புத்தக கண்காட்சியில் சில மணி நேரம்.


சனிக்கிழமை மதியம் புத்தக கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புத்தகத் திருவிழா துவங்கி  மூன்றாம் நாள் . மாலையில் செல்வது என்று முதலில் முடிவுசெய்திருந்தேன். ஆனால் பின்மதிய நேரத்தில் சற்று கூட்டம் குறைவாக இருக்க கூடும் என்பதால் முதலில் புத்தக கண்காட்சியை முழுமையாக ஒரு முறை சுற்றி பார்த்துவிடலாம் என்று கிளம்பினேன்.



பெட்ரோல் தட்டுபாடு சென்னையின் அன்றாட பயணத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. ஆவலாக புத்தகக் கண்காட்சிக்கு போய்வரலாம் என்று திட்டமிட்டிருந்த பல நண்பர்கள்  பெட்ரோல் கிடைக்காத காரணத்தால் வீட்டிலிருந்து வெளியே கிளம்ப முடியாமல் மாட்டிக் கொண்டார்கள்.


மதிய நேரத்தில் நான் சென்றபோது குறைவான கூட்டமேயிருந்தது. சென்ற வருட கண்காட்சியை விடவும் இந்த முறை பெரியதாக இருந்தது. நிறையக் கடைகள். சில புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் பெயர்களை இப்போது தான் முதன் முதலாகப் பார்க்கிறேன். அச்சிடுவதில் நேர்த்தியும் அழகான அட்டை படங்களும் கொண்ட புத்தகங்கள் இன்று இயல்பாகி விட்டிருந்தன.


கண்காட்சியில் கடைகள் அமைக்ககபட்டுள்ள விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் வசதியாகவும் நடப்பதற்கு எளிதாகவும் உள்ளது. பெரும்பான்மை கடைகளில் புத்தகங்களை அழகாக பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். உடன் இருந்து புத்தகங்களை எடுத்து தருகிறார்கள். சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற மத்திய அரசு நிறுவனங்களின் கடைகளில் மட்டும் இதற்கு நேர் முரண். எதை கேட்டாலும் தெரியாது என்ற ஒரே பதில். பாதி புத்தகங்கள் அச்சில் இல்லை.


ஒரு பக்கம் புத்தக கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி இருப்பது சந்தோஷம் தருகிறது. இன்னொரு பக்கம் புத்தகம் என்பதை மலிவான வணிகப்பொருள் போலாக்கி சுடச்சுட மிளகாய் பஜ்ஜி போட்டு விற்பது போல மாற்றி வருகிறார்களோ என்ற பயமும் உள்ளுற ஏற்படுகிறது.


இதில் ஒரே ஆறுதல் புத்தகக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் இந்தக் கவர்ச்சிகளில் ஏமாறுவதில்லை.


தாங்கள் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என்பதை ஒரளவு முடிவு செய்து கொண்டு தான் வருகிறார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் சிபாரிசு செய்யும் புத்தகங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள்.  சிலர் குறிப்பிட்ட கடைகளைத் தவிர வேறு கடைகளை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. மிகைப்படுத்தட்ட விளம்பர யுத்திகளால் கவர நினைக்கும் புத்தகங்களை வெளிப்படையாக கேலி செய்கிறார்கள்.


இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் கண்ணில் பட்டவை :


இந்த புத்தக சந்தைக்காக பெரும்பான்மை பதிப்பகங்கள்  நாற்பது ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு சில பதிப்பகங்கள் நாலைந்து கடைகளை வாடகைக்கு எடுத்து தங்கள் புத்தகங்களை நிரப்பியிருக்கிறார்கள். அதனால் எண்ணிக்கை 588 ஆகியிருக்கிறது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்கள்  பண அட்டையோ, கடன் அட்டையோ பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்வதில்லை. 


எப்போது போலவே டிக்கெட் கவுண்டரில் ஐந்து ரூபாய் சில்லறையாக கொடுங்கள் என்று கோபமான குரலில் முறைக்கிறார்கள்.  பத்து நாளைக்கும் சேர்ந்து ஐம்பது ரூபாய்க்கு ஒரு டிக்கெட் போன்றோ, பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று இரண்டு நான்கு டிக்கெட்டுகளாகவே கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டால் தேவையான நாளில் பயன்படுத்தி கொள்ளலாம்.


