குறுங்கதை 111 ஒற்றைக்கை

முதற்பொய் சொன்ன போது பரமுவின் வயது ஆறு.

அப்பா அவனைக் கடைக்குப் போய் தீப்பெட்டி ஒன்று வாங்கி வரச் சொல்லியிருந்தார். ஆனால் அவன் கடைக்குப் போகவில்லை. மாறாக அந்த நாலணாவை கொடுத்துப் பால் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.

வீட்டிற்கு வெறும் கையோடு வந்த போது அப்பா கோவித்துக் கொண்டார். ஒற்றைக்கையுள்ள பிச்சைக்காரன் ஒருவன் தன்னிடமிருந்த காசை பறித்துக் கொண்டான் என்று முதற்பொய்யைச் சொன்னான் பரமு.

அப்பா அதை நம்பிவிட்டார். வேறு எதையும் கேட்கவில்லை. இவ்வளவு எளிதானதா ஒரு பொய் எனப் பரமு சந்தோஷப்பட்டான். எப்படி இவ்வளவு சாதுர்யமாகப் பொய் சொன்னோம் என தன்னைப் பாராட்டிக் கொண்டான்.

அதன் பிறகான நாட்களில் அப்பா ஒருவேளை ஒற்றைக்கை பிச்சைக்காரன் இருக்கிறானா என விசாரிக்கப் போகிறார் என நினைத்து அவனாகவே நகரிலிருந்த பிச்சைக்காரர்களில் எவராவது ஒற்றைக் கையோடு இருக்கிறார்களா எனத் தேட ஆரம்பித்தான். ஆனால் அப்படி ஒரு ஆளே இல்லை.

ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இருந்த பிச்சைக்காரர்கள் எல்லோருக்கும் கைகள் இருந்தன. அப்பா உண்மையைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது எனப்பயமாக இருந்தது. இதனால் அவனாக ஒற்றைக்கைப் பிச்சைக்காரனை பற்றிய புதுக்கதைகளை அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தான்.

தனது நண்பன் ரவி கடையில் இருந்து வடை வாங்கிக் கொண்டு வந்த போது ஒற்றைக்கை பிச்சைக்காரன் பறித்துக் கொண்டு ஒடிவிட்டான் என்றும், சில நேரம் வீட்டின் அருகிலுள்ள பிள்ளையார் கோவில் முன்பு அவன் மண்ணில் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் பொய் சொன்னான்.

அம்மா பயந்து போய் அந்தப் பிச்சைகாரன் பக்கம் போகாதே என்றாள். தனது பொய்யை அம்மாவும் நம்புகிறாள் என்பது பரமுவிற்கு அதிக சந்தோஷம் தந்தது. ஆனால் அவன் சொன்ன பொய்யை அவனது தங்கை சாந்தி மட்டும் நம்ப மறுத்தாள். அவள் ஒற்றைக்கை பிச்சைக்காரன் என ஒருவன் இல்லவேயில்லை என்று உறுதியாகச் சொன்னாள்.

அவளை எப்படி நம்ப வைப்பது என்று பரமுவிற்குப் புரியவில்லை. தானே அவளை அழைத்துக் கொண்டு போய் காட்டுவதாகச் சொன்னான்.

நீ பொய் சொல்றே என்று திரும்பவும் சாந்தி சொன்னாள்.

அப்பாவும் அம்மாவும் நம்பிய பிறகு இவள் ஏன் நம்ப மறுக்கிறாள் என்று ஆத்திரமாக வந்தது.

அவளை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக வீட்டின் பின்புறக் கொடியில் காய்ந்து கொண்டிருந்த அவளது பச்சை நிறப் பாவாடையை எடுத்துக் கொண்டு போய் கிணற்றினுள்  போட்டுவிட்டு அதை ஒற்றைக்கை பிச்சைக்காரன் திருடிக் கொண்டு போய்விட்டான் என்று சொன்னான்.

சாந்திக்குப் பிடித்தமான பாவாடையது. அவள் அழுதாள். ஒற்றைக்கை பிச்சைக்காரன் எதற்காக தன் பாவாடை திருடிக் கொண்டு போனான் என்று கோபம்  கொண்டாள். ஆனால் அவள் ஒற்றைக்கை ஆளை நம்ப ஆரம்பித்தாள்.

சில நேரம் அந்தப் பிச்சைக்காரன் தெருவில் வந்தால் கல்லால் எறிய வேண்டும் என்று கோபம் கொண்டாள். பரமு நிம்மதியாக தனது பொய்யை கண்டுபிடிக்க யாருமில்லை என்று சந்தோஷம் கொண்டான். அதன் பிறகு தேவையான பொழுதில் தான் உருவாக்கிய ஒற்றைக்கைப் பிச்சைக்காரனை பற்றிய கதைகளை சொல்லிக் கொண்டேயிருந்தான். வீடே அதை நம்பியது.

சில மாதங்களின் பிறகு ஒரு நாள் மதியம் சாந்தி எதையோ கண்டு பயந்தவள் போல சப்தமிட்டாள்.

சமையல் வேலையில் இருந்த அம்மா திடுக்கிட்டு என்னடீ எனக்கேட்டபடியே வாசலுக்கு வந்தாள்

வாசலில் உண்மையாக ஒற்றைக்கைப் பிச்சைக்காரன் ஒருவன் பரட்டை தலையுடன் கிழிந்த பை ஒன்றை அணிந்தபடியே நின்றிருந்தான்.

இவன் யார் என பரமுவிற்குத் தான் குழப்பமாக இருந்தது

••

0Shares
0