சில பாடல்கள்


எனது நண்பரும் திரைப்படஇயக்குனருமான சுகா இயக்கும் படித்துறை படத்திற்காக இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இசைமேதை இளையராஜாவை சந்தித்து பேசிய நாட்கள் மறக்க முடியாத அனுபவம். கல்லூரி வயதிலிருந்து இன்று வரை நான் இளையராஜாவின் ரசிகனே. எனது பயணங்களில் எப்போதுமே துணை அவரது பாடல்களே.



இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. இந்த படத்தினை தயாரித்திருப்பவர் நடிகர் ஆர்யா. இலக்கியத்திலும் இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் சுகா ( எங்களுக்கு சுரேஷ் கண்ணன். ) முழுமையாக திருநெல்வேலியில் உருவாக்கட்ட திரைப்படமது. தனது ஆசான் பாலுமகேந்திரா போல கவித்துவமான திரைப்படத்தை சுகா உருவாக்கியிருக்கிறார்.


எனக்கு  பழைய பாடல்களை கேட்பதில் அதிகமும் ஆர்வம் உண்டு. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து கண்டசாலாவின் பாடல்களை தேடி தேடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


அந்த குரலின் மயக்கம் தீரவேயில்லை. அதுவும் தேவதாஸ் படத்தில் உள்ள கண்டசாலாவின் பாடல்களை கேட்காத நாளேயில்லை. அது மயக்குகிறது. தாழம்பூவின் சுகந்தம் போல தனித்துவமாக இருக்கிறது. மனதெங்கும் வியாபித்து நரம்புகளில் ஏறுகிறது. உறவுமில்லை பிரிவுமில்லை. என்று கண்டசாலா பாடும் போது உலகமும் அவரும் மட்டுமே தனித்து இருப்பது போலவே உணர்கிறேன். கண்டசாலா பாடுகிறார் நீருற்றை போல துயரம் பீறிடுகிறது.. கண்டசாலாவின் பாடல் கேட்டால் அழுவது தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகிறது. 


நாகேஸ்வரராவின் தேவதாஸ் படத்தை முப்பது முறைக்கும் மேலாக பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பார்த்த போதும் கலக்கமடையவே செய்தது. குறிப்பாக சாவதற்கு முன்பாக ஒரேயொரு முறை பார்வதியை பார்த்துவிட வேண்டும் என்ற தேவதாஸின் ஆசையும் அதற்கான ரயில் பயணமும்,  மழையோடு சாவை எதிர்கொள்ளும் நிமிசமும், பார்வதி வீட்டின் முன்பாக தேவதாஸ் அடையாளம் தெரியாத மனிதனாக  இறந்து போய்கிடக்க. அவனை பார்க்க அழுதபடியே ஒடியோடி வரும் பார்வதியை உறவினர் தடுத்து கதவை அடைத்து மூடும் அந்த காட்சி மறக்கமுடியாதது. மூடிய கதவின் பின்னே சாவித்திரி வெடித்து அழுவது இந்திய சினிமாவின் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று.


சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி திரைப்படவிழாவில் பல்வேறு மொழிகளில் தயாரிக்கபட்ட தேவதாஸ் படங்களாக மூன்று நாட்கள் திரையிட்டார்கள். ஒன்பது தேவதாஸ் படங்கள். மொத்தமாக பார்த்து முடித்த போதும் நாகேஸ்வரராவின் தேவதாúஸ அத்தனையும் சிறப்பாக இருப்பதாக தோன்றியது.


தேவதாஸ் படம் பார்க்காமலே உலகே மாயம் பாடலை கேட்டு அழுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு பழைய பாடலும் யாரோ ஒருவரை நினைவுபடுத்துகிறது. அல்லது ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தமான பழைய பாடல் பட்டியல் ஒன்றை கொண்டிருக்கிறோம்.


சிறுவயதில் ரேடியோவோடு கூடவே பாடும் சர்வேயர் மனைவியான பத்மாக்கா இன்றைக்கும் நினைவில் இருக்கிறாள். பகல் நேரங்களில் அவள் ரேடியோவோடு கூடவே பாடுவாள். சிலோன் ரேடியோ தான் ஒரே துணை.  யார் பாடுகிறார்கள் என்று பிரித்து அடையாளம் காணமுடியாதபடி அவளும் பி. சுசிலாவும் ஒன்று கலந்திருப்பார்கள். அவள் பி.சுசிலாவின் பக்தை. சுசிலாவின் பாடல்கள் அக்காவின் உதட்டில் உதிர்ந்து கொண்டேயிருக்கும்.


