
– கடவுளுக்கு நண்பன் சாத்தானுக்கு தோழன்.
கிளாஸ் கின்ஸ்கி (Klaus Kinski) உலகத் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கும் பலருக்கும் அறிமுகமான ஜெர்மானிய நடிகர். இன்னும் சிலர் கின்ஸ்கியின் பெயரை அறியாமலே அவரது படங்களை தொடர்ந்து பார்த்திருக்க கூடும். 132 படங்களில் நடித்தவர். நடிப்பில் பல புதிய பரிமாணங்களை உருவாக்கியவர்.
உலக சினிமாவில் எனக்கு பிடித்தமான நடிகர்களில் கின்ஸ்கி முக்கியமானவர்.
இவரது அகூர் தி ராத் ஆப் காட் (Aguirre, the Wrath of God )என்ற படத்தை நூறு முறைகளுக்கும் மேலாக பார்த்திருப்பேன். வெர்னர் ஹெர்சாக்கின் படங்களில் கதாநாயகனாக நடித்து உலகப்புகழ் பெற்ற நடிகர் இவர். கின்ஸ்கி நடிப்பதற்காகவே ஹெர்சாக் படங்களை உருவாக்குகிறார் என்று சொல்லுமளவு இருவரும் இணைந்து உருவாக்கிய படங்கள் அற்புதமாக அமைந்திருந்தன. ஹெர்சாக்கின் நெருக்கமான நண்பனாகவும் மிக மோசமான துரோகியாகவும் அறியப்பட்டவர்.
தான் கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடைப்பட்டவன். தான் எப்போது சாத்தான் ஆவேன் என்றோ எப்போது கடவுள் ஆவேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லும் கின்ஸ்கி நடிப்பின் உச்சநிலைகளை வெளிப்படுத்திய கலைஞன்.
இவரது தோற்றம் நடிகர் ரகுவரனை நினைவுபடுத்தக்கூடியது. சில வேளைகளில் கின்ஸ்கியின் உடல்மொழி ரகுவரனிடம் வெளிப்பட்டிருக்கிறது.மற்றபடி செவ்வியல் பூர்வமான நடிப்பு முறையிலிருந்து முற்றிலும் மாறிய நடிப்பு கின்ஸ்கியுடையது.
அவரே சொல்வது போல தன் நடிப்பு ஒரு அக எழுச்சி அது கட்டுப்பாடுகள் அற்றது. முன் முடிவுகள் இல்லாதது. முகபாவங்கள் மட்டுமின்றி தன் முழு உடலையும் காட்சியின் தன்மைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் எங்கே எந்த அளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் திறம்பட அறிந்திருந்தவர் கின்ஸ்கி.
ஹெர்சாக்கின் ஐந்து படங்களில் நடித்திருக்கிறார் கின்ஸ்கி. The Wrath of God (1972), Woyzeck (1979), Nosferatu the Vampyre (1979), Fitzcarraldo (1982), Cobra Verde (1987), ஹெர்சாக் கின்ஸ்கியை நினைவு கொள்ளும் போது குறிப்பிடுவது இவையே..
கின்ஸ்கியை இயக்குவது மிகச் சவாலான காரியம். அவர் கதாபாத்திரத்தின் உளப்பாங்கை தன் விருப்பபடி மனதில் உருவாக்கி கொள்ள கூடியவர். இசையமைப்பாளர் வெவ்வேறு தளங்களில் சஞ்சாரம் செய்வது போன்று காட்சிக்கு தேவைப்படும் உணர்ச்சிபாங்கை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்த தெரிந்தவர். அத்தோடு உக்கிரமும் மூர்க்கமும் நிரம்பிய கதாபாத்திரங்களின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர். ஒரு வகையில் அவர் நடிப்புலகின் சாத்தான்.
