ஜோஹானா ஸ்பைரி 1880ல் எழுதிய ஹெய்டி குழந்தைகள் இலக்கியத்தில் மிக முக்கியமான நாவல்.இந்த நாவல் 25 முறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டில் டிஸ்னி தயாரிப்பில் வெளியான பழைய படம் மிக நன்றாகயிருக்கும். நேற்று 2015 வெளியான Heidi திரைப்படத்தைப் பார்த்தேன். குடும்பத்துடன் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இப்படம் சரியான தேர்வு.
தாத்தாவிற்கும் பேத்திக்குமான உறவின் நெருக்கத்தை ஹெய்டி போலச் சொன்ன படம் எதுவுமில்லை. பெற்றோரை இழந்த ஹெய்டி டெடி என்னும் அவளது சித்தி வீட்டில் வளர்க்கிறாள். அவளது தாத்தா ஆல்ப்ஸ் மலையில் துறவியைப் போலத் தனியே வாழ்ந்து வருகிறார்.
சித்தி வேலை கிடைத்துப் பிராங்பெர்ட் கிளம்பவே ஹெய்டியை தாத்தா வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக ஆல்ப்ஸ் மலைக்கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறாள். படத்தின் ஆரம்பக் காட்சியிலே ஹெய்டி நம்மைக் கவர்ந்துவிடுகிறாள்.
அடர்ந்த புருவமும் நீண்ட தாடியுமாக விசித்திர தோற்றம் கொண்ட தாத்தா எந்த உறவும் வேண்டாம் என ஒதுங்கி வாழுகிறார். ஆகவே அவள் ஹெய்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. துரத்தி அடிக்கிறார் ஆனால் சித்தியால் கைவிடப்பட்டுப் போன ஹெய்டி போக்கிடம் இன்றித் தாத்தாவிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறாள். அவரோ கதவை மூடிக் கொண்டு விடுகிறார்.
எங்கே போவது எனத் தெரியாமல் ஹெய்டி ஆடுகளின் தொழுவத்திற்குள் போய் உறங்குகிறாள். இரவில் மழை பெய்கிறது. அது கூட அறியாமல் ஆட்டுக்குட்டியை அணைத்தபடியே உறங்குகிறாள். காலையில் தாத்தா தொழுவத்திற்கு வந்த போது அவருக்கு வணக்கம் சொல்கிறாள். ஹெய்டியின் செயல்களும் அன்பும் அவரை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறது. தாத்தா அவளை நேசிக்கத் துவங்குகிறார்.
தாத்தாவின் மரவீடும் ஆல்ப்ஸ் மலைப்பிரதேசத்தின் அழகும் படத்தின் தனிச்சிறப்பு.. அவர்கள் இருவருக்குமான நெருக்கத்தைப் படம் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஆடு மேய்க்கும் பீட்டர் என்ற பையனுடன் ஹெய்டி நட்பு கொள்கிறாள். ஆட்டுச்சண்டையை ரசிக்கிறாள். அந்த மலைப்பிரதேசத்தின் மனிதர்களுடன் அவள் சினேகிதம் கொள்கிறாள். அவளை எல்லோருக்கும் பிடித்துப் போகிறது
குளிர்காலம் பிறக்கிறது. எங்கும் பனிப்பொழிவு. தாத்தாவும் அவளும் பனிச்சறுக்கு வண்டியில் உறைபனியின் ஊடே செல்லும் காட்சி மறக்கமுடியாதது. அதில் ஹெய்டி அடையும் சந்தோஷம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது
ஹெய்டி அந்த மலைக்கிராமமெங்கும் அன்பைப் பரவவிடுகிறாள். ஆனந்தமாக இருக்கிறாள். அவளைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்கிறார் மதகுரு. ஆனால் தாத்தா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னோடு கூடவே வைத்துக் கொள்கிறார்.
ஆடு மேய்க்கும் பீட்டரின் கண்தெரியாத பாட்டியை ஹெய்டி சந்திக்கும் காட்சியும் அந்தப் பாட்டிக்காக ஹெய்டி வருந்துவதும், தாத்தா உதவியோடு அவளது வீட்டினை சரி செய்து தருவதும் மிகுந்த நெகிழ்ச்சியைத் தருகிறது.
ஹெய்டியின் வாழ்க்கை எதிர்பாராமல் திசைமாறுகிறது. அவளைப் பிராங்க்பெர்ட்டிற்குச் சித்தி அழைத்துக் கொண்டு போய்விடுகிறாள். அங்கே சக்கர நாற்காலியில் வாழும் கிளாரா என்ற பணக்கார சிறுமியின் தோழியாக மாற்றப்படுகிறாள். வசதியான வீடு. ஆனால் அடைபட்ட வாழ்க்கை. அவள் மனதிலோ தாத்தாவும் ஆல்ப்ஸ் மலைக்காற்றும் ஆடுகளும் ஏக்கம் கொள்ள வைக்கின்றன.
பிராங்க்பர்ட்டில் ஹெய்டியின் வாழ்க்கை வேதனை நிரம்பியதாக உள்ளது. அவள் எப்படித் தாத்தாவிடம் திரும்பினாள். அவர்கள் என்னவானார்கள் என்பதே மீதப்படம்.
படம் முழுவதும் நாம் ஹெய்டியினைப் பின்தொடருகிறோம். அவளது தூய அன்பு எல்லா நெருக்கடிகளையும் வெல்கிறது. தாத்தாவும் அவளும் ஆல்ப்ஸ் மலையும் நம் மனதில் நீங்கா இடம்பிடித்துவிடுகிறார்கள்.
ஜோஹானா ஸ்பைரி ஆல்ப்ஸ் மலைக்கிராமத்தில் பிறந்தவர் என்பதால் அந்த நினைவுகளை மிக அழகாக நாவலில் பதிவு செய்திருக்கிறார். ஹெய்டி திரைப்படம் அந்த நாவல் தரும் அனுபவத்தை மேலும் அழுத்தமாக, கவித்துவமாக உணர வைக்கிறது என்பதே இதன் வெற்றி.
••