முள் – முத்துமீனாள். ஆழிபதிப்பகம் .சென்னை. 24. விலை ரூ.50.
இதை ஒரு நாவல் என்பதை விடவும் முத்துமீனாளின் நினைவுக்குறிப்புகள் என்றே வகைப்படுத்த வேண்டும். முத்துமீனாள் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட தொழுநோய் பற்றியும் அதற்காக கும்பகோணத்தில் உள்ள கிறிஸ்துவ மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிட்சை செய்த போது ஏற்பட்ட நினைவுகளையும், நோய் நீங்கிய பிறகு திருமணத்திற்காக காத்திருந்த நாட்களின் வலிகளையும் ஒன்று சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார்.
முள் என்ற இந்தத் தலைப்பு இரண்டை உடனே நினைவுபடுத்தியது. ஒன்று ஜானகிராமனின் மோகமுள், மற்றது கிறிஸ்துவின் முள்முடி. இரண்டு முட்களும் குறியீடுகளே. இந்த நாவலிலும் முள் நோய்மையின் குறியீடாக, முறிந்த நினைவுகளின் அடையாளமாக வெளிப்படுகிறது.
சுயசரிதைநாவல் என்பதால் கதை முத்துமீனாளின் நேரடியான குரலில் விவரிக்கபடுகிறது. இடைவிட்டுத் தாவி செல்லும் சம்பவங்களும் அதிர்வுகளுமாக நகர்கிறது நாவல்.
தொழுநோயாளிகள் என்றாலே விலக்கபட வேண்டியவர்கள் என்ற பொதுபுத்தி இன்று வரை மக்களிடையே இருக்கிறது. அதுவும் சிறு நகரங்களிலும் கிராமப்புறத்திலும் தொழுநோயாளிகள் தீண்டத்தாகதவர்கள். அவர்களை வீட்டில் வைத்துக் கொள்வது பெரிய பாவம் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.
தொழுநோய் ஒரு பால்வினை வியாதி என்று தவறான பிம்பத்தை உருவாக்கிய ரத்தகண்ணீரின் பாதிப்பு இன்றும் கிராமங்களில் காணமுடிகிறது.
அப்படியான நெருக்கடியில் எதுவுமறியாத சிறுமி முத்துமீனாள் சிகிட்சைக்காக கும்பகோணத்தில் உள்ள இருதய ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறாள். மருத்துவமனை வளாகத்திற்குள்ளாகவே பள்ளிக்கூடமும் இருக்கிறது. பகலில் பள்ளியில் படித்தபடியே சிகிட்சை மேற்கொள்ளத் துவங்குகிறாள்.
மருத்துவமனை உலகம் துல்லியமாக நம் கண்முன்னே விரிவு கொள்கிறது. கிறிஸ்துவ நிறுவனங்களால் நடத்தபடும் சிகிட்சை மையங்களின் அகவுலகமது. பிரார்த்தனைகளும், கண்டிப்பும் , பரிவான சேவையும், மதமாற்றமும் கலந்த தனிவாழ்க்கையது .
தன்னோடு நோயாளியாக தங்கியிருந்தவர்களையும் ஆசிரியர்களையும் பற்றிய அவரது நினைவுகள் துல்லியமாக பதிவாகியுள்ளன. நோயாளிகளின் புறக்கணிக்கப்பட்ட உலகு நாம் முன்னறியாதது. குறிப்பாக புனிதா என்ற தமிழ் ஆசிரியை தொழுநோய் வந்ததன் காரணமாக வீட்டில் புறக்கணிக்கட்ட சம்பவம் தனித்து விரிவாக எழுதப்பட வேண்டிய ஒரு நாவல் எனுமளவு முக்கியமானது.
நாவல் மூன்று மையங்களை கொண்டிருக்கிறது. ஒன்று தொழுநோய் வந்த சிறுமியின் மனநிலை மற்றும் சிகிட்சைக்காக எப்படி அலைக்கழிக்படுகிறாள் என்பது. இரண்டாவது சிகிட்சைக்கான மருத்துவமனைகள் எப்படி நடைபெறுகின்றன. அங்கு சிகிட்சை பெறுவோர் யார், அதற்குள் உருவாகும் மதமாற்றம் மற்றும் வெளிநாட்டு நிதிஉதவி தரும் வெள்ளைகார புரவலர்கள் பற்றியது.
