உலக சினிமாவில் உயர்ந்த விருது என ஒரு போதும் ஆஸ்கார் விருதை எவரும் குறிப்பிடுவது கிடையாது. கான்ஸ் விருதுக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, பெர்லின் திரைப்பட விருதிற்கு கிடைக்கும் கௌரவமோ ஆஸ்காருக்கு கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் மற்ற உலகதிரைப்பட விழாக்களில் மிக மிக அரிதாகவே விருது பெறுகின்றன. இது தான் நடைமுறை உண்மை
ஆனால் நமது ஊடகங்கள் ஆஸ்காருக்கு தரும் முக்கியத்துவம் எதையும் வேறு திரைப்பட விழாக்களுக்கு தருவதில்லை. சென்ற ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் எந்த படங்கள் கலந்து கொண்டன. எவை விருது பெற்றன என்பதை எந்த நாளேடும், தமிழ் தொலைக்காட்சியும் சுட்டிக் காட்டவேயில்லை.
எனக்கு ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்படும் படங்களை காணவேண்டும் என்ற விருப்பம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டுதான் வருகிறது. பலநேரங்களில் இது போன்ற படங்கள் எப்படி ஆஸ்காரில் இடம் பெற்றன என்ற குழப்பமும் எரிச்சலுமே மிஞ்சுகின்றன. இந்த ஆண்டு பட்டியலிலும் அப்படியான படங்கள் பாதி இருக்கின்றன.
பரபரப்பாக பேசப்பட்ட ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை ஒரு மாதத்திற்கு முன்பாகவே பார்த்துவிட்டேன். சிட்டி ஆப் காட் படத்தின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக கையில் துப்பாக்கியோடு அலையும் பதின்வயதுகாரனை பற்றிய காட்சிகள். தப்பியோடும் இளங்குற்றவாளிகள். அவர்கள் சந்திக்கும் இடம். விளையாட்டு. துரோகம் , ரியோடி ஜெனிரோவின் சேரிப்பகுதி போன்ற மும்பையின் சேரிப்பகுதி என சொல்லிக் கொண்டே போகலாம்.
துண்டு துண்டான சம்பவங்கள். பலநேரம் சராசரி ஹிந்தி படம் பார்க்கிறோமோ என நினைக்கும்படியான காட்சிகள். படம் முடிந்த பிறகும் பெரிய பாதிப்பு எதையும் உருவாக்கவில்லை.
ஒளிப்பதிவும் இசையும் எனக்கு பிடித்திருந்தன. இந்த படத்திற்காக SI-2K Digital Camera ஒன்றை கூடுதலாக பயன்படுத்தியிருக்கிறார்கள் அதனால் தான் சில காட்சிகள் தனித்த வண்ணம் கொண்டு தெரிகின்றன என்று எனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான ஆர்தர் வில்சன் சொன்னார்.
ரஹ்மானின் பின்ணணி இசை மிக நன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறுவர்களை போலீஸ் துரத்தும் காட்சி, சிறுவர்கள் பாடும் காட்சிகள். வேசியர் விடுதிக்குள் செல்லும் காட்சி என ஆகசிறந்த பங்களிப்பை செய்திருக்கிறது.
இந்த ஆஸ்காரில் உள்ள படங்களில் ஏழு படங்களைப் பார்த்துவிட்டேன். அதில்
என் விருப்பத்திற்குரிவை இரண்டு. ஒன்று The Curious Case of Benjamin Button. இரண்டாவது Waltz With Bashir.
பெஞ்சமின் பட்டன் படத்தின் மூலக்கதை பிரபல எழுத்தாளர் ஸ்காட் பிட்ஜெரால்டின் சிறுகதை. அந்த கதையிலிருந்த மைய சரடினை எடுத்து கொண்டு தனியே திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். The Game, Se7en படங்களை இயக்கிய David Fincher இயக்கியிருக்கிறார். பெஞ்சமின் பட்டனாக பிராட் பிட் நடித்திருக்கிறார்.
