26 நாளில் ஒரு காதல்

தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வில் 26 நாட்கள் (Twenty Six Days From the Life of Dostoyevsky)என்ற படத்தை நேற்றிரவு பார்த்தேன். தஸ்தாயெவ்ஸ்கிக்கும் அவரிடம் உதவியாளராக பணிக்கு வந்த அன்னா என்ற இளம்பெண்ணுக்குமான காதலும் சூதாடி நாவலை எழுதுவதற்கு அவர் அடைந்த நெருக்கடியான மனநிலையுமே படத்தின் ஆதார கதை.

இவர்களது காதலை பற்றி தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்றொரு நாடகத்தை நான் எழுதியிருக்கிறேன். அது ஒரேயொரு முறை நிகழ்த்தபட்டது. தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground என்ற சைபீரிய சிறைச்சாலை அனுபவங்களை முன்வைத்து மரணவீட்டின் குறிப்புகள் என்றொரு நாடகமும் எழுதியிருக்கிறேன். இதை நாடக இயக்குனர் முருகபூபதி இயக்கினார். நான்கு முறை இந்த நாடகம் மேடையேற்றம் கண்டிருக்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கியை படிப்பதும் விவாதிப்பதும் எனது விருப்பமான வேலை. இருபது வயதில் இருந்து தஸ்தாயெவ்ஸ்கியை வாசித்து கொண்டேயிருக்கிறேன். நான் எப்போதும் தஸ்தாயெவ்ஸ்கியின் ரசிகனே.

1981ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தினை முன்பு ஒருமுறை தொலைக்காட்சியில் பாதியிலிருந்து பார்திருக்கிறேன். தற்போது அதன் டிவிடி வெளியாகி உள்ளது.

தஸ்தாயெவ்ஸ்கி இறந்து நூறு வருசம் ஆனதை ஒட்டி இந்த படம் தயாரிக்கபட்டிருக்கிறது. Alexander Zarkhi இயக்கியுள்ள இப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் பரிசைப் பெற்றது. Anatoly Solonitsyn தஸ்தாயெவ்ஸ்கியாக நடித்திருக்கிறார். இவர் ஆந்த்ரேய் தார்கோவெஸ்கியின் சோலாரிஸ், சேக்ரிபைஸ் ஆந்த்ரே ரூபலாவ், போன்ற படங்களில் முக்கிய நடிகராக சிறப்பாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dostovesky at the roulette. Novel from the life of great writer என்ற நூலினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வை மிகவும் நெருங்கி உண்மையாக பதிவு செய்துள்ளது.

1866ம் ஆண்டு தஸ்தாயெவ்ஸ்கி தன் பதிப்பாளர் ஸ்டெலோவெஸ்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி ஒரு மாத காலத்தில் ஒரு நாவல் எழுதி தர வேண்டிய நிர்ப்பந்திற்கு உள்ளாகியிருந்தார். கிரைம் அண்ட் பனிஷ்மெண்ட் நாவல் வெளியாகி பிரபலமாகி இருந்த காரணத்தால் பதிப்பாளர்கள் அவரது புத்தகங்களை வெளியிட ஆர்வம் காட்டினார்கள். ஆனால் முறையான பணம் தராமல் அவ்வப்போது முன்பணம் கடன் என்று கொஞ்சம் பணம் தந்து அவரது எழுத்திற்கான முழுஉரிமையை எழுதி வாங்கி கொண்டார்கள்

மீளமுடியாத கடன் மற்றும் காசநோயால் மனைவி இறந்து போனது. எதிர்பாரத சகோதரனின் மரணம் என நெருக்கடியான வாழ்க்கைச் சூழல் காரணமாக தஸ்தாயெவ்ஸ்கி அவர்கள் காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டு தந்திருக்கிறார். முன்னதாக நான்கு வருடகாலம் அரசியல்காரணங்களுக்காக சைபீரிய சிறையில் அடைக்கபட்டிருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. மரணத்தின் முனையில் இருந்து விடுவிக்கபட்ட அவர் தனது வாழ்க்கை இரண்டாம் முறையாக தனக்கு அளிக்கபட்ட பரிசு என்றே நம்பினார். ஆகவே விடுதலையான பிறகும் மனமெங்கும் தீராத பயம் குழப்பம் தனிமை என்று அறைக்குள்ளாகவே அடைந்து கிடந்தார்.