மூன்றாவது தொழுநோய்க்கான சிகிட்சை பெற்று குணமான பிறகும் பெண் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது எவ்வளவு பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக அவளது திருமணத்திற்கான தடைகளும் அவமானங்களும் அவளை எப்படி வெறுமை கொள்ள வைக்கிறது என்பதை விவரிக்கிறது.
104 பக்கங்களே கொண்ட சிறிய நாவல் . எளிமையான விவரணைகள். கோட்டு சித்திரங்களை போல இரண்டு மூன்று வரிகளில் கதாபாத்திரங்களை உருவாக்கி காட்டும் நேர்த்தி. உணர்ச்சிவசப்படாத சொல்முறை என்று நீளும் நாவலில் இந்த மூன்று தளங்களும் கோடிட்டு காட்டப்படுகின்றதேயன்றி ஆழமாக விவரிக்கபடவில்லை. அது முக்கிய குறையாக உள்ளது.
நாவல் என்ற புனைவெழுத்தின் வழியே அடைய முடிகின்ற எண்ணிக்கையற்ற சாத்தியங்களை இந்த நாவல் கவனம் கொள்ளவேயில்லை.
நோய்மை ஒரு பக்கம் தன்னை வதைக்க, குடும்பத்தை பிரிந்த ஏக்கமும், யாரோ ஒரு வெளிநாட்டுகாரர் தன்னை தத்து எடுத்து கொண்டு போய்விடுவாரோ என்ற பயம் மறுபக்கமும், படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இன்னொரு புறத்தில் உந்தி தள்ள ஒரு பெண் அலைக்கழிக்கபடுவது நன்றாக வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக பால் உணர்ச்சிகள் தோன்ற துவங்கும் போது அதை எதிர் கொண்ட விதமும் ஒரினச்சேர்க்கை கொண்ட இரண்டு பெண்களை பற்றிய அவரது பதிவும், திருமணத்திற்காக ஜோதிடம் ஜாதகம் குறிபார்ப்பது சாமியார்களை தேடி செல்வது என்ற உள்ளார்ந்த பயமும் ஒளிவின்றி எழுதப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக முத்துமீனாள் சந்திக்கும் நிகழ்வுகள் தமிழ் சமூகத்தில் பெரும்பான்மை பெண்கள் சந்திக்கும் அன்றாடத் துயரங்களே.
நாவல் முழுவதும் முத்துமீனாளின் குரல் மிகுந்த தயக்கத்துடனும் பலவிஷயங்களை தன்னை அறியாமல் வெளிப்படுத்திவிடக்கூடாதே என்ற கட்டுபாடு உணர்வுடனும், ஒருவேளை தன்னை யாராவது ஏளனம் செய்துவிடக்கூடுமோ என்ற அச்சமும் கூடி வெளிப்படுவதை உணர முடிகிறது. அந்தப் பயமும் தயக்கமும் காலம் காலமாக கலாச்சாரம் பெண்களின் மீது அழுத்தி வைத்திருக்கும் வன்முறையே ஆகும். அதை மீறுவதும் கடந்து செல்வதுமே பெண்எழுத்தின் முதல்வேலை.
இதற்கு முன்பாக தனக்கு எவ்விதமான இலக்கிய பரிச்சயமும் இருந்ததில்லை. தான் எதையும் எழுதியதில்லை என்று வெளிப்படையாக கூறும் முத்துமீனாள் எல்லாத் தயக்கங்களையும் மீறி தன்னுடைய வாழ்வை அசலாக பதிவு செய்திருக்கிறார். அது மிகுந்த பாராட்டுக்குரியது.
முள் எவ்விதமான அலங்காரமும், ஜோடனைகளும் இன்றி வாழ்வின் துயர்மிகுநாட்களை பதிவு செய்துள்ள எளிமையான முயற்சியாகும். அவ்வகையில் இது கவனிக்கபடவும் வாசிக்கபடவும் வேண்டிய முக்கிய நாவலே.
***