புகழ்பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான வேத் மேத்தா எழுதிய Mamaji, Daddyji என்ற இரண்டு புத்தகங்களை வாசித்தேன். இது அவரது சுயசரிதை. சாந்தி மேத்தா மற்றும் அமோலக் ராம் மேத்தா என்ற அவரது தாய் தந்தை இருவரைப் பற்றிய வாழ்க்கை சரித்திரமாக எழுதப்பட்டிருக்கிறது.
வேத் மேத்தா 1934 லாகூரில் பிறந்தவர். பஞ்சாபி. மூன்று வயதில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் காரணமாகக் கண் பார்வையை இழந்தவர். ஆனாலும் மனம் தளராமல் பம்பாயில் உள்ள பார்வையற்றோருக்கான தாதர் பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்பு அமெரிக்கா சென்று உயர்கல்வி கற்று நியூயார்க்கர் இதழின் எழுத்தாளராக முப்பது ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கிறார். பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வேத் மேத்தா எழுதியிருக்கிறார்.
தனது தந்தை தாய் பற்றிய நினைவுகளை மட்டுமின்றி அந்தக் காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளையும் இந்தியக் குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களையும் மிக அழகாக எழுதியிருக்கிறார் வேத் மேத்தா. அவரது உரைநடை மிக எளிமையானது. கவித்துவமானது. சிறிய வாக்கியங்களின் வழியே முழுமையான அனுபவத்தைத் தந்துவிடுகிறார். உயில், டயரிகள். குடும்பத்தினரின் நினைவுகள் வழியாக அவர் கடந்த காலத்தை மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்.
சாந்தி மேத்தா எனப்படும் அவரது தாயைப் பற்றிய சித்தரிப்பு அபூர்வமானது. இந்தியப் பெண் எப்படிச் சிறுவயதிலிருந்து குடும்பச் சூழலுக்குள்ளாகவே வளர்க்கப்படுகிறாள். மதமும் சடங்கு சம்பிரதாயங்களும் எப்படி அவளை உருவாக்குகின்றன என்பதை நேரடி சாட்சியம் போல வெளிப்படுத்துகிறார்
குறிப்பாகக் காலரா காலத்தில் எப்படி மக்கள் நடந்து கொண்டார்கள் என்பதைப் பற்றிய சித்திரம் மாமாஜியில் இடம் பெற்றுள்ளது. அது போலவே அந்தக் காலத்தில் குழந்தைகள் ஒரு வயதில் இரண்டு வயதில் எதிர்பாரா நோயில் எப்படி மரணமடைந்தார்கள் என்பதைப் பல்வேறு குறிப்புகளின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக மஞ்சள் காமாலை கண்டு உடல் முழுவதுமே மஞ்சள் நிறமாகிப் போன குழந்தைக்கு என்ன மருத்துவம் செய்வது எனத்தெரியாமல் போராடும் சூழலில் ஒரு பிரிட்டீஷ் மருத்துவர் மலைப்பிரதேசத்தில் உள்ள ஊருக்குக் கொண்டு செல்லுங்கள். தூய காற்றும் சீதோஷ்ண நிலையும் உடல்நிலையைச் சரியாக்கும் என அறிவுரை சொல்கிறார். அதன்படியே இரவோடு இரவாக மலைப்பிரதேசத்திற்குச் செல்கிறார். அந்த மருத்துவர் சொன்னது போலவே காற்றும் இதமான சீதோஷ்ண நிலையும் உடல் நிலையைச் சீராக்குகிறது.
சாந்தி மேத்தாவிற்குப் பதினேழு வயதாக இருந்தபோது, அவளது தந்தை, டாக்டர் அமோலக் ராம் மேத்தாவிற்குத் திருமணம் செய்து கொடுத்தார். அமோலக் இங்கிலாந்தில் படித்தவர். ஆங்கிலப் பண்பாட்டினை கைக்கொள்ளுபவர். டென்னிஸ், கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். மேற்கத்திய இசையில் தனித்த ஈடுபாடும் உண்டு. ஆனால் சாந்திக்கு ஆங்கிலம் தெரியாது. பிரிட்டிஷ் பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாது. கணவருடன் பாட்டிக்குச் செல்வதற்கோ, கிளப்பிற்குச் செல்வதற்கோ தயக்கம். சாந்தியின் கட்டுப்பெட்டி தனங்களைக் கேலி செய்த அமோலக் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக நவீன பெண்மணியாக மாற்றினார்.