படப்பிடிப்பு நடக்கின்ற நாட்களில் அவரோடு சண்டையிட்டு திட்டி மிரட்டி தான் நடிக்க வைத்திருக்கிறேன். அகூர் தி ராத் ஆப் காட் படப்பிடிப்பின் போது நான் விரும்பிய வண்ணம் நடிக்க மறுத்த கின்ஸ்கியை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சண்டையிட்டு தான் நடிக்க வைத்தேன். அவரை நடிக்க வைக்க துப்பாக்கியும் அவசியமாகியிருக்கிறது. ஆனால் அவரது உச்சநிலை நடிப்பிற்கு நிகரான வேறு நடிகர்களை நான் கண்டதில்லை.
அவரை மனதில் நினைத்தபடியே இருந்தால் காட்சிகள் புதிது புதிதாக தோன்றிக் கொண்டேயிருக்கும். முன்கோபி, பெண்பித்தர், குடிகாரர், வம்பு சண்டைக்கு அலைபவர், சக நடிகர்களை வேண்டுமென்றே அவமதிப்பவர் என்று எண்ணிக்கையற்ற குற்றசாட்டுகள் அவர் மீது உண்டு. அத்தனையும் தாண்டி அவர் மிகச்சிறந்த நடிகர். நல்ல நண்பர். என் மனதில் இருந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் என்று சிறப்பித்து கூறும் ஹெர்சாக் கின்ஸ்கியை பற்றி ஒரு ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.
அந்த படத்தில் கசப்பும் அன்பும் கலந்த அவர்களின் நட்பு மிக அழகாக வெளிப்படுத்தபட்டிருக்கிறது. இதில் ஹெர்சாக்கை கொன்றுவிடப்போதவாக கின்ஸ்கி மிரட்டும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. பெருங்கோபமும் அன்பும் கலந்த நட்பு அவர்களுடையது. ஆனால் கின்ஸ்கி என்ற நடிகனின் உள்ளார்ந்த திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தியவர் ஹெர்சாக் என்பதில் மாற்று கருத்தேயில்லை. அவர் கின்ஸ்கியின் அக வெளிப்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை உருவாக்கினார்.
நாடகமேடையில் தனிநபர் நடிப்பின் மூலம் உருவானர் கின்ஸ்கி. அவரது நடிப்பை ஒரு முறை மக்கள் ரசிக்கவில்லை என்ற காரணத்திற்காக அந்த மேடையை தீ வைத்து கொளுத்தி எரித்திருக்கிறார். கிறிஸ்துவ போதகர்களை கேலி செய்து தனிநபர் நாடகம் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.
நடிப்புலகின் சாத்தான் என்று அழைக்கபடுவது மிக சரியானது என்று கின்ஸ்கியின் சகநடிகர்களும் கூறுகிறார்கள். காரணம் ஜெர்மானிய நாடகவுலகில் பொதுவாக இயக்குனர் நடிகர்களை ஒத்திகையின் போது மிக மோசமாக திட்டி வதைத்து வேலை செய்ய வைப்பார்கள். அந்த வடு கின்ஸ்கிக்குள் அதிகமாக இருந்திருக்கிறது. ஆகவே அவர் தன்னை எவராவது விமர்சனம் செய்ய துவங்கினால் மறுநிமிசம் தாங்க முடியாத ஆத்திரம் கொண்டுவிடுவார். கோபத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது என்கிறார்கள்
இதை நிஜமாக்குவது போல அவரது வாழ்வில் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தி ராத் ஆப் காட் படத்திற்காக பெருவின் அடர்ந்த காட்டிற்குள் நடைபெற்ற படப்பிடிப்பின் போது யாவரும் கூடாரம் அடித்து தங்கியிருக்கிறார்கள். இரவில் ஒரு கூடாரத்தில் சக நடிகர்கள் சூதாடியபடியே உரக்க கத்திக் கொண்டு இருந்தனர். அது தன் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று கின்ஸ்கி ஆவேசமாக எழுந்து வந்து தன் துப்பாக்கியால் சீட்டு ஆடிக் கொண்டிருந்த ஒரு நபரின் சுண்டுவிரலை சுட்டு துண்டித்துவிட்டார். அந்த அளவு முன்கோபி .
