மய்யழிக் கரையோரம்.

ஞாயிற்றுகிழமை மாலை மாஹி போயிருந்தேன். மய்யழி ஆற்றின் கரையிலுள்ள அழகான ஊர். கேரளாவினுள் இருந்தாலும் புதுச்சேரி யூனியனுடன் இணைந்த பகுதி. இங்கே தான் எழுத்தாளர் எம். முகுந்தன் வசிக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

முகுந்தனின் புகழ்பெற்ற நாவல் மய்யழிக் கரையோரம். இந் நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை மாஹியிலுள்ள ஒரு பூங்காவில் புடைப்புச் சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் காணுவதற்காகவே சென்றிருந்தேன்.

மய்யழிக் கரையோரம் நாவல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மாஹியின் கதையில் துவங்கி மய்யழி விடுதலை பெறுவதோடு நிறைவு பெறுகிறது.

நாவலின் நாயகன் தாசன். அவனது தந்தை படிக்காதவர். சிறிய குமாஸ்தா உத்தியோகம் செய்பவர். தாசன் மாஹியில் பிறந்து புதுச்சேரியில் கல்வி பயிலுகிறான். பாரீஸில் உயர்கல்வி பெற உதவி கிடைத்த போதும் அவன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளவே விரும்புகிறான். சந்திரிகா என்ற இளம்பெண் அவனைக் காதலிக்கிறாள். புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடும் தாசன் மாஹியின் விடுதலைக்காகப் போராடுகிறான். இதற்கிடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்  நாவலில் உலவுகின்றன

நாவலின் முக்கிய நிகழ்வுகளை மிக அழகான சிற்பங்களாகச் செய்திருக்கிறார்கள். ஒரு எழுத்தாளரைக் கௌரவிப்பதற்கு இதை விடச் சிறந்த வழியில்லை

எம்.முகுந்தன் மாஹியில் பிறந்தவர். ஃப்ரெஞ்சு வழிக்கல்வி பயின்றவர். டெல்லியில் பணியாற்றியவர். 1961முதல் தொடர்ந்து கதைகளும் நாவல்களும் எழுதி வருகிறார்.  சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரது நாவல்கள் திரைப்படமாகவும் உருவாக்கபட்டுள்ளன.

மய்யழி ஆறு கடலோடு ஒன்று கலக்கும் இடத்தில்  பூங்கா அமைக்கபட்டிருக்கிறது. ஞாயிறு தோறும் பூங்காவில் இசை நிகழ்ச்சி நடப்பது வழக்கம் என்றார்கள். நான் சென்றிருந்த போது இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதைக் கேட்க திரளமான மக்கள் கூட்டம்.

கடலை ஒட்டியதாக அழகான நடைபாதையை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் ஒய்வாக அமர்ந்து கடலை ரசிக்க இரும்பு பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அமர்ந்தபடியே இரவு ஒன்பது மணி வரை கடலை ரசித்துக் கொண்டிருந்தேன். கேரளாவின் பெரும்பான்மை ஊர்கள் ஒன்பது மணிக்குள் அடங்கிவிடுகின்றன. அதுவும் விடுமுறை நாள் என்றால் வீதியில் ஆட்களே இல்லை.

நினைவகங்களை உருவாக்குவதிலும் பராமரிப்பதிலும் கேரளா  அரசு தனிக்கவனம் செலுத்துகிறது . அது மிகுந்த பாராட்டிற்குரிய செயல்.  ஆயிரம் பேர் வந்து போகிற பூங்கா என்றாலும் மிகத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள். ஊரெங்கும் மதுக்கடைகள். ஆனால் ஒரு ஆள் கூடப் போதையில் தடுமாறி வாந்தியெடுத்திக் கொண்டு திரியவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக முகுந்தனை திருச்சூரில் நடந்த ஒரு கூட்டத்தில் சந்தித்துப் பேசினேன். அப்போது மாஹிக்கு வரும்படி அழைத்தார். நான் மாஹி சென்றிருந்த போது அவர் வெளியூர் பயணத்தில் இருந்த காரணத்தால்  சந்திக்க இயலவில்லை.

முகுந்தனை மாஹியின் பெருமைக்குரிய அடையாளமாகவே மக்கள் கொண்டாடுகிறார்கள்.  அதை நேரில் கண்டது  ஒரு எழுத்தாளனாக  எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

••

0Shares
0