புத்தகமெனும் புதையல்.

நியூயார்க்கில் நடைபெறும் அரிய புத்தகங்களுக்கான கண்காட்சியினைப் பற்றிய ஆவணப்படம் The Booksellers. .

அரிய புத்தகங்களை விற்பனை செய்பவர்கள். அவர்களின் வாடிக்கையாளர்கள். இந்தப் புத்தகங்களுக்குச் சந்தையிலுள்ள மதிப்பு பற்றி விரிவாக ஆராய்கிறது ஆவணப்படம்.

தமிழில் முதற்பதிப்பினை சேகரித்து ஆவணப்படுத்தும் முயற்சியே கிடையாது. அரிய நூல்கள் கவனமின்றி வீசி எறியப்பட்டுக் காலத்தில் மறைந்து போய்விட்டன. ஆனால் சர்வதேசச் சந்தையில் நூற்றாண்டுகளைக் கடந்த புத்தகங்களின் மதிப்பு மிகவும் அதிகம்.

உம்பர்தோ ஈகோ இப்படி அரிய நூல்களைச் சேகரிக்கக் கூடிய ஒரு bibliophile. 1500களின் துவக்கத்தில் வெளியான நூல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். இன்றும் இது போல அரிய நூல்களை மிக அதிக விலைகொடுத்து வாங்கிச் சேகரிக்கும் பழக்கம் கொண்ட பில்கேட்ஸ் போன்ற தொழிலதிபர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவர்கள் பழைய புத்தகங்களை வாங்குவதற்காக நாடு விட்டு நாடு செல்கிறார்கள். அவர்களுக்குள் மிகப்பெரிய போட்டியிருக்கிறது.

அரிய நூல்களின் கண்காட்சியில் தான் எத்தனை விதமான புத்தகங்கள். மீனின் உருவத்தை முழுமையாக அச்சிட்டு அந்தப் பக்கங்களை எட்டாக மடித்து வைத்திருக்கிறார்கள். பிரித்தால் முழு மீனும் வெளிப்படுகிறது. உள்ளங்கையில் வைத்துக் கொள்ளும் அளவு சிறிய புத்தகம். தங்க உறையிடப்பட்ட புத்தகங்கள் இப்படி அச்சாக்க முறையில் செய்யப்பட்ட விசித்திரமான புத்தகங்கள். புகழ்பெற்ற நாவல்களின் முதற்பதிப்புகள். அரிய ஓவியங்களுடன் அச்சிடப்பட்ட சமய நூல்கள் எனப் பல்வேறு விதமான நூல்களை அந்தக் கண்காட்சியில் காணமுடிகிறது.

அரிய புத்தகங்களுக்கென்ற ஏலம் நடைபெறுகிறது. சில புத்தகங்களின் ஏலத்தொகை லட்சக்கணக்கில் செல்லக்கூடும் என்கிறார்கள்..

அரிய புத்தகங்களை விற்பனை செய்பவர்கள் தேர்ந்த புத்திஜீவிகள். அவர்கள் பலநேரங்களில் துப்பறியும் நிபுணரைப் போல எங்கே பழைய புத்தகங்கள் கிடைக்கின்றன எனத் துப்பறிகிறார்கள். அதன் உண்மை தரத்தை ஆராயக்கூடியவர்கள். அதே சமயம் தேர்ந்த வணிகராகவும் விலை கூறிவிற்பார்கள் என்கிறார்கள்

ஓவியர் டாவின்சியின் கையெழுத்துப் பிரதி இருபத்தியெட்டு மில்லியனுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

ஈபுக் ஆன்லைன் விற்பனை என மாறியுள்ள காலத்திலும் இது போன்ற அரிய நூல்களைத் தேடிப் படிப்பவர்கள், வாங்குகிறவர்கள் எண்ணிக்கை குறையவேயில்லை என்கிறார் ஒரு புத்தக விற்பனையாளர்.

இந்த ஆவணப்படத்தை இயக்கிய டி.டபிள்யூ. யங் ஒரு திரைப்பட தொகுப்பாளர் ஆவார்.

பழைய புத்தகங்களை விற்கும் கடை என்பது விநோத அருங்காட்சியகம் போன்றது. அதன் மர்மத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் யங்

1920களில், மன்ஹாட்டனில் 50க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள் ஒரு வரிசையிலிருந்தன. அவற்றை யூதவணிகர்களே நடத்தி வந்தார்கள். அவர்களுக்குத் தான் அரிய நூல்களின் மதிப்புத் தெரிந்திருந்தது என்கிறார் ஒரு புத்தக விற்பனையாளர். இந்தப் படம் 1925 ஆம் ஆண்டில் லூயிஸ் கோஹனால் நிறுவப்பட்ட நியூயார்க்கின் மிகவும் பழமையான புத்தகக் கடை ஆர்கோசிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது .

பழைய புத்தகங்களின் அட்டைகளுக்குக் கூட இந்தச் சந்தையில் கிராக்கி உள்ளது. 1950களில் அச்சிடப்பட்ட அட்டைகளுக்குச் சுமார் $ 5,000 டாலர் வரை விலை தரப்படுகிறது. இதை விடப் பழமையான அட்டை கிழிந்த நிலையிலிருந்தாலும் கூட அதை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

உலகப்புகழ் பெற்ற “டான் குயிக்சோட்”நாவலில் முதற்பதிப்பின் அசலை இந்த ஆவணப்படத்தில் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது

ஆபிரகாம் சைமன் வுல்ப் ரோசன்பாக் அமெரிக்காவின் புகழ்பெற்ற புத்தகச் சேகரிப்பாளர். அரிய புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை விற்பனை செய்தவர்.

இவர் 1926 ஆம் ஆண்டில் அவர் ஒரு குட்டன்பெர்க் பைபிளுக்காக 106,000 டாலர்களைக் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார். இன்று அந்த நூலின் ஒரு பக்கம் 30,000 டாலர்கள்.

ரோசன்பாக் உலகின் மிகச் சிறந்த நூலகங்களை உருவாக்க உதவினார், இவர் எழுதிய Books and Bidders இவரது அரிய புத்தகங்களுக்கான தேடுதல் வேட்டை அனுபவங்களை விவரிக்கிறது.

கோட்டையூரில் ரோஜா முத்தையா தனது வீடு முழுவதும் இது போல அரிய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். நானும் கோணங்கியும் அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறோம். அவரது நூலகத்தில் புத்தகங்களைத் தேடி படித்திருக்கிறோம். இன்று அந்த நூல்கள் சிகாகோ பல்கலைக்கழக உதவியுடன் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ரோஜா முத்தையா போலப் பலரும் சேமித்து வைத்திருந்த புத்தகங்கள் பாதுகாக்கப்படவில்லை. காலத்தில் அவை கைவிடப்பட்டு மறைந்து போனது வேதனையான விஷயமே.

•••

0Shares
0