கனேடிய எழுத்தாளர் யான் மார்டெல் (yann martel) அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தப் புத்தகங்களுடன் இதை ஏன் படிக்க வேண்டும் என்பது குறித்த கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதங்களில் அந்த நூலின் எழுத்தாளர் பற்றியும், அப் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் சுருக்கமாக எடுத்துச் சொல்கிறார்.
ஒரு நாட்டின் பிரதமர் என்ன புத்தகங்களை வாசிக்கிறார், எந்தப் புத்தகங்கள் அவரை உருவாக்கியது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் தான் இந்தப் புத்தகப் பரிசுகளை அனுப்பினேன் என்கிறார் யான் யான் மார்டெல்
இவர் மான் புக்கர் பரிசு பெற்ற லைப் ஆ பை நாவலின் ஆசிரியர். இந்த நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. யான் மார்டிலின் இந்த முயற்சி அறிவார்ந்த முறையில் ஒரு அரசிற்கு ஆலோசனை சொல்வது எனக் கூறுகிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.
யான் மார்டெல் அனுப்பிய புத்தகங்களைப் பிரதமர் அலுவலகத்தில் யாரோ பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் . அவர் 101 புத்தகங்களையும் அதற்குரிய கடிதங்களையும் அனுப்பி வைத்திருக்கிறார். இதற்குப் பிரதமர் அலுவலகத்திலிருந்து நான்கே நான்கு பதில் கடிதங்கள் வந்திருக்கின்றன. அவை வெகு சம்பிரதாயமான பதில்கள்.
தான் அனுப்பிவைத்த எந்தப் புத்தகத்தையாவது பிரதமர் படித்தாரா.? ஏன் ஒரு தேசத்தின் பிரதமருக்கு இலக்கியத்தின் மீது நாட்டம் இல்லை.? அரசியலில் பரபரப்பாக இருந்த எத்தனையோ ஆளுமைகள் தீவிரமாக வாசித்தார்களே. ஒருவேளை இலக்கிய வாசிப்பின் அருமை பிரதமருக்குத் தெரியாவிட்டால் இந்தப் புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ள நாட்டம் கொள்ளலாமே ?, ஒரு தேசத்தின் முக்கியக் கவிஞர்களை. இலக்கியவாதிகளை அந்த நாட்டுப் பிரதமர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தவறான விஷயமில்லையா எனக் கேட்கிறார் யான் யான் மார்டெல்.
அத்தோடு ஐரோப்பாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அரசால் கொண்டாடப்படுகிறார்கள். பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா மித்தரான் பிரபல எழுத்தாளர் மார்கெரித் துராஸைத் தேடிச் சென்று சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் மித்திரானை விடத் தனக்கு அதிக மக்கள் ஆதரவு உண்டு என்று துராஸ் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் ஐரோப்பாவில் தான் சாத்தியம்.
யான் மார்டெல்அனுப்பிய கடிதங்கள் யாவும் தொகுக்கப்பட்டு 101 Letters to a Prime Minister:- Yann Martel எனத் தனி நூலாக வெளிவந்துள்ளது. அதை வாசித்த போது யான் மார்டெல் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசித்திருக்கிறார் என்பதும் அந்தப் புத்தகங்கள் குறித்து சிறப்பான கடிதங்களை எழுதியிருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது
யான் மார்டெல் முதலில் என்ன புத்தகத்தை அனுப்பினார் என்று பார்த்தேன். லியோ டால்ஸ்டாயின் THE DEATH Of IVAN ILYCH. அதிகாரத்திலிருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமது. டால்ஸ்டாயின் மேதைமைக்குச் சான்றாகவுள்ள இந்தக் கதையை நீங்கள் வாசிப்பதன் வழியே வாழ்க்கையின் உண்மையான அர்த்தமென்ன என்பதை அறிந்து கொள்வீர்கள் என்று குறிப்பிடுகிறார் யான் யான் மார்டெல்.
இவர் கடைசியாக அனுப்பிய புத்தகம் IN SEARCH OF LOST TIME BY MARCEL PROUST. நினைவுகளின் வழியே தன்னை அறிந்து கொள்ள முயன்றவரின் கதை. காலம் நமக்குள் எப்படி அடுக்கடுக்காக உறைந்துள்ளது என்பதை MARCEL PROUST இந்த நாவலின் வழியே வெளிப்படுத்துகிறார்.
ஒரு நாவல், ஒரு கவிதைத்தொகுப்பு, ஒரு கட்டுரை தொகுப்பு, ஒரு நாடகம், ஒரு குழந்தைகள் புத்தகம் எனப் பல்வேறு வகைப்பட்ட புத்தகங்களைப் பிரதமருக்கு அனுப்பியிருக்கிறார் யான் யான் மார்டெல், அதில் ஒன்று பகவத்கீதை.
பிரதமர் தனக்கு எப்படிக் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்பதற்கு அவராகவே சில கற்பனைக் கடிதங்களையும் இணைத்திருக்கிறார்.
