உலக இலக்கியத்தினை அறிமுகம் செய்யும் விதமாக நிறைய உரைகள் ஆற்றியிருக்கிறேன். இதன் வழியே மகத்தான படைப்பாளிகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் படைப்புகளைக் கொண்டாடவும் முடிந்திருக்கிறது.

இந்த முறை டிசம்பர் 25 ஞாயிறு மாலை பிரெஞ்சு இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளி பால்சாக் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன்.
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்வு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது

பால்சாக்கின் வாழ்வு மற்றும் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
யதார்த்தவாத எழுத்தின் நாயகராகக் கொண்டாடப்படும் பால்சாக் சிறுகதை, குறுநாவல் நாவல்கள் என எழுதிக் குவித்தவர்.

19ம் நூற்றாண்டு பிரெஞ்சு சமூகத்தினை துல்லியமாக தனது எழுத்தில் பதிவு செய்தவர் பால்சாக்.
பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி இவரை ஆழ்ந்து படித்திருக்கிறார். இவரது நாவலை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். டால்ஸ்டாய், ஹென்றி ஜேம்ஸ், டிக்கன்ஸ், சாமர்செட்மாம் போன்ற இலக்கியவாதிகளின் விருப்பத்திற்குரிய எழுத்தாளராக இருந்திருக்கிறார்.
இவரது படைப்புகள் 25 பெருந்தொகுதிகளாக வெளியாகியுள்ளன.

The Human Comedy என்ற பொதுதலைப்பில் தனது படைப்புகளை அவரே வரிசைப்படுத்தியிருக்கிறார். இதில் இவரது 91 நாவல்களும் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. அதில் 41 நாவல்கள். சில 500க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டவை பெரும்பாலானவை 250 அல்லது அதற்கும் குறைவான பக்கங்கள் கொண்டவை. 25 சிறுகதைகள் . 25 குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர இவரது நாடகங்களும் கட்டுரைகளும் தனி நூலாக வெளியாகியுள்ளன.

எழுதும் நேரங்களில் துறவியின் அங்கி போன்ற உடையை அணிந்து கொண்டு எழுதியவர் பால்சாக்
அவர் நள்ளிரவில் எழுதத் துவங்குவார். இரவு 1 முதல் காலை 8 மணி வரை எழுதக்கூடியவர். சில நாட்கள் தொடர்ச்சியாக பதினாறு மணி நேரம் எழுதியிருக்கிறார். அறிவியல், தத்துவம். உளவியல், வரலாறு, பண்பாடு, சட்டம் கலைகள் என இவர் தொடாத விஷயங்களே இல்லை.

டிசம்பர் 25 மாலை எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழாவும் நடைபெறுகிறது.
இந் நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்
••