
ஹெமிங்வேயை நினைவு வைத்துக் கொண்டிருக்கும் பலரும் ராபர்ட் ருவாக்கை (Robert Ruark) நினைவு வைத்திருப்பதில்லை. அமெரிக்க இலக்கியத்தில் ஹெமிங்வேக்கு நிகரான எழுத்தாளர் ருவாக். ஹெமிங்வேயின் வாழ்க்கையும் ருவாக்கின் வாழ்க்கையும் ஒன்று போலவே இருக்கிறது. இருவருமே பத்திரிக்கையாளர்களாகத் துவங்கி எழுத்தாளர் ஆனவர்கள். இருவருக்குமே சாகசப் பயணங்களில் வேட்டையாடுதலில் காளைச் சண்டையில் அதிக ஈடுபாடு இருக்கிறது.
ஹெமிங்வேயோடு ருவாக் சேர்ந்தே பயணம் செய்திருக்கிறார். ஒன்றாகவே வேட்டையாடியிருக்கிறார்கள். ஆப்பிரிக்க பயணம் போயிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்க இலக்கியத்தின் பிதாமகனை போல ஹெமிங்வே கொண்டாடப்படுகிறார். ஆனால் ருவாக்கை வாசிப்பதற்கு இன்று மிக குறைவானவர்களே இருக்கிறார்கள்.
ருவாக் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளர். கட்டுரைகள், நாவல்கள் என நிறைய எழுதியிருக்கிறார். ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி Something of Value, Uhuru என இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். ஹெமிங்வேயின் எழுத்துகளை போலவே இவரது எழுத்திலும் சாகசத்தை தேடி செல்வதும், யுத்தகால நினைவுகளும் மேலோங்கியிருக்கின்றன. ஹெமிங்வேயை விட பகடியாக எழுதக்கூடியவர். இவரது அரசியல் கட்டுரைகள் அன்றைய அரசியல்தலைவர்களின் அதிக பட்ச எரிச்சலையும் கோபத்தையும் சம்பாதித்தன.
ராபர்ட் ருவாக்கின் The Old Man and the Boy மிகச்சிறந்த புத்தகம். தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவையும் பால்ய கால நினைவுகளையும் பற்றியது. பால்ய வயதை பற்றி இதுவரை எழுதப்பட்ட இலக்கிய பிரதிகளில் இதுவே முதன்மையானது என்பேன். துல்லியமான விவரணைகளும் பால்ய வயதின் மனவேகமும் தாத்தாவின் மீது பேரன் கொள்ளும் அன்பும், தாத்தாகள் உலகை விளையாட்டுதனமாக கற்று தருவதும் நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது வாசிக்க வாசிக்க நமது பால்ய காலமும் தாத்தாக்களும் நினைவிற்கு வருகிறார்கள்
முன்பெல்லாம் கிராமத்தில் வசித்த குழந்தைகள் விடுமுறை நாட்களில் வீடு தங்க மாட்டார்கள். மீன்பிடிக்க போவது, கிளி பிடிக்க போவது. ஒணானை வேட்டையாடுவது. புளியமரம் ஏறுவது. குருவி வேட்டை கொக்கு வேட்டை என அலைவது, கழுதை வாலில் பனையோலை கட்டிவிடுவது. தெருநாயை விரட்டி அடிப்பது, காக்கை கூட்டினை கலைத்துவிடுவது, மீன்பிடிக்க மண்புழு தேடி அலைவது. காட்டுகிணற்றில் நீந்துவது, திருடன் போலீஸ் விளையாடுவது. கிறுகிறுவானம் சுற்றல், பம்பரம், கிட்டி, கிளிதட்டு, கபடி, தீப்பெட்டி லேபிள் வைத்து விளையாடுவது. சிகரெட் அட்டை வைத்து ஆடுவது.
ரயில் தண்டவாளத்தில் நாணயம் வைத்து நசுக்கி கயிற்றில் சுற்றுவது, காற்றாடி விடுவது, வேப்பம்பழம் பொறுக்குவது. தட்டானை பிடித்து வாலில் கயிறு கட்டி பறக்க விடுவது. வண்ணத்துபூச்சியை துரத்தி போவது. பொன்வண்டு சேகரித்து தீப்பெட்டியில் அடைத்து வைப்பது, ரயில் விளையாடுவது. எறிபந்தாட்டாம், கோலிகுண்டு விளையாட்டு, செதுக்கு முத்து, பல்லாங்குழி, வாடகை சைக்கிள் எடுத்து சுற்றுவது, பல்லிமுட்டை திருடுவது. பாம்பு சட்டை தேடிப்போவது, உப்புகுதிரை ஏறுவது, கல்லா மண்ணா ஆட்டம். கொக்கோ, படம்பெயர் சொல்லிவிளையாடுவது. இருட்டில் பேய்கதை பேசுவது,
நட்சத்திரங்களை எண்ணுவது, பிசின் எடுப்பது, மயில் இறகு சேகரிப்பது, சவ்வுமிட்டாய் காய்ச்சுவது, காகிதத்தில் ஏரோபிளான் செய்வது, கத்திகப்பல் செய்வது, விசில் வாங்கி ஊதுவது, இப்படி எண்ணிக்கையற்ற விளையாட்டுகள். விளையாடி களைத்து பசிஅதிகமான நேரம் வீடு திரும்புவார்கள். சாப்பிட்ட கையோடு மறுபடியும் விளையாட ஒடிவிடுவார்கள். புழுதிபடிந்த உடலும் தலையுமாக இரவில் தன்னை மறந்து அயர்ந்து உறங்கும் சிறுவர்களை பெரியவர்கள் திட்டிக் கொண்டிருப்பது வீடு தோறும்கேட்கும்.
