
எல்லா சாதனைகளுக்கு பின்னும் எளிய மனிதர்களின் உதவியும் உழைப்பும் அடையாளம் தெரியாமல் போய்விடுவது போல எவரெஸ்ட் சாதனைக்கு பின்னும் நுற்றுக்கணக்கான ஷெர்பா எனப்படும் நேபாளிகளின் கடும் உழைப்பும் உதவியும் அடையாளம் தெரியாமலே போய்விட்டிருக்கின்றது.
எவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் என்று யாவருக்கும் தெரியும். ஆனால் எவரெஸ்ட் என்பது தாமஸ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளரின் பெயர் என்பதோ, இந்தியாவின் நிலப்பரப்பை துல்லியமாக அளவிடுவதற்காக முதன் முதலாக நடைபெற்ற நில அளவைபணியை தலைமை ஏற்று நடத்தியவர் இவர் என்பதோ பெரும்பான்மையினர் அறிந்திருப்பதில்லை.
பூர்வ குடி மக்களின் நிலங்களை ஆக்ரமித்துக் கொண்டு புதிய தேசங்களை கண்டுபிடித்ததாக பெயர் சூட்டி மகிழ்வது வெள்ளைகார்கள் காலம் காலமாக செய்து வரும் மோசடி. அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் என்ற பெயர் மாற்றம் பெற்ற பல பூர்வீக நிலங்கள் வெள்ளைக்காரர்களின் அதிகார வெறியால் தங்களது சுயத்தை இழந்ததையும் பூர்வ குடிகள் அழித்து ஒழிக்கபட்டதையும் சரித்திரத்தை உன்னிப்பாக வாசிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டும் அப்படி பெயர் மாற்றம் பெற்ற ஒன்றே. இமயமலையின் உயர்ந்த சிகரங்களில் ஒன்றான இதை நேபாளிகள் சாகர்மாதா என்றும் திபேத்தியர்கள் சோமுலிங்மா என்றும் காலம்காலமாக அழைத்து வந்தனர். இந்தியாவில் இமயமலை கைலாயம் என்று அழைக்கபட்டது.
கர்னல் வில்லியம் லாம்டன் என்ற ஆங்கிலேயர் 1802ம் ஆண்டு தி கிரேட் இண்டியன் ஆர்க் எனப்படும் இந்திய நில அளவைப் பணியை மேற்கொண்டார். இந்தப் பணி சென்னையின் பரங்கிமலையில் துவங்கியது. 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இப்பணியின் பாதியில் லாம்டன் இறந்து போய்விடவே தலைமைப் பொறுப்பு ஏற்ற தாமஸ் எவரெஸ்ட் இப்பணியை சிறப்பாக செய்து முடித்தார்.
அவருக்கு பின்பு இந்த பணியை மேற்கொண்ட ஆண்ட்ரு ஸ்காட் வாக் என்ற பிரிட்டீஷ் ராணுவ அதிகாரியின் காலத்தில் இமயமலைத் தொடரை அளவிடும் பணி நடைபெற்றது. அப்போது நிலஅளவை துறையில் பணியாற்றிய ராதாநாத் சர்க்கார் என்பவர் துல்லியமான கணித முறையை பயன்படுத்தி உலகின் மிக உயரமான சிகரம் இமயமலையின் பதினைந்தாவது சிகரம் என்று கண்டுபிடித்து அதை தனது மேலதிகாரியிடம் அறிவித்தார்.
அந்த அறிவிப்பை ஆராய்ந்த ஆண்ட்ரு 28176 அடி உயரமுள்ள இந்தச் சிகரத்திற்கு தனது முன்னோடியான தாமஸ் எவரெஸ்ட் என்ற பிரிட்டீஷ் அதிகாரியின் பெயரை வைப்பது என்று முடிவு செய்து அந்த சிகரத்திற்கு மவுண்ட் எவரெஸ்ட் என்று பெயர் சூட்டினார். இந்த அறிவிப்பு 1865 ஆண்டு வெளியிடப்பட்டது. இன்றும் பௌத்த துறவிகளும் நேபாளிகளும் எவரெஸ்டை தங்களது பராம்பரிய சொல்லில் தான் அழைத்து வருகிறார்கள்.
