மூன்று மௌனங்கள்

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள CODA என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். Sian Heder என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். CODA என்றால் காது கேளாத பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தை என்று பொருளாம். (child of deaf adults)

இப்படத்தின் கதாநாயகி ரூபி அப்படியான இளம்பெண். அவளைச் சுற்றியே கதை நிகழுகிறது. ரூபியின் அப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் காது கேளாதவர்கள். ரூபியின் அப்பா ஒரு மீனவர். தலைமுறையாக அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் ரூபியும் மீன்பிடிப்பிற்குச் செல்கிறாள். அதிலிருந்து தான் படம் துவங்குகிறது

ரூபியின் அப்பா அம்மா இருவருக்கும் காது கேட்காது என்பதால் சைகை மொழியில் பேசிக் கொள்கிறார்கள். மிகச் சந்தோஷமான தம்பதிகள்.

ரூபி படத்தின் ஒரு காட்சியில் “அவள் பிறந்த போது அவளுக்குக் காது கேட்காது என்று அம்மா நினைத்தாளா“ எனக் கேட்கிறாள்.

அதற்கு சைகைமொழியில் பதில் சொல்லும் “அம்மா, நீ பிறந்த போது உனக்குச் செவித்திறன் இருக்கிறதா என்று மருத்துவர்கள் சோதனை செய்தார்கள். அந்த நிமிஷம் உனக்குக் காது கேட்கக் கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் உனக்கு நன்றாகக் காது கேட்கிறது என்று மருத்துவர் சொன்னது ஏமாற்றமளித்து“ என்கிறாள்.

“ஏன் எனக்குக் காது கேட்கக் கூடாது என்று ஆசைப்பட்டாய்“ என்று கோபமாக அம்மாவிடம் ரூபி கேட்கிறாள். அதற்கு அவளது அம்மா, “காது கேட்கிற உன்னால் காது கேட்காத எங்களைப் புரிந்து கொள்ள முடியாது. என் அம்மாவிடம் அதை நான் உணர்ந்திருக்கிறேன். காது கேட்காத என்னை அவர் புரிந்து கொள்ளவேயில்லை. அதே நிலை எனக்கும் ஏற்படக்கூடாது என்று நினைத்தேன்“ என்கிறார்.

அதைக் கேட்ட ரூபி சொல்கிறாள். “என்னால் உங்களை நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். உங்களுக்குக் காது கேட்கவில்லை என்பது எனக்குப் பிரச்சனையாக இருந்ததேயில்லை. “

அதைக்கேட்ட அம்மா சொல்கிறாள். “உன்னைச் சீண்டுவதற்காகவே இப்படிச் சொன்னேன். உண்மையில் நீ எங்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாய். என்னை விடத் தைரியமாக இருக்கிறாய். உன் வாழ்க்கையை நீயே தேர்வு செய்து கொள்கிறாய். உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்“ என்கிறாள். மறக்கமுடியாத காட்சியது.

ரூபியின் அம்மாவிற்கு அவள் வளர்ந்த பெண்ணில்லை. இன்னமும் ஒரு சிறுமியே. அவள் எங்கே தோற்றுப்போய்விடுவாளோ என்று பயப்படுகிறாள். ஆனால் தந்தை அவள் இப்போது இளம் பெண். அவளாக முடிவு எடுக்க முடியும் என்று சொல்கிறார். பெற்றோர்களின் இயல்பை படம் முழுவதும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ரூபி நன்றாகப் பாடக்கூடியவள். எப்போதும் இசைகேட்டபடியே இருக்கிறாள். ஒரு நாள் அவளது பள்ளியில் நடைபெறும் சேர்ந்திசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பெயர் கொடுக்கிறாள்.  இசை ஆசிரியர் பெர்னார்டோ அவளது குரலின் இனிமையை அறிந்து கொண்டு அவளுக்குத் தேவையான பயிற்சிகள் அளிப்பதுடன் அவள் இசைக்கல்லூரியில் இணைந்து படிக்க வேண்டும் என்றும் ஆலோசனை சொல்கிறார்

தன்னை விட்டால் குடும்பத்தினருக்கு வேறு துணையில்லை என்பதை உணர்ந்த ரூபி பெற்றோர்களை விட்டு எப்படிப் பாஸ்டனில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து படிப்பது என்று குழப்பமடைகிறாள். இன்னொரு பக்கம் குடும்பத்தின் பொருளாதாரச் சிரமம். பெர்க்லி இசைக்கல்லூரியில் இடம் கிடைக்கப் போராட வேண்டிய சூழல். என்ன செய்வது எனத் தெரியாத தடுமாற்றம்.

