படத்தின் துவக்க காட்சியில் பின்புலமாக இசைக்கபடும் கூட்டுபிரார்த்தனை குரல்கள் பிச்சைகாரர்கள் விருந்தின் போதும் மறுபடி ஒலிக்கிறது. இப்படி இசையும் படத்தின் மைய கருவை மேன்மைபடுத்துகிறது.
நாற்பத்தியேழு வருடங்கள் கடந்த பிறகு இன்றைக்கும் விர்தியானா புதியதாகவும் சர்சைக்கு உரியதாகவுமே இருக்கிறது. அந்த வகையில் லூயி புனுவல் சினிமாவின் முன்னோடி கலகக்காரன்.
**