திரைக்கு வெளியில் கின்ஸ்கி ஒரு ரோமியோ. விதவிதமான பெண்கள், மது, கேளிக்கை இது தான் அவரது அன்றாட உலகம். சினிமாவில் என்ன சாதனைகள் செய்திருக்கிறீர்கள் என்று ஒரு முறை இவரிடம் பத்திரிக்கையாளர் கேட்ட போது கிட்டதட்ட முந்நூறு பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதுவும் ஹாலிவுட்டின் உச்சதாரகைகளில் இருந்து துணை நடிகைகள் வரை. வேறு எந்த தொழிலிலும் ஒரு மனிதன் இவ்வளவு பெண்களோடு இரவுகளை பகிர்ந்து கொண்டிருக்க முடியாது. அது சாதனையில்லையா என்று பதில் சொன்னார்
சர்ச்சைக்கும் அடிதடி சண்டைக்கும் பெயர் போன கின்ஸ்கியை ஸ்பீல்பெர்க் தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பி அழைத்த போது கின்ஸ்கி ஸ்பீல்பெர்க் படங்களில் சுறா மீன்களும் ஆண் உறுப்பு இல்லாத வேற்றுகிரகவாசிகளும் மட்டுமே நடிக்க கூடியவர். நான் இந்த இரண்டும் கிடையாது. ஆகவே அவரது படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார் என்று எழுதியுள்ளது ஹாலிவுட் சினிமா இதழ்.
அதே நேரம் மகாமட்டமான பல படங்களில் கின்ஸ்கி நடித்த போது நான் ஒரு வேசை. மிக அதிகமான பணம் தருகின்றவனோடு படுத்துக் கொள்வேன். நடிகர்கள் விலை உயர்ந்த வேசைகள் என்று பகிரங்கமான அறிவித்தார் கின்ஸ்கி.
மூன்று முறை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஐந்து குழந்தைகள். இதில் இருவர் அவரது குழந்தைகள் என்று முறையாக அறிவிக்கபடாதவர்கள். இவர்களுக்கு வெளியில் தான் படப்பிடிப்புக்கு சென்ற நகரங்கள் அத்தனையிலும் தனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று வேடிக்கையாக கின்ஸ்கியே சொல்லியிருக்கிறார். பாலியல் குற்றசாட்டுகளுக்கு பலமுறை உள்ளானவர். ஆனால் அதை பற்றி பெரிதாக கவலைப்படாதவர். தன் உடல் இச்சை அடங்குமளவு தான் பாலுறவில் நாட்டம் கொண்டுதான் இருப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்து கொண்டவர்.
கின்ஸ்கி ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்கள் சவால் ஆனவை. அவை இருண்ட மனநிலை கொண்டவர்களைப் பற்றியது. குணமூர்க்கம் கொண்ட மனிதர்களை அடையாளப்படுத்த கூடியது. இன்னும் சொல்வதாயின் இச்சையின் பாதையில் தன்விருப்பம் போல சுற்றியலைந்த மனிதர்களை பற்றிய கதைகளே அவர் நடித்த பாத்திரங்கள். அந்த கதாபாத்திரங்கள் ஆழமான உளவியல் சிக்கல் நிரம்பியவர்கள். கொந்தளிப்பும் விரக்தியும் அதீத கோபமும் கொண்டவர்கள். மனித உறவின் மீது நம்பிக்கை அற்று போனவர்கள்.
அது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு இயல்பான நடிப்பு போதாது. ஆகவே இவ்வகை நடிப்பிற்கான புதிய இலக்கணத்தை உருவாக்கியவர் கின்ஸ்கி. ஹெர்சாக்கும் அவரும் இணைந்த ஒவ்வொரு படத்திலும் கின்ஸ்கியின் ஒரு பரிமாணம் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது.
தி ராத் ஆப் காட் உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். ஜெர்மனிய புதிய அலைபடங்களில் மிக முக்கியமானது. ஹெர்சாக் வசித்த குடியிருப்பு ஒன்றில் உடன் வசித்தவர் கின்ஸ்கி. ஆகவே அவர்களது நட்பு இளமையில் ஆரம்பமானது.
