பனிரெண்டு வயதில் திருவிளையாடல் படம் பார்க்கும்வரை கடவுள் பற்றிய பயம் எனக்குள் ஆழமாக வேர் ஊன்றியிருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு நாளும் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும் என்ற ஒழுங்கை கொண்டிருந்த வைதீகமான குடும்பம் என் தாத்தாவின் வீடு.
கடவுள் எப்போதுமே எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தெரியாமல் எதையும் செய்துவிட முடியாது. ஆகவே பயபக்தியோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பழக்கபடுத்தபட்டிருந்தோம். கோவிலுக்கு போவதும் விரதமிருப்பமிருப்பதும் வீட்டின் மாற்றமுடியாத பழக்கங்கள். நெற்றியில் திருநீறு பூசாமல் பள்ளிக்கு ஒரு நாள் கூட போக முடியாது. ஈசன் நாமம் நாவில் நடமாடிக் கொண்டேயிருக்க வேண்டும்.
அந்த சூழலில் ஒரு நாள் வீட்டிலிருந்த ஆச்சி மற்று பக்கத்துவீட்டு வயதான பாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை கண்டேன்.
ஆச்சி எப்போது கேட்டாலும் நாலணா அல்லது எட்டணா செலவு செய்து கொள்ள தருவார்கள் என்பதால் அவர்கள் மீது கூடுதலான ப்ரியமிருந்த நாட்களது.
அன்றைக்கு அவர்கள் விவாதகளத்திற்குள் சென்ற போது பக்கத்துவீட்டு பாட்டி உரத்த குரலில் அப்போ இன்னைக்கே சினிமாவுக்கு போயிட்டு வந்துருவோம் என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். என்னால் நம்ப முடியவேயில்லை.
பொதுவாக வயதான பாட்டிகள் எவரும் சினிமாவிற்கு போவதும் கிடையாது. அது போலவே சினிமா பார்த்துவிட்டு வருவதையும் மிகப்பெரிய பாவம் என்று திட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களே சினிமாவுக்கு கிளம்புகிறார்கள் என்றால் நிச்சயம் அதில் ஏதோ விஷயமிருக்கிறது என்று புரிந்ததால் நானும் வர்றேன் என்று சொன்னேன். அதுக்கு என்ன வாடா என்று ஒரு ஆச்சி ஆசையாக என்னை அணைத்துக் கொண்டது.
அன்று மாலை கோவிலுக்கு செல்வது போல மிகுந்த பக்தி பூர்வமாக திருநீறு பூசிக் கொண்டு மனதில் சிவனை வணங்கிக் கொண்டு யாவரும் புறப்பட்டார்கள். நடந்தே சினிமா தியேட்டருக்கு சென்றோம். வெளியில் பெரியதாக திருவிளையாடல் படப் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த படம் பலமுறை வந்து போயிருக்கிறது. அது சாமிபடம் என்பதால் அதை பார்க்க விரும்பியதேயில்லை.
அந்த நாட்களில் ரிவால்வார் ரீட்டா, கில்லாடிக்கு கில்லாடி, நான்கு சுவர்கள், போன்ற படங்களின் பின்னால் ஒடிக் கொண்டிருந்தேன். ஆகவே இன்றைக்கு வசமாக மாட்டிக் கொண்டேன் என்று நினைத்தபடியே காலைகாட்சியில் ஒடிக் கொண்டிருக்கும் தங்கமலை ரகசியம் என்ற படத்தின் போஸ்டரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.
கிழவிகள் திருவிளையாடல் போஸ்டரில் இருந்த சிவனாக இருந்த சிவாஜியை பார்த்து வணங்கி கொண்டிருந்தார்கள்.
மாலைக்காட்சி என்று பெயர் தானே தவிர படம் எப்போதும் ஏழு மணிக்கு மேல் தான் ஆரம்பமாகும். டிக்கெட் வாங்கி உள்ளே போய் தியேட்டரின் வெள்ளிதிரையை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தோம்.
பொறுமையில்லாத ஆச்சியொன்று நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ்வாழ்க என்று பாடத்துவங்கியிருந்தது. படம் துவங்க மணியோசை கேட்டதும் ஆச்சி திருவாசகத்தை ஈசனடி போற்றி எந்தையடி போற்றியில் நிறுத்திக் கொண்டு விட்டது.
படம் துவங்கி சில நிமசங்களில் என்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நம்பமுடியவேயில்லை. இத்தனை வருடங்களாக கோவில்களில் போய் கும்பிட்டு வணங்கிய சிவன் இப்படி தான் இருப்பாரா? பார்வதி இப்படி தான் இருப்பாளா,தேவலோகம் இப்படி தான் இருக்கிறதா என்று வியப்பாக இருந்தது.
அதுவரை சிவன் பேசி நான் கேட்டதேயில்லை. திரையில் சிவன் தெளிவான தமிழில் நல்ல நகைச்சுவை உணர்வோடு பேசும் போது அவர் மீது மிகுந்த நட்பும் ப்ரியமும் உருவானது.
