சினிமா முத்தம்.


 


 


 


 



சட்டம் என் கையில் என்ற படம் 1978 ம் ஆண்டு வெளியானது. கமலஹாசன் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம். டி.என் பாலு இயக்கியிருந்தார். அப்போது நான்  பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  சிறிய கிராமம் ஒன்றில் வசித்து கொண்டிருந்தோம். சினிமா பார்ப்பதற்கு அருகாமை நகரங்களுக்கு போய்வர வேண்டும்.


இதற்காகவே விடுமுறை நாட்களில் கோவில்பட்டிக்கு சென்றுவிடுவேன். அங்கே பாட்டியின் வீடு இருந்தது. இஷ்டமான நேரத்தில் சினிமாவுக்கு போய்வரலாம். சினிமாவிற்கும் இடைவேளையில் முறுக்கு வாங்கி கொள்வதற்கும் சேர்த்து காசு தருவார்கள்.  அத்தோடு சினிமா பார்ப்பதற்கான தோஸ்துகள் அதிகமிருந்தார்கள்.


அப்படியொரு விடுமுறை நாளின் போது சட்டம் என் கையில் என்ற படம் வெளியாகிறது என்ற தள்ளுவண்டி வீட்டின் முன்னால் கடந்து போனது. தண்டோரா அடித்துக் கொண்டபடியே நீல நிற மஞ்சள் நிற நோட்டீஸ்களை வீசி எறிந்து கொண்டு சென்றார்கள். முதன்முறையாக கமலஹாசன் இரட்டை வேஷத்தில் நடித்திருக்கிறார் என்பதை விடவும் பரபரப்பான முத்தகாட்சி இடம்பெற்றுள்ளது என்ற வாசகமே உடனே படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையை நண்பர்களிடம் உருவாக்கியது.


கேதரின் என்ற வெள்ளைக்கார பெண்ணை கமலஹாசன் முத்தமிடுகிறார் என்பதை பற்றிய செய்தியை முன்பே நாளிதழில் வாசித்திருந்த நண்பன் அதை பற்றி விரிவாக சொல்லிக் கொண்டிருந்தான்


அந்த நாள் வரை எந்த ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொண்டதை நேரில் கண்டதேயில்லை. ஒரேயொரு முறை கிராமத்து டெய்லர் வீட்டுக்கு மதிய நேரம் துணி வாங்க போனபோது டெய்லர் தன் மனைவியை முத்தமிட்டுக் கொண்டிருந்தார். கதவை தள்ளி உள்ளே சென்றதும் எதுவும் நடக்காதது போல டெய்லர்மனைவி முகத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டபடியே தைத்து வைத்திருந்த சட்டையை எடுத்து என்னிடம் தந்தார்.


புறங்கையால் அழித்தால் முத்தம் அழிந்து போய்விடும் போலும் என்று அன்று நம்பிக் கொண்டேன். என்னை போலவே தான் நண்பர்களும் அதிர்ஷடவசமாக எங்கோ யாரோ முத்தமிட்டுக் கொள்வதை அரைநிமிசம் கண்டிருக்கிறார்கள்.
அதுவரை நான் பார்த்த சிவாஜி எம்ஜிஆர் சினிமா எதிலும் எவரும் முத்தமிட்டுக் கொண்டதில்லை. இரண்டு ரோஜாப்பூக்கள் முத்தமிட்டுக் கொள்ளும் அல்லது முகத்தை நெருங்கி வரும் போது கட் பண்ணிவிடுவார்கள்.
பொதுவில் முத்தம் என்பதை பற்றி வீட்டிலோ வெளியிலோ யாரும் பேசிக் கொண்டது கூட கிடையாது. வகுப்பறையில் மாணவர்கள் காகிதத்தில் பெரிதாக உதடு வரைந்து முத்தமிட்டு விளையாடுவார்கள். அதை கூட மாணவிகள் பெரிய குற்றமாக கருதி தலைகவிழ்ந்து கொள்வார்கள்.


அவளோட ராவுகள் இதோ இவிடே வரு போன்ற மலையாள கவர்ச்சி படங்கள் ஆக்ரமிக்காத காலமது. ஆகவே சினிமாவில் அதிகபட்சமாக கதாநாயகியை கையைபிடித்து இழுத்து கட்டிக் கொள்வதே பெரிய ஆபாசமாக கருதப்பட்டது.  கவர்ச்சிக்காக பார் டான்ஸ் வைப்பது ஒன்றே விதிவிலக்கு.