அகூர் தி ராத் ஆப் காட் படம் பதினாறாம் நூற்றாண்டில் பெரு நாட்டின் காடுகளுக்குள் தங்கபுதையல் உள்ள எல்டோரடோ என்ற இடத்தை தேடி பயணம் செய்த குழுவைப்பற்றியது. 1560 வருசம் கான்சலோ பிசாரோ என்ற தளபதியின் தலைமையில் புதையல் தேடி ஸ்பானிய படையொன்று காட்டிற்குள் பிரவேசித்தது. பெரு நாட்டின் மழைக்காடு மிகவும் அடர்ந்தது. சரிந்த பாதைகளும் காட்டாறுகளும் நிரம்பியது.
அங்கே நுழைந்து பயணிப்பது மிகவும் கடினமானது. இந்த பயணத்திற்காக அடிமைகளும் படை வீரர்களும் ஒன்றிணைந்து தங்கம் தேடும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த படையின் இரண்டாம் நிலை தளபதியாக டான் லோபே அகூர் நியமிக்கபடுகிறார். அவர் தனது மகளோடு அந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.
அவர்கள் காட்டிற்குள் மேற்கொள்ளும் பயணமும் இடர்பாடுகளும் மழையும் நெருக்கடியும் ஆற்றை கடந்து செல்ல தவிப்பதும் வழியில் ஆதிவாசிகளிடம் மாட்டிக் கொள்வதும் பயணத்தின் ஊடாக வெளிப்படும் அதிகார போட்டியும் அதற்கான வன்கொலைகளும் என அகூர் கடந்த காலத்தின் ரத்தசுவடு படிந்த பயணத்தை விவரிக்கிறது.
இந்த படத்தில் அகூர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் கின்ஸ்கி. எல்லையற்ற அதிகாரத்திற்காக ஏங்கும் வெறிக்கொண்ட மனிதனாக தன்னை வெளிப்படுத்தியிருப்பார். இதற்காக அவர் மேற்கொள்ளும் கொலைகளும் வெறியும் அவரை எப்படி பாதிக்கின்றன என்பதை படம் விவரிக்கிறது.
குரங்குகுட்டியொன்றை கையில் ஏந்தி பேசும் போதும் வன்கொலைகளுக்கு பின்னால் அவர் முகத்தில் ஏற்படும் சந்தோஷமும் , அடர்ந்த காட்டிற்குள் தங்கம் தேடி சென்ற பலரும் இறந்து போன பிறகு மீள வழியின்றி தனி மனிதனாக தங்கபுதையல்களுடன் வானை நோக்கி அலறும் கின்ஸ்கியின் கடைசி காட்சி இதிகாச சோகம் நிரம்பியது.
கோபம் இயலாமை பரிவு ஏமாற்றம் என்று படம் முழுவதும் கின்ஸ்கியின் பன்முகப்பட்ட நடிப்பு சிறப்பானது. ஒரு விதமான பைத்தியநிலையை படம் முழுவதும் கின்ஸ்கி பிரதிபலித்திருப்பார்.
இது போலவே கின்ஸ்கி டிராகுலாவாக நடித்த Nosferatu the Vampyre மிக முக்கியமானது. டிராகுலா ரத்தவெறி கொண்டவன். டிரான்சில்வேனியபகுதியில் நடைபெற்றதாக நம்பபடும் நாட்டார்கதையிது. கவுண்ட் விளாட் என்ற குறுநில மன்னர். சிலுவை போரில் கலந்து கொள்கிறான். அப்போது அவன் கொல்லபட்டதாக தவறான தகவல் கிடைத்தவுடன் அவன் மனைவி தற்கொலை செய்து கொண்டுவிடுகிறாள்.
தற்கொலை செய்து கொண்ட விளாதின் மனைவியுடைய மரணசடங்கை நிறைவேற்ற தேவலாயம் தடை விதிக்கிறது அதை அறிந்து விளாட் தானும் தற்கொலை செய்து கொண்டு கடவுளுக்கு எதிராக உயிரோடு உள்ளபோதே நித்ய நிலைமையை அடைய வைக்கமுடியும் என்று டிராகுலா பிரபுவாக மறுபிறப்பு கொள்கிறான்.
முந்திய பிறவில் தன்மனைவியாக இருந்தவளை தேடுகிறான். இந்த தேடுதலில் அவன் கண்டு அடையும் பெண்களை தன் கோரை பற்களால் ரத்தம் குடித்து நித்யவாசியாக்குகிறான். இவனது அரண்மனைக்கு நிலபதிவு செய்ய வந்த ஜோனதன் பாழடைந்த அரண்மனையில் தனியே மாட்டிக் கொள்கிறான்.
டிராகுலா இந்த சமயத்தில் லண்டன் பயணம் செய்கிறான். அங்கே தன் காதலியை தேடுகிறான். டிராகுலாவின் வருகையோடு லண்டனில் எலிகள் நிரம்புகின்றன. ஊர் எங்கும் காலரா பரவுகிறது. டிராகுலா தன் ரத்தவேட்டையை தொடர்கிறான். முடிவில் அவன் அரண்மனையில் இருந்த தப்பி வந்த நில பதிவாளன் ஜோனதன் மதகுருக்களின் உதவியோடு டிராகுலாவை தீயிட்டு கொளுத்துகிறான். இந்த கதையை பிராம்ஸ்டாக்கர் டிராகுலா என்ற பெயரில் நாவலாக எழுதினார்
ஹெர்சாக்கின் டிராகுலா நாட்டார் கதையை மையமாக கொண்டது. முன்னதாக வெளிவந்த முர்னூவின் நாஸ்பரதோ படத்தின் மறுஉருவாக்கம் போலவே ஹெர்சாக் இதை இயக்கியிருந்தார்
இப்படத்தில் கின்ஸ்கி தலைமழிக்கபட்டு புருவங்கள் கூட நீக்கபட்டு விசித்திரமான தோற்றத்தில் டிராகுலாவாக நடித்திருந்தார். குறிப்பாக டிராகுலா லண்டனுக்கு வரும் காட்சிகளும் அவன் பெண்களை மயக்கும் விதமும் அபராமானது.பார்வையாளர்களை பெரிதும் அச்சமூட்டிய தோற்றத்தில் கின்ஸ்கி நடித்து மிகுந்த பாராட்டுக்களை பெற்றார்.
இது போலவே பிட்ஜெரால்டோ என்ற ஹெர்சாக்கின் படம் தன் கனவை நிறைவேற்றி கொள்ள ஆதிவாசிகள் உள்ள இடத்திற்கு சென்ற ஒரு இசைரசிகனின் கதையை விவரிக்கிறது. தனது விருப்பமான ஒரு ஒபரா ஹவுசை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்ட பிரைன் பிட்ஜெரால்டோ பிட்ஜெரால்டு என்ற மனிதன் அதை அடைவதற்காக ஆதிவாசிகளுக்கு மறுவாழ்வு தர முன்வருகிறான். ரப்பர் தோட்டம் உருவாக்க முயற்சிக்கிறான். அவனது முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. ஆதிவாசிகள் அவனது கனவை சிதறடிக்கின்றனர். இது பெருநாட்டின் ரப்பர் தொழிலின் அதிபராக கொண்டாப்படும் கார்லோஸ் பெர்மின் பிட்ஜெரால்டுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
இப்படமும் அகூர் போலவே காட்டிற்குள்ளாக உருவாக்கட்டது. மலையின் மீது மிகப்பெரிய படகு ஒன்றை கொண்டு வந்து சேர்க்கும் காட்சிகளும் ஆற்றை கடந்து அவர்கள் மலையில் பிரவேசித்து நெருக்கடிக்கு உள்ளாவதும் மறக்கமுடியாத காட்சிகள். கனவுகளுடன் போராடும் மனிதனை பற்றிய கதாபாத்திரம் அதே நேரம் இசையின் ரசிகன் என்பதால் அவனை கின்ஸ்கி மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
இது போலவே ஹெர்சாக்கின் கோப்ரா வெர்தூவிலும் கின்ஸ்கி அடிமை வணிகத்திற்கு செல்லும் கொள்ளைக்காரன் வேஷம் கொண்டிருப்பார். அடிமைகளை வாங்க சென்ற இடத்தில் அதிகார மோகத்தில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் அங்கிருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் சாகசமும் தான் படத்தின் பிரதான அம்சங்கள்.
