கடந்த ஆண்டு சென்னையில் எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம் என்ற சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்டி அளித்தோம். அந்த விழாவிற்கு வந்திருந்த புதுவை முதல்வர் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிரபஞ்சனை நாங்களும் சிறப்பித்துக் கொண்டாடுவோம் என்று உறுதி அளித்தார்.
அதன்படி கடந்த வியாழன் ( 3.05.2018) அன்று மாலை புதுவையில் அரசு சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு சிறப்பான விழா நடத்தி பத்து லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார்கள்.
அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன்.
இப்படி ஒரு விழா நடத்த முன்வந்ததோடு பிரபஞ்சன் வீட்டிற்கே முதலமைச்சர் சென்று அழைப்பிதழ் கொடுத்து விழாவில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டது மிகுந்த பாராட்டிற்குரியது.
விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஏற்புரை வழங்கிய பிரபஞ்சன் தான் புதுவை வரலாற்றை மூன்று பெரும் தொகுதியாக எழுத இருப்பதாக அறிவித்தார்.
புதுச்சேரி அரசு பிரபஞ்சனைக் கொண்டாடுவதன் மூலம் பொதுவெளியில் இலக்கியத்திற்கான அங்கீகாரத்தையும் மரியாதையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது முன்னோடியான செயல்.
இந்த நிகழ்விற்கு காரணமாக இருந்த புதுச்சேரி முதல்வர், கலைபண்பாட்டுதுறை அமைச்சர். முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் திரு.லட்சுமி நாராயாணன் மற்றும் கலை பண்பாட்டுத்துறைசெயலர் ஆகியோருக்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.