அமோலக் ராம் மேத்தா பிரிட்டிஷ் அரசின் மருத்துவராகப் பணியாற்றியவர் என்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதாக இருந்தது. சாந்தி மேத்தாவின் சித்திரம் என்பது அன்றைய இந்தியப்பெண்களின் பிரதிநிதி போன்ற தோற்றம் கொண்டது. அவர் சந்திக்கும் பிரச்சனைகளும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் அன்றைய வாழ்க்கையில் பெரும்பான்மை பெண்கள் எதிர்கொண்டதே. ஆனால் அமோலக் மேத்தா போலப் படித்த, ஆங்கிலக் கனவான் போல நடந்து கொள்ளும் ஒருவரைப் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தியதின் தனித்துவத்தை வேத் மேத்தா பல்வேறு நிகழ்வுகளின் வழியே அழகாக வெளிப்படுத்துகிறார்
பொதுவாக இந்திய எழுத்தாளர்கள் சுயசரிதை எழுத விரும்புவதில்லை. சுயசரிதை என்பது அந்தரங்கமானது என நினைக்கிறார்கள். ஆகவே நினைவுக்குறிப்புகளை மட்டுமே எழுதுகிறார்கள். அது தனக்கு விருப்பமானதில்லை என்று கூறும் வேத் மேத்தா, தனது வாழ்க்கை வரலாற்றின் வழியே வெளிப்படும் உண்மைகள் பலரது வாழ்க்கைக்கும் வழிகாட்டுதலாக இருக்கக் கூடும். ஆகவே தான் சுயசரிதையை எழுத முற்பட்டேன் என்கிறார்.
தன்னுடைய தாத்தா லாலாஜி தன் வாழ்நாளில் ஒரேயொரு முறை மட்டுமே பயணம் செய்திருக்கிறார். அதுவும் ஒரு காளை வண்டியில் ஹரித்துவார் வரை போய் வந்திருக்கிறார். ஆனால் தனது தந்தை மருத்துவம் படிக்க இங்கிலாந்து சென்றிருக்கிறார். நான் பதினாலு வயதில் அமெரிக்காவிற்கு வந்தேன். என் வாழ்நாள் முழுவதையும் அமெரிக்காவில் தான் கழித்திருக்கிறேன். ஆனால் என் மனதில் உள்ள பஞ்சாபி மொழி மறைந்து போகவில்லை என்கிறார் வேத் மேத்தா. அவரது மனைவி லின் ஒரு அமெரிக்கப் பெண்மணி.
தனது தந்தையைப் பற்றிய புத்தகத்தை எழுதி முடித்தபிறகு தாயைப் பற்றிய புத்தகத்தை எழுத விரும்பினார் மேத்தா. ஆனால் அம்மா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவரும் அவரது சகோதரிகளும் சேர்ந்து பேசி ஒத்துக் கொள்ள வைத்தார்கள். இந்த நூல் வழியாகவே தனது தாய் இன்று உலகம் எல்லாம் அறியப்பட்டவராக மாறியிருக்கிறார் என்கிறார் வேத் மேத்தா.
வேத் மேத்தா பார்வையற்றவர் என்பதை அவரது வாசகர்கள் நம்ப மறுத்தார்கள். பார்வையற்ற ஒருவரால் எப்படி இவ்வளவு துல்லியமாக, வண்ணத்துடன் சூழலை, நிகழ்ச்சிகளை எழுத முடிகிறது என வாதிட்டார்கள். சிலர் சந்தேகத்துடன் நேரில் வந்து அவரைப் பரிசோதனையும் செய்திருக்கிறார்கள். பார்வையின்மை என்பது ஒரு குறைபாடு, அதற்கு மேல் தன்னை அது பாதிக்கவில்லை என்கிறார் வேத் மேத்தா
85 வயதைக் கடந்த அவர் அமெரிக்காவில் வசித்துவருகிறார். தன் நினைவுகளில் இன்னும் இந்தியாவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறார் வேத் மேத்தா.
25. 3. 20