இது போலவே டேவிட் லீனின் டாக்டர் ஷிவாகோ படத்தில் அனார்கிஸ்டான Kostoyed Amoursky கதாபாத்திரத்திலும் செர்ஜி லியோனின் For a Few Dollars More படத்தில் வொயில்டு என்ற கதாபாத்திரத்திலும் கின்ஸ்கி சிறப்பாக நடித்திருப்பார்.
கின்ஸ்கி போலந்தில் பிறந்தவர். அவரது அப்பா ஒரு ஒபரா பாடகர். ஆனால் அவரால்வெற்றிகரமான பாடகராக முடியவில்லை. வறுமையான குடும்ப சூழல். சிறுவயதில் திருடி சாப்பிட வேண்டிய நெருக்கடி. பள்ளிபாடப்புத்தங்களில் உள்ள சிலைகளுக்கு ஆண் உறுப்பு பெண் உறுப்பு போன்றவற்றை வரைந்துவிடுவது தான் கின்ஸ்கியின் ஒரே பொழுதுபோக்கு. இதனால் பள்ளியில் கண்டிப்பு மற்றும் தண்டனைக்கு உள்ளானார். பதினாறாவது வயதில் ராணுவ சேவைக்கு சென்றார். யுத்த கைதியாக பிடிபட்டு தண்டனைக்கு உள்ளானார்.
அதன்பிறகு நாடகமேடையில் நடிக்க துவங்கி ஜெர்மனிய திரைப்படங்களில் அறிமுகமானார். அவரது முகம் குழந்தையின் வசீகரமும் பைத்தியக்காரனின் குழப்பமும் நிரம்பியது என்று அவரைப்பற்றி வர்ணிக்கிறார் பிரெஞ்சு கவிஞர் ழான் காக்தூ. ஜெர்மன் பிரெஞ்சு ஆங்கிலம் போலீஷ் மொழிகள் அறிந்தவர் கின்ஸ்கி . திரைப்படம் அவருக்கு மிகுந்த புகழையும் பணத்தையும் பெற்று தந்தது. 1991 நவம்பர் 23ம் நாள் தன்னுடைய 65 வயதில் மாரடைப்பால் எதிர்பாரத மரணம் அடைந்தார் கின்ஸ்கி.
அகூர் படம் தயாரிப்பின் போது பெருவின் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்த போது தனது கடந்த காலம் முழுவதும் மறைந்து போய் தான் ஒரு பறவையை போல உணர்ந்ததாகவும் காட்டிற்குள் தன் இஷ்டம் போல அலைந்து சப்தமிடும் பறவையாக தான் உருமாறிப்போனதாகவும் கூறும் கின்ஸ்கி இயற்கையோடு நம்மை அடையாளம் காணும் போது நிமிசங்களே படைப்பின் அற்புதம் என்று கூறுகிறார்.
பைத்தியக்காரத்தனமே தன்னை வழிநடத்தும் சக்தி. அது தான் கலையின் ஆதாரஉணர்ச்சி என்று கூறிய கின்ஸ்கி இன்றும் அவரது அதீத உடல்மொழியின் காரணமாக உலகெங்கும் திரும்ப திரும்ப பாராட்டப்பட்டும் விவாதிக்கபட்டும் வருகிறார். அவ்வகையில் எனக்கு இப்போதும் மிக விருப்பமானவர் கின்ஸ்கி.
**