கடந்த வாரத்தில் திருச்சுழி, நரிக்குடி, பெருநாழி, கமுதி, மண்டலமாணிக்கம், பார்த்திபனூர். ஆர் எஸ்.மங்கலம், பரமக்குடி, என்று ராமநாதபுர மாவட்டத்தின் உள்ளாகவே சுற்றியலைந்து கொண்டிருந்தேன்.
பனைமரங்கள், புழுதி பறக்கும் சீரற்ற சாலைகள். சாலையின் இருபுறமும் மண்டி கிடக்கும் வேலிச்செடிகள். உலர்ந்து வெடித்துபோன கண்மாய்கள், கண்ணுக்கு எட்டியவரை நடமாட்டமே இல்லாத அத்துவான வெளி.
உலர்ந்தமேகங்கள்.உக்கிரமான சூரியன். வெயில் ததும்பும் கிராமவீதிகள். காலத்தின் முன்னோட்டத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டதோ எனும்படியாக தனித்து போயிருக்கும் ஊர்கள். தொலைக்காட்சி ஒன்று தான் கிராமங்களின் ஒரே பொழுதுபோக்கு.
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு முகமிருக்கிறது. அது பெரிதும்அயர்ச்சியும் தளர்ச்சியும் கொண்டதாகவே உள்ளது. பெரும்பான்மை கிராமங்களின் பகல்கள் ஒன்று போலவே இருக்கின்றன.
சிற்றூர்களின் பேருந்து நிலையங்கள் அலங்கோலமாக இருக்கின்றன. கழிப்பறைகளை காண்பதே அபூர்வம். புழுதிபடிந்த தேநீரை உச்சிவெயிலில் நின்றபடியே அருந்தும் மனிதர்கள். இளநீரில், வாழைப்பழங்களில் கூட வெயில் உறைந்து போயிருக்கிறது.
என் பால்யத்திலிருந்து ராமநாதபுர மாவட்டத்தை பார்த்து கொண்டேயிருக்கிறேன்.காற்றில் அடித்து செல்லப்படும் மணல்போல இந்த கிராமங்களின் விதி துயர் நிரம்பியது. அரசின் புறக்கணிப்பும் அக்கறையின்மையும் இயல்பாகி போய்விட காலம் இக்கிராமங்களை அரித்து தின்றபடியே உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்குள் ராமநாதபுரமாவட்டத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடந்துவிடவில்லை.
பெருநாழி அருகே ஒரு கிராமத்தின் சாலையில் கோவிலில் மொட்டை அடித்துவிட்டு நகர பேருந்திற்காக காத்திருக்கும் இரண்டு குடும்பங்களை பார்த்தேன். பெண்களும் மொட்டையடித்திருந்தார்கள். கையில் வைத்தபடியே சக்கரை பொங்கலை சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் முகத்தில் சிரிப்பு வழிந்துகொண்டிருந்தது. மஞ்சளும் அடர்நீல வண்ணமுமாக உடையணிந்திருந்தார்கள். நெற்றியில் பூசப்பட்ட திருநீறும் கூந்தலில் தெரிந்த மருக்கொழுந்தும் மனதை வெகுவாக வசீகரித்தது
அவர்கள் முகத்தில் இருந்த சாந்தியும் நிதானமும் போல எங்கும் நான் கண்டதேயில்லை. கடவுளை பார்த்து கைகுலுக்கிவிட்டு வந்தவர்களை போன்ற சாந்தமது. நேர்ச்சைகளை கிராமத்து மக்கள் வெகு அக்கறையோடுசெய்கிறார்கள். கடவுள் முன்பாக அவர்கள் விடும் கண்ணீரும் வேண்டுதலும் வார்த்தைகள் அற்றது. பிரார்த்தனைகள் தான் அவர்களை வாழ வைத்து கொண்டிருக்கின்றன.
அவர்கள் வழிபட்ட கோவில் ஆலமரத்தடியில் இருந்தது. அந்த சாலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மாட்டுவண்டியை பார்த்தேன். டயர் போடப்பட்ட மாட்டுவண்டிகள் சில கிராமங்களில் இப்போதுமிருக்கின்றன. ஆனால் அன்று நான் பார்த்த வண்டி பழமையான மரச்சக்கரம் கொண்ட மாட்டுவண்டி. இரண்டு மாடுகள் வாயில் நுரைதள்ள மெதுவாக சாலையில் வந்து கொண்டிருந்தன. வண்டிக்காரன் தலைக்கு முக்காடு இட்டபடியே உட்கார்ந்திருந்தான். வண்டியோசை அற்புதமான சங்கீதம் போலிருந்தது.