இன்று அந்த சிறுவர்களின் கொண்டாட்டங்கள் இல்லை. டிவி அல்லது கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தபடி வீடியோ கேம் ஆடுகிறார்கள். அல்லது கிரிக்கெட், இல்லாவிட்டால் சம்மர்கிளாஸ், சேர்ந்து விளையாட ஒரு சிறுவனை தேடி வீட்டின் வாசலில் நாலைந்து சிறுவர்கள் வந்து நின்று அழைக்கும் காட்சியை பார்த்தே பல வருசமாகவிட்டது.
தாத்தாக்களும் இன்று டிவி பார்க்கிறார்கள். பேரப்பிள்ளைகளும் டிவி பார்க்கிறார்கள். தாத்தாக்கள் பேரப்பிள்ளைகளும் பேசிக் கொள்வதே அரிதாகிவிட்டது. கிராமத்து தாத்தாக்களை படிக்காத முட்டாள்களாக நகரத்து பேரப்பிள்ளைகள் கேலி செய்கின்றன. செல்போனை எப்படி யூஸ் பண்றதுனு இந்த தாத்தாவுக்கு தெரியாதுடா என்று ஐந்து வயது பிள்ளை கைகாட்டி சிரிக்கிறது. தாத்தா தலைகவிழ்ந்து போகிறார். பின்னாளில் யோசித்து பார்க்க பால்ய வயதின் நினைவுகள் என்று இன்றுள்ள பிள்ளைகளுக்கு என்ன இருக்கும் என்றே தெரியவில்லை.
ராபர்ட் ருவாக் தனது ஆதர்சமான தாத்தாவை பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறார். தாத்தா என்ன கற்றுக் கொடுத்தார். எப்படி கற்றுக் கொடுத்தார் என்பதே இந்த புத்தகம்
ருவாக்கின் தாத்தா கேப்டன் எட்வர்ட் ஹால் அட்ஹின்ஸ் வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். குறிப்பாக நாயை பழக்கி வேட்டைக்கு போவதும் மீன்பிடிப்பதும் அவருக்கு விருப்பமான பொழுது போக்கு. வடக்கு கரோலினா பகுதியில் வசித்த அவர் தன் பேரன் கோடை விடுமுறையில் வீட்டில் அடைந்து கிடப்பதை விரும்புவதேயில்லை. தாத்தா பேரனிடம் சொல்கிறார் வீடு பெண்களுக்கானது. அவர்கள் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். நாம் கதையை விட அரிய சாகசங்களை செய்ய கூடியவர்கள். வா. வெளியே போய் சாகசங்களை தேடி போவோம். நாய்கள் ஒரு போதும் வீட்டிற்குள் படுத்து உறங்கி சுகங்காண்பதேயில்லை. அது உறங்கும் போது கூட பாதி விழிப்பு கொண்டிருக்கிறது. அப்படி தான் நாம் இருக்க வேண்டும் என்று சிறுவனை அருகாமையில் உள்ள ஏரி குளம் காடு மலை என்று சுற்றி அழைத்து கொண்டு போகிறார்
சிறுவன் இயற்கையை தாத்தாவின் வழியே தான் புரிந்து கொள்கிறான். தாத்தா மீன்பிடித்தலின் வழியே தண்ணீரை புரிந்து கொள்வது எப்படி என்று கற்று கொடுக்கிறார். குஞ்சு மீன்கள் தூண்டிலில் சிக்கினால் தண்ணீருக்குள் மீண்டும் விட்டுவிடுகிறார். மீன்களோடு பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கற்று தருகிறார். அதுபோல மீன்பிடிப்பவன் மிக பொறுமையாக இருக்க வேண்டும். உண்மையில் மீன்பிடித்தல் ஒருவகை தியானம் என்று அவனை உணர வைக்கிறார். மீனுக்கு பதிலாக தவளை தூண்டிலில் மாட்டும் போது இப்படிதான் பலரும் தங்களுக்கு தேவையில்லாத இடத்தில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள் என்று கேலி செய்கிறார்.