மதுரை மன்னனுக்கு பெண்கள் கூந்தலுக்கு இயற்கையான வாசனை உள்ளதாக என்ற தீர்க்க முடியாத சந்தேகத்தினை கண்டு மனக்கொந்தளிப்பு அடைந்த ஒரு ஆச்சி ஆத்திரம் அதிகமாகி அரசனை பார்த்து ஏகவசனத்தில் சுத்த கோட்டிகாரப் பையலா இருக்கான் என்று கேவலமாக திட்டினார்.
தருமிக்கு அருள் தருவதற்காக சொக்கநாதர் கர்ப்பகிரகத்திலிருந்து வெளியே வந்து நின்ற காட்சியில் தன்னை மறந்த ஆச்சியொன்று சர்வஅங்கம் பூமியில் படும்படியாக விழுந்து வணங்கியது. மற்ற ஆச்சிகள் கன்னத்தில் போட்டுக் கொண்டிருந்தனர்.
எனக்கோ கடவுள் ஏன் விறைப்பாகவே நடக்கிறார். யார் அவருக்கு சட்டை தைப்பார்கள், அவருக்கு யார் முடி வெட்டிவிடுவார்கள். பார்வதி ஏன் சிவனை விட குண்டாக இருக்கிறாள், தேவலோகத்தில் எதற்காக இவ்வளவு புகை இருக்கிறது. சிவன் உடுத்தியிருக்கும் மான் தோல் எந்த மானுடையது. அதை ஏன் அவர் கொன்றார் என்று ஏதேதோ அற்ப சந்தேகங்கள் வந்தபடியே இருந்தன.
அதை பாட்டிகளிடம் கேட்டால் என்னை அப்படியே துரத்திவிடுவார்கள் என்று புரிந்த காரணத்தால் குழம்பிப் போய் உட்கார்ந்திருந்தேன்.
தட்சனின் யாகத்தில் கலந்து கொள்ள விரும்பும் பார்வதியை போக வேண்டாம் என்று ஈசன் தடுப்பதும் அவள் கோபமாக சண்டையிடுவதை கண்ட அடுத்த வீட்டு பாட்டி , இவன் உருப்பாடம போக, பெத்த தாய் தகப்பனைப் போயி பாக்குறதை வேணாம்கிறானே.. அப்படி என்ன தான் இந்த எழுவு எடுத்தவங்களுக்கு ஆத்திரம் வந்திருதோ. என்று கடவுளை சபித்துக் கொண்டிருந்தாள்.
இன்னொரு ஆச்சியும் அவளோடு சேர்ந்து கொண்டு சாமியா இருந்தாலும் மனுசனா இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே தான் வீறாப்பை காட்டுவாங்க என்று தன்பங்கு நியாயத்தை கொட்டிக் கொண்டிருந்தாள்
புருஷன் பேச்சு கேட்காமல் பார்வதி யாகத்திற்கு சென்று அவமானப்பட்டு திரும்பி வந்து நிற்கும் போது ஈசன் அவளை கேலி செய்ய அதுவரை ஏசிக் கொண்டிருந்த ஆச்சிகள் பலரது கண்ணிலும் கண்ணீர் தாரை தாரையா பெருகி வந்து கொண்டிருந்தது.
சாமிக்கும் சமயத்தில புத்தி அவிஞ்சி போயிருது என்று ஒரு ஆச்சி கண்ணீரை துடைத்தபடியே சொன்னாள். எல்லா பெண்களும் கண்களை துடைத்துக் கொண்டார்கள்.
எங்கெங்கோ பட்ட அவமானங்கள் எளிதில் ஆறிவிடுவதில்லை, இல்லையா ?
அநேகமாக அவர்கள் எல்லோரது வாழ்விலும் இது போன்ற நிகழ்ச்சி ஒன்று மறைந்திருக்கிறது.
அவர்கள் அழுவது கடவுளுக்காக அல்ல, தங்களது தீராதவலியை நினைத்து தான் என்று இப்போது புரிகிறது
படம் முடிந்து வெளியே வந்த போது கடவுள் மீது இருந்த பயம் அப்படியே கரைந்து போய் கடவுளும் என் தாத்தாவும் ஒன்று போலவே இருப்பதை உணர துவங்கினேன்.
என் தாத்தாவும் சமயத்தில் ஆச்சியோடு சண்டை போட்டு கத்துவார். நல்ல தமிழ் பேசுவார். அடுத்தவருக்காக உதவி செய்வார். வீட்டு பெண்களை தன் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார். எந்த இரவிலும் அவருக்கு என ருசியான சாப்பாடு வேண்டும். இப்படி கடவுளை போலவே தான் நடந்து கொண்டிருக்கிறார் என்று புரிந்தது.
இன்னொரு பக்கம் கடவுள்களும் கோவித்து கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு, பக்தர்களின் வாழ்வில் விளையாடிக் கொண்டு, பாட்டு கேட்டுக் கொண்டு நடனமாடிக் கொண்டுதானிருக்கிறார்கள். ஒரே வித்யாசம் கடவுள் யாரும் வேலைக்கு போவதில்லை என்பது மட்டுமே.
