அந்த நூலகத்திலிருந்த புத்தக அடுக்கில் இரண்டு நாவல்கள் அருகருகே இருந்தன. ஒரு நாவலின் கதாநாயகன் இன்னொரு நாவலின் கதாநாயகியை ரகசியமாகக் காதலித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த நாவலுக்குள் எட்டிப்பார்த்து அவளுடன் பேசவும் பழகவும் முற்பட்டான். அவளும் அவனை விரும்பினாள்.
ஆனால் தனது காதலை நாவலின் மற்ற கதாபாத்திரங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே எனக் கவலைப்பட்டாள். ஆகவே கவலையோடு விலகியே இருந்தாள். நாவலாக இருந்தாலும் அறியாத ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதை மற்ற கதாபாத்திரங்கள் ஒத்துக் கொள்வார்களா என்ன.
தன் பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி நாவலாசிரியனிடம் முறையிடலாம் என்றால் அவன் நாவலை எழுதி முடித்த கையோடு விலகிப் போய்விட்டானே என அந்தப் பெண் வருத்தப்பட்டாள்..
நாவலுக்குள் வாழ்பவர்கள் தங்கள் விதியை தாங்கள் வாழ்ந்தே தீரவேண்டும்.
அதை மீறிக் காதலிக்கும் பெண்ணை அந்த நாவலின் பிற கதாபாத்திரங்கள் ஒன்று சேர்ந்து கண்டித்தன. அவளை நாவலுக்குள்ளாக ஒளித்து வைக்க முடிவு செய்தன.
அவளோ நீங்கள் விரும்பினாலும் என்னை ஒன்று செய்ய முடியாது. நாவலில் எனது இடம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அதை வேறு கதாபாத்திரம் ஒரு போதும் அடைய முடியாது என்றாள்.
அது உண்மை என உணர்ந்த மற்ற கதாபாத்திரங்கள் இந்த நாவலில் நீ திருமணமானவள். உன் கணவன் ஒரு வழக்கறிஞர். அதை மறந்துவிடாதே எனக்கூச்சலிட்டன.
அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை எனக் கோபமாகச் சொன்னாள்.
கண்டிப்பையும் எச்சரிக்கையும் மீறி அவர்கள் சந்தித்தார்கள். காதலித்தார்கள். அடுத்த நாவலிலிருந்து வரும் காதலன் உங்கள் நாவலில் எனக்குச் சிறியதொரு இடம் கொடுங்கள். உங்களுடன் தங்கிவிடுகிறேன் என்று மன்றாடினான்.
எந்த நாவலும் அடுத்த நாவலின் கதாபாத்திரத்திற்கு இடம் தருவதில்லை என்றன கதாபாத்திரங்கள்.
அப்படியில்லை. ஒரு நாவலின் கதாபாத்திரங்கள் இன்னொரு நாவலின் கதாபாத்திரங்களை நினைவுபடுத்தத் தானே செய்கின்றன என்றான் அக் காதலன்.
அப்படி இருக்கலாம். பூமியில் கூட ஒரு மனிதன் தன் இடத்தை விட்டு வெளியேறி இன்னொரு இடத்தில் வசிக்க முடியும். ஆனால் நாவல்களில் முடியவே முடியாது என்று வாதிட்டன கதாபாத்திரங்கள்.
எவ்வளவு மன்றாடியும் எவ்வளவு காத்திருந்தும் அந்தக் காதலர்களால் ஒன்று சேரமுடியவேயில்லை.
நாவலுக்குள் வசிப்பவர்கள் நித்தியமானவர்களாக இருக்கலாம். ஆனால் நாவலின் விதி விசித்திரமானது. மீற முடியவே முடியாதது.
30/3/20
