‘மறைக்கப்பட்ட இந்தியா’ – வாசிப்பனுபவம்
முனைவர் ப. சரவணன், மதுரை

இந்தியத்தீபகற்பம் நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட பெருநிலம். ஏறத்தாழ எல்லாப் பெரிய, வலிமையான நாடுகளாலும் எண்ணற்ற வந்தேறிகளான ஆட்சியாளர்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளப்பட்ட அடிமை பூமி இது.
இன்று இது விழிப்படைந்து சுதந்திரம்பெற்ற பின்னரும்கூட இதன் உண்மை வலிமையை இந்தியர்களோ, உலக நாடுகளோ புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவின் தொல்வரலாறு மட்டுமல்ல நேற்றைய நிகழ்வுகூட யாராலோ, ஏதோ ஓர் அரசியல் காரணத்தை முன்னிட்டு மறைக்கப்படுகிறது.
நெடுநாள் திறக்கப்படாத நூலகத்தில் வைத்த நாள் முதல் இன்றுவரை எடுக்கப்படாத ஒரு நூலை எடுத்து, தூசியைத் தட்டி, திறந்து, விழிகளைச் சுருக்கிப் படிப்பது போலத்தான் இருக்கிறது இந்தப் புத்தகத்தைப் படித்த அனுபவம். எத்தனை எத்தனை அரிய செய்திகள்! ‘அட! இது நம்ம இந்தியாதானா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வைக்கும் வகையில் 52 அத்யாயங்களை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.
ஏன் நாம் நம் வரலாற்றை மறந்தோம்? நமக்கு நமது இந்தியாவைப் பற்றிய புரிதல் மிக மிகக் குறைவாக உள்ளதே! இதைப் பற்றி நாம் ஏன் சிந்திக்கவே இல்லை. நம்மைப் பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் நம் முன்னோர்களின் அதிதிறமைகளைப் பற்றியும் நாம் ஏன் தெரிந்துகொள்ள, நினைவில்கொள்ள ஆர்வம்காட்டவே இல்லை? அதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அதை இந்த எழுத்தாளரின் வார்த்தைகளிலேயே கூறிவிடுகிறேன்.
“மண்புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடத்துக்கு ஊர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், ‘தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை’ என்று நினைக்கிறார்கள்.”
உலகம் முழுவதும் தழுவிய அன்பும் பற்றுதலும் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் வேண்டும்தான். அதனால்தான்,
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறம்: 192)
என்றார் சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார். ஆனால், ஒவ்வொருவருக்கும் இயல்பிலேயே தாய்நாட்டுப் பற்று நிச்சயமாக இருக்க வேண்டும். தாய்நாட்டின் மீதான ‘பற்று’ என்பது வேறு, தாய்நாட்டின் மீதான ‘வெறி’ என்பது வேறு. வெறி வேண்டாம். ஆனால், ‘பற்று’ கண்டிப்பாகத் தேவைதான்.
தாய்நாட்டில் இருந்துகொண்டு, ஏதாவது ஓர் அரசியல் காரணத்திற்காகத் தாய்நாட்டைப் பழிப்பவர்களை என்னால் எந்த வகையிலும் நேசிக்க இயலாது. அரசியலும் ஆட்சியதிகாரமும் ஆட்சியாளர்களும் குறுங்குழுக்களும் காலச்சூழலில் மாறுவர். அவர்களால், அவற்றால் ‘நாடு’ ஒருபோதும் கலங்கப்படாது.
இந்தப் புரிதல் இருப்பவர்கள் தாய்நாட்டைப் பழிக்கவே மாட்டார்கள். தாய்நாட்டைவிட்டுப் புலம்பெயர்பவர்களுக்கு மட்டுமே தெரியும் தாய்நாட்டின் மீதான தம்முடைய காதலும் பேரன்பும். வந்தேறிகளுக்கு அவை புரியுமா என்ன?
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியா முழுக்கப் பலமுறைகள் பயணித்தவர். இந்தியாவின் மீது மாறாக் காதலுடையவர். உண்மையான இந்தியர். ‘இந்தியாவைப் பற்றிய நுண்ணிய தகவல்களைக்கூடத் தன்னால் இயன்றவரை தன் வாசகருக்குத் தெரிவித்துவிட வேண்டும்’ என்ற நோக்கில்தான், ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தியாவைப் பற்றியும் இந்திய தேசியக்கொடியைப் பற்றியும் விரிவாக எழுதிச் செல்லும்போது, “நமது தேசியக் கொடிக்கு ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் பிங்காலி வெங்கைய்யா அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி, கி.பி. 1963ஆம் ஆண்டு இறந்தார்” என்ற ஒரு கசப்பான செய்தியையும் சுயவிமர்சன நோக்கில் குறிப்பிட்டுவிடுகிறார். இந்திய வரலாற்றில் இதுபோல மறக்கப்பட்ட, தவறவிடப்பட்ட எண்ணற்ற ஆன்மாக்கள் உண்டு.
