அந்தத் தீவு முழுவதும் தென்னை மரங்கள் நிரம்பியிருந்தன. மிக உயரமாக இருந்த தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் தன் வாழ்க்கையில் பெரிய அனுபவம் எதுவுமில்லையே எனப் புலம்பிக் கொண்டிருந்தது.
தென்னை அதற்குப் பதில் தரவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தத் தேங்காய் காலடியில் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்து எத்தனை அழகாகயிருக்கிறது. அதில் பயணம் போனால் எவ்வளவு ஆசையாக இருக்கும் என ஏங்கியது.
முடிவில் ஒரு நாள் அந்தத் தேங்காய் மரத்திலிருந்து உதிர்ந்து கடலில் விழுந்தது. அலையாடும் கடலை அது கண்டிருந்த போதும் ஒரு போதும் இப்படி மிதந்து களித்ததில்லை. ஆகவே சந்தோஷமாக அது கடலில் செல்ல ஆரம்பித்தது.
தீவை விட்டு வெகு தூரம் வந்தபிறகு அந்தத் தேங்காய் மீன்களைக் கண்டது. சண்டையிடுவது போல மீன்கள் வந்து மோதிப் போயின. ஒரு மீனும் அதோடு இணக்கம் காட்டவேயில்லை. அலைகளில் இழுபட்டு அந்தத் தேங்காய் கடலில் மிதந்து போய்க் கொண்டேயிருந்தது. எங்கே போகிறோம் என அதற்குத் தெரியவில்லை.
முரட்டுச் சூரியன் பகலில் அந்தத் தேங்காயை உருட்டி விளையாடியது. நிலவு அந்தத் தேங்காயின் முதுகினை தடவி ஆற்றுப்படுத்தியது. கடலென்பது முடிவில்லாதது என்பது அப்போது தான் தேங்காய் தெரிந்து கொண்டது.
இருப்பிடத்திலிருந்து வெளியேறிய பிறகு தானே அதன் இயல்பும் அருமையும் புரிகிறது எனத் தேங்காய் தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.
கடலில் பறந்தலையும் சிறு பறவை ஒன்று அதன் அருகில் வந்து சுற்றி “விசித்திரமாக இருக்கிறாய். நீ ஏன் கடலுக்குள் மூழ்கவில்லை“ எனக்கேட்டது.
“நான் கடல் உயிரியில்லை. கடலில் சிக்கிக் கொண்டவன்“ என்றது தேங்காய்.
“அப்படியானால் தப்பிப் போகவேண்டியது தானே“ என்றது பறவை.
“கடல் கொண்டு செல்லும் இடத்திற்குத் தான் நான் போக முடியும். என்னால் தனியே செல்ல முடியாது“ என வருத்தமாகச் சொன்னது தேங்காய்.
“பாவம் உன் வாழ்க்கை. உன்னால் ஒரு போதும் உன் பிறப்பிடம் போகவே முடியாது“ என்றபடியே பறவை பறந்து போனது.
இரவும் பகலும் அந்தத் தேங்காய் கடலில் அலைக்கழிந்தது. பின்பு கடல் அதைக் கரையை நோக்கி ஒதுக்கியது. ஈரமணலில் ஒதுங்கிக் கிடந்த அந்தத் தேங்காயை இரண்டு சிறுவர்கள் கண்டெடுத்தார்கள். பந்து போலக் காலால் எத்தி விளையாடினார்கள். சலிக்கும் வரை விளையாடிவிட்டுத் தூர எறிந்து போனார்கள்.
தேங்காய்ச் சொன்னது.
“பேரனுபவம் கிடைத்துவிடுவதால் மட்டும் வாழ்க்கை சிறப்பாகிவிடாது. எல்லா அனுபவங்களும் சொல்லப்படாத துயரத்தின் தொகுப்புகளே ` என்றபடியே ஒடுங்கிக் கொண்டது
பின்பு அந்தத் தேங்காயை யாரும் கண்டுகொள்ளவேயில்லை. எப்போதாவது காற்று மட்டுமே அதை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
••
29.3.20