இந்தியாவை சுற்றி இயற்கை அமைத்த அரண் தான் இமயமலை. இன்னும் முழுமையாக ஆராயப்படாத இந்த அரண் பனிமூடியது. மேகங்கள் உரசும் எழில் கொண்டது. ஹிம் என்றால் பனி, ஆலயா என்றால் கோவில். பனி தெய்வத்தின் உறைவிடம் எனப்படும் இமயத்தை இந்தியர்கள் கடவுளின் வீடு என்று நம்பி வருகிறார்கள் . பௌத்தர்களும் அது புத்தரின் உறைவிடம் என்று வழிபடுகிறார்கள். இன்று வரை பௌத்த துறவிகள் இமயமலையை வழிபடுவதை ஒரு சல்ங்காகவே வைத்திருக்கிறார்கள்.
பல வருடமாக உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சியை அடைவது மிக பெரிய சவாலாக இருந்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள மலையேறுபவர்கள் இந்த சவாலை சந்திப்பதற்காக ஆண்டு 50 வருடமாக முயன்று கொண்டிருந்தனர். முடிவில் 1953 ஆண்டு மே மாதம் 29 தேதி எட்மண்ட் ஹிலாரி என்று நியூசிலாந்து வீரரும் டார்ஜலிங்கை சேர்ந்த நேபாளியான டென்சிங் நார்கேயும் எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர். இன்று வரை முன்னோடி சாதனையாக அது கருதப்படுகிறது. இந்த 50 வருடங்களுக்குள் எவரெஸ்டின் உச்சியை 1200க்கும் மேற்பட்டவர்கள் தொட்டிருக்கிறார்கள்.
இதில் ஷெர்பா அப்பா எனப்படும் நேபாளி ஆக்ஸிசன் உதவியின்றி எவரெஸ்ட் பயணம் மேற்கொண்டு உச்சியை அடைந்திருக்கிறார். அத்தோடு 13 வருடத்தில் 12 முறை எவரெஸ்ட் உச்சியை அடைந்த வீரரும் இவர் ஒருவரே.
ஷெர்பா எனப்படும் நேபாளிகள் புத்தமதத்தை தழுவியர்கள். இந்தியாவில் இருந்து நேபாளித்திற்கு இடம்பெயர்ந்தவர்கள். யாக் எருதுகளை பராமரித்து அதை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். கடுமையான உழைப்பாளிகள். ஷெர்பா என்பதற்கு கிழக்கிலிருந்து வந்தவர்கள் என்று பொருள். இன்று வரை எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு துணை புரிகின்றவர்கள் இந்த ஷெர்பாக்கள் தான். இவர்கள் பனிக்கரடி போன்றவர்கள் எவ்வளவு மோசமான பனிப்பொழிவின் போதும் இவர்களால் மலையேற முடியும். அத்தோடு வழிகாட்டுதலில் இவர்களை போல துல்லியமாக எவரும் செயல்பட முடியாது.
எவரெஸ்ட் உச்சியை எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங்கும் அடைவதற்கு துணையாக நானுறு பேருக்கும் அதிகமாக உதவியிருக்கிறார்கள். மலையேற்ற குழுவிலே நுற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். மலையின் ஒவ்வொரு தளத்திலும் கேம்ப் அமைக்கவும் அவர்களுக்கு தேவையான உணவு சமைக்கவும், சுமைகளை துக்கி வரவும் மருத்துவம் செய்யவும் வழிகாட்டுவதும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் துணை வருவார்கள்.