அவள் மாலை நேரத்தில் பவுடர் பூசி, மல்லிகைபூ சூடி, காற்றில் கேசம் பறக்க திண்ணையில் அமர்ந்தபடியே வெட்கம் பொங்க, சிட்டுகுருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே பாடலை பாடும் போது என்னை போன்ற சிறுவர்கள் வியப்பும் ஈர்ப்புமாக மெய் மறந்து போயிருப்போம். காதல் அவளது குரலின் வழியே பற்றி எரியும்



எல்லா இரவிலும் உறக்கம் வரும்வரை அவள் வீட்டில் ரேடியோ கேட்டபடியே இருக்கும். படுக்கையில் படுத்தபடியே கூடவே பாடுவாள். தலையணை அருகே டிரான்சிஸ்டர் இருக்கும். விடிந்தவுடன் பாடல் கேட்பது துவங்கிவிடும். பி.சுசிலா பாடும் போது அவள் குரலின் வழியே கடவுள் பாடிக் கொண்டிருப்பதாகவே ஒரு முறை அக்கா சொன்னாள். 


 அவளுக்காக தேடித்தேடி பாட்டுபுத்தகங்கள் வாங்கி கொண்டு வந்து தருவோம். அவள் ஒவ்வொரு படத்திலும் தனக்கு பிடித்த ஒரு பாடலை தேர்ந்து எடுத்து கொள்வாள். அதை பற்றி நிறைய பேசுவாள்.


அவள் பாடுவதை சர்வேயர் மாமா ஒரு நாளும் காது கொடுத்து கேட்டதேயில்லை. அவர் எப்போதும் வரைபடங்களை தயாரிப்பதிலே இருப்பார். அல்லது கோபத்தில் கத்திக் கொண்டிருப்பார். அவர்கள் வீடு மாறி போகும்வரை எங்கள் ஊரின் பி.சுசிலா அவர் மட்டுமே என்று உணர்ந்தோம். இன்றைக்கும் அந்த அக்காவை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிட்டுகுருவி முத்தம் கொடுத்து பாடல். சில நேரம் அதை கேட்டால் என்னை மறந்து கலங்கி விடுகிறேன்.


இப்போது பத்மாக்கா என்ன செய்து கொண்டிருப்பார். அவரது நினைவின் ஏதாவது ஒரு மூலையில் இன்னமும் நான் ஒட்டிக் கொண்டிருப்பேனா? ஏனோ இப்போதும் பத்மா அக்கா ரேடியோ கேட்டு கொண்டுதான் இருப்பார் என்றே தோன்றுகிறது.


பதின்வயதில் எனது சித்தி பி.பி. ஸ்ரீனிவாசின் பரமரசிகையாக இருந்தார். அதை ரசிப்பு என்று சொல்ல முடியாது. ஆராதனை. அர்ப்பணிப்பு. சரணாகதி. இப்படி ஏதாவது சொல்லலாம். தனது வாழ்வில் ஒரு முறை பி.பி. ஸ்ரீனிவாசை பார்த்துவிட்டால் போதும் என்பதே அவரது ஏக்கம்.


.ஒரு முறை கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் கொடை நிகழ்ச்சியில் பி.பி.எஸ் பாட வருகிறார் என்று கேள்விபட்டு இரவில் வெகுநேரம் காத்திருந்தாள். அவர் அன்று வரவேயில்லை. அந்த ஏமாற்றம் அவளுக்குள் ஒரு மாதமிருந்தது. ஆறாத வடுவது. காதலிக்க நேரமில்லை, போலிஸ்காரன் மகள் வீரதிருமகன் மூன்று படங்களையும் சித்தி பலதடவை பார்த்திருக்கிறாள். ஒரே காரணம் பிபிஎஸ் பாடல்கள். திரை அரங்கில் யாரும் கேட்காதபடி சன்னமாக பாடுவாள். பி.பி.எஸ்ஸின் எந்த பாடலை கேட்டாலும் உடனே பாடி விடுவார்.


சென்னைக்கு வந்த நாட்களில் பி.பி.எஸ்ûஸ தினமும் டிரைவ் இன்  உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பார்ப்பேன். தனியே ஒரு மேஜையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பார். ஒரு முறை அவரிடம்  என் சித்தி பற்றி சொன்னேன். அவர் பெரிதாக அதை எடுத்து கொள்ளவில்லை. ஆனால் பி.பி.எஸ்ûஸ சந்தித்த விசயத்தை சித்தியிடம் சொன்ன போது அவர் அடைந்த சந்தோஷம் அளவில்லாதது. தன்னை ஒருமுறை அவரிடம் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.


