வகுப்பறையில் ஒரு யாக்

Lunana: A Yak in the Classroom என்ற பூட்டானிய திரைப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியிருக்கிறார். பூட்டானில் மிகக் குறைவான திரைப்படங்களே உருவாக்கப்படுகின்றன. The Cup என்ற Khyentse Norbu இயக்கி 1999ல் வெளியான பூட்டானிய படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அவரது உதவியாளரான பாவோ இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படமும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லுனானா பூட்டானின் தொலைதூர மலைக்கிராமம். 56 பேர் மட்டுமே அங்கே வசிக்கிறார்கள். அந்த இடத்திற்குச் சென்று சேர இரவு பகலாக மலையின் மீது நடக்க வேண்டும். காசா என்ற இடம் வரை சாலை வசதியிருக்கிறது. அங்கேயிருந்து மலையேற்றம் மேற்கொண்டு இடையில் ஒரு இரவு தங்கி மீண்டும் நடந்தால் லுனானாவை அடையலாம்.

மலைச்சிகரங்களுக்குள் அடங்கிய பேரழகான இடம். அங்கு ஒரு ஆரம்பப் பள்ளி நடைபெறுகிறது. அந்தப் பள்ளிக்கு ஆசிரியராகச் செல்லும் உக்யென் என்ற இளைஞனின் பார்வையில் படம் விரிகிறது.

பன்கர்வாடி என்ற மராத்தி நாவலை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன். அதுவும் இதுபோல ஆடு மேய்கிறவர்கள் வாழும் மலைக்கிராமத்திற்குச் செல்லும் பள்ளி ஆசிரியரின் கதையே. அந்த நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். தேசிய விருது பெற்றபடமது. இந்தப் படம் துவங்கியதுமே பன்கர்வாடி நினைவில் வந்தது. இது போலவே Pretty Big Feet, Not One Less, The First Teacher போன்ற படங்களும் நினைவில் வந்து போயின.

உலகின் மிகவும் தொலைதூரத்தில் இயங்கும் பள்ளி ஒன்றையும், அங்குப் பயிலும் மாணவர்கள் கல்வியின் மீது கொண்டுள்ள விருப்பத்தையும். ஆசிரியர் பணியின் முக்கியத்துவத்தையும் இப்படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது

பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் உக்யென் ஒரு பாடகன். ஆசிரியராக வேலை செய்து வருகிறான். அந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்பா அம்மா இல்லாத அவனைப் பாட்டி தான் வளர்க்கிறாள். பாட்டிக்கு அவன் அரசாங்க ஆசிரியராக வேலை செய்வதே பிடித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பாடகராக வேண்டும் என்று கனவு காணுகிறான் உக்யென். பராம்பரியத்திலிருந்து விடுபட்டு நவீன வாழ்க்கையை வாழ விரும்பும் இளைஞனாக உக்கெய் எப்போதும் கையில் ஐபாட், ஹெட்போன் சகிதமாக இருக்கிறான். மதுவிடுதிகளில் பாடுகிறான்.

கல்வி அமைச்சகத்தில் காத்திருக்கும் போது கூட அவன் ஹெட்போனை கழட்டுவதில்லை. அவனுக்குப் பராம்பரியம், சடங்குகள். வழிபாடுகள் எதிலும் நம்பிக்கையில்லை. பூட்டானிலிருந்து வெளியேறி வெளிநாடு போனால் மட்டுமே எதிர்காலம் என்று நம்புகிறான்.

இந்நிலையில் கல்வி அமைச்சகம் அவனைப் பூட்டானின் மற்றும் உலகின் மிகத் தொலைதூர கிராமங்களில் ஒன்றான லுனானாவிலுள்ள ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியராக நியமனம் செய்கிறது.

அங்கே போக இயலாது என்று உக்யென் மறுக்கிறான். ஆனால் அவனது ஒப்பந்தப்படி போயாக வேண்டும் என்ற கட்டாயத்தால் விருப்பமின்றித் தனது பயணத்தைத் துவக்குகிறான்

அந்தப் பயணமும் வேலையும் அவனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகிறது. உக்யெனுடன் இணைந்து நாமும் மலைக்கிராமத்தினை நோக்கிச் செல்லும் சிற்றுந்து ஒன்றில் பயணிக்க ஆரம்பிக்கிறோம். பசுமை படர்ந்த மலைப்பாதையில் அந்தப் பேருந்து செல்கிறது. ஈரக்காற்று நம் முகத்தில் அடிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

உக்யென் இந்தப் பயணத்தில் எவருடனும் பேசுவதில்லை. பரவசமூட்டும் இயற்கைக் காட்சிகள் எதையும் காணுவதில்லை. வேறு ஒலி எதுவும் தன் காதில் கேட்டுவிடக் கூடாது என்பவன் போல ஹெட்போனை மாட்டியிருக்கிறான். நீண்ட பயணத்தின் பின்பு காசாவில் இறங்குகிறான். அங்கே அவனை வரவேற்கக் காத்திருக்கும் மிச்சென் இரவு அங்கேயே தங்கி காலையில் புறப்படுவோம் என்கிறான்.

பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியர் வரப்போகிறார் என்பதால் ஊரே மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது.

மலைப்பாதையில் நடக்க நடக்கத் தூரம் குறையவேயில்லை. தன்ன ஏமாற்றி நீண்ட தூரம் நடக்க வைக்கிறார்கள் என்று உக்யென் கோபம் கொள்கிறான். பகல் முழுவதும் நடந்து அவர்கள் மலையின் உச்சியிலிருந்த ஒரு வீட்டில் இரவு தங்குகிறார்கள். அந்த வீடு இவர்களைப் போன்று வரும் மலையேற்ற பயணிகளை உபசரிப்பதற்காகவே இயங்குகிறது. அந்த வீட்டிலிருப்பவன் வெறுங்காலுடன் நடமாடுகிறான். குளிரவில்லையா என உக்யென். கேட்கும் போது பழகிவிட்டது. மேலும் என்னிடம் காலணிகள் வாங்குமளவு வசதியில்லை என்கிறான். முதன்முறையாக அப்போது தான் புற உலகின் யதார்த்தம் உக்யெனுக்குப் புரிகிறது.

விளம்பரங்களில் காட்டப்படும் காலணியை அணிந்து கொண்டு சகதியுள்ள பாதையில் மலையேற முடியாது என்பதை உக்யென் உணர்ந்து கொள்கிறான்.

வளைந்து உயர்ந்து செல்லும் பாதையில் அவர்கள் முடிவில்லாமல் நடக்கிறார்கள். மலையுச்சியிலிருந்த கடைசி நுழைவாயிலில் உடன் வந்தவர்கள் சடங்குகள் செய்து வழிபடுகிறார்கள். உக்யென் தனக்கு அதில் நம்பிக்கையில்லை என்கிறான்

நடந்து களைத்து முடிவில் லுனானாவை அடைகிறான். லுனானாவின் மக்கள் தொகை 56 பேர், உயரம் 4,800 மீட்டர்கள் உயரத்திலுள்ளது. மிக அழகான ஊர்.

அங்கே ஊர்மக்கள் ஒன்று கூடி பராம்பரியமுறையில் வரவேற்பு தருகிறார்கள். அது லாமாக்களுக்கு அளிக்கப்படும் மரியாதைக்குச் சமமானது. பள்ளியைக் காட்ட அழைத்துப் போகிறார்கள்

சின்னஞ்சிறிய ஆரம்பப் பள்ளி. மண் சுவர்கள், தூசி படிந்து போன மேஜைகள். சிறிய தங்குமிடம். பனிக்காலத்தில் பள்ளி மூடப்பட்டுவிடும். பாதைகளில் பனி உறைந்து போவதால் யாரும் மலையிலிருந்து கீழே செல்ல முடியாது.

தனக்கு ஆசிரியர் பணியில் விருப்பமில்லை. தன்னால் அங்கே வேலை செய்ய இயலாது. திரும்பிப் போய்விடுகிறேன் என்று வந்தவுடனே உக்யென் சொல்கிறான்.

சில நாட்கள் இங்கே தங்கியிருங்கள். பிடிக்காவிட்டால் திரும்பிப் போகலாம். இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்களே கிடையாது. ஆனால் மாணவர்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்கிறார் ஊர்த் தலைவர்

விருப்ப மேயில்லாமல் லுனானாவில் தங்குகிறான் . மிகக் கடுமையான குளிர். மின்சார வசதியில்லை. ஆகவே செல்போன் ஹெட்போன் எதையும் சார்ஜ் செய்ய இயலவில்லை. ஆழ்ந்து உறங்குகிறான். விடிகாலையில் பள்ளி மாணவி பெம் ஜாம் கதவைத் தட்டி எழுப்பி மணி ஒன்பதாகிவிட்டது. பள்ளி காலை எட்டரை மணிக்குத் துவங்க வேண்டும் என்கிறாள்.