ஒரு முறை எவரெஸ்ட் மலையை ஏறுவதற்கு ஒரு ஆளுக்கு குறைந்த பட்சம் ஆகும் செலவு 75000 டாலர். இந்திய மதிப்பில் நாற்பது லட்ச ரூபாய். பணமிருந்தால் மட்டும் மலையேறிவிட முடியாது. இதற்காக நேபாள அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்காக காத்திருப்பவரிகள் பட்டியலே இரண்டாயிரத்திற்கும் மேலாக உள்ளது
இவ்வளவு சிரமங்களை தாண்டி மலையேறி எவரெஸ்ட் உச்சியை அடைந்த டென்சிங் தனது மலையேற்ற அனுபவங்களை தொகுத்து எழுதியுள்ளது தான் இந்த புத்தகம். நேபாளி குடும்பம் ஒன்றில் 11 வயது பையனாக பிறந்த டென்சிங் சிறுவயது முதலே மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனது பதின்வயதில் இவர் திருட்டுதனமாக மலையேறத் துவங்கினார். அத்தோடு பிரிட்டீஷ் மலையேற்ற குழுவோடு கூலியாக வேலை செய்து கொண்டு இமயமலையின் பல்வேறு சிகரங்களுக்கு ஏறியிருக்கிறார்.
ஷெர்பாக்கள் மிகுந்த தைரியசாலிகள் மற்றும் அசராத உழைப்பாளிகள். தனது சுய முயற்சியால் மலையின் நுட்பங்களை அறிந்த டென்சிங் ஹிலாரியுடன் இணைந்து 1953 ஆண்டு எவரெஸ்ட் பயணத்தை மேற்கொண்டார். முந்திய ஆண்டு அவர் மேற்கொண்ட இதே பயணம் கடுமையான பனி புயல் காரணமாக பாதியில் கைவிடப்பட நேர்ந்தது ஆகவே இந்த முறை அவர்கள் மிக கவனமாக பயணம் செய்தனர்.
எவரெஸ்டின் உச்சியில் முதலில் யார் கால் வைத்தது என்று ஒரு முறை பத்திரிக்கை பேட்டியில் டென்சிங்கிடம் கேட்ட போது தங்கள் இருவரில் யார் என்ற சேதியை தான் ஒரு போதும் சொல்லப்போவதில்லை என்றும் இது ஒரு கூட்டு முயற்சி என்று அறிவித்தார். ஆனால் புகைப்படங்கள் நிருபிக்கும் சாட்சி எவரெஸ்ட் உச்சியில் டென்சிங் மட்டுமே நின்று கொண்டிருக்கிறார் என்பதே.
இதை மறுக்கும் ஹிலாரி டென்சிங்கிற்கு புகைப்படம் எடுக்க தெரியாது என்ற காரணத்தால் அவரை தான் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அதனால் மட்டுமே தனது புகைப்படத்தை எடுக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்
எவரெஸ்ட் மலையேற்றத்தில் வெற்றி பெற்றவர்களை விடவும் பாதி பயணத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை அதிகம். பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டோ அல்லது எதிர்பாராமல் உடல்நலக்குறைவு ஏற்பட்டோ இறந்து போகின்றவர்கள் அதிகம். தனது பயணம் ஒன்றில் ஒரு பனிப்பாறையை தான் உடைத்த போது பல வருடத்திற்கு முன்பு மலையேற சென்ற ஒரு வெள்ளைக்காரனின் உடல் அப்படியே உறைந்து போயிருந்ததை தான் மீட்டு எடுத்ததாக டென்சிங் நினைவு கூர்கிறார்
மலையேற்றத்திற்கு விருப்பம் இருந்தால் மட்டுமே போதாது கடுமையான உடற்பயிற்சியும் மனப்பக்குவமும் தேவைப்படும். காரணம் உயரம் அதிகமாக அதிகமாக உடல் தன் இயல்பை இழந்து விடுவதோடு மிகப்பெரிய தனிமை மனதை வெகுவாக பாதிக்ககூடியது. பலநேரங்களில் அது பைத்தியநிலைக்கு ஒப்பாக இருக்கும் எனும் டென்சிங் அது போன்ற நிமிசங்களில் தான் தனியே மலையேறவில்லை என்றும் தன்னோடு புத்தரும் உடன் இருக்கிறார் என்று தான் நம்புவதாக குறிப்பிடுகிறார்.