‘உயிரினங்களைப் பரிசாக வழங்கும் முறை’ என்பது, ஒருவகையில் அடிமைமுறையின் எச்சம்தான். ஒரு நிலத்தில் வாழும் உயிரினம் பிறிதொரு நிலத்தில் வாழ முடியாதுபோகலாம். ஒவ்வொரு உயிரினமும் தான் வாழும் நிலத்துக்கு ஏற்பவே தகவமைப்புகளைப் பெற்றிருக்கும். இதுதெரியாமல், தனது விருப்பத்திற்காகவும் பிறரிடம் தன் பெருமையை உயர்த்திக்கொள்வதற்காகவும் நம் நிலத்தில் வாழும் உயிரினத்தைப் பரிசாகவோ பணத்துக்காகவோ பிற நிலத்துக்குத் தரும், விற்கும் முறை இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இருந்துள்ளது. அதனைச் சுட்டிக்காட்ட விரும்பும் எழுத்தாளர் அதனோடு இணைத்து, மிகச் சிறந்த ஓவியக்கலைஞரையும் நமக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார்.
“இந்தியாவிலிருந்து வெளிநாட்டு அரசர்களுக்கு யானை, காண்டாமிருகம், மான் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டதை வரலாற்றில் காணமுடிகிறது. கி.பி. 1515ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட காண்டாமிருகத்தை போர்ச்சுக்கல்லில் உள்ள லிஸ்பன் நகரில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்திருக்கின்றனர். அதற்கு முன்பு வரை அப்படிப்பட்ட விசித்திர மிருகம் எதையும் அவர்கள் பார்த்ததே இல்லை. அந்தக் காண்டாமிருகத்தை போப்புக்குப் பரிசாக அனுப்பி வைக்க முடிவு செய்து, மீண்டும் கப்பலில் அனுப்பிவைத்தார் மேனுவல் அரசர். அந்தக் கப்பல் கடற்புயலில் சிக்கி மூழ்கியது. தனக்குப் பரிசாகக் கொண்டு வரப்பட்ட அந்த அதிசய மிருகம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று போப் விரும்பியதால், புகழ்பெற்ற ஓவியர் டூரரை அழைத்து, அந்த மிருகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னதும் நேரில் காணாமலேயேஅவர் காண்டாமிருகத்தை அசலாக வரைந்து முடித்த அதிசயமும் நடந்தது.”
இந்தப் பத்தியை வாசித்தபோது, ஓவியர் டூரரை என் மனம் பாராட்டியது. உயிரினங்களை விற்கும் பரிசளிக்கும் அத்தனை பேரையும் என் மனம் சபிக்கவே செய்தது.
இந்தியாவில் நாம் ஒரு புள்ளியில் வாழ்கிறோம். இந்தியாவில் வணிகத்தின் பொருட்டோ அல்லது சுற்றுலாவின் பொருட்டோ குறுக்கும் நெடுக்குமாகச் சென்று வருபவர்கள் இந்தியாவின் சில தனித்துவமான அடையாளங்களை மட்டுமே அறிய முடியும். எல்லாவற்றையும் விரிந்த விழிகளோடும் திறந்த மனத்தோடும் அணுகும் எளிய பயணியாக இந்தியா முழுவதும் நடமாடுபவர்களுக்கே இந்தியாவின் உண்மைமுகம் தெரியவரும்.
“பன்முகக் கலாசாரமே இந்தியாவின் தனித்துவம். இந்தப் பண்பாட்டுக் கலப்பினை ஒருவர் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், அவர் சாலை வழியாக இந்தியாவில் பயணிக்க வேண்டும். உணவு, உடை, விருந்தோம்புதல், மொழி, நம்பிக்கை, சடங்கு மற்றும் கலை என்று எத்தனையோ மாறுபட்ட தனித்துவமான கலாசார அம்சங்கள் இருக்கின்றன என்பதை நேரடியாக அறிய முடியும்.”
என்று எழுத்தாளர் கூறுவது, அவர் பெற்ற தொடர் பயண அனுபவத்தின் வழியாகத்தான்.
‘இந்தியாவும் இயற்கை வளங்களும்’ என்ற தலைப்பில் இனிவரும் தலைமுறை ஒரு கட்டுரை எழுதினால், அவர்கள் எந்த இயற்கை வளத்தைக் கண்டு எழுதுவார்கள்?. இந்தியாவில் இருந்த இயற்கையை இணையத்தில் தேடித்தானே எழுத இயலும்! அந்த அளவுக்கு நாம் இந்தியாவின் இயற்கை வளத்தை அழிதொழித்துவருகிறோம். இதனை நாம் அந்நியர்களிடம் அடிமைப்பட்ட காலத்தில்தான் கற்றுக்கொண்டோம் என்கிறார் எழுத்தாளர்.