படம் டெய்சி வில்லியம்ஸ் என்ற பெண்ணிடமிருந்து துவங்குகிறது. மருத்துவமனையில் டெய்சி வயதானவளாக மரணப்படுக்கையில் இருக்கிறாள். தன்னோடு துணையிருக்கும் மகள் கேதரினிடம் தனது டயரியை வாசிக்க சொல்கிறாள் டெய்சி. அதில் பெஞ்சமின் பட்டன் என்ற தனது நண்பனை பற்றிய விசித்திரக் கதை விவரிக்கபடுகிறது.
பிறக்கும் போதே வயதானவரின் தோற்றத்துடன் பிறக்கிறான் பெஞ்சமின். முகம் எங்கும் சுருக்கம் விழுந்து கிழடு தட்டிய உருவம். அப்பா அவனை தூக்கி கொண்டு போய் ஒரு முதியோர் காப்பகத்தில் அநாதையென போட்டு விடுகிறார். இனி பிழைக்கமாட்டான் என்று நம்பபடும் அவனை காப்பகத்தில் உள்ள குயினி என்ற கறுப்பினப் பெண் எடுத்து வளர்க்கிறாள். வயதான பெஞ்சமின் கொஞ்சம் கொஞ்சமாக இளமையான உருவத்திற்கு திரும்புவதே கதை.
பிறந்து வளர்ந்து வயதாகி சாவதில் முடியும் மனித வாழ்க்கையை அப்படியே பின்நோக்கி திருப்புகிறது இப்படம். பெஞ்சமின் ஆரம்பத்தில் வயதானவன் ஆக பிறக்கிறான். மெல்ல அவன் வளர்ந்து வளர்ந்து இளமையை அடைகிறான். திருமணம் செய்து கொள்கிறான். காதலிக்கிறான். பின்பு ஒவ்வொரு நினைவாக மறந்து போக துவங்கி தான் பெஞ்சமின் என்று மட்டுமே அடையாளம் கொள்ளுமளவு மாறி எந்த பெண்ணை நேசித்தானோ அவளிடமே வந்துசேர்கிறான். நினைவு அழிந்த பெஞ்சமனை அந்த பெண் வாஞ்சையோடு ஏற்றுக் கொள்கிறாள்.
படத்தின் துவக்கத்தில் பின்னோக்கி செல்லும் கடிகாரம் ஒன்றை தயாரிக்கிறார் ஒரு பொறியாளர். நாம் முன்னேறி செல்கிறோம் என்ற பெயரில் சாவையும் அழிவையுமே உருவாக்கியிருக்கிறோம். ஒருவேளை பின்னோக்கி செல்வதின் வழியே இழந்து போன நமது உறவை, சொந்த மனிதர்களை, யுத்தத்தில் பறி கொடுத்த பிள்ளைகளை திரும்ப பெற முடியும் என்கிறார். அது தான் படத்தின் மையப்படிமம்.
படம் வாழ்வினை பின்னோக்கி சென்று அலசுகிறது. சுருக்கம் விழுந்து எழுந்து நிற்க முடியாத வயசாளியாக பிராட் பிட் அறிமுகமாகி இளமை ததும்பும் காதலனாகும் வரை மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கிறார். வியப்பபூட்டும் நடிப்பு. சிறு சிறு அசைவுகளை கூட துல்லியமாக அவர் வெளிப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது.
ஒருவகையில் மகாபாரதத்தின் யயாதியை இப்படம் நினைவுபடுத்துகிறது. முதுமையை ஏற்றுக் கொள்ள முடியாத யயாதி தன் மகனின் இளமையை வாங்கி கொண்டு பதிலுக்கு அவனுக்கு முதுமையை தந்துவிடுகிறான். யயாதி முதியவனின் மனதோடு இளமையான தோற்றம் கொண்டவன். அவன் மகன் பூருவோ முதிய தோற்றத்தில் உள்ள இளமையான மனது கொண்டவன். இந்த இரட்டை நிலையை மகாபாரதம் சிறப்பாக கதைபடுத்தியிருக்கிறது.
