பிரெய்லி வடிவில்

தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல் பிரெய்லி வடிவில் வெளியீடு
**
தேசிய பார்வையற்றோருக்கான சங்கம் சார்பில் லூயி பிரெயிலின் 209-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
பார்வையற்றோர் கல்வி கற்பதற்காக ‘பிரெய்லி’ முறையைக் கண்டறிந்த லூயி பிரெய்லியின் 209-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சென்னையில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழக தலைவர் நீனா ரெட்டி, சேது பாஸ்கரா கல்வி குழுமத்தின் தலைவர் சேது குமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பார்வையற்றோரிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்னும் நூல் பிரெய்லி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தப் நூலின் முதல் பிரதியை அமைச்சர் சரோஜா வெளியிட, சேது குமணன் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, பார்வையற்ற பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான பிரெய்லி வாசிப்பு மற்றும் கதை எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘சென்னையில் பார்வையற்றவர்களுக்காக தனி நூலகம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
நன்றி : தி இந்து நாளிதழ்.
0Shares
0