செல்போனில் பேசிக்கொண்டே புத்தகம் தேடுகிறார்கள். வலைப்பதிவு எழுதும் ஒருசிலரை காண முடிந்தது. வலைப்பதிவில் அவர்கள் எழுதும் கேலி கிண்டலான பதிவுகளுக்கும் நேரில் காண்பதற்கும் நிறைய வித்தியாசம். சபாரி சூட் அணிந்த ஒருவர் எல்லா கடைகளிலும் கவனமாக கேட்லாக் வாங்கி சேகரித்து கொண்டு தன்வேலை முடிந்துவிட்டது என்று புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேறி போய் கொண்டிருந்தார்.


பச்சை கோடிட்ட சட்டை அணிந்த நடுத்தர வயது நபர் தான் எழுதி வெளியிட்டுள்ள கவிதைதொகுப்பின் சில பிரதிகளை விற்று தர முடியுமா என்று ஒவ்வொரு பதிப்பகமாக கேட்டு கொண்டு ஒரு லெதர்பேக்  நிறைய கவிதை தொகுப்பை தூக்கி கொண்டு சென்றார். 


இரும்பு கை மாயாவி, வேதாளம் போன்ற பழைய தமிழ் காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறதா என்று ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருக்கிறது போலும் இரண்டு மூன்று கடைகளில் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் விசாரித்து கொண்டிருந்தார்கள், முடிவில் ரிதம் புக்ஸ் என்ற கடையில் தேடி நாற்பத்திரெண்டு பழைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கினேன்


மிகமிக மோசமான உணவு தரும் சிற்றுண்டி கடைகளும், ஆங்காங்கே சாப்பிட்ட உணவு தட்டுகள் சிதறி கிடக்க, வீசிஎறிந்து போன மிச்சங்களும் நடுவில் மக்கள் பர்கரும், போளியும்,  வடை பஜ்ஜிகளும் சாப்பிடுகிறார்கள்.  காகித கோப்பைகளில் சூடான காபியை வாங்கி கையில் எடுத்து கொண்டுவர முடியாமல் தவித்தபடியே பாதி கொட்டி கவிழ்த்து காபி குடித்து அங்கேயே வீசி எறிந்து போகிறார்கள்.


கைகழுவுவதற்கு தண்ணீர் வைத்துள்ள பாத்திரத்தில் நாலைந்து காகித கோப்கைள் நெளிந்து வளைந்து மிதக்கின்றன. குனிந்து பார்த்தால் வாந்தி வந்துவிடுமளவு அந்த தண்ணீரில் குப்பைகள். இந்த கொடுமையில் காகித கப்பை வைத்து கை கழுவ வேண்டும் என்று யோசனையை உண்டாக்கிய அதிபுத்திசாலி யாரோ. 


மோசமான மூத்திரப் பிறை. நாற்றம் குமட்டுகிறது. இத்தனைஆயிரம் மக்கள் வந்து போகுமிடத்தில் முறையான தற்காலிக கழிப்பறை  அமைக்கபடவில்லை என்பது பெரிய குறையே. பெரிய புத்தக கண்காட்சிக்கு இவை திருஷ்டி பரிகாரம் போல. 


***
பொதுவாக இன்றைய இளைஞர்கள் படிப்பதில்லை என்பதை பொய்யாக்கியிருக்கிறது இந்த புத்தக கண்காட்சி. தேடித்தேடி புத்தகங்களை வாங்கும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் காணும் போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.


என்னிடம் ஒரு இளைஞர் சம்பத்தின் சிறுகதைகள் புத்தகமாக வந்திருக்கிறதா? சாமியார் ஜøவிற்கு போகிறார் கதை ஏதாவது தொகுப்பில் இருக்கிறதா என்று ஆர்வமாக கேட்டார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ஐஐடியில் பொறியியலில் உயர் ஆய்வு செய்வதாக சொல்லிவிட்டு தனக்கு சம்பத், நகுலன்,பா.சிங்காரம், ஜீ, நாகராஜன், போன்றவர்களை பிடிக்கும் என்றபடியே இரண்டு வருசமாகவே தமிழ் இலக்கியங்களை தேடி படிப்பதாகவும் அது தனக்குள் புதிய மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது என்று புன்னகைத்தபடியே விடைபெற்று சென்றார்.