இமயமலையின் உச்சியை அடைவதற்காக ஹிலாரியுடன் இணைந்து முறையான பாதை திட்டங்களையும் வரைபடங்களையும் அவர்கள் தயாரித்து கொண்ட விதம் பற்றியும் இந்த பயணத்தில் எதிர்படக்கூடிய இடையூறுகள் பற்றிய முன் தயாரிப்புகளை மேற்கொண்டதாகவும் நினைவுகூறும் டென்சிங் இந்தப் பயணத்தின் போது தனது குடும்பத்தாரிடமிருந்து அனுமதி பெற்று மலையேற்றம் செய்வது மிக உணர்ச்சிபூர்வமான செயலாக மாறிவிட்டிருந்தது காரணம் மனைவியும் குழந்தைகளும் அவர் மீது அத்தனை அன்பும் பாசமும் கொண்டிருந்தனர்
நீண்ட மலையேற்றத்தின் பிறகு எவரெஸ்ட் உச்சியை அவர்கள் அடைந்த போது டென்சிங் தன்னை மறந்து கூச்சலிட்டார். பதினைந்து நிமிசங்கள் உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சியில் தனியே நின்று இருந்த டென்சிங் உலகம் எத்தனை பிரம்மாண்டமானது. அழகானது என்று தன்னை அறியாமல் அழுததாக விவரித்திருக்கிறார்.
பௌத்த நம்பிக்கை கொண்ட டென்சிங் எவரெஸ்ட் உச்சியில் எதையாவது காணிக்கையாக புதைத்துவிட்டு வர விரும்பினார். அதன்படியே தனது மகள் நீமாவின் விருப்பபடி அவள் தந்து அனுப்பிய நீல நிற பேனா ஒன்றையும் கொஞ்சம் இனிப்புகளையும் எவரெஸ்ட் உச்சியில் புதைத்து விட்டு வந்தார். இன்றும் உலகின் உச்சியில் ஒரு பேனா மிக நிசப்தமாக புதையுண்டு கிடக்கிறது.
எவரெஸ்ட் பயணம் மேற்கொண்டிருந்த போதும் டென்சிங்கிற்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால் சரளமாக அவரால் ஏழு உலக மொழிகளில் உரையாட முடியும். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வெற்றியின் காரணமாக இவருக்கு பிரிட்டீஷ் அரசு மிக உயர்ந்த விருதை வழங்கியது. இந்திய அரசும் அவரை கௌரவித்தது. இவை யாவையும் விட புத்தரின் கருணை தான் இந்த சாதனையை தனக்கு வழங்கியது என்று நம்பும் டென்சிங் மலையேறுபவர்களுக்கான ஒரு நிறுவனம் ஒன்றை நிறுவி தொடர்ந்து இமயமலை பயணத்திற்கு உதவி செய்து கொண்டு வந்தார்
1986 ஆண்டு டார்ஜலிங்கில் இறந்து போன டென்சிங்கின் வாழ்வு ஒரு எளிய மனிதனின் கடுமையான உழைப்பிற்கும் இயற்கையை புரிந்து கொண்ட ஒரு மனதிற்கும் கிடைத்த வெற்றியாகும். டென்சிங்கின் மகனும் இன்று எவரெஸ்ட் மலையேறி சாதனை புரிந்திருக்கிறார்.
இன்றும் மனிதனின் காலடி படாத சிகரங்களில் சூரியன் தனியே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. மலையை ஒரு போதும் மனிதனால் வெற்றி கொள்ள முடியாது, அது இயற்கையின் புதிர் என்று தொடர்ந்து டென்சிங் பலமுறை குறிப்பிடுகிறார் . உண்மையும் அது தான்.
Ref; MAN OF EVEREST: The Autobiography of Tenzing. – James R. Ullman – Harrap London 1992.