நேற்று புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை சார்பாக நடைபெற்ற வைக்கம் முகமது பஷீரின் மூன்று சீட்டுக்காரனின் மகள் சிறுகதையைத் தழுவிய வை ராஜா வை என்ற நாடகம் பார்க்கப் போயிருந்தேன்.
நண்பரும் நடிகருமான சுகுமார் இந்த நாடகம் குறித்துத் தெரிவித்திருந்தார். புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே அரங்கை உருவாக்கியிருந்தார்கள். ஒரு மரத்தடி அதைச் சுற்றி அரங்க அமைப்பு. ஏராளமான மாணவர்கள் நாடகம் பார்க்க வந்திருந்தார்கள்.
பஷீரே தனது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி நாடகத்தைத் துவக்கி வைப்பது போல அமைத்திருந்தார்கள். வைக்கம் முகமது பஷீரின் புகழ்பெற்ற கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றினார்கள். பஷீராக நடித்தவர் நல்ல தேர்வு. அப்படியே பஷீரைப் போன்ற தோற்றம். அதே சாய்வு நாற்காலி,. கிராமபோன் ரிக்கார்ட்.
மூன்று சீட்டுவைத்து சூதாடும் ஒற்றைக்கண்ணன் போக்கரின் மகள் ஸைனபாவை முட்டாள் முத்தப்பா என்ற பிக்பாக்கெட் எப்படிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான் என்று தனது சிறுகதையில் மிகவும் நகைச்சுவையாகப் பஷீர் சித்தரித்திருப்பார். அந்த நகைச்சுவை அப்படியே நாடகத்தில் நூறு சதவீதம் எதிரொலித்தது.
மூன்று சீட்டுக்காரனின் மகள் சிறுகதையைச் சுதந்திரமாகத் தங்கள் மேடைக்கு ஏற்ப மாற்றியிருந்தார்கள். அது தான் இயக்குனரின் வெற்றி.
இத்தனை சிரிப்பும் சந்தோஷமாக ஒரு நாடகத்தைப் பார்த்து நீண்டகாலமாகிவிட்டது பார்வையாளர்கள் சிரித்துக் கைதட்டி உற்சாகமாகயிருந்தார்கள். நாடகத்துறையில் பயிலும் கேரள மாணவர்கள் தான் முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்தவர்கள். அற்புதமான நடிகர்கள். ஒருவரையொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள்.
ஸைனபா வாழைக்குலை திருடுவதும் அதை முத்தப்பா காணுவதுமான காட்சியில் ஆற்றை மேடையில் திரைச்சீலை வழியாகக் கொண்டு வந்து காட்டியது சிறப்பு. ஸைனபாவின் தேநீர்கடையும் புட்டு, கடலைக்கறியும், பழமும் விற்பனையாவதும். சந்தையில் காணப்படும் யானைவாரி ராமன் நாயர், தங்கச்சிலுவை தோமா, முட்டாள் முத்தபா, எட்டுகாலி மம்மூந்து போன்ற தனித்துவமிக்க மனிதர்களும் மேடையினை நிஜ உலகம் போல உருமாற்றியிருந்தார்கள்.
ஸைனபாகவும் முத்தப்பாவாகவும் போக்கராகவும் நடித்த மூவரது நடிப்பும் மிகச்சிறப்பு. நாடகத்தின் பின்னணி இசையாகப் பழைய பாடல்களை மிகப் பொருத்தமாகத் தேர்வு செய்திருந்தார்கள். அரங்க அமைப்பு. ஒளி இரண்டும் மிகப்பிரமாதம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு நாடகம் பார்த்த மகிழ்ச்சி மனதில் நிரம்பியது. நாடகக் குழுவினர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டு திரும்பினேன்.
இந்தச் சிறுகதையைக் கேரளாவில் பலரும் நாடகமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். இக்கதையின் ஆங்கில நாடக வடிவம் கூட நிகழ்த்தப்பட்டிருக்கிறது. திருச்சூர் நாடகவிழாவில் இதே நாடகத்தை ஒருமுறை கண்டிருக்கிறேன். பலமுறை இந்த நாடகத்தின் மாறுபட்ட வடிவங்களைக் கண்டிருந்த போதும் நேற்று மாணவர்கள் நடித்துக் காட்டியது மிகச்சிறப்பு.
ஒரு சிறுகதையில் எத்தனை மாறுபட்ட கதாபாத்திரங்களைப் பஷீர் உருவாக்கியிருக்கிறார் என்று பற்றியே யோசித்தபடியே வந்தேன். ஒரு சந்தையும் அதில் சுற்றித்திரியும் பல்வேறு மனிதர்களும் உயிரோட்டமாகக் கதையில் உலவுகிறார்கள். ஸைனபா திருடுகிறாள் என்பது தான் முத்தப்பாவின் காதலுக்கு ஆதாரப்புள்ளி. மூன்று ஏமாற்றுக்காரர்களைக் கொண்டு காதலின் உன்னதத்தை அழகாக எடுத்துச் சொல்கிறார் பஷீர். தமிழில் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
நேற்றைய நாளை மிகவும் நிறைவாக்கியது இந்நாடகம்.
••