“இந்தியாவிலிருந்து கடந்த 300 ஆண்டுகளில் மிக அதிகமாக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பிரிட்டிஷ், டச்சு மற்றும் போர்த்துக்கீசிய வணிக கம்பெனிகளுக்குக் கொள்ளை லாபம் தரும் விற்பனைப் பொருளாக நமது இயற்கை வளங்கள் திகழ்ந்தன. இந்தச் சுயலாப வணிகமே இன்று பல்கிப் பெருகி இயற்கையை அழித்தொழிக்கும் வன்முறையாக உருமாறி இருக்கிறது. அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் மரங்களும் சுதந்திரமாக இருப்பது இல்லை என்பதை உணர்த்துவதுபோலவே காடு மௌனமாக நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.”
நமது தேசத்தின் மகாகவியும் கல்வியாளருமான தாகூர் பற்றி இந்தப் புத்தகத்தில் நீண்ட கட்டுரைகள் இருக்கின்றன. ஏறத்தாழ தாகூரின் அனைத்துப் பரிமாணத்தையும் தொட்டுக்காட்டும் வகையில் அந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தின் வழியாகவும் சமூகஊடகங்களின் மூலமாகவும் நாம் அறிந்த தாகூர் வேறு. எழுத்தாளர் இந்தப் புத்தகத்தின் வழியாக நமக்குக் காட்டும் தாகூர் பிறிதொருவராகத் தெரிகிறார்.
“ ‘பள்ளி’ என்பது, இயற்கையான சூழலில் அமைய வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க வருவதை மகிழ்ச்சியான செயலாகக் கருத வேண்டும். தண்டனை இல்லாத, எளிய, தனித்துவமான கற்றல் முறையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டார் தாகூர். அதற்காக அவர் நிறுவியதே ‘சாந்திநிகேதன்’.”
மகாத்மா காந்தியடிகளுக்கும் மகாகவி தாகூருக்கும் இடையிலான ஒட்டுதல்களையும் உரசல்களையும் எழுத்தாளர் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் வழியாக அவ்விருவரைப் பற்றியும் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. தாகூரின் சாதனைகளையும் அவரின் ஆளுமையைப் பற்றியும் இந்தப் புத்தகத்தின் வழியாக அறிந்த பின்னர், அவரை நமது தேசத்தின் மற்றொரு ‘மகாத்மா’ என்றே நான் எண்ணுகிறேன்.
இந்தியர்களின் பார்வையில் இந்தியா என்பது வேறு. அந்நியர்களின் பார்வையில் நமது இந்தியா என்பது நாம் அறியும் பிறிதொரு இந்தியாதான். வழக்கமாக நாம் பள்ளிப்பாடப் புத்தகத்தின் வழியாக இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள் குறித்துப் படித்திருப்போம். அந்தப் பயணிகளின் வரிசையில் அஃபனாசி நிகிதன், அலெக்ஸி சோல்டிகோப் ஆகியோரை இடம்பெற்றிருக்க மாட்டார்கள்.
அஃபனாசி நிகிதன் என்ற கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வணிகர் இந்தியாவைத் தன் எழுத்தால் பதிவு செய்திருக்கிறார். அலெக்ஸி சோல்டிகோப் என்பவர் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவைத் தன் ஓவியத்தால் பதிவு செய்திருக்கிறார்.
இவர்களைப் பற்றியும் அவர்களின் பார்வையில் இந்தியா எப்படி இருந்தது என்பது குறித்தும் விளக்கியுள்ளார் எழுத்தாளர். இறுதியாக,
“வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் யாவும் நிஜமானவை அல்ல. மிகைப்படுத்துதலும் கேட்டறிந்த தகவல்களும் நிறைய கலந்திருந்திருக்கின்றன. ஆனாலும், கடந்த காலத்தின் குரலை இந்தக் குறிப்புகள் மூலம் கேட்க முடிகிறது என்பதே இதன் வரலாற்று முக்கியத்துவத்துக்கான காரணம்.”
என்று குறிப்பிட்டு, நாம் எந்த அளவுக்கு அந்நியர்களின் இந்தியப் பயணம் பற்றிய குறிப்புகளை நம்பவேண்டும் என்பதற்கு ஒரு வரையறையை விதித்துவிடுகிறார் எழுத்தாளர்.