கடுமையான சிறுநீரக கோளாறு ஏற்பட்டு மரணத்தின் கடைசி நிமிசங்களை எண்ணிக் கொண்டிருந்த போதும் அவர் பிபிஎஸ் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். சித்தி உடலில் எலும்புகள் மட்டுமே மீதமிருந்தன. என் சிறுவயதில் பார்த்த பேரழகியான சித்தியின் உருவம் அழிந்து உடலின் கூடு மட்டுமே மிச்சமிருந்தது. ஆனால் அந்த கண்கள் பிபிஎஸ்ஸின் பாட்டை கேட்டு அழுதன. உதட்டில் பாடல் ஒட்டிக்கொண்டிருந்தது.  சாவு இரக்கமற்றது என்பதை அவர் வழியாகவே நான் உணர்ந்தேன்.


 எவருக்கும் சிறு தீங்கும் செய்யாத அன்பின் அடையாளமாக வாழ்ந்த அவர் எந்த சந்தோஷத்தையும் அடையவில்லை. அவரது மரணம் என்னை கடுமையான மனவேதனைக்கு உட்படுத்தியது.


நான் செய்ய தவறிய மிகப்பெரிய குற்றமாக சித்தியை அழைத்து வந்து பிபிஎஸ்ûஸ பார்க்க செய்யாமல் விட்டதையே உணர்கிறேன். இன்னொரு பக்கம் சித்தியை அத்தனை பிரச்சனைகள் நெருக்கடிகளையும் மீறி வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் கொள்ள வைத்த ஒரே துணையாக இருந்த பிபிஎஸ்ஸின் பாடல்களுக்காக அவரது பாதங்களை தொட்டு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.


பாடல்கள் யாரோ துயருற்ற மனதின் நீங்காத துணையாக இருக்கின்றன என்பதை இன்றே உணர்கிறேன்.  இன்று பிபிஎஸ்ஸின் எந்த பாடலை கேட்கும் போது சித்தி நினைவில் மலர்கிறாள். மனது துவள்கிறது. குற்றவுணர்ச்சி உடலை வாட்டுகிறது.


துயரங்களின் சாட்சியாக இப்படி பாடல்கள் இருக்கிறதென்றால் சந்தோஷத்தின் மீதமான நினைவாகவும் பாடல்களே இருக்கின்றன. கல்லூரியில் நடைபெற்ற ஒரு இளைஞர் விழாவிற்கு என் வகுப்பில் உள்ள இசை அறிந்த நண்பர்கள் ஒரு பாடலை  பாடுவது என்று முடிவு செய்தார்கள். என்ன பாடலை பாடுவது என்று இரண்டு நாள் தீவிர விவாதம் நடந்தது. நான் கண்ணாலே காதல் பேசி கொல்லாதே பாடலை சிபாரிசு செய்தேன். அதை யாவருமே ஏற்று கொண்டார்கள்.


அந்த பாடலுக்கு பயிற்சி எடுத்து கொண்டார்கள். நிகழ்ச்சி அன்று முப்பது கல்லூரிகள் கலந்து கொண்டன. ஆங்கில பாடல்கள். ஹிந்தி பாடல்கள், சகலகலாவல்லவன் என்று மேடை அதிர்ந்தது. பார்வையாளர்கள் கரகோஷம். உற்சாகம் கரைமீறிக் கொண்டிருந்தது. அடுத்தது நாங்கள். நான் அந்த பாடலை அறிவிப்பு செய்த போது அரங்கே கேலி செய்தது. நான் ஒரமாக நின்று கொண்டேன். நண்பன் பாடலை பாட மைக்கை எடுத்தவுடன் கேலி அதிகமானது. ஆனால் பாடல் துவங்கியதும் பார்வையாளர்கள் தந்த கரகோஷம் விசில் பாட்டு முடியும் வரை ஒயவேயில்லை. அந்த பாடலை முதற்பரிசு பெற்றதாக அறிவித்தார்கள்.