ஒரு பக்கம் குடும்பத்தின் தேவைகள் மறுபக்கம் அவளது இசைக்கனவு இரண்டுக்கும் இடையில் ஊசலாடுகிறாள். இந்தச் சூழலுக்குள் அவளுக்கும் காதல் பிறக்கிறது. மைல்ஸ் அவளை விளையாட்டாகக் கேலி செய்யவே அது உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது.

பள்ளியில் சக மாணவர்களால் ரூபி பரிகசிக்கப்படுகிறாள். இசை ஆசிரியர் பெர்னார்டோ அவளது குரலைச் சோதிக்க வேண்டிப் பாடச்சொன்ன போது அவள் பயந்து ஒடிவிடுகிறாள். ஆனாலும் பெர்னார்டோ அவளுக்கு உதவி செய்கிறார். ரூபி இசைக்கல்லூரியில் சேருவதற்காக அவளைத் தயார் படுத்துகிறார். பெர்னார்டோ கதாபாத்திரம் தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இறுதிக்காட்சியில் தான் படித்த கல்லூரிக்கே வந்து அவளுக்காக இசை வாசிப்பது சிறப்பானது.

படம் முழுவதும் மெல்லிய நகைச்சுவை கலந்திருக்கிறது. சரியான இடத்தில் அது வெளிப்படுகிறது.

கல்லூரி சேர்ந்திசை நிகழ்ச்சியைக் காணுவதற்காக ரூபியின் குடும்பம் வந்து சேருகிறது. அவர்களுக்கு அவள் எப்படிப் பாடுகிறாள் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று குழப்பம். தங்கள் அருகில் இசை கேட்பவர்களின் முகங்களை உற்றுப் பார்க்கிறார்கள். ரூபி பாடுவதைக் கேட்டு ஒரு பெண் கண்ணீர் விடுவதைக் கண்டவும் அவளது அப்பாவின் முகம் மாறுகிறது. அவளது குரலின் இனிமையை அவர்கள் பிறரது முகத்தில் வெளிப்படும் சந்தோஷம் வழியாகவே அறிந்து கொள்கிறார்கள்.

வீடு திரும்பிய இரவில் ரூபியின் தந்தை அவளை அருகில் அழைத்து அந்தப் பாடலின் அர்த்தத்தைக் கேட்கிறார். பின்பு தனக்காக அதே பாடலை மீண்டும் பாடும் படியாகச் சொல்கிறார். அபாரமான காட்சியது. அதில் ரூபி பாடும் போது அவளது முகத்தை. குரல்வளையைத் தடவித்தடவி பார்க்கிறார் தந்தை. அதில் தான் எத்தனை மகிழ்ச்சி. பெருமிதம்.

ரூபியின் தந்தை பிராங்க் துணிச்சலானவர். புதிய கட்டணங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் போது அவர் தன்னை வணிகர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து நேரடியாக மீன் விற்பனை செய்ய இறங்குகிறார். அந்த முடிவை அவர் அரங்கத்தில் வெளிப்படும் விதம் அற்புதம்.

இது போலவே ரூபியின் அண்ணன் லியோ. உறுதியானவன். அவன் பாரில் ஒருவனுடன் சண்டையிட்டு அடிவாங்குகிறான். தான் வீட்டிற்கு மூத்தவன். தன்னால் சுயமாக முடிவு எடுக்க முடியும் என்று பெற்றோர்களுடன் சண்டை போடுகிறான். பாரில் வேலை செய்யும் இளம்பெண்ணின் அன்பைப் பெறுவதும் அவர்களின் காதலும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்சியில் தங்களைப் புரிந்து கொள்ளவில்லை என நினைத்த லியோ தங்கையின் மீது கோபம் கொண்டு நீ பிறக்கும் முன்பு வரை நாங்கள் சந்தோஷமாகத் தான் இருந்தோம் என்கிறான். அவனது கோபத்திலுள்ள அன்பை ரூபி உணர்ந்து கொள்கிறாள். அவனைச் சமாதானப்படுத்துகிறாள்.

