இன்னொரு விசாரணை

1961ல் வெளியான Judgment at Nuremberg என்ற திரைப்படம் யூத இனப்படுகொலை குறித்த நீதிமன்ற விசாரணையை முதன்மைப்படுத்தியது. மிகச்சிறந்த படம். ஹிட்லர் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த யாரையெல்லாம் தண்டிப்பது என்ற கேள்வியைப் படம் எழுப்புகிறது.

இதில் ஒரு இளம் வழக்கறிஞர் இனப்படுகொலை என்பது ஒரு மாயை. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொய். புகைப்படங்கள். சாட்சியங்கள் சொல்வது உண்மையில்லை. எங்கேயிருக்கிறது ஹிட்லரின் உத்தரவு. கேஸ் சேம்பர் பற்றிய செய்திகள் யாவும் கட்டுக்கதை என்று வாதிடுவார்.

இனப்படுகொலையின் சாட்சியங்கள் என எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீதிமன்ற விசாரணையில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்கள்

அதே யூத இனப்படுகொலை விசாரணையின் இன்னொரு வடிவம் போல உருவாக்கப்பட்டதே Denial என்ற திரைப்படம்

2016 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் மிக் ஜாக்சன்

இதன் திரைக்கதையை எழுதியவர் டேவிட் ஹேரால்

.உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படமிது

டெபோரா லிப்ஸ்டாட் என்ற பேராசியர் எழுதிய History on Trial: My Day in Court with a Holocaust Denier நூலை அடிப்படையாகக் கொண்டது.

டெபோரா லிப்ஸ்டாட் ஒரு பேராசிரியர். யூத இன அழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவர். யூத இனப்படுகொலை என்பதே ஒரு கட்டுக்கதை எனப் புத்தகம் எழுதிய வரலாற்று ஆய்வாளரான டேவிட் இர்விங் புத்தகத்திற்கு எதிராக ஒரு மறுப்பு நூலை எழுதி வெளியிடுகிறார்.

இந்த நூல் யூதப்படுகொலையின் உண்மைகளை விளக்கி,டேவிட் இர்விங் உள்நோக்கத்துடன் இனவாதம் பேசும் மனிதர் என்பதை அம்பலப்படுத்துகிறது இதனால் ஆத்திரமான டேவிட் இர்விங் பேராசிரியர் லிப்ஸ்டாட் மற்றும் அவரது வெளியீட்டாளர் மீது  பிரிட்டனில் ஒரு வழக்குத் தொடுக்கிறார்.

டெபோராவின் வகுப்பறையில் படம் துவங்குகிறது. அவர் மாணவர்களுடன் இனப்படுகொலை குறித்து உரையாடுகிறார் அதைத் தொடர்ந்து தனது புதிய நூலை அறிமுகப்படுத்தும் நிகழ்விற்குச் செல்கிறார்

அங்கே எதிர்பாராமல் வருகை தரும் டேவிங் இர்விங் டெபோராவை கடுமையாக விமர்சனம் செய்து பகிரங்கச் சவால் விடுகிறார். அத்தோடு நீதிமன்ற வழக்கு ஒன்றையும் தொடருகிறார்.

டெபோரா வழக்கினை ஏற்றுக் கொள்கிறார்.

டெபோராவிற்காக வாதிடும் பாரிஸ்டர் ரிச்சர்ட் ராம்ப்டன் , ஆன்டனி ஜுலியஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு நீதிமன்றத்தில் உண்மையை எடுத்துச் சொல்ல என்னவிதமான ஆவணங்களை முன்வைப்பது, எப்படி வாதிடுவது என விரிவாக விவாதிக்கிறார்கள்.

அந்தக் காட்சிகளின் வழியே வரலாறு யாரால், எவ்வாறு எழுதப்படுகிறது என்பது அறிவுபூர்வமாக விவாதிக்கபடுகிறது.

நீதிமன்ற விசாரணை காட்சிகள் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய திருப்பங்கள் எதுவுமில்லை. ஆனால்  இரண்டு தரப்பின் வாதிடும் காட்சிகளும் சுவாரஸ்யமாக உள்ளன

படத்தின் சிறப்பு போலந்திலுள்ள ஆஷ்விட்ச் முகாமிற்கு டெபோரா மற்றும் வழக்கறிஞர்கள் செல்லும் காட்சி. அந்த முகாமில் காலடி வைக்கும் டெபோரா தன்னை மீறி அழுகிறாள். படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.

வழக்கறிஞர் ரிச்சர்ட் கதாபாத்திரம் வெகு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. அவர் வாதங்களுக்காக மேற்கொள்ளும் ஆழ்ந்த வாசிப்பு. மற்றும் ஈடுபாடு. அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ரசனை, நீதிமன்றத்தில் குரலை உயர்த்தாமல் வாதிடும் விதம் எனச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு வரலாற்றாசிரியர் பொய் சொல்லலாமா.? அந்தப் பொய்யை எப்படி எதிர்கொள்வது. வரலாற்று ஆய்வாளரின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர் எழுதிய புத்தகமும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது

உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விஷயத்தை மறுத்து ஹிட்லரை நியாயவானாகக் காட்ட முயல்கிறார் இர்விங். அவர் ஊடகங்கள் முன்பும் நீதிமன்றத்திலும் நடந்து கொள்ளும் காட்சிகளும் வெளிப்படையாக இனவாதம் பேசும் விதமும் இப்படியான மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள் என அருவருப்பான உண்மையை எடுத்துக்காட்டுகிறது.

நீதிமன்றத்தில் யூத முகாமிலிருந்து உயிர் தப்பிய ஒரு பெண் அமர்ந்து விசாரணையைக் கவனிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் குரல் அந்த மன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று மன்றாடுகிறார். ஆனால் வழக்கின் திசை மாறிவிடும் என அதை ரிச்சர்ட் அனுமதிக்க மறுக்கிறார். கடைசிக்காட்சியில் டெபோரா அந்தப் பெண்ணுடன் பேசுவது மிகச்சிறப்பான காட்சி.

பிரிட்டன் நீதிமன்றம் எவ்வாறு செயல்படுகிறது. வழக்கறிஞர்கள் எவ்வாறு ஆவணங்களை சரிபார்க்கிறார்கள். வழக்கோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்கிறார்கள். அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெறுகிறார்கள் என்பதை விரிவாகக் காட்டியிருக்கிறார்கள்.

கடந்தகாலத்தின் சுமையை தன் தோளில் சுமக்கும் டெபோரா ஒரு சிறந்த கதாபாத்திரம். அவர் வரலாற்று உண்மைகளுக்காக போராடுகிறார். நீதிமன்றத்தில் உணர்ச்சிபூர்வமாக அவர் நடந்து கொள்வதும், நிதி திரட்டல் கூட்டத்தில் சமசரம் செய்ய முடியாது என கோபமாக வெளியேறி போவதும், ரிச்சர்ட் அவர் உரையாடும் காட்சிகளும். இறுதி காட்சியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதும் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது.

Judgment at Nuremberg போலப் படம் அழுத்தமாக உருவாக்கப்படவில்லை. ஆனாலும் வரலாற்று உண்மைகளுக்காக வாதிடும் படம் என்ற அளவில் முக்கியமானதே.

••

15.10.20

Archives
Calendar
October 2020
M T W T F S S
« Sep    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: