காலைக்குறிப்புகள் -4 மழையும் குடையும்

ரிச்சர்ட் கார்சியா என்ற கவிஞரின் கவிதை ஒன்றில் குடை ஒரு காலத்தில் சீனர்களின் முக்கியமான ஆயுதமாக விளங்கியது. இன்றோ அது வெறும் அலங்காரப் பொருள். குடை தன் வரலாற்றை மறந்துவிட்டது என்ற வரியை வாசித்தேன்.

குடை பற்றி உலகெங்கும் நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. குடை ஒரு காலத்தில் வசதியானவர்களின் அடையாளம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான் என்று ஒரு பழமொழி இருக்கிறது. மழைக்காலத்தில் தான் குடையை தேடுவார்கள். இன்று மழையோ வெயிலோ குடை என்பது கூடவே வைத்திருக்கும் பொருள்.

தொலைக்காட்சியில் விம்பிள்டன் நடக்கும் போது பார்வையாளர்கள் அத்தனை பேரும் குடைபிடித்தபடியே உட்கார்ந்து பார்ப்பதை கண்டிருக்கிறேன். அப்படி மழைக்குள்ளாகவும் விளையாட்டினை ரசிப்பது ஒரு பண்பாடு.

குடையின் தண்டில் இரகசிய கத்தி கொண்ட பதினாறு வகைக் குடைகளைச் சீன அரசர்கள் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் பிரெஞ்சு அதிபரின் பாதுகாப்புப் படையில் குடையை முக்கிய ஆயுதமாக வைத்திருந்தார்கள்.

என் பால்ய வயதில் கறுப்புக்குடையைத் தவிர வண்ணக்குடையைக் கண்டதேயில்லை. அதுவும் கிராமத்திலிருந்த எல்லா வீடுகளிலும் குடையிருக்காது.

அந்த நாட்களில் வெளிநாடு போய்விட்டு வந்த வீடுகளில் பர்மா குடையிருக்கும். சிலர் இலங்கையிலிருந்தும் குடை வாங்கி வருவார்கள். பெரிய குடை. அழகான கைப்பிடி கொண்டது. ஒரு குடைக்குள் குடும்பமே நனையாமல் போகலாம். அவ்வளவு பெரியதாக இருக்கும். ஆனால் வண்ணக்குடைகளை யாரும் வைத்திருந்ததில்லை.

பள்ளிக்குப் புதிதாக ஆசிரியராக நகரிலிருந்து வந்த சைரா பேகம் ஆசிரியர் தான் முதன்முதலாக ரோஸ் வண்ண பூப்போட்ட குடையைக் கொண்டு வந்தார். அது கிராமவாசிகளுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்தது. எங்கேயிருந்து இத்தனை அழகான குடையை அவர் வாங்கினார் என்று சக ஆசிரியர்கள் ஆச்சரியத்துடன் கேட்டார். அது பர்மாக் குடை என்றே அவரும் சொன்னார்.

வண்ணக்குடைகள் மழை தாங்காது என்று கிராமவாசிகள் பேசிக் கொண்டார்கள்.

ஒன்றிரண்டு வயதானவர்களைத் தவிர வேறு எவரும் வெயிலுக்குக் குடை பிடித்து நான் கண்டதில்லை. ஆனால் மழைக்காலத்தில் ஓலைக்குடைகளைப் பிடித்தபடியே தலையில் கோணிப்பையை அணிந்தபடியே ஆட்கள் போய்வருவதைக் கண்டிருக்கிறேன்.

எல்லா ஆசிரியர்களும் ஒரே போலக் கறுப்புக் குடை கொண்டு வந்த காரணத்தால் எந்தக் குடை யாருடையது என்ற குழப்பம் வந்துவிடும். அதற்காக ஆசிரியர்கள் வகுப்பு ஜன்னலை ஒட்டியே தங்கள் குடையை வைத்துக் கொள்வது வழக்கம்.

வண்ணக்குடைகள் அறிமுகமான சில வருஷங்களில் மடக்குக் குடைகள் வந்தன. அது உண்மையில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாகக் கிராமவாசிகள் பேசிக் கொண்டார்கள். ஹேண்ட்பேக் ஒன்றில் குடையை மடக்கி வைத்துக் கொண்டு போவது எத்தனை வசதியானது. அதுவும் தானே விரிந்து கொள்ளும் குடை என்பது மேஜிக் போலவே கருதப்பட்டது.

அடைமழைக்காலத்தில் பேய்க்காற்றில் ஒரு குடை வானில் பறந்து போனதை ஒரு நாள் கண்டேன். வானில் அந்தக் குடை நீண்ட நேரம் சுற்றிக் கொண்டேயிருந்தது.

அம்பிரல்லா என்ற ஆங்கில வார்த்தை லத்தின் மொழியின் “அம்ப்ரோஸ்” எனும் சொல்லிலிருந்து உருவானது. இதன் அர்த்தம் நிழல் என்பதாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் குடைகள் பெண்களுக்கான விஷயம். குடையில்லாமல் பெண் வெளியே வருவது நாகரீகமற்ற செயலாகக் கருதப்பட்டது.

இந்து, சமணம் மற்றும் பௌத்த சமயங்களில் குடை முக்கியமான அடையாளம். சத்ரா என்று குடை அழைக்கப்படுகிறது.

சத்ரா வருணனின் சின்னம், இது அரசாட்சியின் உருவகமாகவும் கருதப்படுகிறது. தெய்வ உருவங்கள் சத்ராவுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன, வஜ்ராயன பௌத்தத்தில், குடை எட்டு நற்குறிகள் கொண்டதாகச் சித்தரிக்கப்படுகிறது.

ஓலைக்குடையுடன் பௌத்த துறவிகள் பயணம் செல்லும் ஓவியங்கள் நிறைய உள்ளன. பாஷோவின் பயணத்தைச் சித்தரிக்கும் ஓவியங்களில் குடையோடு தான் எப்போதும் தோன்றுகிறார்.

நாட்டுப்புறக் கதைகளில் குடையோடு வரும் மனிதன் வெளியூர்வாசியாகவே சித்தரிக்கப்படுகிறான். குடையும் செருப்பும் பேசிக் கொள்ளும் கதைகள் கூட நம்மிடம் இருக்கின்றன.

with my umbrella

I part the branches

of the willow trees

என ஒரு கவிதை எழுதியிருக்கிறார் பாஷோ.

நாம் எல்லோரும் ஞாபகம் என்ற குடையை ஏந்தியபடியே தான் எப்போதும் செல்கிறோம். குடை என்பது வெறும் பொருளில்லை தானே

••

0Shares
0