ஸ்காட் பிட்ஜெரால்டின் கதை படத்திலிருந்து மாறுபட்டது. அது கேலியாக பெஞ்சமினின் வாழ்க்கை அவஸ்தைகளை விவரிக்கிறது. படமோ மிகு உணர்வோடு, நாடகமயமாக்கபட்டிருக்கிறது. திரைக்கதை அமைப்பு பின்னோக்கி நகர்வதோடு இடைவெட்டாக இன்றைய காட்சிக்கு வந்து போகிறது.
பெஞ்சமின் பட்டன் படத்தின் ஒரேயொரு குறை படம் டைடானிக்கை மனதில் கொண்டு அதே போன்ற திரைக்கதை வடிவத்தை பின்பற்றியுள்ளது. மருத்துவமனையில் உள்ள வயதான பெண் வழியே கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்வது துவங்கி படம் முடியும் காட்சிவரை டைட்டானிக்கை பெரிதும் நினைவுபடுத்துகின்றன.
காலம் முன்னோக்கி செல்லும் போது மனித வாழ்வு அதன் போக்கிலிருந்து எதிர்த்து மீண்டும் இளமையை நோக்கி திரும்பவே விழைகிறது என்று படம் விவரிக்கிறது.
முதுமையிலிருந்து இளமையை நோக்கி திரும்பும் திரைக்கதை என்பதால் காட்சிகளின் நீளமும் படமாக்கபட்ட விதமும் கூட அதே கதியில் வளர்கின்றன. முதுமையான காட்சிகளின் வேகம் மிக மெதுவானது. காட்சிகளின் ஒளியும் கோணங்களும் கூட அதற்கு பொருந்தக்கூடியதே. அதே நேரம் பெஞ்சமின் இளமையான பிறகு ஒளியின் கதி மாறுகிறது. காட்சிகள் மிக வேகமாகின்றன. இசை துள்ளுகிறது. இசையும் ஒளிப்பதிவு நடிப்பும் படத்தின் மூன்று பெரும்பலம். அவ்வகையில் அவசியம் பார்க்க வேண்டிய படம் பெஞ்சமின் பட்டன்.
சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் உள்ளது Waltz With Bashir. . இஸ்ரேலிய அனிமேஷன் திரைப்படமிது.
வழக்கமான ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் பேன்டஸி வகையை சேர்ந்தவை. விஞ்ஞான கற்பனைகளும், தேவதை கதைகளும்,அதி சாகச வீரர்களையுமே இந்த படங்கள் தொடர்ந்து முன்வைக்கின்றன.
அதிலிருந்து மாறுபட்டு, அரசியல் நிலை பாடு கொண்ட அனிமேஷன் திரைப்படங்கள் சமீபமாக வெளியாகின்றன.
அந்த வரிசையில் ஈரானில் இருந்து வெளியான Persepolis என்ற படத்தை முன்னதாக பார்த்திருக்கிறேன். இந்த படம் மர்ஜானா சத்ரபி என்ற கிராபிக் ஒவியரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. மர்ஜானா சத்ரபி ஈரானில் வாழ்ந்த தனது இளமை காலத்தை கிராபிக் நாவலாக வெளியிட்டிருக்கிறார்.
இந்த நாவல் தமிழில் விடியல் பதிப்பகத்தால் ஈரான் -ஒரு குழந்தை பருவத்தின் கதை என்ற பெயரில் வெளியாகி உள்ளது. கறுப்பு வெள்ளையில் உருவாக்கபட்ட அனிமேஷன் திரைப்படமாக இது வெளியாகி பரந்த கவனத்தை பெற்றது.
