தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.

————————————–

சிறுமி கூவுகிறாள்.

நான் போகிற இடம் எல்லாம் நிலா

கூடவே வருகிறதே.

சிறுவன் கத்தினான்.

இல்லை. நில்லா என்கூட வருகிறது

இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்

பிரிந்தனர்.

வீட்டிக்குள் நுழைந்து, உடன்

வெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.

நிலா இருக்கிறதா?

இருக்கிறதே

அவள் சின்ன அலையை போல சுருண்டாள்

அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி

எல்லோர் கூடவும் போன நிலா பிறகு

எங்கே போனதென்று

எல்லோருக்கும் தெரியவில்லை

•••

தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்

நிற்கிறாள் சிறுமி

கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது

மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்

சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன

அவள்

கண்ணுக்கு அடங்காமல்

கனரக வாகனங்கள் அவளைக்

கடந்து சென்றன

வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்

இன்னொரு பகலில் போய்க்

கொண்டிருக்கும் குண்டுப்பெண்

சிறுமியின் ஷூ லேஸ்

அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்

சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்

சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது

கொஞ்சம் புரியவில்லை.

•••••

குளியலறையில் பல பொருட்கள் பயணம் செய்கின்றன

சோப்பு

தொட்டி

கொடி

கொடியில் சில

துணிகள்

தரையில் சில

குழாய்

திறக்கையில்

வரத் துவங்கி

வந்துகொண்டே இருக்கும்

தண்ணீர்,

மற்றும்

என் எண்ணங்கள்

ஒன்றுக்கொன்று

அருகாமையிலும்

சில தொலைவிலும்.

•••

“ரோஜாவும்

முல்லையும் வேண்டுமா

என்று வாசலிலிருந்து

கூவுகிறான்

பூக்காரன்.

அடுப்படியிலிருந்து

கத்துகிறாள்

நாளைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்று.

நாளை

வாங்க

அவள் வாசல் வரும்போது

பூ

புதுசாகவே இருக்கிறது

எப்போதும் போல்

நாளையும் அது

மரத்திலிருந்து மறைவதில்லை…”

•••

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்

ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன

சட்டையை தொளதொள வென்றோ

இறுக்கமாகவோ போடுகிறாய்

தலைமுடியை நீளமாகவோ

குறுகவோ தரிக்கிறாய்

உன்னிடமிருந்து பறந்து சென்ற

இருபது வயது என்னும் மயில்

உன்

மகளின் தோள் மீது

தோகை விரித்தாடுவதை

தொலைவிலிருந்து பார்க்கிறாய்

காலியான கிளைகளில்

மெல்ல நிரம்புகின்றன,

அஸ்தமனங்கள்,

சூரியோதயங்கள் மற்றும்

அன்பின் பதட்டம்

••••

இந்த நீலநிற பலூன் மலரினும்

மெலிதாக இருக்கிறது. எனினும்

யாராவது பூமியை விட கனமானது

எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.

நீங்களாவது கூறுங்களேன், இந்த

நாற்பது வயதில் ஒரு பலூனை

எப்படி கையில் வைத்திருப்பது என்று…

பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது

காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது

பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.

எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்

பார்த்து விடுகிறார்கள்.

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று

என்னை உரசியபடி வருகிறது. நான்

கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.

••••
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

•••

கல் எறிதல்

ஆளாளுக்கு கல் எடுத்து

எறிந்தனர். என் கையிலும்

ஒன்றைத் திணித்தனர்

உள்ளங்கையை விரித்து

மலைத்தொடர் வடிவத்தில்

இருந்த கல்லைப் பார்த்தேன்

உற்று நோக்கினேன்

உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று

மலைத்தொடர் மறைந்தது

வெறுங்கையை வேகமாக

வீசினேன்.

விடைபெறும் முகமாகவும்

என்னையும்

தூக்கிச் செல்லேன் என்று

இறைஞ்சும் விதமாகவும்.

