ஜெர்மானிய ஒவியரான காஸ்பர் டேவிட் பிரெடரிக் (Caspar David Friedrich) வரைந்த Two Men Contemplating the Moon என்ற ஒவியம் மிகவும் பிரபலமானது, இந்த ஒவியத்தை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் பார்த்திருக்கிறேன்.
இதே ஒவியத்தின் இரண்டு வேறுபட்ட வடிவங்களைச் சமீபத்தில் இணையத்தில் காண நேர்ந்தது. மூன்று ஒவியங்களையும் ஒருமித்துக் காணும் போது மிகுந்த சந்தோஷமும் மனஎழுச்சியும் உருவானது.
நிலா பார்த்தல் என்பது எளிய செயலில்லை, ஆழமான அகத்தூண்டுதல் தரக்கூடியது என்பதை இந்த மூன்று ஒவியங்களும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன
முதல் ஒவியம் 1819ல் வரையப்பட்டது, இரண்டாவது ஒவியத்தை 1824ல் வரைந்திருக்கிறார், மூன்றாவது ஒவியம் காஸ்பரின் திருமணத்திற்குப் பிறகு மனைவியோடு உள்ளதாக வரையப்பட்டிருக்கிறது, அதை 1830ல் வரைந்திருக்கிறார்.
முதல் ஒவியத்தில் நிலவை பார்க்கும் இருவரில் வலது புறமிருப்பவர் காஸ்பர் பிரெடரிக் என்றும் அவரை ஒட்டி நிற்பவர் அவரது மாணவர் ஹென்ரிச் என்றும் கூறுகிறார்கள்
Two men contemplating the moon ஒவியத்தின் சிறப்பு அடர் வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ள விதமும் காட்சிக்கோணமும், நிலவை வேடிக்கை பார்ப்பவர்களின் தோற்றமும் அதற்குச் சமநிலையாக உள்ள பெருமரமுமாகும் பின்புலத்திலுள்ள வனத்தின் வெளிப்பாடுமாகும்.
வசந்தகால இரவொன்றில் மலைப்பாதையில் நின்றபடியே இரண்டு நகரவாசிகள் ஒளிரும் நிலவை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கூர்ந்து நோக்கினால் அவர்கள் பார்வை நிலவின் மீது குவியவில்லை என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது, அவர்கள் வியப்பில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள்.
ஒவியத்தின் இடதுபுறத்தில் அவர்கள் நின்றிருக்கும் இடமும், விதமும் அவர்களின் தோற்றமும் இயல்பாக அவர்கள் வந்து போகின்ற மலைப்பகுதி என்பது போலிருக்கிறது. பைன் மரக்கிளைகள் அடர்ந்த வனம் என்பதன் அடையாளம் போலுள்ளது
ஒவியத்தில் வானம் அதிகமாக வெளிப்படவில்லை, வலதுபுறத்தில் பெரிய ஒக் மரம் ஒன்று கிளைவிரித்துப் படர்ந்திருக்கிறது, அதன்மீதும், முண்டுமுடிச்சுகளின் மீதும் நிலவொளி படர்ந்திருக்கிறது.
இரவில் நிலவு எழும் காட்சி போலிருக்கிறது. ஈவினிங் ஸ்டார் ஒன்று வானில் ஒளிர்கிறது. ஒவியத்தின் வலதுபுறத்தில் பெரிய பாறையும் அதையொட்டி முறிந்த கிளையொன்றும் சரிந்து கிடக்கிறது.
காஸ்பர் பிரெடரிக், நிலவொளியை இயற்கையின் தனிப்பெரும் வசீகரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். காஸ்பர் ஏன் நிலா பார்த்தல் குறித்த ஒவியங்களை வரைந்தார் என்பதைத் தெரிந்து கொள்ள அவரது வரலாற்றை வாசித்தபோது சுவாரஸ்யமான சில தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் நிலவை முதன்மைப்படுத்தி நிறையக் கவிதைகள் எழுதப்பட்டன. குறிப்பாக கவிஞர் கதே ஒவ்வொரு நாளும் நிலவு எப்படி வளர்கிறது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்ததோடு அது குறித்து எழுதவும் செய்திருக்கிறார்.