இசை நிகழ்ச்சியின் போது லியோ தனது காதலியின் கரங்கள் வழியே இசையின் சிறப்பை அறிந்து கொள்வது அழகு.

பிராங்கின் மௌனம், லியோவின் மௌனம். ஜாக்கியின் மௌனம் என மூன்று வகையான மௌனமும் ரூபியால் புரிந்து கொள்ளப்படுகிறது. அவர்களின் குரலாகவே அவள் ஒலிக்கிறாள்.

ஒரு நாள் மீன்பிடிக்கும்போது கடலோரக் காவல்படையின் எச்சரிக்கையை மீறியதாக ஃபிராங்க் மற்றும் லியோ தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவர்களின் மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மேல்முறையீடு செய்து, தங்கள் உரிமத்தைத் திரும்பப் பெற முயற்சிக்கும் போது நன்றாகக் காது கேட்கக் கூடிய ஒருவர் அவர்களுடன் படகில் முழுநேரமும் உதவியாக இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்கிறார்கள்.

இதற்காக ரூபி தனது கனவை மறந்து அப்பாவிற்குத் துணையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் பிராங்க் தனது மகளின் இசைக்கனவை நிறைவேற்றத் துணை நிற்கிறார். முடிவில் இவரைப் போல செவித்திறன் குறைந்தவர்களுக்கு உதவி செய்ய மற்றவர்களுக்கு சைகை மொழி கற்பித்தல் நடைபெறத் துவங்குகிறது.

ரூபி மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்கிறாள். பேசுகிறாள். காதலை அவள் வெளிப்படுத்துவம் அப்படியே நடைபெறுகிறது. படத்தின் முக்கியக் காட்சிகள் சைகை மொழியிலே உருவாக்கப்பட்டுள்ளன. புற உலகிற்கும் பெற்றோர்களுக்கும் இடையில் ரூபி மொழிபெயர்ப்பாளராகச் செயல்படுகிறாள்.

பாடும் போது நீ எப்படி உணருகிறாய் என்று பெர்னார்டோ அவளிடம் கேட்கும் போது அவள் சைகை மொழியில் தான் பதில் தருகிறாள். அவர் அதை உணர்ந்து கொண்டு அவளைப் பாராட்டி உற்சாகப்படுத்துகிறாள். இப்படிக் கவிதை போன்ற காட்சிகள் படத்தில் நிறையவே இருக்கின்றன.

மைல்ஸ் ஒரு காட்சியில் ரூபியிடம் சிறுவயதில் நீ உன் பெற்றோர்களை வழிநடத்தியபடி கடைவீதிக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன், அப்பாவிற்காக நீ பியர் வாங்குவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன் என்று அவளே மறந்து போன நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறான். டூயட் பாடலுக்காக இணையும் அவர்கள் மெல்லக் காதலர்களாக உருமாறுகிறார்கள். இருவரும் ஒன்றாக நீந்திக் குளிக்கும் காட்சியில் இருவரும் இரண்டு மீன்களைப் போலத் துள்ளுகிறார்கள்.

இறுதிக் காட்சியில் அவள் நேர்காணல் நிகழ்வில் பாடுவதைக் குடும்பத்தினர் பால்கனியில் அமர்ந்து பார்க்கிறார்கள். அவர்களால் அந்தப் பாடலைக் காண முடிவது போல முகபாவம் வெளிப்படுத்துகிறது.

காது கேளாத குடும்பத்திலிருந்து ஒரு பெண் பாடகியாக விரும்புகிறாள் என்பது பழைய கதைக்கரு. ஆனால் அதைத் திரைக்கதையாக உருவாக்கியுள்ள விதமும் காட்சிப்படுத்திய விதமும் கேமிராக் கோணங்களும் இனிமையான இசையும் தேர்ந்த நடிப்பும் இப்படத்தைச் சிறந்த திரைப்படமாக மாற்றியிருக்கிறது. CODA ஆஸ்கார் விருது பெறுவதற்குத் தகுதியான படம் என்பதில் சந்தேகமில்லை.

0Shares
0