வால்ட்ஸ் வித் பஷீர் என்ற அனிமேஷன் படம் இந்த ஆண்டில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் என்பேன். இது போல மனித மனதை ஆராயும் படங்கள் மிக குறைவே. ஏன் மனது சில விஷயங்களை மறந்து போய்விடுகிறது. அல்லது நினைவு வைத்துக் கொள்வதில்லை. பயமா அல்லது நினைவில் பதியவில்லையா என்பதை ஆராய்கிறது. இந்த உளவியல் பார்வைக்கு அடித்தளமாக அமைந்திருப்பது போரும் போருக்கு பிந்திய நினைவுகளும்
படத்தின் இயக்குனராபன ஏரி போல்மேன் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்றியவர். இளைஞராக இருந்த நாட்களில் லெபனானில் நடந்த படுகொலை சம்பவங்களின் போது ராணுவ வீரராக பணியாற்றியிருக்கிறார். பின்பு திரைத்துறைக்கு வந்து கடந்த காலத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருந்த போது இன்னொரு ராணுவ வீரரை சந்திக்கிறார். அவர் தனக்கு தொடர்ந்து வரும் துர்சொப்பனம் ஒன்றை விவரிக்கிறார்
அதிலிருந்து தான் படம் துவங்குகிறது. வெறிகொண்ட நாய்கள் கூட்டமாக பாய்ந்து வருகின்றன. அதன் மூர்க்கம் மற்றும் வன்மம் நிரம்பிய கண்கள் ஆவேசமாக இருக்கின்றன. படத்தின் துவக்கத்தில் நாய்கள் பாய்ந்துவரும் காட்சி மிக அற்புதமாக உள்ளது. குறிப்பாக பாய்ந்து வரும் நாய்கள் காரின் முகப்பு விளக்கு உள்ள கண்ணாடியில் பிம்பமாக பட்டு கடந்து போவது, தாவும் போது நாயின் உடல் கொள்ளும் நீட்சி என்று துவக்கமே படத்தின் மீதான கவனத்தை உறுதிபடுத்திவிடுகிறது
இப்படி நாய்கள் அவரை கனவில் துரத்த காரணம் ராணுவ வீரராக அவர் ஒரு கிராமத்தை முற்றுகையிட சென்ற நாட்களில் ஊரில் நுழையும் அந்நியரை கண்டதும் குரைக்கும் நாய்களை சுட்டு கொன்று குவித்ததே. அந்த குற்றவுணர்ச்சி அவருக்கு கனவாக தொடர்கிறது. ஏரிலுக்கு போரின் நினைவுகள் எதுவும் வெளிப்படுவதேயில்லை. ஆனால் நண்பர் உன்னை நீயே கேட்டுபார் என்று தூண்டிவிடுகிறார். எதற்காக தன்னிடம் இதை சொல்கிறார் என்று கேட்டதற்கு நீ தானே படம் எடுக்கிறாய் என்று நண்பர் சொல்லியபடியே சினிமா மிகவும் ஆறுதல் தரக்கூடிய ஒரு வடிவம். நீ போரின் நினைவுகளை யோசித்து மீட்டு எடு என்றபடியே கடந்து போய்விடுகிறார். அதிலிருந்து ஏரிலின் தேடுதல் துவங்குகிறது.
நான்கு ஆண்டுகள் தயாரிக்கபட்ட இந்த படம் போர் என்ன நினைவுகளை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் போருக்கு பின்பு அந்த வலி நிறைந்த நினைவுகள் நம்மை பேசவிடாமல் செய்துவிடுகின்றன என்பதை பலரது நேர்காணல்கள் வழியாக வெளிப்படுத்துகிறது.
போர் தனக்குள் ஏற்படுத்திய நினைவுகளை தானே மீள்உருவாக்கம் செய்து கொள்ள ஏரி போல்மன் தன்னோடு இருந்த நண்பர்களை தேடி ஒவ்வொரு இடமாக அலைகிறார். படுகொலை சம்பவம் நடைபெற்ற நாளை பற்றிய வெவ்வேறு மனிதர்களின் நினைவுகள் பகிர்ந்து கொள்ளபடுகின்றன. ஏரி போல்மனின் நினைவு கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுக்கபடுகிறது.