இந்த சூழலில் சட்டம் என்கையில் படத்தில் முத்தகாட்சி இடம்பெற்றிருக்கிறது என்ற தகவல்  பதின்வயதினரை ஆட்டி வைத்தது. அப்போது ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள் மட்டுமே நடைபெறும். அதிலும் மதியம் மற்றும் மாலை காட்சிகளில் தெரிந்தவர்கள் எவராவது வந்துவிடக்கூடும் என்பதால் இரவுக்காட்சிக்கு போவது என்று முடிவு செய்து ஐந்து நண்பர்கள் ஒன்றாக திரையரங்கிற்கு சென்றோம். 


படம் ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரமிருந்தது. கமலஹாசன் வெள்ளைக்கார பெண்ணை முத்தமிடும் காட்சி தான் போஸ்டராக அச்சிடப்பட்டிருந்தது. அதன் அருகாமையில் போய் நின்றபடியே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் மக்கள்.



அநேகமாக எங்களைப் போலவே ஊரில் இருந்த அத்தனை கடைக்காரர்கள், ரிக்ஷாகாரர்கள் ஹோட்டலில் சமையல்வேலை பார்ப்பவர்கள் என்று பலரும் முத்தகாட்சியை பார்த்துவிட வேண்டும் என்ற உயரிய நோக்கில்  கோவில்தேரோட்டத்திற்கு வருவது போல கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரது முகங்களிலும் சிரிப்பும் கற்பனையும் பீறிட்டபடியிருந்தது. நிறைய குடும்பங்களும் படம்பார்க்க வந்திருந்தன.


அன்றைக்கு தரைடிக்கெட்டிற்கு ஏகப்பட்ட கூட்டம். தள்ளுமுள்ளு. எதற்காக என்று நண்பனிடம் கேட்ட போது திரைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டால் தான் முத்தகாட்சியை நெருக்கமாக பார்க்க முடியும் என்று சொன்னான். தரை டிக்கெட் என்றால் சிறிய முதுகில்லாத பெஞ்சு போட்டிருப்பார்கள். முப்பது பைசா டிக்கெட். பார்த்துக் கொண்டிருந்த போதே அரங்கம் நிரம்பியிருந்தது.


படம் துவங்கியதிலிருந்து எந்த காட்சியில் முத்தமிடப்போகிறார்களோ என்று தெரியாத பதட்டமும் ஆர்வமுமாக மக்கள் படம் பார்த்து கொண்டிருந்தார்கள். ஒருவரது கவனமும் கதையிலோ பாடலிலோ இல்லை. 
யாவரும் எதிர்பார்த்தது போல முத்தகாட்சி திரையில் வந்தது. அவ்வளவு நிசப்தத்தை அதன் பிறகு இன்று வரை நான் திரையரங்கில் கண்டதேயில்லை.


முத்தகாட்சி முடிந்ததும் பெருமூச்சும் கைகாலை சோம்பல் முறிப்பதுமாக ஆட்கள் திறந்து கிடந்த கதவின் வழியே வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். இனி அந்த படத்தில் பார்க்க என்ன இருக்கிறது என்பது போல வேண்டா வெறுப்போடு மக்கள் படம் பார்த்து கலைந்தனர்.


நாங்களே படம்விட்டு வெளியே வந்து மூடப்பட்ட கடையொன்றின் வெளியே உட்கார்ந்து கொண்டு முத்தகாட்சி பற்றி பேசத்துவங்கினோம். யாராலும் நம்பமுடியவேயில்லை. நண்பன் ஆதங்கத்துடன் சொன்னான்


வெள்ளைக்காரியை முத்தம் கொடுத்த மாதிரி ஸ்ரீப்ரியாவை முத்தம் கொடுத்திருந்தா நல்லா இருக்கும்லே. மற்றவர்கள் ஆமோதித்தார்கள். அந்த வெள்ளைக்கார நடிகை கேதரின் ஊர் மக்களின் கனவுக்கன்னியாகி போனாள்.
ஊரில் இத்தனை அழகான பெண்கள், ஆண்கள் இருந்தும் ஏன் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்வதேயில்லை என்று இன்னொரு நண்பன் அலுத்துக் கொண்டான்.


மறுநாளும் அதே படத்தை பார்ப்பது என்ற முடிவோடு அவரவர் வீடு திரும்பினோம். மறுநாள் காலை குளித்துவிட்டு டவுசர் சட்டையை  துவைப்பதற்கு போட்டுவிட்டு டியூசன் படிக்க கிளம்பிக் கொண்டிருந்த போது தாத்தா என்னை அழைக்கும் குரல் கேட்டது


ராத்திரி எங்கே போயிருந்தே ?


பரபரப்பான முத்தகாட்சி உள்ள படத்திற்கு என்று எப்படி சொல்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். அவர் டிக்கெட்டை கையில் வைத்தபடியே படத்துக்கா என்றார். ஆமாம். படம் சரியில்லை. பாதியில் வந்துவிட்டேன் என்றேன். என்னபடம் என்று  கேட்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.