அவசர அவசரமாகப் பள்ளிக்குப் போகிறான். முதல் நாள் வகுப்பில் மாணவர்களிடம் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்று கேட்கிறான். ஒரு பையன் தான் ஆசிரியராக விரும்புகிறேன். என்கிறான். காரணம் கேட்கையில் ஒரு ஆசிரியர் உங்கள் எதிர்காலத்தைத் தொடுகிறார், என்கிறான். மாணவனின் எதிர்காலத்தை ஆசிரியரே வடிவமைக்கிறார், அந்த வகையில் அவர் எதிர்காலத்தைத் தொடக்கூடியவர் என்பதை அழகாக விளக்குகிறார்கள். அந்தப் பதில் உக்யெனை விழிப்படையச் செய்கிறது. அந்தப் பதிலே அவன் மேற்கொள்ள வேண்டிய பணியைத் தீவிரமாக்குகிறது

கரும்பலகை, நோட்டுப் புத்தகங்கள் எதுவுமின்றி உக்யென் தனது கற்பிக்கும் திறனை மட்டுமே நம்பி, அனைத்து பாடங்களையும் நேரடியாக மண் சுவர்களில் கரித் துண்டுகளைப் பயன்படுத்தி எழுதி கற்றுத் தரத் துவங்குகிறான்

எழுதும் காகிதம் தீர்ந்துவிடும் போது குளிரிலிருந்து காப்பதற்காகத் தனது வீட்டின் ஜன்னல்களுக்கு மேல் ஒட்டியிருந்த கையால் செய்யப்பட்ட காகிதங்களை வெட்டி எழுதுவதற்குத் தருகிறான். அந்த மாணவர்களே அவனை நல்லாசிரியராக உருமாற்றுகிறார்கள்.

பெம் ஜாமின் தந்தை ஒரு குடிகாரன். அம்மா ஓடிப்போய்விட்டாள். பாட்டியோடு வசிக்கும் அவள் கல்வியின் வழியாக மட்டுமே தனக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை நம்புகிறாள். அதை உக்யென் நன்றாக உணர்ந்து கொள்கிறான். அவளைப் போன்ற மாணவிகள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான்.

அந்த மலைக்கிராமத்தில் ஒரு நாள் இனிமையான பாடல் ஒன்றைக் கேட்கிறான். அப்பாடலைப் பாடும் சால்டன் என்ற.இளம்பெண்ணைச் சந்திக்கிறான் அவள் இயற்கை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகப் பாடுகிறேன் என்கிறாள். அந்தப் பாடலின் இனிமையில் மயங்கி அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

பின்பு ஒரு நாள் அந்தப் பாடலை சால்டன் அவனுக்குக் கற்றுக் கொடுப்பதுடன் அந்தப் பாடல் எப்படி உருவானது என்ற கதையைச் சொல்கிறாள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியது. மிகுந்த கவித்துவ அழகுடன் படமாக்கியிருக்கிறார்கள்.

லுனானா மாணவர்களுக்காகத் திம்புவிலுள்ள தனது நண்பர்களிடம் உதவி கேட்டுக் கடிதம் எழுதுகிறான் உக்யென். அவர்கள் பாடப்புத்தகங்கள். சுவரொட்டிகள். கூடைப்பந்து மற்றும் அவனது கிட்டார் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். அந்தப் பொருட்களைக் கண்டு மாணவர்கள் அடையும் சந்தோஷம் வானவில் தோன்றியது போலிருக்கிறது.

உக்யென் கித்தார் வாசித்து மனப்பூர்வமாகப் பாடுகிறான். அவனது பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து நடனமாடுகிறார்கள். உண்மையான மகிழ்ச்சியது.

பனிமூட்டம் நிறைந்த காலைப் பொழுதுகள், சலசலத்து ஓடும் ஆறு பனி மூடிய மலைகள். அன்பாக உபசரிக்கும் மக்கள். நீலமேகங்களுடன் விரிந்துள்ள பள்ளத்தாக்கு. உயரமான இடத்திலிருந்து தன்னை மறந்து பாடும் பெண். என லுனானா நம்மை வசீகரிக்கிறது

வகுப்பறையில் ‘C for Car’ என்ற கரும்பலகையில் எழுதும் போது, மாணவர்கள் எவருக்கும் கார் என்பதன் அர்த்தம் தெரியவில்லை. ஒருவர் கூடக் காரை நேரில் கண்டதில்லை. மாணவர்களுக்குப் புரியும் படி உடனே அதை cow என மாற்றுகிறான், அது அவர்களுக்குத் தெரிந்த வார்த்தை – “நாம் பசுவிலிருந்து பால் பெறுகிறோம்,” என்று ஒரு பையன் சொல்கிறான். இப்படிக் கற்றலின் புதிய வழிகளையும் படம் அறிமுகம் செய்கிறது

தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் ஒரு இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த உலகம் என்பது நான் மட்டுமில்லை என்பதை எவ்வாறு உணருகிறான் என்பதைப் படம் விளக்குகிறது

பூட்டானிலுள்ள உக்யென் மட்டுமில்லை. எந்தப் பெரிய நகரில் வசிப்பவராக இருந்தாலும் நவீன வசதிகளும் அதன் இன்பங்களும் தான் வாழ்க்கை, தன்னைத் தவிர வேறு எவரையும் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றே நடந்து கொள்கிறார்கள். அது மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயம் என்கிறது திரைப்படம்.