அவர்கள் கண்டு தேவையற்ற பயம் கொள்ள வேண்டியதில்லை என்பதை உணர்ந்தேன்.
பாட்டிகளின் சபை வீடுவந்து சேரும்வரை பக்தி பரசவமாக இருந்தார்கள். வீட்டிற்கு வந்ததும் சிவாஜி எப்படி நடத்திருக்கிறார் என்று சித்தி கேட்டார். அப்போது தான் அதுவரை தாங்கள் கண்ட சிவன் சிவாஜி என்ற தன் உணர்வு வந்தது போல சாமி மாதிரியே இருக்கார் என்று பதில் சொன்னாள் ஆச்சி
சாமியை இவர்கள் முன்னால் எங்காவது பார்த்திருக்கிறார்களா என்ன? எப்படி சாமி மாதிரியே இருக்கிறார் என்று சொல்கிறார் என்று கேட்க நினைத்தேன். ஆனால் வாய்வரை வந்த சொற்கள் அப்படியே உதட்டில் கரைதட்டி நின்று விட்டன.
இது போன்ற துஷ்ட சிந்தனைக்கு காரணம் என் அப்பாவழி தாத்தாவின் வீடு. அவர்கள் பெரியார் கட்சி. நாத்திகம் பேசுவார்கள். கறுப்பு சட்டை அணிவார்கள். இந்த இரண்டு துருவங்களுக்கு இடையில் தான் என் பள்ளி நாட்கள் நீண்டது. ஒரு வீட்டில் கடவுள் இருக்கிறார். இன்னொரு வீட்டில் கடவுள் இல்லை.
படம் பார்த்துவிட்டு பக்திபூர்வமாக நானும் வந்தேன் என்று நம்பிய பாட்டிகள் அதன்பிறகு எந்த தியேட்டரில் பக்திபடம் போடுகிறார்கள் என்று தகவல் சொல்லும் அரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். வருடத்திற்கு இரண்டு முறை தசாவதாரம் போடுவார்கள். இரண்டு முறை கந்தன் கருணை, திருமால் தெய்வம், சம்பூர்ண ராமாயணம், ஏகாதசிக்கு நிச்சயம் லவகுசா உண்டு.
ஒவ்வொரு முறையும் லசகுசா படம் பார்க்கும் போது தரை டிக்கெட்டில் நூறு இருநூறு பெண்கள் ஒருவரையொருவர் சேர்த்து அணைத்துக் கொண்டு கர்ப்பிணியான சீதை துரத்தபட்டதற்கு ஒப்பாரி வைத்து அழுவார்கள். தியேட்டர் முழுவதும் கண்ணீரும் கம்பலையுமான காட்சியாக இருக்கும்.
வீடு வரும்வரை ஜெகம்புகழும் புண்ணியகதை ராமனின் கதையே என்ற பாடலை பாடிக் கொண்டே வருவார்கள்.
இந்த தொல்லையில் இருந்த தப்பிக்க வேண்டும் என்று மனதில் திட்டம் போட்டுக் கொண்டேயிருந்தேன். பின்னொரு நாள் எம்.ஜி.ஆர் நடித்த ராமன்தேடிய சீதை என்ற படம் வெளியானது. அது பக்தி படம் என்று சொல்லி எல்லா பாட்டிகளையும் ஒன்று சேர்த்து படம் பார்க்க அழைத்துச் சென்றேன்.
படம் துவங்கிய அரை மணி நேரம் வரை ராமன் வருவான் வருவான் என்று காத்திருந்தார்கள். ராமனும் வரவில்லை. சீதையும் வரவில்லை.
எம.ஜி.ஆர் துரத்தித் துரத்தி காதல்பாட்டு பாடிக் கொண்டிருந்தார். ஆத்திரமான பாட்டி முண்டப்பய.. ஏமாத்திட்டான் என்று என் முதுகில் ஒரு அடி கொடுத்தாள். இடைவேளையோடு பாட்டிகள் அரங்கிலிருந்து வெளியேறி போய்விட்டார்கள். மீதி படம் பார்க்க முடியவில்லையே என்று ஆத்திரமாக வந்தது. அது தான் பால்யத்தில் நான் பார்த்த கடைசி பக்தி படம்.
இன்று பக்தி படம் பார்க்கும் பாட்டிகளும் இல்லை. நவீன சினிமாவில் கடவுளுக்கு இடமும் இல்லை. ஆனாலும் எப்போதாவது தொலைக்காட்சியில் திருவிளையாடல் பார்க்கும் போது பிடித்தேயிருக்கிறது.
அதே கேள்விகள் அப்படியே பசுமையாக இருக்கின்றன. நினைத்தால் சிரிப்பாக வருகிறது. அடிமனதில் கடவுளும் காலத்தில் மறைந்துவிட்ட பக்கத்து வீட்டு பாட்டிகளும் நினைவிற்கு வந்தபடியே இருக்கிறார்கள்.
**