நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஸ் சிங்கர் இட்டிஷ் மொழியில் எழுதியவர். இவரது நோபல் பரிசு ஏற்புரையில் தனது மொழியைப் பற்றிச் சிங்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
” language of exile, without a land, without frontiers, not supported by any government, a language which possesses no words for weapons, ammunition, military exercises”
இட்டிஷ் இறந்து போன மொழியாகக் கருதப்படுகிறது.
இறந்தவர்களின் கதையை எழுதுவதற்கு இறந்து போனதாகச் சொல்லப்படும் மொழியில் எழுதுகிறேன் என்கிறார் சிங்கர்.
இட்டிஷ் மொழியில் போர் கருவிகள். ஆயுதங்கள். ராணுவ பயிற்சிகள் பற்றிய சொற்கள் கிடையாது என்பது வியப்பான செய்தி.
தனது மொழி ஆங்கிலத்தை விடவும் சிறப்பானது. ஆங்கில மொழியில் லட்சக்கணக்கில் சொற்கள் இருக்கின்றன. அதை விட இட்டிஷ் மொழியில் குறைவே. ஆனால் இட்டிஷ் மொழியின் சொற்கள் மனிதர்களின் குணாம்சத்தை, ஆளுமையை, உணர்ச்சிகளைச் சொல்வதில் முன்னோடியாக இருக்கிறது. ஏழை என்ற ஒரு சொல்லுக்கு ஆங்கிலத்தில் நான்கோ ஐந்தோ சொற்கள் இருக்கின்றன. ஆனால் இட்டிஷ் மொழியில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. ஒவ்வொரு வகை ஏழையைக் குறிக்கவும் ஒரு தனிச்சொல். அது தான் இட்டிஷ் மொழியின் சிறப்பு என்கிறார்.
மிகக்குறைவானர்கள் படிக்கும் இட்டிஷ் மொழியில் ஏன் எழுதுகிறார் என்று கேட்டதற்கு விற்பனையாகும் எண்ணிக்கையை வைத்து புத்தகத்தின் தரத்தை முடிவு செய்யக்கூடாது. குறைவான மனிதர்கள் தன் கதையைப் படிக்கக் கூடும். ஆனால் அவர்கள் அந்தக் கதைகளைத் தனது தாய்மொழியில் படிக்கிறார்கள். மறந்து போன நினைவுகளை மீள் உருவாக்கம் செய்கிறார்கள். ஒருவகையில் இந்தக் கதைகளே அவர்களின் மீட்சி. மரபுத்தொடர்ச்சி என்றும் சிங்கர் கூறுகிறார்.
கென்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான நுகூகி வா தியோங் ஓ ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்கிறார். ஆனால் தனது தாய்மொழியில் தான் எழுதுகிறார்.
தனது எழுத்தின் வேலை அமெரிக்க மக்களை மகிழ்விப்பதில்லை. அழிந்து போன யூதர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதே. அதுவும் ஒரு மொழி அழியும் போது அதன் புராதன நினைவுகள் யாவும் சேர்ந்து அழிந்து போகின்றன. அதைக் காப்பாற்றவே தான் முயல்வதாகக் கூறுகிறார் சிங்கர்.
ஐசக் பாஷவிஸ் சிங்கர் போலந்தின், வார்சா நகரின் அருகிலிருந்த லியோன்சின் கிராமத்தில் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து, அவரது குடும்பம் அருகிலிருந்த மற்றொரு நகரான ராட்சிமினுக்கு இடம்பெயர்ந்தது. அவரது தந்தை ஒரு மதகுரு. வறுமையான யூத குடியிருப்பில் அவரது இளமைப் பருவம் முழுதும் கழிந்தது
1935-ஆம் ஆண்டுச் சிங்கர் போலந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். அவரது. மனைவியும் , மகனும் (இஸ்ரேல் சமீர்) ரஷ்யாவில் அடைக்கலம் ஆனார்கள். இருபது ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களை மறுபடி சந்தித்தார் சிங்கர்
அமெரிக்காவிற்கு வந்த போது சிங்கருக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது. தானாக முயன்று ஆங்கிலம் கற்றுக் கொண்டார். மொழி தெரியாமல் ஒரு நாட்டில் வசிப்பது எவ்வளவு சிரமமானது என்பதை எழுதியிருக்கிறார். சில காலம் இட்டிஷ் பத்திரிக்கை ஒன்றில் வேலை செய்தார் சிங்கர். பின்பு கதைகள் எழுதத் துவங்கிப் புகழ்பெற்றார்.
நோபல் பரிசு ஏற்புரையின் போது அவர் தனது மொழியின் சிறப்புகளைத் தான் முதன்மையாகச் சொல்கிறார். தன் மொழி பேசும் மக்களுக்கென ஒரு நாடில்லை என்பதைத் தான் வலியுறுத்துகிறார்.
தான் ஏன் குழந்தைகளுக்காக எழுதுகிறேன் என்பதற்குச் சிங்கர் சொல்லும் பத்துக் காரணங்கள் முக்கியமானவை.
1) Children read books, not reviews. They don’t give a hoot about the critics.
2) Children don’t read to find their identity.
3) They don’t read to free themselves of guilt, to quench the thirst for rebellion, or to get rid of alienation.
4) They have no use for psychology.
5) They detest sociology.
6) They don’t try to understand Kafka or Finnegans Wake.
7) They still believe in God, the family, angels, devils, witches, goblins, logic, clarity, punctuation, and other such obsolete stuff.
8) They love interesting stories, not commentary, guides, or footnotes.
9) When a book is boring, they yawn openly, without any shame or fear of authority.
10) They don’t expect their beloved writer to redeem humanity. Young as they are, they know that it is not in his power. Only the adults have such childish illusions.
சிங்கர் சொல்வது போலப் புத்தக விமர்சனம் படித்து எந்தச் சிறுவனும் விருப்பமான புத்தகத்தைத் தேர்வு செய்வதில்லை.
பிடிக்காத புத்தகத்தை அப்படியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள். விந்தையான, விசித்திரமான விஷயங்களை விரும்புகிறார்கள். அனுபவிக்கிறார்கள். கற்பனையின் எல்லையற்ற சாத்தியங்களே அவர்களைச் சந்தோஷப்படுத்துகின்றன.
ஒரு தவளை தன்னோடு பேசும் எனச் சிறுவன் நம்புகிறான். தானும் தவளையோடு பேச விரும்புகிறான். பெரியவர்களுடன் தவளை ஒருபோதும் பேசுவதுமில்லை. பெரியவர்கள் தவளையை ஒரு அரசனாகக் கற்பனை செய்து கொள்வதுமில்லை.
“All grown-ups were once children… but only few of them remember it.” என்று குட்டி இளவரசன் நாவலில் ஒரு வரி வருகிறது. அது தான் உண்மை
சிங்கர் தனது பால்ய நினைவுகளை மறக்கவேயில்லை. அதிலும் பால்ய வயதில் கேட்ட கதைகளைத் துல்லியமாக நினைவில் வைத்திருந்து அதற்கு நவீன உருவம் கொடுத்திருக்கிறார்.
சிங்கரை வாசிக்கையில் கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் நினைவில் வந்து போகிறார். இருவரும் சொல்லித் தீராத கதைகள் கொண்ட கதைசொல்லிகளே.
••