இவரை போன்ற ஒரு புதிய தலைமுறை இன்று உருவாகியிருக்கிறது. அவர்கள் மரபான இலக்கிய வாசகர்கள் அல்ல. சிறுபத்திரிக்கைகளை தேடி வாங்கி வாசிப்பவர்களும் அல்ல. ஆனால் தனக்கு விருப்பமான, தனித்துவமான புத்தகங்களை தேடி வாங்குகிறார்கள். படிக்கிறார்கள். நெருங்கிய வட்டத்திற்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். சிலவேளைகளில் அதை தங்களது துறையில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.


ஆங்கிலத்தின் வழியே அவர்கள் அறிந்த உலகம் விரிந்தது. ஆழமானது. ஆகவே அவர்கள் எந்த விளம்பர யுக்தியையும் நம்பி தமிழ் புத்தகத்தை வாங்குவதில்லை. அப்படியான புதிய தலைமுறை இன்று மென்பொருள், ஊடகம், வங்கி, கல்லூரி , பன்னாட்டு நிறுவனங்கள் என்று பணிபுரிந்தபடியே கூர்ந்து தமிழ் இலக்கிய போக்குகளை கவனிக்கிறார்கள். படிக்கிறார்கள். தங்கள் மனதில் சரியென பட்டதை மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்கிறார்கள். சென்னையில் மட்டுமில்லாது உலகெங்கும் இப்படியொரு புதிய தலைமுறை தமிழ் வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.


இவர்கள் பெயர்களை உதிர்ப்பதற்காக புத்தகம் படிப்பவர்கள் அல்ல. தாங்கள் என்ன படிக்கிறோம். ஏன் படிக்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள்.இலக்கியம் மட்டுமின்றி சமகால அரசியல் நிகழ்வுகள், சரித்திரம், நுண்கலை, வாழ்க்கை வரலாறு, சூழலியல், தமிழாய்வு என்று தேடி வாசிக்க துவங்கியிருக்கிறார்கள் என்பது வரவேற்க படவேண்டிய முக்கிய அம்சம்.


இன்னொரு சந்தோஷம் இத்தனை தொலைகாட்சிகளின் ஆக்ரமிப்பிற்கு பிறகும் மக்கள் புத்தகங்களின் மீது காட்டும் அக்கறையும் அதை வாங்குவதற்காக அலைமோதுவதை காண்பதும் வியப்பாக இருக்கிறது.


மாலையில் எல்லாக் கடைகளிலும் கூட்டம் நிறைய இருந்தது. நான் உயிர்மை புத்தகக் கடையில் எனது புதிய புத்தகங்களுக்கு கையெழுத்து இட்டு தருவதற்காக அமர்ந்திருந்தேன். கடை நிறைய கூட்டம். மூன்று மணி நேரத்தில் இருநூறு பேர்களுக்கும் மேலாக கையெழுத்து வாங்கியிருப்பார்கள். எண்பது சதவீதம் இளைஞர்கள். அவர்கள் புத்தகங்கள் பற்றி கேட்கும் கேள்விகளும் பகிர்ந்து கொள்ளும் வாசிப்பு அனுபவமும் மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது.


எப்போதோ  ஒரு சிற்றிதழில் எழுதியதைக் கூட கவனமாக படித்திருக்கிறார்கள். நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதும், எனது இணையதளத்தை பெரும்பான்மையினர் தவறாமல் படிக்கிறார்கள் என்பதும் எழுத்தின் மீதான வாசக அக்கறை எப்படியிருக்கும் என்பதற்கான நேரடி சாட்சி போன்றிருந்தது.


வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான உறவு அந்தரங்கமானது. வெளிப்படையான காரணங்களைத் தாண்டியது. அதில் எழுத்து தான் எப்போதும் முதலிடம் வகிக்கிறது. ஒருவரது எழுத்து பிடித்திருந்தபோதும்  அந்த எழுத்தாளரை சந்திக்க வேண்டியதில்லை என்ற நினைப்போடு உள்ள வாசகர்கள் நிறையவே இருக்கிறார்கள்.


உண்மையில் எழுத்தாளனை இயங்க செய்வது வாசகர்களின் தொடர்ந்த ஈடுபாடும் அவர்கள் காட்டும் கவனமும் தான். இன்றைக்கும் எனக்கு தோன்றியது எழுத்து என்பது வெறும் படைப்பு செயல்பாடு மட்டுமில்லை. அது ஒரு பொறுப்புணர்ச்சி. ஒரு கலாச்சார நடவடிக்கை.


ஏதோவொரு விதத்தில் ஒரு நம்பிக்கையை, ஒரு அகப்பார்வையை, வாழ்வு அனுபவம் நேரடியாக தர தவறிய, தர இயலாத ஒன்றை படைப்பின் வழியாக தர முயற்சிக்கும் செயல்பாடு. சொற்களின் வழியே நினைவை, அறியாத புனைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு ரகசிய பரிவர்த்தனை.


ஏ வாசகா. உனக்கு தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலன் எழுதியது தான் நினைவிற்கு வருகிறது.


அதே நேரம் போர்ஹே சொல்வது போல உலகிலே மிகவும் கற்பனையான ஒரு கதாபாத்திரம் வாசகன். உண்மையில் வாசகன் என்பவன் யார் என்று யாரும் முடிவு செய்து விட முடியாது. அது ஒரு கற்பனை. ஒவ்வொரு எழுத்தாளனும் யாரோ ஒருவருக்கு வாசகன். ஒவ்வொரு வாசகனும் மனதளவில் ஒரு எழுத்தாளன். அவன் இன்றோ நாளையோ எழுத்தாளன் ஆக கூடும். அல்லது ஆக முடியும். அல்லது விரும்பி நிராகரிக்க கூடும்.


ஷேக்ஸ்பியரின் ஒரு வரி ஒரு வாசகனுக்கு புரிகிறது என்றால் அவனும் ஷேக்ஸ்பியரே என்று போர்ஹே சொன்னது தான் இதில் நிஜம்.


இன்று நான் சந்தித்தவர்களும் அத்தகைய அகவிழிப்பு கொண்டவர்களே. 


புத்தக கண்காட்சியில் ஹரன் பிரசன்னா, விமர்சகர் முருகேச பாண்டியன், எழுத்தாளர் சி.மோகன், பெங்களுரில் இருந்து வந்திருந்த சேதுபதி அருணாசலம், எழுத்தாளர் தமிழவன், எழுத்தாளர் இரா. முருகன்,  விஜயமகேந்திரன், ஆகியோரை சந்தித்தேன்.


நான் வாங்கிய புத்தகங்கள்.


1. இப்சன் இருநாடகங்கள். தமிழில் கா. திரவியம்.
2. தென்னிந்திய கோவில்கள். கே. ஆர். சீனிவாசன்
3. உண்மை கலந்த நாட்குறிப்புகள்  . அ. முத்துலிங்கம் புதிய நாவல்.
4. குணவாகடம் . பதிப்பாசிரியர். வே. நெடுஞ்செழியன்
5. ஸ்வப்ன வாசவதத்தம். பாஸன் . தமிழில் ஹரிஹரி சாஸ்திரியார்
6. தமிழகத்தில் ஆசீவகர்கள். டாக்டர். ர. விஜயலட்சுமி
7. மாளவிகா க்னிமித்ரம். காளிதாஸர் . தமிழில் தேசிகன்
8. ஜப்பானிய காதல்பாடல்கள் 
9. கீழைத் தேய கதைகள் .மார்க்ரெட் யூரிசனார். தமிழில் வெ.ஸ்ரீராம்.



  1. Hot days Long Nights  African Short Stories. Edt. Nadezda obradovic

  2. Chitralakshana . Mulk Raj Anand.

  3. Art of the western World. .Edt. Michael Wood.

0Shares
0