நிறைய விஷயங்களை மனம் ஒளித்து கொள்கிறது. நிறைய அச்சம் அடைந்திருக்கிறது. நிறைய விலகி செல்கிறது. இது தான் போரின் வலிமையான அவலம் என்று படம் முழுவதும் ஒரு ஆதார குரல் கேட்டபடியே இருக்கிறது.
காட்சிகளை படமாக்கி கொண்டு பின்பு அந்த படத்திலிருந்து ஸ்டோரி போர்டு உருவாக்கி அதிலிருந்து சித்திரங்கள் வரைந்து நிஜமான பின்புலமும் சித்திரமயமாக்கபட்ட கதாபாத்திரங்களும் துண்டித்து பின்பு ஒன்றிணைந்து செயல்படும் கட்அவுட் அனிமேஷன் முறையில் இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது. இந்த வகையில் இதுவே முதல்முறை. இது போல சில முயற்சிகள் முன்பு மேற்கொள்ளபட்டிருந்த போதும் இப்படம் அளவிற்கு ஆவணகாட்சிகள், நேர்காணல்கள், உண்மையான பின்புலம் யாவும் அனிமேஷனாக மாற்றபட்டது வேறு படத்தில் கண்டதில்லை.
படத்தினை முன்னெடுத்து செல்வதற்கு இசையே முக்கிய துணை நிற்கிறது. இதை கதை படம் என்ற வரிசையில் சேர்க்காமல் ஆவணப்படம் என்றும் சொல்லலாம். காரணம் இதில் வெளிப்படும் தகவல்கள், சம்பவங்கள் பெரிதும் நிஜமானவை. ஆவணப்படம் ஒன்றை அனிமேஷனில் பார்ப்பது போலவே இருக்கிறது.
படத்தில் பயன்படுத்தபட்டிருக்கும் வண்ணங்களும் ஒளிப்பதிவு கோணங்களும் வியப்பூட்டுபவை. இப்படியெல்லாம் சினிமா என்ற கலையை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று யோசிக்க வைப்பவை. படத்தின் மையக்குரல் அரசியல் விழிப்புணர்வு. அதுவும் போர் குறித்த அன்றாட மனிதர்களின் மனப்பதிவுகள்.
இதை டேவிட் பொலன்ஸ்கி மற்றும் யானி குட்மென் இருவரும் இணைந்து அனிமேஷன் செய்திருக்கிறார்கள். இஸ்ரேலில் இருந்து இவ்வளவு தொழில்நுட்ப சாதனைகளுடன் ஒரு அனிமேஷன் படம் வெளியாகி உலகின் கவனத்தையும் பல முக்கிய விருதுகளையும் பெறுகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம். காரணம் ஜப்பானும் அமெரிக்காவும் மட்டுமே அனிமேஷன் உலகை ஆட்சி செய்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆர்ட் ஸ்பிகில்மேனின் மோபஸ் என்றொரு சித்திரக்கதை புத்தகம் படித்தேன். அது நாஜிகளின் கொடுமையை பற்றிய சித்திரக்கதை. எலிகளின் உலகில் நடப்பது போல கற்பனை செய்யப்பட்டிருக்கும். நாஜிகளின் வதை முகாம் பற்றிய சிறப்பான இலக்கிய பதிவு அது என்று இன்றுவரை உலகம் கொண்டாடும் காமிக்ஸ் அது.
அந்தப் புத்தகம் படிக்கும் வரை காமிக்ஸ் என்பது வெறும் சாகசகதை சொல்லும் வடிவம் என்றே நம்பியிருந்தேன். ஸ்பிகில்மென் அதை தகர்ந்து எறிந்தார். வால்ட்ஸ் படமும் அது போன்ற ஆழமான மனபாதிப்பை உருவாக்கியது.
இந்த இரண்டு படங்களும் ஆஸ்கார் வாங்குமா என்று தெரியாது. ஆனால் அவசியம் காணவேண்டிய படங்கள் என்பது மட்டும் உறுதி.
***