சிற்பியின் நரகம்.

புகழ்பெற்ற பிரெஞ்சு பெண்சிற்பியும் ரோடினின் காதலியுமான கேமிலி கிளாடேல்  (Camille Claudel) பற்றிய திரைப்படத்தை விமானத்தில் வரும்போது தற்செயலாக காண நேர்ந்தது. 1988ல் பிரெஞ்சில் வெளியான இத்திரைப்படம் கேமிலி கிளாடேலின் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களை விவரிக்கிறது. கலை உலகில் பெண் ஒவியர்கள் அறியப்பட்ட அளவிற்கு பெண் சிற்பிகள் அறியப்பட்டதில்லை. இப்படம் சமகால நவீன சிற்பிகளின் முன்னோடியான கேமிலியின் காதலையும் துயரத்தையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறது

சிற்பம் செய்வதில் ஆர்வமான கேமிலி ஒவியக்கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். பெண்கள் சிற்பம் கற்க அனுமதிக்க முடியாது என்று மறுக்கிறது கலைபள்ளி. ஆகவே சிற்பி ஒருவரிடம் நேரடியாக பயிற்சி பெற துவங்குகிறாள் கேமிலி.

ரோடின் பிரான்சின் புகழ்பெற்ற சிற்பி என்பதால் அவரது சிற்பக்கூடம் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டுவரக்கூடியது. 1880ல் ரோடினுக்கு பல முக்கிய ஆர்டர்கள் குவித்திருந்தன. ஆகவே அவர் பல இளம்சிற்பிகளை வேலைக்கு வைத்து சிற்பங்களை உருவாக்கி கொண்டிருந்தார்.

ஒரு சிற்ப வகுப்பில் தற்செயலாக கேமிலியை சந்திக்கிறார் ரோடின். தன் சிற்பக்கூடத்தில் அவள் பயிற்சி பெறலாம் என்கிறார். மார்பிளில் சிற்பம் செய்ய பழகிய கேமிலி ரோடினை தேடி சென்று ஒரு கல்லை வாங்கி சென்று வீட்டில் சிற்பம் செய்கிறாள். அந்த சிற்பத்தை தற்செயலாக காண நேர்ந்த ரோடின் அவள் மீது காதலாகி அவளை தன்னுடைய ஸ்டுடியோவில் வந்து சிற்பம் செய்யுமாறு அழைக்கிறார். அப்போது கேமலிக்கு வயது 19. ரோடினுக்கு 43.

கேமிலியால் அதை நம்பமுடியவில்லை. தான் மதித்துபோற்றும் சிற்பி தன்னோடு இணைந்து வேலை செய்ய அழைக்கிறாரே என்று உற்சாகம் அடைகிறாள். ரோடினை தேடி செல்கிறாள். ரோடின் அவளை மாடலாக வைத்து சிற்பங்களை உருவாக்க துவங்குகிறார். ரோடினின் புகழ்பெற்ற பல சிற்பங்களுக்கு கேமிலி மாடலாக நிற்கிறாள். அவள் உடல் வனப்பில் மயங்கிய ரோடின் அதன் நுட்பங்களை தனது சிற்பங்களில் வெளிப்படுத்துகிறார்.

இருவரும் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் கேமிலி கர்ப்பமாகிறாள். கேமிலி ரோடினை தீவிரமாக காதலிக்க துவங்குகிறாள். இருவரும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ரோடினை யாவர் முன்பும் உரிமையாக பெயர் சொல்லி அழைக்கிறாள் கேமிலி.

ரோடின் தன் காதலியும் துணைவியுமான ரோஸ்ப்யாரெட் அதை சகித்து கொள்ள முடியாமல் ரோடினை கண்டிக்கிறாள். ரோடின் கேமிலியின் காதலில் மயங்கிகிடக்கிறான். தொடர்ந்து ரோசியின் வற்புறுத்தவே கேமிலியிடமிருந்து விலக முயற்சிக்கிறான். ஆனால் இதை அறிந்த கேமிலி ரோடினை ரோஸியிடமிருந்து பிரிக்க முயற்சி மேற்கொள்கிறாள். 

பால்சாக்கின் நினைவுசிலை செய்யும் திட்டத்தில் வேலை செய்வதாக இருவரும் ரகசியமாக தனியிடம் ஒன்றில் வசித்தபடியே காதல் புரிய துவங்குகிறார்கள்.. இவர்கள் உறவினை அறிந்த ரோசி அவர்களை தேடி வந்து கேமிலியை அசிங்கபடுத்துகிறாள். ஆனாலும் பதினைந்து வருசங்கள் இருவரும் ஒன்றாக பணிபுரிகிறார்கள் . முடிவில் ரோடினும் தன்னை தேடி வரும் மற்ற பெண்களை போலவே அவள் மீது தன் இச்சை தீர்ந்து போனதும் அவளை புறக்கணிக்க துவங்குகிறார். 

ரோடினின் புறக்கணிப்பை தாங்க முடியாத கேமிலி அவரை விட தான் சிறந்த சிற்பி என்று நிரூபணம் செய்வதாக தொடர்ந்துவேலை செய்ய ஆரம்பிக்கிறாள். ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் சிற்பம் வடிக்கிறாள். இதனிடையில் கருக்கலைப்பும் நடந்துவிடவே அவள் உடல் சிதைவுற துவங்குகிறது.