அந்த படம் ஒடிய வரை இரவுக்காட்சிக்கு தவறாமல் சென்றோம். எல்லா நாளும் இரவுக்காட்சியில் அரங்கம் நிரம்பியது. 


சட்டம் என்கையில் படத்தில் உள்ள முத்தகாட்சி தவறானது, அது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எம்.ஜி. ஆர் அறிவித்திருந்தார். அது உடனே பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காகவே பலரும் படம் பார்க்க போனார்கள்.


குடும்ப பெண்களில் பலர் முத்தகாட்சியின் போது கண்களை மூடிக் கொண்டார்கள்  ஆனால் படம் பார்த்தவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வெள்ளைக்காரியை ஒரு முறையாவது முத்தமிட வேண்டும் என்ற ரகசிய கனவு விதைக்கபட்டது.


முத்தம் ஏன் கலாச்சார குற்றமாக கருதபடுகிறது என்று அன்றைய இளைஞர்கள் கொந்தளித்து பேசிக்கொண்டிருந்தார்கள். மாணவர்களாகிய


நாங்களோ கேதரீன் என்ற நடிகையை பற்றிய மேலதிகமான தகவல்களை எப்படி அறிந்து கொள்வது என்று ரகசியமாக விவாதித்துக்கொண்டிருந்தோம்.
எல்லாப் படங்களையும் போலவே ஒரு வாரத்தில் அந்த படமும் தூக்கபட்டு வேறு படம் வெளியானது. ஆனால் அதன்  ஆறுமாதங்களுக்கு முத்தப்பேச்சு ஒயவில்லை. அந்த படத்திலிருந்து இனிமேல் ஆங்கிலப்படங்களை தவறாமல் பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் உறுதி எடுத்துக் கொண்டோம்.



அதன்பிறகு மதுரை ரீகல் தியேட்டரில் ஆங்கிலப்படம் பார்க்கின்றவர்களில் நானும் ஒருவனாகிப் போனேன். கணக்குவழக்கில்லாத ஆங்கிலப்படங்கள். அதில் முத்தகாட்சி இல்லாத ஆங்கிலப்படம் என்றவொன்றை நான் கண்டதேயில்லை.
ஒரு நாளிரவு ஆங்கிலப்படத்தில் முத்தக்காட்சி நடந்து கொண்டிருந்த போது ரிக்ஷாகாரன் ஒருவன் ஊறுகாய் திங்கிறது மாதிரியில்லை. சப்புறான் என்று சொன்னான். திரை அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது.


ஆங்கிலப்படங்களைப் பார்த்து பார்த்து மதுரை மக்கள் எது பிரெஞ்சு கிஸ் எது இங்கிலிஷ் கிஸ் என்று தரம் பிரித்து அறிந்து கொண்டார்கள். சில படங்களில் லேசாக உதட்டின் மேல் உதடு படும் காட்சிகளின் போது முன்னே மாதிரி சரியா அடிக்க மாட்டேங்கிறான். கிரேட்டா கார்போ நல்ல அடிப்பா என்று கிரிக்கெட் ஸ்கோர் போல முத்தம் பற்றி பேசிக் கொண்டார்கள்.



இன்றுவரை எத்தனையோ படங்களில் முத்தகாட்சிகளை கண்டிருக்கிறேன். ஆனால் சட்டம் என் கையில் படத்தின் காட்சிக்காக  காத்திருந்தது நினைவில் மறையவேயில்லை.


சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டிற்கு போன போது டிவிடி ஒடிக்கொண்டிருந்தது. ஆங்கில படம் ஒன்றில் ஒருவரோடு மற்றவர் உதட்டை கவ்விக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து கொண்டிருந்த நண்பனின் பதின்வயது மகன் சொன்னான். kissing is an art  நான் போர்டிங் ஸ்கூல்ல கேர்ள்ஸை கிஸ் பண்ணியிருக்கேன். என்றபடியே இது எல்லாம just acting    என்றான்.



இந்த just acting   காண்பதற்கு நான் மட்டுமல்ல ஊரே ரகசியமாக காத்துக் கொண்டிருந்தது என்பதை நினைத்து பார்த்த போது வெட்கமாக இருந்தது.  அவனிடம் சட்டம் என்கையில் பற்றி எதையும் நான் சொல்லவில்லை. ஆனாலும் அவன் என்னை பார்த்தபடியே யூ ஆர் ஒல்டு ஜெனரேஷன் என்று சொல்லி சிரித்தான்.


அது தானே உண்மை. 


 ***


ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் உதயம் இதழில் வெளியான கட்டுரை.

0Shares
0