அந்த நாட்களில் தனது ஆய்வின் பொருட்டாக நிலவின் வளர்ச்சிநிலைகளை, மேகமாற்றங்களை ஒவியமாக வரைந்து தரும்படியாகத் தனது நண்பர் காஸ்பர் பிரெடரிக்கிடம் கதே கேட்டிருக்கிறார்.
அவருக்காக ஒவியம் வரைவதற்குச் சென்ற பிரெடரிக் நிலவில் மனம் மயங்கி வரையத்துவங்கியதில் ஒன்றே இந்த வண்ண ஒவியம் என்கிறார்கள்.
இது போல நிலவின் பல்வேறு வளர்நிலைகளைப் பிரெடரிக் கோட்டோவியமாக வரைந்திருக்கிறார் என்றும், அதிலிருந்து ஒரு காட்சியே இந்த வண்ண ஒவியமாக உருப்பெற்றது என்றும் கூறுகிறார்கள்.
காஸ்பர் டேவிட் பிரெடரிக்கிடம் தனது முன்னோடிகளின் பாதிப்பில்லாத தனித்துவமான கலைவெளிப்பாடு கூடியிருக்கிறது, அவரது பல ஒவியங்களிலும் இயற்கையின் வசீகரமே முதன்மைபடுத்தபட்டுள்ளது.
நிலாப் பார்த்தல் ஒவியம் குறியீட்டுத் தன்மைகள் கொண்டது, இதில் நிலவை வேடிக்கை பார்க்கும் இருவர் அணிந்திருக்கும் ஆடைகள் ஜெர்மனியின் பராம்பரிய உடைகள். இதை அணிந்து கொண்டிருப்பது அவர்கள் நெப்போலியனுக்கு எதிராக ஜெர்மனிய தேசப்பற்றுக் கொண்டவர்கள் என்பதன் அடையாளமாகவே உள்ளது.
இந்த ஒவியமே யுத்த அழிவிலிருந்த ஜெர்மனியின் மீட்சியை அடையாளப்படுத்தும் விதமாகவே ஒளிரும் நிலவு காட்சிப்படுத்தபட்டிருக்கிறது என்கிறார்கள் கலைவிமர்சகர்கள்
இந்த ஒவியத்தில் அடர்வண்ணங்களைப் பயன்படுத்துவதன் வழியே நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யவும் பூடகமான மர்மநிலையை உருவாக்கவுமே பிரெடரிக் முயன்றிருக்கிறார்.
இரண்டாவது ஒவியமும் அதே நிலா பார்த்தலை முன்வைத்த போதும் அது இரவுக்காட்சியைப் போலில்லை, விடிகாலையில் நிலவைக் காண்பது போலிருக்கிறது, நிலவும் முழுமையாக ஒளிர்கிறது. மரங்களில் உள்ள இலைகள் பசுமையாகக் காட்சிதருகின்றன, வசந்தகால முடிவில் இக்காட்சி வரையப்பட்டிருக்ககூடும்.
மலைப்பாதையில் உள்ள புற்களின் பசுமையும் நிற்பவர்களின் முன்னுள்ள புற்களும் அதேயே உணர்த்துகின்றன, மூன்றாவது காட்சியில் பிரெடரிக்குடன் நிற்பவர் அவரது மனைவி கரோலின். அவர்களின் தேனிலவு காலத்தின் போது இந்த நிலவைக் கண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்
ஒவியத்தில் நிலவைக் காணும் போது அது ஒளிரும் மஞ்சள் மலரைப் போலவேயிருக்கிறது. நிலா வெளிச்சம் பட்டு மரமும் பாறையும் ஒளிர்வது ஏதோ கனவுக்காட்சி போலிருக்கிறது, வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவர் மற்றவரின் தோளில் கையூன்றி சாய்ந்து நிற்பது ஆசுவாசத்தின் அடையாளமாக தெரிகிறது
காஸ்பர் கையிலுள்ள ஊன்று கோலும் அவரது காலணிகளும் நிற்கும் தோற்றமும் அவர் ஏதோவொன்றை தனது மாணவருக்குக் கற்றுதருவதாக உணரச்செய்கிறது.