பதிப்பாளரின் நெருக்கடிக்காக எழுத்தாளர் எப்படி நாவல் எழுத முடியும். ஆகவே அந்த முயற்சியை காலம் தாழ்ந்திக் கொண்டேயிருந்தார். இதனால் கோபமடைந்த பதிப்பாளர் ஒரு மாத காலத்திற்குள் நாவல் எழுதி தந்தே ஆக வேண்டும் இல்லாவிட்டால் அவர் காவல்துறையினர் வசம் புகார் தரப்பட்டு கைது செய்யப்படுவார் என்று மிரட்டினார்.

எப்படியாவது எழுதி தந்துவிடுகிறேன் என்று சமாதானம் சொன்ன தஸ்தாயெவ்ஸ்கி தனது உடல் நலம் மற்றும் அவசரமாக எழுதிமுடிக்க வேண்டிய சூழல் காரணமாக யாராவது ஒரு பெண் தனக்கு உதவியாளராக கிடைத்தால் தான் சொல்ல சொல்ல வேகமாக எழுதிவிடலாம் என்று நினைத்தார்.

இதற்காக அன்னா கிரிகோர்வினா என்ற இளம் பெண் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தாள். தஸ்தாயெவ்ஸ்கி சொல்ல சொல்ல சுருக்கெழுத்தில் குறிப்பு எடுத்து கொண்டு எழுதி தர வேண்டியது அவளது வேலை. அப்படி எழுதபட்டது தான் சூதாடி என்ற நாவல் (The Gambler). அதை தான் இந்த திரைப்படம் விரிவாக காட்சிபடுத்துகிறது.

தஸ்தாயெவ்ஸ்கி நாவலை எழுதி முடிக்க போராடினார். அதேவேளையில் அன்னாவின் எளிய அன்பால் வசீகரக்கபட்டு அவளை காதலிக்கவும் துவங்கினார்.

படத்தின் துவக்கத்தில் தஸ்தாயெவ்ஸ்கி பீட்டர்ஸ்பெர்க் நகரில் தனியே வசிக்கிறார். அவருக்கு அப்போது நாற்பத்தைந்து வயதாகிறது. வேலை தேடி வரும் அன்னாவிற்கு 19 வயது. ஒரு மாதத்திற்குள் நாவல் எழுதி முடித்தாக வேண்டுமே என்ற பதட்டம், இதுவரை உதவியாளரை வைத்து எழுதிய அனுபவமின்மை என்று குழப்பத்தில் தவிக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் அறிமுக காட்சிகள் அற்புதமாக படமாக்கபட்டுள்ளன.

தனது நாவல்களை சுயவாழ்வின் அனுபவங்களில் இருந்தே அதிகம் உருவாகியிருக்கிறார். ஆகவே சூதாடி நாவலையும் தனது சொந்த அனுபவத்தின் சாயலாகவே உருவாக்க விரும்பினார். 1862ல் ஐரோப்பாவில் பயணம் செய்த தஸ்தாயெவ்ஸ்கி அங்குள்ள காசினோவில் ரூலெட் எனும் சுழலும் சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதிர்ஷடம் ஒரு போதும் தன்வசமாக போவதில்லை என்று அறிந்தே சூதாடினேன் என்று எழுதும் தஸ்தாயெவ்ஸ்கி தோல்வியின் வலி மறுபடி மறுபடி தன்னை சூதாட்டப் பலகையை நோக்கி இழுத்துக் கொண்டே போனது என்கிறார். அவர் சூதாட்டத்தின் சூட்சுமத்தை அறிந்து கொள்ள நிறைய படித்தார். எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை

அந்த நாட்களில் அவருக்கு சூதாட பண உதவிகள் செய்தவர் போலினா ஸ்சுலோவா என்ற பெண். அவளை தஸ்தாயெவ்ஸ்கி தீவிரமாக காதலித்தார்.அவளுக்காகவே சிறந்த சூதாடியாக முடிவு செய்தார். எழுத்தில் பெரும்வெற்றி பெற்ற அவர் சூதாட்ட பலகை முன்பு தொடர்ந்து தோற்று போனார். ஒரு வாரத்தில் 3000 பிராங் தோற்று 600 பிராங் ஜெயித்திருக்கிறார். அவர் சூதாடிய காசினோ இன்றும் ஜெர்மனிய மலைநகரமொன்றில் உள்ளது. சூதாட்ட நாட்களின் முடிவில் போலினா வேறு ஒருவனை காதலிக்க துவங்கியதை அறிந்து மனவேதனை கொண்டு தன்னை நொந்து கொள்கிறார். அவளை நீங்கி செல்கிறார்.

