குற்றத்தின் புதிர்பாதை

.

The Stranglers of Bombay என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்தேன். 1959 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்கியவர் டெரன்ஸ் ஃபிஷர். அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஜெலாக் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். தக்கீகள் என்று அழைக்கப்படும் வட இந்தியக் கொள்ளையர்களைப் பற்றிய படம். புனைவாக எழுதப்பட்ட கதை. ஆனால் பரபரப்பாக படம் செல்கிறது.

1830களில் காளி உபாசகர்கள் எனச்சொல்லிக் கொண்ட வழிப்பறிக் கொள்ளையர்கள் பயணிகளை மடக்கி அவர்களின் நகைபொருட்களைப் பறித்துக் கொண்டு கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கி கொலை செய்து விடுகிறார்கள். இந்தக் கூட்டத்தைக் கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் கதையே இப்படம்.

கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டன் ஹாரி லூயிஸிற்கு ஒரு புகார் வருகிறது. வணிகம் செய்யவும் திருமணத்திற்காகவும் சென்ற பலரையும் காணவில்லை, என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை என்கிறார்கள்.

அடையாளமே இல்லாமல் மறைந்து போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிக்கு கேப்டன் ஸ்மித்தை நியமிக்கிறார். உயரதிகாரி ஹென்டர்சன். காரணம் ஸ்மித் அவரது நண்பரின் மகன். இது ஹாரி லூயிஸிற்கு ஏற்புடையதாக இல்லை.

ஒரு நாள் புலி வேட்டைக்குப் போன இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களைக் கண்டுபிடிக்கிறார் ஹாரி. அந்த இடத்தைத் தோண்டும் போது அது வழிப்பறிக் கொள்ளையர்களின் வேலை என்று அறிந்து கொள்ள முடிகிறது அத்தோடு ஹாரியின் வேலையாள் ராம் தாஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது சகோதரனை திடீரென ஒரு நாள் தான் கண்டதாகச் சொல்கிறான். அவனைத் தேடச் செல்ல ராம் தாஸை அனுப்பி வைக்கிறார் ஹாரி. தேடப்போன ராம் தாஸை காணவில்லை. அவனது கைதுண்டிக்கபட்டு வீசி எறியப்படுகிறது.

அந்த அதிர்ச்சியில் தானே வழிப்பறிக் கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதற்காகத் துப்பறிய ஆரம்பிக்கிறார் ஹாரி. ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் வழிப்பறிக் கொள்ளையர்களில் இருவரை ஒரு நிகழ்வில் மடக்கிப் பிடித்துக் கைது செய்துவிடுகிறார். ஆனால் அவர்களை எளிதாகத் தப்ப வைத்துவிடுகிறார்கள். அத்தோடு இந்தச் செயலுக்குக் காரணமாக இருந்த ஹாரியை மறைந்து தாக்குகிறார்கள்

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஹாரி எப்படியும் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது என முனைந்து ரகசியங்களை ஒவ்வொன்றாக அறிய ஆரம்பிக்கிறார். அப்போது தான் அவர்கள் காளியின் பெயரால் இயங்கி வரும் கொடூர கொலையாளிகள் என்பதைக் கண்டறிகிறார்.

ஹாரி அந்தக் கொள்ளையர்களிடம் எதிர்பாராமல் சிக்கிக் கொள்கிறார். அவர் எப்படி மீண்டார். கொள்ளையர்களை என்ன செய்தார் என்பதே படத்தின் கதை

பிரிட்டிஷ் அதிகாரிகளின் குடியிருப்பு. அவர்களின் வாழ்க்கை முறை படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஹாரியின் மனைவி மற்றும் அவரது வேலையாள் வழியே அன்றை பிரிட்டிஷ் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதுபோலவே கொள்ளையர்கள் கூட்டத்தில் உள்ள அழகி தனிக்கவர்ச்சி கொண்டிருக்கிறாள்.

வணிகக்கூட்டம் ஒன்றாகப் பயணிப்பதும் அவர்களை வழிப்பறிக் கொள்ளையர் தாக்கி சூறையாடுவதும். அந்த வண்டிகள் மொத்தமாகக் காணாமல் போய்விடுவதும் முக்கியமான காட்சி.

இஸ்மாயில் மெர்சண்ட் தயாரித்த The Deceivers என்ற ஹாலிவுட் படமும் இதே கதைக்களத்தைக் கொண்டதே.

0Shares
0