கிர்ஸ்டன் டான் என்ற பெண் இயக்குநர் இயக்கிய Pop Aye என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2017 வெளியான திரைப்படம்.
தானா என்ற கட்டிடக்கலைஞர் ஒரு யானையை அழைத்துக் கொண்டு சாலையில் செல்லும் காட்சியுடன் படம் துவங்குகிறது. யானையின் முதுகில் கிழிந்த பை போன்ற ஒன்று தொங்குகிறது. காயம்பட்ட காலுடன் யானை மெதுவாக நடக்கிறது. பாங்காக்கின் பிரதான சாலையில் தானா யானையோடு நடந்து வருகிறார்.
பெருநகரத்தில் வாழும் ஒரு மனிதன் ஒரு காரை, பைக்கை, ஏன் ஒரு கப்பல் அல்லது விமானத்தைக் கூட விலைக்கு வாங்கலாம். அது கௌரவமாகவே கருதப்படும். ஆனால் ஒரு யானையை விலைக்கு வாங்கினால் அவன் கேலிப் பொருளாகவே பார்க்கப்படுவான்.
புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரான தானா தற்செயலாக ஒரு யானையை விலைக்கு வாங்குகிறார். அது அவர் சிறுவயதில் நேசித்த Pop Aye என்ற யானை.
சொந்த வாழ்க்கையில் சலிப்பும் தொழிலில் பின்னடைவும் கொண்ட தானாவிற்கு அந்த யானை தனது மாற்று வடிவம் போலவே தோன்றுகிறது. அலங்கார விளக்குகள் சுற்றிய உடலோடு அந்த யானை சாலையில் நின்று யாசிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே யானையை விலைக்கு வாங்கிவிடுகிறார்.
ஆனால் யானையை என்ன செய்வது.
தானாவைப் போலவே அவரது யானையையும் யாருக்கும் பிடிக்கவில்லை. இரவில் யானை வீட்டிற்குள் வருவதைக் கண்டு மனைவி பயப்படுகிறாள். தனது சொந்த ஊருக்கு யானையை அழைத்துக் கொண்டு போய் மாமாவிடம் ஒப்படைக்கத் தானா பயணம் செய்யத் துவங்குகிறார்
அவர்களின் பயணமே படத்தின் மையம்.
பாங்காக்கிலுள்ள Gardenia Square என்ற ஷாப்பிங் மால் இடிக்கப்படும் நிலையில் உள்ளது. அதை வடிவமைத்தவர் தானா. அவரிடம் காலமாற்றத்தின் விளைவுகள் பற்றித் தொலைக்காட்சி நேர்காணலில் கேட்கிறார்கள். தனது கனவுகள் தன் முன்னே கலைந்து போவதை தானா உணருகிறார். அலுவலகம் தன்னைப் புறக்கணிப்பதை அறிந்து அதை விட்டு விலகிவிட முனைகிறார். அவரது குடும்ப உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் தான் இப்பயணம் துவங்குகிறது.
பயண வழியில் அழுக்கடைந்து போன Dee என்ற ஹிப்பியைச் சந்திக்கிறார் தானா. அவன் தனது ஆருடத்தின் படி விரைவில் இறந்து சொர்க்கத்திற்குப் போய்விடுவேன் என்கிறான். அவனையும் தனது பயணத்தில் உடன் அழைத்துக் கொள்கிறார் தானா. அவர்கள் ஒரு பல்பொருள் அங்காடிக்குப் போகிறார்கள். அக் காட்சியில் அவர்களுக்குள் ஏற்படும் உறவு மிக அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
படம் முழுவதும் கேமிரா நிலவெளியின் அழகை முதன்மைப்படுத்தியே நகர்கிறது. நகரை விட்டு அவர்கள் நீங்கியதும் பரபரப்பு குறைவதுடன் நிசப்தமான சாலைகளை காண முடிகிறது.
“I feel a bit like a tree,” என ஒரு காட்சியில் ஹிப்பிச் சொல்கிறான். அவனே . “But even trees have to die.” என்றும் சொல்கிறான். இவை சத்தியமான வார்த்தைகள்.
ஒரு காட்சியில் யானை பல்பொருள் அங்காடியின் டிராலியை இழுத்தபடி சாலையில் செல்கிறது. இன்னொரு காட்சியில் யானை பியர் குடிக்கிறது. சிறுவர்கள் யானையைக் கண்டு வியப்பதற்குப் பதிலாக அதைத் துன்புறுத்த முயற்சிக்கிறார்கள். வேறு காட்சியில் யானை பிளாஸ்டிக் குழாயில் வரும் தண்ணீரை அப்படியே உறிஞ்சிக் குடிக்கிறது. சாலையில் உருண்டு போன தர்பூசணிப்பழங்களைத் தானாவும் ருசிக்கிறார். யானையும் ருசிக்கிறது. இன்னொரு காட்சியில் நீத்தோர் சடங்கு செய்யப் பௌத்த துறவி விசா அட்டை இருந்தால் கூடப் போதும் என்று சொல்கிறார். இப்படி நவீன வாழ்க்கையின் அபத்தங்களை இத்தனை அழகாகத் திரையில் யாரும் விமர்சனம் செய்ததில்லை.
யானையைச் சாலையில் அழைத்துச் செல்ல முறையாக அனுமதி பெறவில்லை என்று போலீஸார் மடக்கிக் கைது செய்கிறார்கள். யானையுடன் தானா காப்பகம் ஒன்றை நோக்கி நடக்கிறான். அவன் பின்னால் போலீஸ் வண்டி வருகிறது. ஒரு இடத்தில் நடக்க முடியாமல் தானா மயங்கி விழுகிறான். யானை தண்ணீர் தெளித்து அவனைக் காப்பாற்றுகிறது.
அவர்கள் ஒரு மதுவிடுதிக்குப் போகிறார்கள். அங்கே ஒரு திருநங்கையைச் சந்திக்கிறான் தானா. அவளுடன் அன்பாகப் பழகுகிறான். அவள் யானையை மீட்க உதவி செய்கிறாள். இருவரும் சேர்ந்து பாடுவது மிகவும் உணர்வுப்பூர்வாக நடந்தேறுகிறது.
தாய்லாந்தின் கிராமப்புற வழியாக அவர்கள் நடக்கிறார்கள். வழியெங்கும் புறக்கணிக்கப்பட்ட மனிதனும் புறக்கணிக்கப்பட்ட விலங்கும் ஒன்றுபோலவே நடத்தப்படுகிறார்கள்.
யானையை அழைத்துக் கொண்டு செல்லும் தானா பயணத்தின் வழியாகத் தன்னை அறியத் துவங்குகிறார். பழைய கட்டிடங்கள், பழைய மனிதர்கள். பழைய நினைவுகள் யாவும் விலக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதை உணருகிறார்.
தனது பூர்வீக வீடு இப்போது உருமாறியிருப்பதையும் மாமா அவரிடம் சொல்லும் உண்மைகளைக் கேட்டு அறியும் போது ஏற்படும் அதிர்ச்சியை தானா வெளிப்படுத்தும் விதம் அற்புதம். குறிப்பாக மாமா பையனுடன் அவர் லிச்சிப்பழங்களை சாப்பிட்டு விதையை காற்றில் துப்பும் விதம் இருக்கிறதே. அக்காட்சி அவரது மன இயல்பை அழகாக வெளிப்படுத்துகிறது.
இயக்குனர் கிர்ஸ்டன் டான் சிங்கப்பூரைச் சேர்ந்தவர், இப்போது நியூயார்க்கில் வசிக்கிறார். இப்படம் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
சின்னஞ்சிறிய கதை ஆனால் அதைப் படமாக்கிய விதமும் நடிப்பும் படத்தொகுப்பும் மிகச்சிறந்த திரைஅனுபவமாக உருமாற்றுகிறது.