தொலைதூர கிராமத்திலுள்ள அந்த மக்களின் பொருளாதாரத்தை உக்யெனால் மாற்ற முடியாது. ஆனால் கல்வி அளிப்பதன் மூலம் அவர்களைப் புதிய வாழ்க்கைக்குப் புதிய கனவுகளுக்குத் தயார்ப் படுத்த முடியும்.

ஒரு காட்சியில் தான் ஒருவேளை முற்பிறவியில் இந்த மலைப்பிரதேசத்தில் யாக் மேய்க்கிறவனாக இருந்திருக்கக் கூடும் என்கிறான் உக்யென். அதற்குக் கிராமத்தலைவர் ஆஷா “ இல்லை நீங்கள் ஒரு யாக்காகப் பிறந்திருக்கக் கூடும். யாக் உயிருடன் இருக்கும் போதும் இறந்தும் பிறருக்குப் பயன்படுகிறது. அதன் வாழ்க்கையே மற்றவர்களுக்குப் பயன் தருவது தான்“ என்கிறார். அது உண்மை என்பதை அவனும் உணருகிறான்.

இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் மலைகிராமவாசிகள். அவர்களுக்கு வெளியுலகம் தெரியாது. சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களைக் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாவோ

குழந்தைகள் முதன்முறையாக டூத் பிரஷால் பல்துலக்கும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் அன்று தான் அந்த மலைகிராம மாணவர்கள் டூத் பேஸ்ட் டூத் பிரஷை பார்த்தார்கள் என்று குறிப்பிடுகிறார் பாவோ

சால்டன் ஆசிரியருக்காக ஒரு யாக்கைக் கொடுக்கிறார். நோர்பு என்ற அந்த யாக் வகுப்பறையிலே இருக்கிறது. உக்யென் அதற்கும் சேர்ந்து பாடம் எடுக்கிறார். நோர்பு என்ற பெயர் The cup என்ற பூட்டானிய படம் எடுத்த இயக்குநரின் பெயராகும். அவரது உதவியாளராக இருந்தவர் இயக்குநர் பாவோ என்பதால் இந்தப் பெயரை யாக்கிற்கு வைத்திருக்கிறார்.. .

யாக்-மேய்ப்பவர்கள் அனைவரும் நன்றாகப் பாடுகிறார்கள் என்று மிச்சென் கூறுகிறார். மலைக் கிராமம் யாக்களால் நிரம்பியுள்ளது, ஒரு யாக் மற்றும் அதன் மேய்ப்பனுக்கு இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது என்று கூறும் சால்டன் அந்த உறவின் அடையாளமாd பாடலைப் பாடுகிறாள். அவள் பாடும் விதமும் அந்த நிலவெளியும் மயக்கமூட்டுகிறது.

பணம் சம்பாதிப்பது. புகழ் அடைவது என்பது தான் மகிழ்ச்சி என நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான மகிழ்ச்சி என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியது. சந்தோஷம் நம்மைத் தேடி வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. நமக்குப் பிடிக்காத வேலையாக இருந்தாலும், மனப்பூர்வமாக நம்மை அர்ப்பணித்துக் கொண்டால் அதில் மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும் என்பதையே இப்படம் விவரிக்கிறது.

உக்யெனின் மனமாற்றம் இயல்பாக நடைபெறுகிறது. அது போலவே அவன் முடிவில் தான் விரும்பிய கனவை அடைவதும். இரண்டிலும் மிகை நாடகம் கிடையாது.

மின்சாரமில்லாமல். செல்போன் இல்லாமல். நாளிதழ்கள். தொலைக்காட்சி, பேஸ்புக் என நவீனவசதிகள் எதுவும் இல்லாமல் மலையுச்சியில் வாழ்ந்து வருபவர்கள் உலகின் பார்வையில் பின்தங்கியவர்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர்கள் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழுகிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் மேம்பாடு அடையவில்லை. ஆனால் தேவையானதை மட்டுமே சம்பாதித்து மனநிறைவான வாழ்க்கையை வாழுகிறார்கள். தூய்மையான இதயம் அவர்களிடமிருக்கிறது என்கிறார் இயக்குநர் பாவோ.

மேகங்களுடன் நம்மையும் அழைத்துப் போகும் நேர்த்தியான ஒளிப்பதிவு, இனிமையான இசை, நெருக்கமான காட்டுக்கோணங்கள், சிறப்பான நடிப்பு எனப் படம் தேர்ந்த கலைப்படைப்பாக உருவாகியிருக்கிறது.

இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது பட்டியலில் இப்படமும் இடம்பெற்றிருக்கிறது

0Shares
0