அரங்கமே அதிர்ந்தது. இன்று எங்காவது அந்த பாடலை கேட்கையில் அந்த நண்பர்களும் நினைவுகளும் பீறிடுகின்றன. இன்று அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்து கொண்டேயிருப்பேன்


சென்னைக்கு வந்து என்ன செய்வது எங்கே தங்குவது என்று தெரியாமல் அலைந்த நாளில் ஒருஇரவு போக்கிடம் இன்றி அசோக்பில்லர் அருகே உள்ள பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தேன். மழை பெய்து வெறித்தஇரவு. சாலைவாசிகளில் ஒருவரது ரேடியோவில் இருந்து நிழல்கள் படத்தில் வரும் தூரத்தில் நான் கண்ட உன்முகம் பாடலை கேட்டதும் தண்ணீரில் விழுந்த காகிதம் போல மனது ஈரமேறி போனது. அந்த பெண்குரல் என்றென்றைக்குமான பிரிவின் வலியை நினைவுபடுத்தி ஒரு சுடர் போல அசைந்து கொண்டிருந்தது.


அந்த இரவில் பிரிவின் முழுவேதனையை உடலெங்கும் நிரப்பி கொண்டேன். அது ஒரே நேரத்தில் வலி தந்ததோடு சொல்ல முடியாத ஆறுதல் தருவதாகவும் இருந்தது. இன்றைக்கும் அந்த பாடலை கேட்கையில் மனது நடுக்கம் கொள்ளவே செய்கிறது. இளையராஜாவின் துணையை சொல்லால் விளக்க முடியாதது. அது நோயாற்றுவது போல எதையோ செய்கிறது.


நான் இசை அறிந்தவன் இல்லை. ராகங்களோ, இசைநுட்பங்களோ தெரியாது. ஆனால் எனக்கு சில தருணங்களில் இசை தேவையானதாக இருக்கிறது. அந்த நிமிசங்களில் மட்டுமே நான் இசையை நெருங்குகிறேன். அப்படி பாடல் கேட்க துவங்கினால் தொடர்ச்சியாக மனது அடங்கும் வரை கேட்டுக் கொண்டேயிருப்பேன். எதற்காக சில பாடல்களை திரும்ப திரும்ப கேட்கிறேன் என்று எனக்கே புரியவில்லை


சென்ற ஆண்டில் மட்டும் இளையராஜாவின் இசையில் உருவான ஜெர்மனியின் செந்தேன்மலரே பாடலை நூறு முறைக்கும் மேலாக கேட்டிருப்பேன். அதை கேட்கையில் உடலில் என்னவோ செய்கிறது. மனம் மீறிய களிப்பு ஏற்படுகிறது.


மொழியறியாத ஊர்களில் தனித்து இருக்கையில் இவர்களே பாடல்களே துணையாகின்றன. சில பாடல்களின் வழியே நண்பர்களை அடைந்திருக்கிறேன். சில பாடல்களின் வழியே துயரங்களை கடந்து சென்றிருக்கிறேன். சில பாடல்கள் மறக்கமுடியாத நினைவாக மாறியிருக்கின்றன.


இந்த இரவிலும் ரேடியோவில் பழைய பாடல் கேட்கிறது. யாரோ அந்த பாடலோடு கூடவே பாடிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். உலகை சாந்தம் கொள்ள செய்கிறது பாடல்கள்.


பாடல்கள் பிறந்த கதைகளை கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். பாடல்கள் கேட்ட கதையை ரசிகர்கள் எவரும் எழுதியதாக நினைவில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு விருப்பமான பாடலையும் அதன் பின்உள்ள நினைவையும் எழுத துவங்கினால் அது எல்லா புனைகதைகளை விடவும் மிக சுவாரஸ்யமாக இருக்ககூடும்.


பண்பலை ரேடியோவில் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ பாடல் எங்கோ ஒலிக்கிறது.  ஒரு மின்மனி போல வசீகரமாக அந்த பாடல் ஒளிர்வதை காண்கிறேன். பாடலின் ப்ரகாசம் ஒரு போதும் மங்குவதேயில்லை.


இந்த நிமிசத்தில் உலகை சந்தோஷம் கொள்ள வைக்கும் பாடல்களுக்காக அதன் இசையமைப்பாளர்கள், பாடகர்கள். வாத்தியகலைஞர்கள் அத்தனை பேருக்கும் என் தீராத நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் சித்தி போல துயருற்ற மனது கொண்ட மனிதர்கள்  நிறைய இருக்கிறார்கள். பாடல்களால் மட்டுமே ஆனந்தம் கொள்கிறார்கள். அது ஆற்றுபடுத்துகிறது. அமைதி தருகிறது.
***


 


 

0Shares
0