அந்த வண்டியில் கொஞ்சம் வைக்கோலும் நாலைந்து கரிமூடைகளும் தென்பட்டன. இந்த பகுதியின் முக்கியமான தொழிலாக கரிமூட்டம் போடுவது உருவாகிவிட்டது. வேலி செடியை வெட்டி கரிமூட்டம் போட்டு அந்த கரியை மூடைமூடையாக கொண்டு போய்விற்கிறார்கள்.
எப்போது பஸ் வரும் என்று தெரியாமல் அந்த குடும்பம் ஒண்டிக்கொள்ள நிழல் கூட இல்லாத ஒரு சாலையில் நின்று கொண்டிருந்தார்கள். அந்த கண்கள் தொலைவை பார்த்தபடியே இருந்தன.வண்டிக்காரன் அவர்களை தனது வண்டியில் நிறுத்தி ஏற்றிக் கொண்டான். அந்த குடும்பம் சாலையில் செல்வதை பார்த்தபடியே இருந்தேன். எவ்வளவு எளிமையானது வாழ்க்கை. தினப்பாடுகள், பிரச்சனைகள் யாவுமிருக்கின்றன. ஆனால் இந்த நெருக்கம், இணக்கம் மற்றும் உறவு நகரங்களில் சாத்தியமேயில்லை போலும்
அவர்களை விலக்கி அருகாமை இருந்த இன்னொரு கிராமத்திற்குள் நாங்கள்சென்ற போது நாய்கள் எங்களை முறைத்தபடியே நின்றன. ஒரு நாய் கூட குலைக்கவில்லை. வேம்பு அடர்ந்த கிராமம். எங்களை கண்டதும் யாரோ அரசு அதிகாரிகள் என்று நினைத்து வீடு இடிந்து போனதற்கு உதவி செய்வீர்களா என்று ஒரு பெரியவர் கேட்டார். நாங்கள் அதிகாரிகள் இல்லை. சும்மா கிராமங்களை பார்க்க வந்திருக்கிறோம் என்றதும் அவர் முகத்தில் இங்கே பார்க்க என்ன இருக்கிறது. காட்டந்தரையும், பொக்குமண்ணும் தவிர என்று சலித்தபடியே போனார்.
ஊரில் புதிய வீடுகள் எதையும் காணமுடியவில்லை. ஒரேயொரு வீட்டிற்கு மட்டும் பச்சை நிற பெயிண்ட் அடித்திருந்தார்கள். குனிந்துசெல்லும்படியான தாழ்வான நிலை கொண்ட ஒட்டுவீடுகளே அதிகமிருக்கின்றன. கிணறுகளில் தண்ணீர் இல்லை. வேலிபடல் கொண்ட குளியலறைகள். சிறிய பள்ளிக்கூடம் . பகலில் வீதிகளில் ஆள் நடமாட்டமேயில்லை. ஊர் நிசப்தத்தில் முழ்கிகிடக்கிறது. மரங்களில் இலைகள் கூட அசையவில்லை.
காரை உதிர்ந்து போன வீடுகள். படிகளில் களிம்பேறி நிற்கிறது காலம். ஒரு வீட்டின் வாசலில் அருவாள் ஒன்று மண்ணில் புûந்து போய்கிடந்தது. கோழிகள் கூட சப்தமிடாமலே கடந்து போகின்றன. மரங்களில் பறவைகளளை காணமுடியவில்லை. வெயில் கொப்பளிக்கிறது. ஒரு கிராமப்பெண் பித்தளை செம்பில் தண்ணீர் குடிக்க தந்தாள். அது உப்பு தண்ணீர். ஆனால் வெயிலுக்கு குடித்த போது அற்புதமாகவே இருந்தது.
வெயிலில் அலைந்து திரிந்து கிறங்கிய எங்கள் முகங்களை கண்டதும் சாப்பிட்டு போறீகளா சார் என்று அந்த பெண் கேட்டாள். என்னோடு வந்த நண்பர் பரவாயில்லை.. பக்கத்தில ஏதாவது டீக்கடை இருக்கிறதா என்று கேட்டார். அந்த பெண் சிரித்தபடியே அது காலையில் ஆறுமணிக்கு ஆரம்பிச்சி ஒன்பது மணிக்கு முடிஞ்சிரும். அதுக்கு மேல டீக்கடை கிடையாது. யாரு இந்த ஊர்ல டீ குடிக்க போறது என்று சொல்லி சிரித்தாள்.