ரோடின் அவளை தன்போட்டியாளராக கருதவில்லை. ஆனால் அவள் ரோடினை தோற்கடிக்க வெறிபிடித்து அலைகிறாள்.அவளது சிற்பங்களில் ரோடினின் சாயல் வெளிப்படுவது அவளுக்கு தாங்க முடியாத ஆத்திரத்தை உருவாக்குகிறது. அதை உடைத்து நொறுக்குகிறாள். மனச்சோர்வும் கவலையும் பற்றிக் கொள்கிறது. அதே நேரம் மனதினுள் ரோடின் மீதான காதல் தீராமல் பெருகுகிறது. 

தன்னையும் ரோடினையும் அவன் மனைவியையும் மாதிரியாக வைத்து சிற்பம் செய்ய துவங்குகிறாள். அதில் அவளது துயரம் பீறிடுகிறது. அந்த சிற்பங்களை அவள் கண்காட்சியில் வைக்கிறாள். அது ரோடின் என்று கலைவிமர்சகர்கள் எளிதாக அறிந்து கொள்கிறார்கள். ரோடின் அந்த சிற்பத்தை கண்டு வருத்தபடுகிறான். கேமிலியின் சிற்பங்கள் உயிர்துடிப்புடன் இருப்பதை பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள். அவளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அவளும் ரோடினை போல தனித்த ஆர்டர்கள் பெற்றுக் கொண்டு செயல்பட துவங்குகிறாள். ஆனால் அவள் நினைத்தது போல ரோடினை தோற்கடிக்க முடியவில்லை.

பிரிந்த காதலர்களாக அவர்கள் தனித்து செயல்படுகிறார்கள். காலம் அவள் கசப்பை அதிகமாக்குகிறது. அவள் தான் விரும்பியபடி சிற்பங்களை செய்ய முடியவில்லையே என்ற மனசிதைவிற்கு உள்ளாகி அவற்றை உடைத்து நொறுக்குகிறாள்; தன் ஐடியாக்களை ரோடின் திருடிவிட்டதாக கூச்சலிடுகிறாள். மனசிதைவிற்காக சில காலம் மருத்துவ சிகிட்சை மேற்கொள்கிறாள். கலை உலகிலிருந்து சில காலம் காணாமல் போய்விட்ட கேமிலி சிகிட்சைக்கு பிறகு திரும்பி வருகிறாள்.

ஏன் தான் ஒரு சிற்பியாக மாறினோம் என்று வருத்தபடுகிறாள். ரோடின் நினைவுகள் அவளை துன்புறுத்துகின்றன. தன்னை ஏமாற்றி ரோடின் பெயர்பெற்று விட்டதாக பொது நிகழ்ச்சியில் கத்துகிறாள். அவள் மீது பரிவு கொண்ட ரோடின் அதை பெரிதாக நினைக்காமல் அவளை ஆறுதல்படுத்தவே நினைக்கிறார். அவளது சிற்பங்களை புகழ்ந்து பேசுகிறார். ஆனால் அது கேமிலியை ஆறுதல்படுத்தவேயில்லை.

காதல் தோல்வியும் கலையில் ஏற்பட்ட சரிவும் கேமிலியை நிலை குலைய வைக்கிறது. யாரையும் பார்க்காமல் இருட்டறையில் அடைபட்டுக் கொண்டு நோயாளியாக, ஒடுங்கிப்போய் கேமிலி கசப்பான நினைவுகளுடன் முதுமையில் தன் வாழ்வை முடித்து கொள்கிறாள்.

கேமிலியின் சிற்பங்கள் இன்று உலகெங்கும் காட்சிக்கு வைக்ககபட்டுள்ளன. நவீன பெண்சிற்பிகளில் கேமிலியே முன்னோடியாக கொண்டாடப்படுகிறாள். அவளது சிற்பங்களில் ரோடினிடமிருந்து விலகிய புதிய உருவாக்கமும் அழகியலும் காணப்படுகிறது. அவள் தன் தவிப்பை. நிராசையை கல்லில் வடிக்கிறாள். சிற்பத்தின் வழியாக அக கொந்தளிப்பு துல்லியமாக வெளிப்படுகிறது. தோற்றுப்போன காதலின் துயரம் அவள் சிற்பங்களின் அடிநாதமாக உள்ளது.

ஒரு பெண் சிற்பியின் அகஉலகை இவ்வளவு நேர்த்தியாக வேறு எந்த படத்திலும் நான் பார்த்ததேயில்லை. இசபெல் அஸ்தானி கேமிலியாக மிக சிறப்பாக நடித்திருக்கிறாள். ஆத்திரப்படும் போது அவள் முகத்தில் வெளிப்படும் துக்கமும், மகிழ்ச்சியின் போது அவள் உடல் கொள்ளும் நெகிழ்வும் அற்புதமாக வெளிப்பட்டுள்ளன.

ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான Bruno Nuytten இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

1989ம் ஆண்டு சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறது இப்படம்.

**


0Shares
0