தனது சூதாட்ட அனுபவங்களை வைத்து தஸ்தாயெவ்ஸ்கி நாவல் எழுத முடிவு செய்கிறார். ஆனால் அதை கற்பனையான கதையாக எழுதுவதா இல்லை நேரடியாக சுயவிவரணை போல துவங்கி எழுதுவதா என்று தெரியாமல் தடுமாறுகிறார். ஒருவேளை காவல்துறை இந்த நாவலை படித்து தன்னை ஒரு மோசமான சூதாடி என்று கருதிவிட்டால் என்ன செய்வது என்று உள்ளுற பயமும் உருவாகிறது.

இந்த சூழலில் அவர் வீட்டிற்கு சுருக்கெழுத்தாளர் வீட்டிற்கு வேலை கேட்டு வாசற்கதவை தட்டுகிறாள் அன்னா. உள்ளேயிருந்த நிசப்தம் அவளுக்கு வீட்டின் நிர்கதியை வெளிப்படுத்துகிறது.முதிய வேலைக்கார பெண் கதவை திறக்கிறாள். அவளது பார்வையில் தஸ்தாயெவ்ஸ்கியை தேடி ஒரு இளம்பெண் வந்திருக்கிறாளே என்ற திகைப்பும் எதற்கு வந்திருக்கிறாள் என்ற அலட்சியமும் வெளிப்படுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியை காண வந்திருப்பதாக சொல்கிறாள் அன்னா. அந்த பெண் கதவை திறந்துவிட்டு உள்ளே போகிறாள்.

எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளால் கூட அந்தஅறையை வெளிச்சம் உண்டாக்க முடியவில்லை. பாதி இருண்டு போயிருக்கிறது. வீட்டில் வேறு யாருமில்லை என்பது பார்வையிலே தெரிகிறது. குளிர்கால இரவு என்பதால் அவள் தனது குளிராடையை கழட்டி அங்கிருந்த ஒரு கோட் ஸ்டாண்டில் மாட்டிவிட்டு தஸ்தாயெவ்ஸ்கி எங்கேயிருக்கிறார் என்று தெரியாமல் திகைக்கிறாள். திடீரென வேறு பக்கமிருந்து ஒரு கை மெழுகுவர்தி ஏந்தியபடியே ஒரு சுவரின் பின்னால் இருந்து வெளிப்படுகிறது. அவள் பயத்துடன் தஸ்தாயெவ்ஸ்கியை காண வந்திருப்பதாக சொல்கிறாள். நான் தான் தஸ்தாயெவ்ஸ்கி என்று மெதுவான குரலில் அறிமுகமாகிறார்.

அவரது தோற்றம் அதில் வெளிப்படும் கலக்கம், ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறோம் என்ற கூச்சம் அத்தனையும் ஒரே காட்சியில் வெளிப்பட்டுள்ளது. அவள் தஸ்தாயெவ்ஸ்கியின் அறைக்குள் செல்கிறாள். அவர் இப்போது வேறு உடைஅணிந்து கொண்டு உள்ளே வருகிறார். அவளுக்கு ஸ்டெனோகிராபராக எவ்வளவு ஆண்டுகாலம் அனுபவம் உள்ளது என்பதை விசாரித்துவிட்டு உடனேயே பரிட்சை செய்து பார்க்கிறார். பதற்றத்தை மறைத்து கொள்வதற்காக சுருட்டு பிடிக்கிறார். அதை மீறி அவனது கைகள் கண்கள் நடுங்குகின்றன. அந்தபெண்ணை அவரால் நேர்கொள்ளவே முடியவில்லை. அறைக்குள்ளாகவே நடக்கிறார். கோபபடுகிறார்.

அவரது வேகத்திற்கு அவளால் சுருக்கெழுத்தில் எழுத முடிவதில்லை . தடுமாறுகிறாள். தஸ்தாயெவ்ஸ்கி கோபபடுகிறார். தான் ஒரு பெண்ணை உதவியாளராக வேலைக்கு சேர்ந்த காரணம் ஆண்கள் குடிக்க கூடியவர்கள் என்பதால் மட்டுமே என்கிறார். அன்னா கோபத்துடன் தான் ஒரு போதும் குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே போகிறாள்.