யாருமே இல்லாமல் போன வீடு ஒன்றை பார்த்தேன். வீட்டின் கதவு பிடுங்கி எடுக்கபட்டிருந்தது. உள்ளே நடமாட்டம் அற்று போன புழுதி. என்றோ யாரோ சமைத்து சாப்பிட்ட மண்பாத்திரங்கள் அப்படியே தூசியடைந்து கிடக்கின்றன. பெண்கள் உடுத்தும் ஊதா நிற பாவடை ஒன்று கிழிந்து அழுக்கேறி கிடந்தது. சுவரில் படிந்த கரிப்புகை அந்த வீட்டின் கடந்தகாலத்தை சொல்லிக் கொண்டிருந்தது. வீட்டில் இருந்தவர்கள் ஊரை காலி பண்ணி போய்விட்டார்கள். ஒரேயொரு கிழவி மிச்சமிருந்தாள். அவளும் செத்து ரெண்டுவருசமாகிவிட்டது. இப்போது யாரும் இல்லை என்று அருகாமை வீட்டுபெண் சொன்னாள்.
அந்த வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து போயிருந்தது. தூசிபடிந்த ஒட்டில் விதவிதமான பறவை இறகுகள் ஒரு கட்டாக கட்டி சொருகி வைக்கபட்டிருந்தன. இந்த இறகுகளை சேகரித்தது யார். எதற்காக இத்தனை இறகுகளை சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து கொண்டிருந்தேன். எந்த பறவையின் இறகுகள் அவை. எப்போது இந்த கிராமத்திற்கு வந்து போயின. சிவப்பு நிற நீளமான இறகு ஒன்றை மட்டும் கையில் எடுத்து கொண்டேன். நான் பார்க்காத பறவை என் கூடவே வருவது போலிருந்தது
அங்கிருந்து மண்பாதை வழியாகவே சென்று இன்னொரு கிராமத்திற்குள் நுழைந்தோம். அது விவசாயம் உள்ள ஊர் என்பது அதன் அமைப்பபை பார்த்தபோதே தெரிந்தது. பெரியதும் சிறியதுமான காரைவீடுகள்.பைக்குகள், டிராக்டர்கள். ஊரின் முகப்பில் பத்துபனிரெண்டு வேப்பமரங்கள். அதன் அடியில் படுத்துகிடக்கும் மனிதர்கள். கட்சி கொடிகள். சாதி கட்சி விளம்பரங்கள். சிலைகள். அந்த ஊரில் பஞ்சாயத்து அலுவலகம் பள்ளிக்கூடம் இரண்டு கோவில்கள் யாவுமிருந்தன.
ஒரு ஆள் எங்களிடம் புது ரேஷன் கார்டு கிடைக்குமா என்று கேட்டார். அரசு அதிகாரிகளை தவிர வேறு ஆட்கள் எவரும் அந்த கிராமங்களுக்கு வருவதேயில்லை போலும். வெளியாட்கள் என்றாலே அது அரசு ஊழியர்கள் என்றே நினைக்கிறார்கள். நாங்கள் அதற்காக வரவில்லை என்று ஊருக்குள்ளாக நடந்து செல்ல துவங்கினோம்.
கிராமங்களில் இன்னமும் ஜாதி அப்படியே இருக்கிறது. சொல்லப்போனாலும் கடந்த பத்தாண்டுகளில் அதிகமான சாதிய ஈடுபாடு. சாதிய அடையாளங்களை முன்வைப்பது அதிகமாகியிருக்கிறது. சாதி தலைவர்களின் சிலைகள், விளம்பரங்கள். ஒரு சாதியும் மற்றொரு சாதியும் பகையாக கருதும் மனப்பாங்கு.கண்ணுக்கு தெரியாத சுவர்கள் பல கிராமங்களில் வளர்ந்து உயர்ந்திருக்கின்றன. எவரும் எவரையும் நிறுத்தி உங்கள் சாதி என்ன என்று கேட்க தயங்குவதேயில்லை.
சாதிய அடையாளங்களை முன்நிறுத்துவதே இன்று அரசியல், சமூக அதிகார நிலைகளில் முக்கியமாக உள்ளது. அதன் பிரதிபலிப்பு கிராமங்களில் அதிகம் காணமுடிகிறது. ஒரு கிராமத்தின் நுழைவாயில் ஒரு குவியலாக உடைந்துகிடந்த கருங்கற்கள் கிடந்தன. எதற்காக அவை என்று கேட்டேன். சண்டை வந்தா அடிக்கிறதுக்கு வேணும்லே என்று ஒருவர் சாவகாசமாக சொன்னார். கல்லாயுதம் இன்னும் மனிதனை விட்டு போகவில்லையா? சாதிய துவேசங்கள் வெளிப்படையாக இல்லை ஆனால் உள்ளுற இருக்கவே செய்கிறது.
