என்.விநாயக முருகன், எனக்கு பிடித்தமான கவிஞர், அவரது வலைப்பதிவுகளை விரும்பி படித்துவருகிறேன்,
அவரது புதிய நாவல் ராஜிவ்காந்தி சாலை வெளியாக உள்ளது என அறிந்தேன், வாசிக்க விருப்பமாக காத்திருக்கிறேன்
எனக்கு விருப்பமான அவரது இரண்டு கவிதைகள்
•••
கண்ணீர் அஞ்சலி
என்.விநாயக முருகன்
நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்
கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன
கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
என்பறு அச்சாகி இருந்தது.
இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உடன் இருந்தனர்
மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.
நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்
இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை
ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது
***
புத்தனின் பல்
என்.விநாயக முருகன்
அந்த ஊரில்
புத்தனின் பல்
இருப்பதாக
சொன்னார்கள்.
எந்த ஊரில்
எந்த இடத்தில்
அந்த பல்
விழுந்ததென்று
தெரியவில்லை.
தினந்தோறும்
ஆயிரக்கணக்கான
பற்கள்
உதிர்ந்துக்கொண்டேதான்
இருக்கின்றன.
நீளமான பற்கள்
தட்டையான பற்கள்
முனைமழுங்கிய பற்கள்
வளைந்த பற்கள்
எத்து பற்கள்
பால் பற்கள்
இவற்றின் இடையே
சரியாக அடையாளம்
சொன்னார்கள்.
சற்று நீண்டக் கூரான
ரத்தம் வடியும் பற்களை.
**
எஸ் செந்தில்குமாரின் புதிய நாவல் காலகண்டம் ஜனவரி 1ம் தேதி வெளியாக உள்ளது, நான்கு தலைமுறைகளின் கதையை எழுதியுள்ளதாக சொன்னார், நுட்பமான சிறுகதைகளை எழுதக்கூடிய செந்தில்குமார் சிறந்த எழுத்தாளர், அவரது நாவலையும் வாசிக்க விருப்பம் கொண்டிருக்கிறேன்
•••
தேவதச்சனின் புதிய கவிதை தொகுப்பு எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது, உயிர்மை பதிப்பக வெளியீடாக புத்தக கண்காட்சியில் வெளியாக உள்ளது,
தொடர்ச்சியாக தேவதச்சனின் கவிதைகளை வாசித்து வருகிறேன், இது மிக முக்கியமான கவிதை தொகுப்பு, புத்தக கண்காட்சிக்கு வெளியாக உள்ள முக்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று
•••