யான்யான் மார்டெல் அனுப்பிய புத்தகங்கள் பிரதமர் அலுவலகத்தின் எங்கோ ஒரு மூலையில் சென்று சேகரமாகியிருக்கும். யார் அதை எடுத்துப் படிக்கப் போகிறார்கள். ஒரு தேசத்தின் முக்கிய எழுத்தாளர் கடிதம் எழுதினாலே இது தான் கதி என்றால் சாமானிய மனிதன் தனது பிரதமருக்கு எப்படி வெளிப்படையாகக் கடிதம் எழுதுவான். அவனுக்கு எப்படிப் பதில் கிடைக்கும் என்று கேள்வி எழுப்புகிறார் யான் யான் மார்டெல்.
இந்த நூலின் வழியே அவர் கனேடிய பிரதமரை மட்டுமில்லை. அந்தத் தேசத்தையே முக்கியமான நூறு புத்தகங்களை வாசிக்கும்படி சிபாரிசு செய்திருக்கிறார் என்பதே உண்மை.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் உறங்கும் இடத்திற்குப் பக்கத்தில் நிச்சயம் சிறிய இடம் இருக்கும், அது பட்டு மெத்தையில் படுத்திருப்பவராக இருந்தாலும் நடைபாதையோரம் படுத்து கிடப்பவராக இருந்தாலும் சரி சிறியஇடம் இருக்கவே செய்யும். இந்த இடம் புத்தகத்திற்கானது. அங்கே ஒரு புத்தகம் ஒளிரட்டும். அமைதியான இரவின் அபூர்வ தருணத்தில், நாம் தூங்குவதற்கு முன், ஒரு புத்தகத்தை எடுத்து சில நிமிடங்கள், சில பக்கங்கள் வாசிப்பதென்பது அன்றைய நாளை அர்த்தப்படுத்திக் கொள்வதாக இருக்கும் என்கிறார் யான் யான் மார்டெல்
ஒரு நாட்டின் பிரதமருக்கு தேசத்தின் வளர்ச்சி, பொருளாதாரம் பற்றிய அக்கறை, தேசப்பாதுகாப்பு. தொழில்துறைகளின் முன்னேற்றம், மகளிர் நலன் இவற்றோடு மக்கள் என்ன படிக்கிறார்கள். என்ன படிக்க வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்க வேண்டும்.
ஒரு தேசம் இலக்கியத்தை முன்னெடுக்க வேண்டுமென்றால் அதில் பிரதமரின் கவனம் நிச்சயம் இருக்க வேண்டும், நீங்கள் திறம்படத் தேசத்தை வழிநடத்த விரும்பினால், நீங்கள் நிறையப் படித்தவராக இருக்க வேண்டும் என்கிறார் யான் யான் மார்டெல்.
புத்தகங்களுக்கு மதம் இனம் ஆண் பெண் என எந்தப் பேதமும் கிடையாது. எல்லோருடனும் புத்தகம் பேசக்கூடியது.. வாசித்தல் என்பது நேரத்தை மிகவும் பயனுள்ளதாக்கிக் கொள்ளும் கலை. ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் தான் புத்தகங்களை வாங்கி வாசித்தார்கள். பொதுநூலகங்கள் வந்தபிறகு வாசிப்பு ஜனநாயகப்படுத்த பட்டுவிட்டது. இப்போது ஏழை பணக்காரன் என்று வாசிப்பிற்கு எந்தப் பிரிவினையும் கிடையாது.
புத்தகங்கள் சமகாலத்தைப் பிரதிபலிப்பு செய்வதுடன் சமகாலத்தை வழிநடத்தவும் செய்கின்றன. ஆகவே புத்தகங்களின் வழியே மக்கள் என்ன நினைக்கிறார்கள். எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.
யான் மார்டெலின் வாசிப்பில் இந்திய இலக்கியங்களுக்கு மிகக் குறைவான இடமே இருக்கிறது. புதுச்சேரியை மையமாகக் கொண்டு அவர் நாவல் எழுதியுள்ள போதும் இந்திய இலக்கியங்களை முழுமையாக அறிந்திருக்கவில்லை. மேலும் அவரது தேர்வில் பெரும்பான்மை ஐரோப்பிய, அமெரிக்க எழுத்தாளர்களே இடம் பெற்றிருக்கிறார்கள். செவ்வியல் இலக்கியங்களைப் பெரிதும் தவிர்த்திருக்கிறார்.
இந்திய அரசியல் தலைவர்களில் அதிகம் பயணம் செய்தவர், மக்களைச் சந்தித்தவர் மகாத்மா காந்தி. அவர் வாசித்த நூல்களின் பட்டியலைப் பார்த்து வியந்து போனேன். நாவல்கள் துவங்கி தத்துவம் வரை பல்வேறு துறை சார்ந்த நூல்களை அவர் வாசித்திருக்கிறார். அத்தனை பரபரப்பான அரசியல் வாழ்க்கைக்கு நடுவிலும் அவரால் இவ்வளவு வாசிக்க முடிந்திருப்பது வியப்பளிக்கிறது
(இணைப்பு https://www.gandhi-manibhavan.org/eduresources/bks_read_by_g.htm)
மார்கஸ் ஆரேலியஸ் ரோமப் பேரரசர். அவர் எழுதிய Meditationsல் இப்படிக் குறிப்பிடுகிறார்.
”Soon you will have forgotten the world, and soon the world will have forgotten you,”
இதைப் படித்த போது எனக்குத் தோன்றியது நீங்கள் உலகையும் ,உலகம் உங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் புத்தக வாசிப்பே சிறந்த வழி.
**