இந்தியாவில் பல்வேறுவிதமான ஓவியமுறைகள் இருப்பதைப் பற்றி நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிந்திருப்போம். மொகலாய நுண்ணோவியம் பற்றிய விரிவான புரிதல் நமக்கு நிச்சயமாக இருந்திருக்காது.
“கையளவு உள்ள சிறிய ஓவியத்தை வரைய ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஒரு மொகலாய நுண்ணோவியத்தில் ஓணாணின் கண் உள்ளே தெரியும் மங்கலான பிம்பம்கூட துல்லியமாக வரையப்பட்டு இருக்கிறது என்றால் அதன் நுட்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”
என்கிறார் எழுத்தாளர். கடும் உழைப்பின் விளைவாகவே ஒவ்வொரு ஓவியமும் உருப்பெருகின்றன. அவற்றுள் ‘மொகலாய நுண்ணோவியம்’ சிகரம் எனலாம்.
‘இன அழிப்பு’ என்பது உலக அளவில் ஒரு வல்லரசுக் கலாச்சாரமாகவே மாறிவருகிறது. அல்லது சிற்றரசுகளின் கூட்டணிகளுக்குரிய பெருந்தீனியாகவும் இன அழிப்புக் கொடுமைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் யூதர்களும் ஈழத்தமிழர்களும் பலியானார்கள். ஆனால், வரலாறு அவர்களைப் போன்ற பல இனங்களைக் குறிப்பிடுகிறது. அவர்களுள் ஓர் இனத்தவர்களே ஆர்மீனியர்கள்.
“ ‘ஆர்மீனியர்கள் ஒருபோதும் வாய்விட்டுச் சிரிப்பதில்லை. மறுக்கப்பட்ட நீதியின்வலி அவர்கள் தாடைகளை ஒடுக்கிவைத்திருக்கிறது’ என்று புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் சரோயன் கூறியுள்ளார். அவரும் ஆர்மீனிய வம்சாவழியைச் சேர்ந்தவரே. அந்த வாசகம் இன்று ஈழத் தமிழ் மக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றே!”
இந்தப் புத்தகத்தில் ஆர்மீனியர்களைப் பற்றிப் படிக்கும்போது, நெஞ்சம் கனத்துவிடுகிறது. ‘ஒருநாள் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடுமோ?’ என்றும் மனம் பதற்றம்கொள்கிறது.
‘நமது வரலாற்றைப் பிறர் மறைத்தமைக்கு நிகராக, நமக்கு நாமே மறைத்து, அழித்தவைதான் மிகுதியோ!’ என்று எண்ண வைக்கிறது பின்வரும் பத்தி.
“ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த தடயம்கொண்ட தமிழகம் அதன் வரலாற்றுப் பெருமைகளை மறந்து முக்கிய வரலாற்றுச் சின்னங்கள், தடயங்கள், அகழாய்வுகள் நடைபெற்ற இடங்கள் யாவற்றையும் சிதைத்தும் அகற்றியும் கைவிட்ட நிலையில் வைத்துள்ளமை வரலாற்றக்குச் செய்யும் பெரும் துரோகம்.”
இனிவரும் தலைமுறையாவது வரலாற்றுக்குத் துரோகம் செய்யாமல் இருக்கட்டும். அதற்கு ஏற்ப அவர்களை நாம் பழக்க வேண்டும். இல்லையெனில், ‘கண்கட்டுவித்தை’யில் மாயமாகும் பொருட்களைப் போலவே நம் கண்முன்னாலேயே நமது இந்தியா ‘மறைந்த இந்தியா’வாக ஆகிவிடும். அதைத் தடுக்கும் வகையில் எழுதப்பட்டதே ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற இந்தப் புத்தகம்.
இந்தியா யாரால், எதனால் மறைக்கப்பட்டது? நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெளிநாட்டவர்களாலும் அவர்களின் கொடுங்கோன்மைமிக்க அதிகாரத்தினாலும்தான். ஒவ்வொரு நாட்டுக்கும் இதுபோன்றே மறைக்கப்பட்ட பெருவரலாறு இருக்குமா? நிச்சயமாக இருக்கும். அவற்றை அகழ்ந்து, உலகுக்குக் காட்டப்போவது யார்? அடுத்த தலைமுறைகளே! அதுபோலவே, ‘நமது இந்தியத் தலைமுறைகளால் நமது இந்தியாவின் புகழ் உலக வரலாற்றில் என்றும் மங்காமல் இருக்கும்’ என்று நம்புவோம்.
வரலாற்று மாணவர்கள் மட்டுமல்ல, தாய்நாட்டுப் பற்றுடைய ஒவ்வொரு தமிழரும் வாசிக்க வேண்டி மிகச் சிறந்த வரலாற்றுக்கருவூலம் ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற இந்தப் புத்தகம்
– – –