தஸ்தாயெவ்ஸ்கி அவளது கோபத்தை புரிந்து கொள்கிறார். தனது பதட்டம் காரணமாகவே அப்படி நடந்து கொள்வதாக சொல்கிறார். அன்னா அவரது உதவியாளராக சேர்கிறாள். அவர் சொல்ல சொல்ல நாவல் எழுதுகிறாள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் மனது கொந்தளிப்பானது. அது எதைஎதையோ கற்பனையாக நினைத்துபயப்படுகிறது. தன்னை நேசிக்க எவருமில்லை என்று தடுமாறுகிறது. அன்னா அதை புரிந்து கொள்கிறாள். ஒரு நாவலின் வழியே இருவரும் காதலிக்க துவங்குகிறார்கள். அன்னாவிற்கு முன்னதாக ஒரு இளைஞனோடு நட்பு இருக்கிறது.அதை கண்டு தஸ்தாயெவ்ஸ்கி பொறாமைபடுகிறார்.

தன்னை இளைஞர்கள் மோசமான முன்னுதாரணமாக காட்டுகிறார்கள் என்று அறிந்து வேதனை அடைகிறார். அன்னாவின் தாய் அவரது எழுத்துக்களை படித்திருக்கிறாள் என்பதில் பெருமை கொள்கிறார். அத்துடன் நாவல் முடிந்துவிட்டால் அவள் தன்னை விட்டு போய்விடுவாளே என்று கலக்கமடைகிறார். தன் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியாமல் சோகமடைந்து தனக்குதானே பேசிக் கொள்கிறார். காலக்கெடு முடிவதற்குள் அன்னா அவரது நாவலை பூர்த்தி செய்து அவளே பதிப்பாளரிடம் அழைத்து போகிறாள்.

பதிப்பாளர் ஒரு ஏமாற்றுகாரன். தஸ்தாயெவ்ஸ்கியை தனது பிடியில் இருந்து விடுவிக்க மனதின்றி ஒளிந்து கொண்டுவிடுகிறான். இதனால் தஸ்தாயெவ்ஸ்கி பயந்து போகிறார். நாவலை எங்கே ஒப்படைப்பது என்று தெரியவில்லை. அன்னா அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்து அதற்கான ரசீதை பெற்றுக் கொள்கிறாள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் புகழ்பெறுகிறது.அவரது காதலும் நிறைவேறுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நான்கு குழந்தைகளுக்கு தாயாகிறாள் அன்னா. அந்த குழந்தைகளில் ஒன்று அவரை போலவே வலிப்பு நோய் கண்டு பச்சிளங்குழந்தையாக இறந்து போகிறது. தஸ்தாயெவ்ஸ்கி இறந்த பின்னும் அன்னா பல ஆண்டுகாலம் அவரது நூல்களை முறையாக பதிப்பித்து அவருக்கு பெருமை சேர்க்கும்படியாக வாழ்ந்தாள்.

26 நாட்களில் உருவான அந்த காதல் மட்டுமே தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வில் நடந்த அரிய சந்தோஷம். மற்ற யாவும் அவரை வதைத்த பிரச்சனைகள், சிக்கல்கள் மட்டுமே.படம் அவரது வறுமை அவரை எவ்வளவு ஒடுக்கியிருந்தது என்பதை தெளிவாக அடையாளம் காட்டுகிறது. அவரது வளர்ப்பு பையன் பாவல் வீட்டிலிருந்து வெள்ளி ஸ்பூன்களை திருடி கொண்டு போய் விற்றுவிடுகிறான். ஆகவே அவர்கள் வீட்டில் சூப் குடிப்பதற்கு மர ஸ்பூன்கள் மட்டுமேயிருக்கின்றன. நல்ல உடைகள் இல்லை. இசை நிகழ்ச்சிக்கு போவதற்கான பணம் இல்லை. அதிகப்படியான மெழுகுவர்த்திகள் கூட அவரிடமில்லை. மலிவான காய்கறிகள், ரொட்டிகள், இவையே அவரது அன்றாட உணவுகள். சிலவேளைகளில் பாவெல் குடித்துவிட்டுவந்து பணம் கேட்டு அவரை மிரட்டுகிறான். சண்டைபோடுகிறான். அவனுக்காக கையிருப்பான எதையாவது தந்து அனுப்பி வைக்கிறார்.

வளர்ப்பு மகன் அவனை தொடர்ந்து அவமானப்படுத்தியபடியே இருக்கிறான். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி அவனை ஒரு போதும் வெறுக்கவில்லை. மிகுந்த அன்போடு நேசிக்கிறார். அவனது மரணத்தின் பிறகு அவரே தேடி சென்று அவனது கடன்களை அடைப்பதோடு அவனுக்காக துயரம் அனுஷ்டிக்கிறார். பாவலுக்கும் தஸ்தாயெஸ்கிக்குமான உறவை பற்றி நோபல் பரிசு எழுத்தாளரான ஜே. எம். கூட்ஸி The Master of Petersburg என்ற நாவலை எழுதியிருக்கிறார். இது தமிழில் சா. தேவதாஸ் மொழியாக்கத்தில் பீட்டர்ஸ்பெர்க் நாயகன் என்று வெளியாகி உள்ளது.

தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வில் சந்தித்த பெண்கள் யாவரும் வலிமையானவர்கள். அவர்களே தஸ்தாயெவ்ஸ்கியை முன்னெடுத்து போகிறார்கள். துணை நிற்கிறார்கள். வாழ்வின் துயர்களை மட்டுமே தஸ்தாயெவ்ஸ்கி நினைத்து கொண்டிருக்கிறார். அவரால் இயல்பான ஒரு வாழ்வை நடத்த இயலவில்லை. அவ்வளவு அகநெருக்கடி. ஆனால் அவர் காதலித்த பெண்கள் அவரை சாந்தம் கொள்ள வைக்கிறார்கள். ஆனால் மனைவியின் மரணம், சிறுவயதில் கண்ட தாயின் பரிதவிப்பு என்று அவர் அனுபவித்த துயரம் அவருக்குள் எப்போதும் ஆறாத வலியை உருவாக்கியபடியே இருந்தது. அதிலிருந்து அவரால் விடுபட முடியவேயில்லை.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களிலும் பெண்களே சவாலோடு வாழ்வை எதிர்கொள்கிறார்கள். சமர்செய்கிறார்கள். கைவிடப்பட்ட நிலையில் கூட அவர்கள் புகார் சொல்வதோ, பயந்து ஒடி ஒளிவதையோ செய்வதில்லை. எதையாவது பற்றிக் கொண்டு தன்னால் வாழ்ந்துவிட முடியும் என்று காட்டுகிறார்கள். தன் இருப்பின் வழியே மற்றவர்களை நேசிக்கவும் அன்பு செலுத்தவும் முடியும் என்பதை கற்று தருகிறார்கள்.

ருஷ்ய இலக்கியத்தின் பிரதான எழுத்தாளர்கள் பலரும் வேசைகளை பற்றி எழுதியிருக்கிறார்கள்.அவர்களில் தஸ்தாயெவ்ஸ்கியே வேசைகளான ஒதுக்கபட்ட பெண்களுக்குள்ளும் பகிர்ந்து கொள்ளபடாத அன்பும் கருணையும் உள்ளது என்பதை எழுதிகாட்டுகிறார். இவரது குற்றமும் தண்டனை நாவலில் வரும் சோனியா என்ற வேசையின் கதாபாத்திரம் இதற்கு ஒரு உதாரணம். அவளை தீர்க்கமான ஒரு ஞானியை போல சித்தரிக்கிறார். அவளுக்குள் மெய்மையை நாடும் உயர்குணம் ஒருபுறமும் காமத்தை தீர்க்கும் உடல்தேவை மறுபுறமுமாக அலைக்கழிக்கிறது. அவள் தனது இருப்பை தூய்மைபடுத்திக் கொள்ள போராடுகிறாள்.

இது போலதான் குழந்தைகளும். பெற்றோர்களின் தவறுகள் பிள்ளைகளை எப்படி வேதனைபடுத்துகின்றன. வறுமையும் குடும்ப நெருக்கடிகளும் குழந்தைகளை இயல்பை மீறி நடந்து கொள்ள செய்வதையும் உதவிக்காக அவர்கள் கையேந்தி நிற்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி தனது எழுத்தில் தொடர்ந்துவெளிப்படுத்துகிறார்.

தஸ்தாயெவ்ஸ்கியின் பெரும்பான்மை கதைகள் படமாக்கபட்டுவிட்டன. அன்னாவிற்கும் அவருக்குமான காதல்கதையை சற்றே உருமாற்றி ஹாலிவுட்டில் Alex & Emma என்றொரு படமும்வெளியாகி உள்ளது. சூதாடி நாவலும் இரண்டு முறை படமாக்கபட்டிருக்கிறது.

ஒரு எழுத்தாளனின் வாழ்வு அவன் எழுதிய கதைகளை விட வியப்பானது. அதில் சிறு பகுதியை மட்டுமே அவன் எழுதிவெளிப்படுத்துகிறான். அந்த வகையில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வும் அனுபவங்களும் அவரது நாவல்களை விட விநோதமானவை. துயரமானவை

**

0Shares
0