கிராமத்தின் ஊடாகவே நடந்துபோன போது சிறிய சந்து ஒன்றின் வழியாக வெளிப்படும் போது ஒரு வீட்டின் முன்னால் ஒரு மைனா நின்று கொண்டிருப்பதை கண்டேன். நடைச்சப்தம் கேட்டால் பறந்துவிடும் என்று நினைத்து அங்கேயே நின்றேன். மைனா திரும்பி பார்த்தது. ஆனால் பறக்க எத்தனிக்கவில்லை.
மைனாவை பார்த்து நீண்ட நாட்களாக விட்டது நினைவிற்கு வந்தது. மைனா அருகில் போகின்றன வரை அது பதற்றம் கொள்ளவில்லை. அதன் அருகில் சென்று குனிந்த போது பறந்து அருகாமை மரக் கிளையில் உட்கார்ந்திருந்தது.
ஒணாண்களையோ மைனாக்களையோ வேடிக்கை பார்க்கும் சிறார்கள் ஒருவருமில்லை. இன்னொரு வீதியில் செங்கொண்டை சேவல் ஒன்றை பார்த்தேன். அது வாலை சிலிப்பி ஆட்டியபடியே ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தது. சேவலின் நடை தனி அழகு கொண்டது. அந்த சேவல் கொஞ்சம் பித்தேறியதோ எனும்படி அடிக்கடி தலையை உதறிக் கொண்டேயிருந்தது. பகலில் அந்த கிராமத்தில் மின்சாரமில்லை. பாதி நாட்கள் பகலில் கரண்டு வராது என்றார்கள் கிராமவாசிகள்.
ஊரை விலக்கி செல்ல துவங்கும்போது ஒரு வயதானவர் பிளாஸ்டிக் குடம் ஒன்றுடன் நடந்து போய் கொண்டிருப்பதை கண்டேன். சட்டை அணியாத உடம்பு. அவர் தோளில் குடத்தை தூக்கி கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார். எங்கே போகிறார் என்று கேட்டேன். தான் கருப்பசாமி கோவில் பூசாரி என்றபடியே கூட வாங்க காட்டுறேன் என்றார். ஊரை விட்டு விலகி வெட்டவெளி ஒன்று ஒரு பீடமும் கருப்பசாமி சிலை ஒன்றும் இருந்தது.
அந்த வயதானவர் தன்னிடம் இருந்த துணியால் அதை துடைத்து தண்ணீரை ஊற்றி குளிக்க வைத்து அதற்கு திருநீறு பூசிவிட்டு தானே பறித்து வந்த பூவை வைத்து அவராக கண்ணை மூடி சாமி கும்பிட்டு கொண்டார். அந்த கருப்பசாமியை கும்பிடுகின்றவர்கள் ஆண்டிற்கு ஒரு தடவை தான் அங்கே வருவார்கள் என்றும் தினப்படி அதை குளிக்க வைத்து சுத்தம் பண்ண வேண்டியது தனது வேலை என்றும் அதற்காக மாதம் இருநூறு ரூபாய் தரப்படுவதாக சொன்னார்,
இந்த சாமி சைவம் சாப்பிடாது. கவிச்சிமட்டும் தான் அதுவும் வருசத்துக்கு ஒரு நாள் கிடாவெட்டி படையல் வைக்கணும். என் வேலை இதான் என்றார். அந்த சிலையை உற்று பார்த்தேன்.
கையில் அருவாளை பிடித்துள்ள வாகு. மிரட்டும் கண்கள்.வளைந்த மீசை. உறுதியான கால்கள், திண்ணென்ற தோள்கள். யாரோ தெரிந்த ஒரு மனிதரை பார்ப்பது போலவேயிருந்தது. இந்த சாமி ஒரு நாள் ரெண்டு நாள் நான் வராம போயிட்டா கோவிச்சிகிட்டு போயிரும். தினம் இதை பார்த்து பேசணும். பச்சை பிள்ளையாட்டம் தான் இருக்கு என்றார் பூசாரி.
கிராம தெய்வங்களுக்கும் பூசாரிகளுக்குமான உறவு விசித்திரமானது. அவர்கள் சாமியோடு சண்டை போடுகிறார்கள். திட்டுகிறார்கள். ஊட்டி விடுகிறார்கள். சாமியிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். சாமியை கொண்டாடுகிறார்கள்.