***

காத்திருத்தல்

நிறையப் பேர் உறங்கியபடி காத்திருக்கிறார்கள்

உறவுப்பெண்கள் தேநீர் குடித்தபடி

சித்ரகுப்த நயினார் கதையைப் பாடியபடி

நடுவீட்டில், முதுமகள், இறந்தபடி காத்திருக்கிறாள்

நடுச்சாமம் நகர்வதற்கு

பொழுது புலர்வதற்கு

ரத்த உறவுகள் காலையில்

கதறியபடி வருவதற்கு

சாவின் கண்ணாடி காத்திருக்கிறது.

பக்கத்து வீட்டு ஜன்னலை மூடி

தன் பருத்த காம்புகளை

கணவனுக்கு ஈந்து

இறுகப் புணரும் இளமகளின் நாசியில்

வந்துவந்து போகிறது பத்திவாசனை.

தெருவில்

கலைந்து கிடக்கும்

இரும்புச் சேர்களில்

காத்திருக்கிறது

நிலவொளி.

*****

குருட்டு

ஆஸ்பத்திரியில்

வெண்தொட்டிலில்

சுற்றுகிறது

இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்

மூச்சொலி

பார்க்கப்

பயமாக இருக்கிறது

சுவரில்

தெரியும் பல்லி

சீக்கிரம் கவ்விக் கொண்டு

போய்விடாதா

என் இதயத்தில்

சுற்றும் குருட்டு ஈயை

**

பரிசு

என் கையில் இருந்த பரிசை

பிரிக்கவில்லை. பிரித்தால்

மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது

என் அருகில் இருந்தவன் அவசரமாய்

அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்

மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்

பரிசு அளித்தவனோடு

விருந்துண்ண அமர்ந்தோம்

உணவுகள் நடுவே

கண்ணாடி டம்ளரில்

ஒரு சொட்டு

தண்ணீரில்

மூழ்கியிருந்தன

ஆயிரம் சொட்டுகள்

••

இலைகள் மலர்கள்

ஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன

நீயும் நானும்

சில வருடங்களில்

அதற்குள்

ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல்

போய்விடுகிறோம்

அடையாளம் தெரியாமல் போகும்

அடையாளத்தில் ஒருவருக்கொருவர்

முகமன் கூறிக்கொள்கிறோம்

நமது புன்னகைகளும் கைகுலுக்கல்களும்

குருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ

அவற்றிற்கு

எப்போதும்

அடையாளம் தெரிந்தேவிடுகிறது

•••

பழத்தைச் சாப்பிட்டு விடு

நாளைக்கென்றால் அழுகிவிடும்

என்றாள் அம்மா

வாங்கி விண்டு

உண்டேன்

இன்றை.

•••

எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு

ஒன்று

எதிர்விட்டு அம்மாளின்

துஷ்டிக்கு

சுடுகாடு சென்று

திரும்புகையில் பார்த்தது.

நள்ளிரவில்

பஸ் கிடைக்காமல்

லாரி டாப்பில்

பிரயாணம் செய்கையில்

பிரகாசித்தது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்

அரசு அதிகாரி ஒருவரைக் காண

காத்திருக்கையில் கண்டது.

இண்டு இடுக்கு

மாடிக் குடித்தனத்தில்

மின்வெட்டு இருள்வேளையில்

ஜன்னல் வழியே

வந்து விழுந்தது.

••

ஒருபோதும்

மீன்கள் திரும்புவதில்லை

திரும்பக் கூடுவதுமில்லை

கடல்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றன

மீன் திரும்பினால்

ன்மீ ஆகிவிடுமே

யாராவது

ன்மீயைப் பார்த்திருக்கிறீர்களா

வலைவீசிப் பிடித்திருக்கிறீர்களா

மேலும்

ன்மீயை எப்படித்தான்

சமைப்பது

ஆனால், திரும்பி

திரும்பிக் கொண்டிருக்கும்

ன்மீயை எப்போதும் விரும்பி

பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

•••

0Shares
0