ஹெமிங்வேயின் நண்பர்

எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி கூப்பருக்குமான நட்பை விவரிக்கும் Cooper & Hemingway: The True Gen என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம், அவர்களின் இருபது ஆண்டுகால நட்பை ஆராய்கிறது.

கேரி கூப்பர் மற்றும் எர்னஸ்ட் ஹெமிங்வே இருவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள். இரண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள். ஒரே உயரம். ஹெமிங்வே கூப்பரை விடப் பத்து மாதம் மூத்தவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் கூப்பர்.

இலக்கிய உலகில் மட்டுமின்றிச் சினிமா, பத்திரிக்கை, அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் நிறைய நண்பர்களைக் கொண்டவர் ஹெமிங்வே. பிடித்தமான நண்பர்களை அழைத்துக் கொண்டு வேட்டையாடுவது, மீன்பிடிப்பது அவருக்கு விருப்பமான விஷயம். ஹெமிங்வே பெருங்குடிகாரர் என்பதால் அவருடன் இணைந்து குடிப்பதற்கென்றே நிறைய நண்பர்களிருந்தார்கள்.

ஹெமிங்வேயின் வாழ்க்கை சாகசங்கள் நிரம்பியது. அப்படி ஒரு வாழ்க்கையை இதுவரை எந்த எழுத்தாளரும் வாழ்ந்ததில்லை.

மிட் நைட் இன் பாரீஸ் திரைப்படத்தில் ஹெமிங்வே ஒரு கதாபாத்திரமாக வருகிறார். அதில் அவரும் சக எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஒன்று கூடிக் கழிக்கும் இரவு வாழ்க்கை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அதில் இளம் எழுத்தாளன் ஒருவன் ஹெமிங்வேயிடம் தனது படைப்பு குறித்து ஆலோசனைகள் பெறுவான். இப்படி ஹெமிங்வேயை ஆசானாகக் கொண்ட படைப்பாளிகள் ஏராளம். தனது வழிகாட்டி ஹெமிங்வே என்று கொண்டாடுகிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்.

இந்த ஆவணப்படத்தில் கேரி கூப்பர் சினிமாவில் எவ்வாறு அறிமுகமானார். எப்படிப் புகழ்பெறத்துவங்கினார். ஹெமிங்வேயை எப்போது சந்தித்தார் போன்ற விஷயங்கள் விரிவாகப் பேசப்படுகின்றன.

ஹெமிங்வேயின் “Farewell to Arms” (1932) படத்தில் கூப்பர் நடித்தார். அந்தப்படம் வணிகரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் கூப்பர் சிறப்பாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து “For Whom the Bell Tolls” (1943) படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று ஹெமிங்வே சிபாரிசு செய்தார்.

இந்த நாவலின் திரைப்பட உரிமைக்காக ஹெமிங்வே 135,000 டாலர் மற்றும் ஒட்டுமொத்த வசூலில் இரண்டு சதவீதம் தொகையைப் பெற்றார். அதுவரை அவ்வளவு பெரிய தொகை எந்த எழுத்தாளருக்கும் வழங்கப்பட்டதில்லை. இந்த இரண்டு திரைப்படங்களின் வழியே அவர்களின் நட்பு ஆழமாக உருவெடுத்தது.

இருவரும் ஒன்றாகப் பயணம் செய்தார்கள். வேட்டையாடினார்கள். இருவருக்கும் நிறையக் காதலிகள். இவர்களின் அசாதாரண நட்பு குறித்துக் குடும்பத்தினர் விரிவாக நேர்காணல் அளித்துள்ளார்கள். அரிய ஆவணக்காட்சிகள். புகைப்படங்களுடன் இந்த நட்பு விவரிக்கப்படுகிறது.

கூப்பர் தீவிர இலக்கிய வாசகரில்லை. அது போலவே ஹெமிங்வேயிற்கும் சினிமாவின் தீவிர ரசிகரில்லை. ஆனால் அவர்களுக்குள் பொதுவாகக் குடியும் பெண்களும் வேட்டையுமிருந்தன. முரட்டுத்தனமான ஆண் என்ற பிம்பம் இருவர் மீதும் இருந்தது. அதை மெய்ப்பிக்கும் விதமாக அவர்கள் நடந்து கொள்ளவும் செய்தார்கள்.

இருவரது மிகப்பெரிய வெற்றியும் ஒரே நேரத்தில் நடந்தேறியது. High Noon படம் மூலம் கூப்பர் பெரிய வெற்றியை அடைந்தார். The old men and sea நாவல் மூலம் ஹெமிங்வே நோபல் பரிசினைப் பெற்றார்

“Farewell to Arms” படம் ஹெமிங்வேயிற்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர் கேரி கூப்பரின் நடிப்பை பாராட்டினார். 1940ல் துவங்கிய அவர்களின் நட்பு 1961 ல் கூப்பர் இறக்கும் வரை நீடித்தது. கூப்பர் தன்னோடு பிறக்காத ஒரு சகோதரர் என்றே ஹெமிங்வே கருதினார்.

புற்றுநோயுடன் போராடிய கூப்பர், மே 13, 1961 அன்று இறந்தார். குடிப்பழக்கம், மனச்சோர்வு, காரணமாக ஹெமிங்வே ஜூலை 2, 1961 இல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அது தற்கொலையில்லை ஒரு விபத்து என்றும் ஒரு தரப்பு சொல்கிறார்கள். ஆனால் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமான மனச்சோர்விற்கு ஹெமிங்வே உள்ளாகியிருந்தார்.

தனது எழுத்தையும் ஹெமிங்வே குத்துச்சண்டை போட்டி போலவே கருதினார். ஒவ்வொரு ரவுண்டிலிலும் தான் ஒரு படைப்பாளியை வென்றேன் என்றே குறிப்பிடுகிறார்.

“The best people possess a feeling for beauty, the courage to take risks, the discipline to tell the truth, the capacity for sacrifice. Ironically, their virtues make them vulnerable; they are often wounded, sometimes destroyed.” என்று சொல்கிறார் ஹெமிங்வே.

அது கூப்பர் மற்றும் ஹெமிங்வே இருவரது வாழ்க்கைக்கும் பொருத்தமானதே

••

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: