ரஷ்யக் குறிப்புகள்.

1830 ஆம் ஆண்டில் காலரா பரவிய காரணத்தால் புஷ்கின் சில மாதங்கள் அவரது குடும்ப எஸ்டேட் போல்டினோவிற்கு இடம்பெயர்ந்தார். தனிமையிலிருந்த அந்த நாட்களைப் புஷ்கின் மிகப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார். அந்த நாட்களை ‘போல்டினோ இலையுதிர் காலம்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அங்கிருந்த போது தான் யூஜின் ஒன்ஜினின் இறுதி அத்தியாயத்தைப் புஷ்கின் எழுதினார். இலையுதிர்காலத்தின் அழகினை ரசித்தபடியே அவர் எழுதுவதும் வாசிப்பதும் நடனமாடுவதுமாக நாட்களைக் கழித்தார். யூஜின் ஒன்ஜின் எழுதுவதற்கு எட்டு ஆண்டுகளைச் செலவிட்டார் புஷ்கின் (1799-1837) எழுதியது. அவரது கவிதைகள் அன்றைய ஜார் மன்னனைப் புண்படுத்தியதாகக் கருதி அவரைச் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து வெளியேறச் செய்திருந்தார்கள். அந்த நாட்களில் அவர் தெற்கு ரஷ்யா, காகசஸ், கிரிமியா, மோல்டேவியா மற்றும் ஒடெஸா ஆகிய பகுதிகளில் வசித்தார்.

••

தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் அவரது சகோதரர் மிகைல் இருவரும் இணைந்து எபோ என்ற புதிய இலக்கிய இதழைத் துவங்கினார்கள். அந்த இதழுக்காகத் துர்கெனேவ் ஒரு சிறுகதையை அனுப்பி வைத்திருந்தார். அந்த நாட்களில் தஸ்தாயெவ்ஸ்கிக்கு துர்கனேவைப் பிடிக்காது. அவர்களுக்குள் நட்பு உருவாகவில்லை. துர்கனேவ் அப்போது பேடன் பேடனிலிருந்தார். அங்கிருந்து அவர் அனுப்பியை கதையைத் தஸ்தாயெவ்ஸ்கி படிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். அது துர்கனேவை மிகவும் அவமானப்படுத்தியது. தங்களின் முதல் இதழுக்குத் துர்கனேவ் கதை இருப்பது இதழுக்குப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தரும் எனச் சொன்ன. மிகைல் உடனடியாக அவருக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதச் சொன்னார். தஸ்தாயெவ்ஸ்கியும் உடனே ஒரு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதை ஏற்றுக் கொண்டு அந்த இதழுக்குத் துர்கனேவ் தனது சிறுகதையை அனுப்பி வைத்தார். Phantoms என்ற அந்தக் கதை துர்கனேவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகும்

•••

டால்ஸ்டாய் எழுதிய Kreutzer Sonata குறுநாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் கதையைப் போன்றது. இந்தக் கதைக்கருவை ஒரு நண்பரிடமிருந்து டால்ஸ்டாய் பெற்றார், விசுவாசமற்ற மனைவியைக் கொலை செய்த கணவனைப் பற்றிய உண்மை சம்பவம் ஒன்றை அந்த நண்பர் விவரித்தார். அதை மையமாகக் கொண்டே டால்ஸ்டாய் இந்தக் குறுநாவலை எழுதத் திட்டமிட்டார். 1887 ஆம் ஆண்டில் இந்தக் குறுநாவலை எழுதத் தொடங்கினார், தொடர்ந்து எழுத முடியவில்லை. அப்படியே கைவிட்டார். பின்பு 1889 இல் அதை முடித்தார். ஒன்பது முறை திருத்தி எழுதப்பட்ட அந்த குறுநாவலைப் பிரதியெடுத்து உதவி செய்தவர் டால்ஸ்டாயின் மகள் மாஷா. இந்தக் குறுநாவலை வெளியிடக்கூடாது என அவரது மனைவி சோபியா சண்டையிட்டார். அவர்களின் திருமண வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இந்தக் குறுநாவல் இருக்கிறது என்பதே அவளது குற்றச்சாட்டு. ஆனால் இந்தக் குறுநாவல் வெளியிடப்பட்டது. ரஷ்யாவின் தணிக்கை துறை இது ஒரு ஆபாசமான கதை என்று கூறி தடை செய்ய முற்பட்டது. அதே நேரம் இந்தக் கதையை இளைஞர்கள் ஒன்று கூடி வாசித்தார்கள். கொண்டாடினார்கள்

இந்தக் குறுநாவலுக்கு எதிராக டால்ஸ்டாயின் மனைவி சோபியா தான் ஒரு கதையை எழுதினார். அதே கதாபாத்திரங்கள் தான். ஆனால் துரோகம் இழைத்ததாகச் சொல்லப்பட்ட மனைவியின் கோணத்திலிருந்து கதையை அவர் விவரித்தார்.குடும்பத்தினரின் எதிர்ப்புக் காரணமாக அவர் இந்தக் குறுநாவல் வெளியாகவில்லை. 1994ம் ஆண்டு டால்ஸ்டாய் ஆவணக்காப்பகத்திலிருந்த இந்தக் குறுநாவல் அச்சில் வெளியானது. ஆனால் எவ்விதமான கவனமும் பெறவில்லை. பின்பு 2010ல் சோபியா எழுதிய கதைகளுடன் இந்தக் குறுநாவலும் சேர்க்கப்பட்டுத் தனி நூலாகவே வெளியானது. தற்போது இரண்டு குறுநாவல்களும் கொண்ட தனி ஆய்வு நூல் வெளியாகியுள்ளது

••

.

0Shares
0