வெற்றிகரமான முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது,

நிகழ்வில் 175 பேர் கலந்து கொண்டார்கள், இதில் எழுபது சதவீதம் பேர் இளைஞர்கள், தீவிர வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள், பெங்களுர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோவை என வேறுவேறு ஊர்களில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டார்கள்

மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த முகாமிற்கு இயக்குனர் சசி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், பேராசிரியர் ராமகுருநாதன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள்

எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, அகநாழிகை வாசுதேவன், லட்சுமி சரவணக்குமார், விநாயகமுருகன், கே.என்.சிவராமன், அதிஷா, யுவகிருஷ்ணா, சுபாஷிணி, கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் அய்யப்பமாதவன், அனிமேஷன் ஸ்டுடியோ நடத்தும் வருண், பாலுமகேந்திரா சினிமா பட்டறை மாணவர்கள், தியேட்டர் லேப்பின் ஜெயராவ், அவரது மாணவர்கள், ஆடிட்டர் சந்திரசேகர், குறும்பட இயக்குனர் அருண் பிரசாத், நெய்வேலி பாலு, மாரிமுத்து, மணிகண்டன், லோகேஷ், சங்கர், குரு, அன்பு, வேல்கண்ணன், கண்ணதாசன் தங்கராசு, சுதர்சன், வண்ணநிழலன், கார்க்கி மனோகரன், பாரதி தம்பி, மனோ எனப் பலரும் இந்த முகாமில் கலந்து கொண்டார்கள்.

நூறு சிறந்த கதைகள் நூலை இயக்குனர் சசி வெளியிட்டு உரையாற்றினார், இந்த நூலை பேராசிரியர் ராமகுருநாதன் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்,

ஒரு அமர்விற்கு ஐந்து கதைகளைத் தேர்வு செய்து பேசினேன், அதை ஒட்டி நிறைய விவாதங்கள், கேள்விகள் எழுந்தன, தண்டரையில் முகாம் நடைபெற்ற இடம் அமைதியான இயற்கை சூழல் கொண்டது, காலை பத்தரை மணிக்குத் துவங்கி மாலை ஆறரை மணி வரை முகாம் உற்சாகமாக நடைபெற்றது

நல்ல உணவும், தேநீரும், பயண ஏற்பாடும் சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டது, இந்த முகாமிற்காகக் கடந்த ஒரு மாதகாலமாக ஒடியோடி வேலை செய்த டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், நிகழ்விற்குத் துணை நின்ற டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர்கள், புகைப்படம், வீடியோ, உணவிடுதல் எனப் பல்வேறு பணிகளைப் பகிர்ந்து கொண்டு உழைத்த வேடியப்பனின் நண்பர்களுக்கு மனம் நிரம்பிய நன்றி

பேஸ்புக், இணையதளம் என்று தான் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற பொதுகுற்றசாட்டு உண்மையில்லை, தீவிரமாக வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்கள் நிறைய இருக்கிறோம், என இளைஞர்கள் பலர் நேர்பேச்சில் குறிப்பிட்டது சந்தோஷம் தருவதாக இருந்தது,

வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், எழுதுவதற்கான உத்வேகத்திற்குத் துணை செய்யவும், சமூக அக்கறைகள் குறித்து விவாதிக்கவும், பொதுவான பகிர்வு வெளி நம்மிடம் இல்லை, அதை உருவாக்க முனைவது தான் இது போன்ற இலக்கிய முகாம்களின் நோக்கம்,

இதனைச் சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

••

0Shares
0