தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தை, சகோதரன் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூலை வாசித்தேன்.
இதில் தனது 17 வயதில் தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் உள்ள அவரது வரிகள் பின்னாளில் அவரது கதையின் குரலாக ஒலிப்பதைக் காண முடிகிறது.
ஒரு தந்தைக்கு மகன் இப்படிக் கடிதம் எழுதுவானா என வியக்க வைக்கிறது. பிரான்ஸ் காஃப்கா தனது தந்தையின் கெடுபிடிகள் கட்டுப்பாடுகள் பற்றி ஒரு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதினார். ஆனால் அதைத் தந்தைக்கு அனுப்பவில்லை. தாயிடம் தான் கொடுத்தார். அது போன்ற மனவுணர்வு கொண்ட தஸ்தாயெவ்ஸ்கியின் கடிதம் அவரது தந்தைக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது
இந்தக் கடிதம் ஒருவகையில் அவரது குற்றமும் தண்டனை நாவலில் வரும் ரஸ்கோல்னிகோவ் கதாபாத்திரம் எழுதிய கடிதம் போலிருக்கிறது. நாவலிலும் ரஸ்கோல்னிகோவ்விற்கு அவனது தாய் ஒரு கடிதம் எழுதியிருப்பார். அது மறக்க முடியாத கடிதம். கவிஞர் தேவதச்சன் ரஸ்கோல்னிகோவ்விற்கு ஒரு கடிதம் என்று ஒரு கட்டுரையைக் கல்குதிரை வெளியிட்ட தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில் எழுதியிருக்கிறார். இத்தனை கடிதங்களிலும் ஒரு ஒப்புமை உள்ளது. அது தந்தையிடம் மன்றாடுவதாகும்.
தஸ்தாயெவ்ஸ்கி மிலிட்டரி அகாதமியில் படித்துக் கொண்டிருக்கிறார். வறுமையான சூழ்நிலை. புத்தகம் வாங்கப் பணமில்லை. நல்ல குளிராடைகள் இல்லை. முறையான காலணிகள் கிடையாது. தேநீர் அருந்துவதற்குக் கூடக் கையில் சில்லறை இல்லை. மற்ற மாணவர்களைப் போல எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க இயலவில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் மே மாதம் 10,1838.ல் தந்தையிடம் பணம் கேட்டுக் கடிதம் எழுதுகிறார்.
அதில் இப்படிப் பணம் கேட்பதற்காக அவர் வருத்தப்படுகிறார். தந்தையின் கஷ்டங்களைத் தான் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார். தான் சிறு சந்தோஷங்களைக் கூடக் கைவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்துவதைக் கூறுகிறார். புத்தகங்கள் கூட வாங்க முடியாமல் எப்படிப் படிப்பது என்று கேட்கிறார். எப்படியாவது பணம் அனுப்பி உதவி செய்யுங்கள் என்று மன்றாடுகிறார்.
தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை டாக்டர் மிகைல் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி அவரது தாய் மரியா எழுதிய குறிப்பில் அவர் குழந்தைகளிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர். அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாதவர் என்றே குறிப்பிடுகிறார்.
மிதமிஞ்சிய குடி. முன்கோபம். மனைவியோடு சதா சண்டையிடுவது. பிள்ளைகளை அடித்து உதைப்பது என்று தான் தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை இருந்திருக்கிறார். அவர் ஒரு மருத்துவர். கிராமப்புற மருத்துவமனை ஒன்றில் வேலை செய்தவர். உள்ளூர் விவசாயிகளுடன் அவருக்குச் சண்டை. அதன் காரணமாக நாட்டுச்சாராயத்தை அதிகமாக அவர் வாயில் ஊற்றிக் கொன்றுவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தந்தையின் எதிர்பாராத மரணம் தஸ்தாயெவ்ஸ்கியை வலிப்பு நோயிற்கு ஆளாக்கியது.
கரமஸோவ் சகோதரர்கள் நாவலில் வரும் தந்தையைப் போலத் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தையும் இருந்திருக்கிறார். நாவலில் வரும் தந்தை கரமஸோவ் மிகவும் வசதியானவர். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை ஏழை.
பதினாறு ரூபிள் பணம் கேட்டு தந்தைக்குத் தஸ்தாயெவ்ஸ்கி கடிதம் எழுதுகிறார். இந்தப் பணம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதா. எப்படித் தன் படிப்பை முடித்தார் என்ற விபரங்கள் கடிதத்தில் இல்லை
ஜோசப் பிராங் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்து ஏழு தொகுதிகளாக எழுதியிருக்கிறார். அதில் தஸ்தாயெவ்ஸ்கியின் இளமைப்பருவம் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. சகோதரன் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் படிப்பைக் கவனித்துக் கொள்கிறான். சகோதரனால் தான் அவர் அரசியல் அறிக்கைகளை வெளியிட்டதாகக் கைது செய்யப்படுகிறார். சைபீரிய அனுப்பி வைக்கப்படுகிறார். தந்தையை விடவும் தனது சகோதரனை தஸ்தாயெவ்ஸ்கி அதிகம் நேசித்தார். அவருக்கே அதிக கடிதங்கள் எழுதியிருக்கிறார்
இந்தத் தொகுப்பிலே சகோதரனுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் அவனது படைப்புத்திறனைப் பாராட்டி எழுதுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி.
தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் எப்போதும் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறவர்கள். தன் மனசாட்சியோடு பேசுகிறவர்கள். தன்னை வெறுப்பவர்களிடம் அன்பு செலுத்த முற்படுகிறவர்கள். அவரது பெண் கதாபாத்திரங்களில் அவரது அம்மா மரியாவின் சாயல் எப்போதும் வெளிப்படவே செய்கிறது.
ரஸ்கோல்னிகோவ் குற்றமும் தண்டனை நாவலில் ஒரு கொலை செய்கிறான். குற்றத்தை அவன் மனதிற்குள் ஒத்திகை பார்த்தபடியே இருக்கிறான். கொலை எளிதாக நடந்துமுடிந்துவிடுகிறது. ஆனால் குற்றமனது கொந்தளித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு காட்சியில் ரஸ்கோல்னிகோவ் அடிபட்ட உணர்வோடு நியாயமும் ஆறுதலும் கொண்ட எதையேனும் நாமாகக் கற்பனை செய்து கொள்ள முடியும் தானே! என்று கேட்கிறான்.
அது தான் இந்தக் கடிதத்தின் குரல்.
கடவுளின் அருளால் மீட்சி கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை இந்தக் கடிதத்தில் வெளிப்படுகிறது. இதுவும் அவரது கதாபாத்திரங்களின் மனநிலையே. இந்த ஊசலாட்டத்தை அவரது கதாபாத்திரங்கள் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த உலகில் தன்னை விட வருத்தமானவர்கள் எவரும் இல்லை என்றே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் எப்போதும் நினைக்கிறார்கள். அந்த எண்ணம் எங்கிருந்து துவங்கியது என்பதற்கான விடையே தஸ்தாயெவ்ஸ்கியின் இந்தக் கடிதம்.
••