காட்டிற்குள் முள்வெட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் எங்களை கண்டதும் எதுனாச்சும் தருவீகளா என்று கேட்டார். எதுனாச்சின்னா என்னம்மா என்றதும் சேலை துணிமணி.. அரிசி. அப்படி ஏதாவது தர்றதா இருந்தா என்னையை விட்றாதீக. எங்க வீட்ல நாலு பொம்பளை பிள்ளைக இருக்கு.. ஒட்டு கூட உங்களுக்கு தான் போட்டு இருக்கோம் என்றார். ஆளும்கட்சியை நினைத்து கொண்டு பேசுகிறார் என்பது புரிந்தது.
இங்கே பாம்பு கிடக்கா என்று கேட்டேன். அவள் முள்வேலிக்குள்ளிருந்து ஒரு பாம்புசட்டையை வெளியே எடுத்து போட்டார். எத்தனை மிருது. வசீகரம். கண்ணில் காணாத பாம்பு கையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
கிழக்கே செல்ல செல்ல வெயில் உக்கிரமாக இருந்தது. இவ்வளவு உலர்ந்து போன மேகங்களை எங்குமே கண்டதேயில்லை. மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் மெல்ல காய்ந்து சருகாகி பறந்து போவதை போலவே இந்த கிராமங்கள் சருகாகி கொண்டு வருகின்றன. ஒரு நாள் இவை பறந்து போய்விடவும் கூடும்.
பெரும்பான்மை கிராமத்து மனிதர்களின் மனப்பாங்கு மாறிப்போயிருக்கிறது. எப்படியாவது பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்பதே முதல்நோக்கம். வட்டிக்கு விடுவதை நல்ல தொழில் என்று பலரும் சொல்கிறார்கள். போலீஸ் அல்லது மிலிட்டரி வேலைக்குபோய்விட வேண்டும் என்பதே இளைஞர்களின கனவாக இருக்கிறது. இலவசமாக ஏதாவது யாராவது தருவார்களா என்ற எதிர்பார்ப்பு நீக்கமற எங்கும் நிரம்பியிருக்கிறது.
கிராமிய கதைகள் பாடல்கள் விளையாட்டு இதெல்லாம் வெறும் கடந்த கால ஏக்கங்கள் மட்டுமே. இன்று கிராமங்களிலும் கிரிக்கெட் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் சினிமா பற்றி தான் பேச்சாக இருக்கிறது. சாதிய பகைமை நோயென வளர்ந்து பரவியிருக்கிறது
நாட்டுபாடலை விடவும் தொலைக்காட்சி பாடல்கள் அதிகம் பேருக்கு தெரிகின்றன. இயற்கையான உணவையும் கைவிட்டு விட்டார்கள். மினரல் வாட்டர் பாட்டில் கிடைக்காத கிராமங்களே இல்லை. செல்போனும், டிஷ் ஆன்டனாக்களும் பரவலாக பயன்படுத்தபடுகின்றன. அரசியல் ஈடுபாடு குறைந்து போய் ஆளும்கட்சி மீதான ஈடுபாடாக மாறியிருக்கிறது.
பிரதான சாலையோரம் உள்ள சிறு நகரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஒயின்ஷாப் எல்லா ஊர்களிலும் நிரம்பிவழிகிறது. மதுரை திரும்பும் வழியில் சாலையோரம் அமெரிக்கன் ரிலாக்ஸ் ஷாப் என்று சாலையோர உணவகம் தென்படுகிறது. ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் நிற்கின்றன. கோக் சிப்ஸ் துவங்கி லேட்டஸ்ட் டிவிடி வரை அத்தனையும் கிடைக்கிறது. அதன் அருகில் ஒரு ஆள் பதநீர் நொங்கு விற்றுக் கொண்டிருக்கிறான். அவனை யாரும் சீண்டுவதேயில்லை.
நாணல்பூத்து போன தண்ணீரில்லாத வைகை ஆற்றை பார்த்தபடியே திரும்பி வந்தேன். தமிழகம் முழுவதுமே கிராமங்கள் தத்தளித்துகொண்டிருக்கின்றன. என்னவாகும் என்று தெரியவில்லை. மாநகரம் அதிவேகமாமும் நெருக்கடியான ஒரு தளத்திலும், கிராமம் கைவிடப்பட்ட தனிமை, நிராகரிப்பு அக்கறையின்மை என்றும் ஒரே நேரத்தில் இரண்டு வேறு காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த வேறுபாட்டையாவது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழக கிராமங்களை பற்றியுள்ள அபரிமிதமான சாதிய வளர்ச்சியும் சகமனிதன் மீதான வெறுப்பும், எவரையும் எதையும் ஏமாற்றலாம் என்ற மனப்போக்கையும் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவா கிராமம் என வேதனையாக இருக்கிறது.
**