ஒவியத்திலிலுள்ள இரண்டுபேர் நிலவைக்காண்பது போலவே ஒவியத்தைக் காணும் பார்வையாளன் தானும் நிலவைக்காணும்படியாக வரையப்பட்டிருப்பதே இதன் தனிச்சிறப்பு
ஒளிரும் நிலவுமும் நட்சத்திரமும் ஆன்மவிடுதலையின் குறியீடு என்றும் முறிந்து கிடக்கும் ஒக் மரக்கிளை சாவின் குறியீடு என்றும் கலைவிமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்
நிலவெளிகளையும் இருண்ட வானத்தையும், நிலவையும் நட்சத்திரங்களையும் இடிபாடு மிக்கக் கட்டிடங்களையும் குறியீடுகளாகக் கொண்டு காஸ்பர் நிறைய ஒவியங்களை வரைந்திருக்கிறார், தன் வாழ்நாளில் இவர் ஐநூறுக்கும் மேற்பட்ட ஒவியங்களை வரைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது ஒவியத்தில் இயற்கையின் முன்னர் மனிதன் உயர்ந்து நிற்பது போலிருக்கிறான், அவன் இயற்கையை எதிர்கொள்வது தன்நிலையை அறியும் முயற்சியாகவே கருதப்படுகிறது
காஸ்பரின் ஒவியங்களைக் காண்பது மெய்தேடல் நிலையை உருவாக்ககூடியது, அதைப் பார்வையாளன் உணரும் பொருட்டே வண்ணங்களையும் உருவங்களையும் அவர் பயன்படுத்துகிறார். பைத்தியக்காரனைப் போலக் காடுகளுக்குள் அலைந்து திரிந்து வரைந்தவர் எனக் கலைவிமர்சகர்களால் கூறப்படும் காஸ்பரின் ஒவியங்களே பின்னாளில் சர்ரியலிச ஒவியர்களுக்கு முக்கிய உந்துதலாக இருந்தன,
மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத மனிதராக, துயருள் தன்னை மூழ்கடித்துக் கொண்ட காஸ்பர் தனது தனிமை நிலையைத் தான் ஒவியத்தின் முக்கியக் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறார் என்கின்றனர்
ஆதரவற்ற வறுமையில் உணவிற்குக் கூட நண்பர்களைச் சார்ந்திருக்கும் சூழல் அவருக்குண்டானது. அப்போதும் சூரிய உதயத்திற்கு முன்பாகத் தனது திரைச்சீலையுடன் அவர் இயற்கையை வரைவதற்காகச் சென்று விடுபவராகயிருந்திருக்கிறார்.
1835ல் ஏற்பட்ட வாதம் காரணமாகக் வலது கை பாதிக்கபட்டது, அதன்பிறகு அவரால் பெரிய ஒவியங்கள் எதையும் வரைய இயலவில்லை. வாழும் காலத்தில் அவர் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை, இன்று உலகின் மிக முக்கிய ஒவியர்கள் வரிசையில் வைத்து கொண்டாடப்படுகிறார் காஸ்பர்
ஒவியன் தன் கண்முன்னே உள்ளதை மட்டும் வரைந்தால் போதாது, அதன் ஊடாக அவன் என்ன உணருகிறான், எப்படி உணருகிறான் என்பதையும் அவனது ஒவியம் வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்பர்.
காஸ்பரின் ஒவியத்தைக் காணும் போது அன்சல் ஆடம்ஸ் (Ansel Adams) எடுத்த Moon and Half Dome என்ற புகைப்படம் நினைவில் வந்து போனது
உலகப்புகழ் பெற்ற புகைப்படமது, யோசெமிட் பள்ளதாக்கில் நிலா ஒளிர்வதை அன்சல் ஆடம்ஸ் புகைப்படமாக்கியிருக்கிறார், காஸ்பரின் ஒவியத்திலுள்ள அதே வசீகரம் தான் கறுப்பு வெள்ளையில் ஒளிரும் நிலவிலும் காணமுடிகிறது
நிலா பார்த்தல் என்பது குழந்தை விளையாட்டு மட்டுமின்றி இயற்கையின் விந்தையை உணரும் அபூர்வ நிலையாகவே எப்போதும் கலைஞர்களால் அடையாளப்படுத்தபடுகிறது. இதுவே இன்றும் காஸ்பரின் ஒவியம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணமாகயிருக்கிறது
•••