ருவாக் தாத்தாவின் வழியே மீன்பிடித்தலை மட்டுமில்லை. அதன்பின்பு உள்ள வாழ்க்கை பற்றிய அறிதலை, தத்துவத்தையும் அறிந்து கொள்கிறான். இப்படி அவனை முயல்வேட்டை, புறா வேட்டை, அணில்பிடிப்பது, நன்னீர் மீன் பிடித்தல் உப்பு நீர் மீன்பிடித்தல், காட்டெருமை வேட்டை, காட்டுகோழி வேட்டை என்று விதவிதமாக அறிமுகப்படுத்துகிறார். வேட்டைகளின் போதே வீட்டு பெண்கள் இந்த இறைச்சியை எப்படி சமைப்பார்கள் என்ற விதத்தையும் அதன் ருசியையும் விளக்கி சொல்கிறார்
நாய்களை பழக்குவதை பற்றிய அத்யாயம் மிக சிறப்பானது. வேட்டைக்கு நாயை பழக்கும் போது அது அடிபட்ட மிருகத்தை தன் வாயில் கவ்வி தூக்கிவர வேண்டும்.அதேநேரம் அந்தஇறைச்சியை சாப்பிட ஆசை வந்துவிட கூடாது. ஒரு முனிவர் போல நாய்கள் நடந்து கொள்கின்றன என்று பாராட்டுகிறார். அது போல நாய் எப்போதுமே நமது மன இயல்பை தான் பிரதிபலிக்கின்றன. அதன் எஜமானன் முன்கோபியாக இருந்தால் நாயும் அப்படிதான் இருக்கும். ஆகவே நமது நிதானம் பொறுமை காத்திருப்பு தான் நாய்யை பழக்க முக்கியமானது என்கிறார்
புத்தகம் முழுவதும் சிறுவனாக உள்ள ருவாக் தான் எப்படியாவது பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என்று பெரிய ஆட்களை போல பேசுகிறான். உடை அணிந்து பார்க்கிறான். துப்பாக்கியை பயன்படுத்தி பார்க்கிறான். அவனை பார்த்து சிரித்தபடியே தாத்தா சொல்கிறார்.
சிறுவர்கள் எப்போதுமே உடனடியாக பெரியவர்களாக ஆசைப்படுகிறார்கள். பால்யவயதை கடந்து பெரியவர்கள் ஆன பிறகே இதன் சிறப்பு புரியும். நிறைய பெரியவர்கள் தங்கள் வயதை மறந்து சிறுபிள்ளைகள் போல நடந்து கொள்வதும் இருக்கிறது. உலகம் பெரியவர்களால் நிரம்பியிருக்கிறது. ஆனால் அது சிறுவர்களால் மட்டுமே ருசிக்கபடுகிறது என்கிறார்.
புகழ்பெற்ற ரஷ்ய இயக்குனர் டவ்ஷன்கோ தனது நூலில் தனது தாத்தா பற்றி ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். தான் சிறுவயதில் தனது தாத்தாவை தான் கடவுள் என்று நினைத்து கொண்டிருந்ததாகவும் அவரது தோற்றமும் செயல்பாடுகளும் கடவுள் போலவே இருந்தது . ஒரு நாள் அவரிடம் நீங்கள் கடவுளா என்று கேட்டதற்கு தாத்தா ஆமாம் யாரிடமும் இதை பற்றி சொல்லிவிடாதே என்று சத்தியம் வாங்கி கொண்டதாகவும் அன்று முதல் தான் கடவுளோடு ஒன்றாக சுற்றுவதை நினைத்து அதிக சந்தோஷம் கொண்டதாக குறிப்பிடுகிறார். ருவாக்கின் தாத்தாவும் இது போலதான் சித்தரிக்கபடுகிறார்
ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் (The Old Man and the Sea)நாவலும் ஒரு வயதானவருக்கும் சிறுவனுக்குமான உறவையே பேசுகிறது. அதில் கடலில் மீன்பிடிக்க செல்லும் சாண்டியாகோ என்ற கிழவன் உறுதியானவனாக, அதீத நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறான். இந்த நாவலுக்கு ஹெமிங்வேக்கு நோபல் பரிசு கிடைத்தது. இதன் ஐந்து வருசங்களுக்கு பிறகு ஹெமிங்வே போலவே ராபர்ட் ருவாக் The Old Man and the Boy எழுதியிருக்கிறார். இந்த நூலின் அடுத்த பகுதியும் வெளிவந்து மிக பரவலான வாசக கவனம் பெற்றது.
ருவாக்கின் புத்தகத்தை வாசிக்கும் போது நம் பால்யகாலத்தின் மேகங்கள் கூடவே மிதக்க துவங்குகின்றன. வெறும் நிழல்தோற்றங்களை மட்டுமே துணையாக கொள்ளும் இன்றைய சிறார்களின் உலகோடு இணைத்து பார்க்கையில் இந்தப் புத்தகம் அவசியம் வாசிக்கபட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
**